Monday, May 21, 2012

ரிஷிகள் கடன்


21 மார்ச் 1921                                            ரெளத்திரி பங்குனி 8

கல்கத்தா சர்வகலாசாலை விசாரணை ஸபையின் முன்னே கீர்த்தி பெற்ற பாரத புத்திரர்  ஒருவர் எழுதிக் கொடுத்த அறிக்கையொன்றில், பூர்வ காலத்து இந்தியர்கள் என்ன நோக்கத்துடன் கல்வி கற்பித்து வந்தன ரென்பதைச் சுருக்கிக் காட்டும்படி பின்வருமாறு சொல்லுகிறார்:-

“இந்தியாவில் கல்வியைப்பற்றிய கொள்கை இன்னதென்பது இந்திய சாஸ்திரங்களில் தெரிந்த, குறிப்பான்  பாஷையில் எழுதப்பட்டிருக்கிறது. இக்கொள்கை குறைந்த பக்ஷம் முப்பது நூற்றாண்டாக இந்தியாவின் வாழ்க்கையை ஆண்டு வந்திருக்கிறது. எனவே, அதனைத் தெளிவுபடச் சொல்லுதல் அவசியமாகிறது… என் வசத்திலிருக்கும் ஆதாரங்களை நான் மிகவும் ஜாக்ரதையாக ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறேன்.  ஆதலால் ஜாக்ரதையான பாஷையை, ஜாக்raதையான பதங்களுடனே வழங்குவேன். கல்வியைப்பற்றிய் இந்திய சித்தாந்தத்தைப் பின்வருமாறு எடுத்துக் காட்டலாம்:-

ஒவ்வொரு மனிதனும் சில கடமைகளுடனே பிறக்கிறான்; இவற்றை சாஸ்த்ரங்கள் ‘கடன்கள்’ (ரிணங்கள்) என்று கூறும். இவையாவன:-

  1. (ஆத்மாவை ஆளும்) தேவர் கடன்.
  2. (தேச பிதிரர் உட்பட) பிதிர்க்கள் கடன்.
  3. சுற்றத்தார்க்கும், மற்ற மனிதர்க்கும் இறுக்கப்படும் கடன்.
  4.  உணர்வு வாய்ந்த ஜீவ ஜந்துக்கள் அனைத்திற்கும் செலுத்த வேண்டிய கடன்.
  5. இவையனைத்திலும் மேலாக ரிஷிகளுடைய கடன். தனது வாழ்க்கைக்குப் பிரமாணமாகிய நாகரிகத்தின் புராதன ஸ்தாபகர்களுக்குச் செலுத்த வேண்டிய கடனே இறுக்கும் நெறி யாதெனிலோ வித்யாப்யாஸம்; கல்விப்பயிற்சி. அதாவது, அறிவை அதன் பொருட்டே தேடுதல்.
இப்படிப்பட்ட அற்புதமான கொள்கையினின்றும் தோன்றி வளர்ச்சி பெற்றதாகிய அற்புதமான இந்தியக் கல்வி முறையைப் பதினெட்டாம் நூற்றாண்டில், நம்மவர் திடீரென்று கைவிட்டுவிட்ட விஷயத்தை ஸ்ரீமான் எஸ்.கே. தத்தர் என்பவர் 19921 ஜனவரி இந்திய இளைஞர் (யங்மென் ஆப் இந்தியா) பத்திரிகையில் எழுதியிருக்கும் “கல்வி விவகாரம்” என்ற மகுடமுள்ள வ்யாஸத்தில் மிகவும் ஸாங்கோபாங்கமான சரித்திர விவரங்களுடனே குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மத்யகால  வடிவம் நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். அதாவது மஹமதியர்களின் காலத்திற்கு முந்தி அநேக நூற்றாண்டுகளாகவும் மஹமதிய ஆட்சியின் காலத்திலும் இந்தியாவில் எத்தகைய கல்விமுறை இருந்ததென்பதை நாம் அறிவோம். இவை மஹமதிய நூல்களினி்ன்றும் ஹிந்து சாஸ்த்திரங்களில் பிற்காலத்து சாஸ்த்ரங்களினின்றும் பின்னிட்டுப் போதிய ஐரோப்பியக் கல்வியென்ற வெள்ளத்தில் அழிந்தது போக இன்றைக்கும் அங்கங்கே சிதறிக் கிடக்கும் பூர்வ முறையைபற்றிய கல்விச் சாலைகளின் திருஷ்டாந்தத்தினின்றும் அறியக் கிடக்கின்றன.

ஆதி பூர்வ காலக் கல்வி எப்படி யிருந்ததென்பதை வேதோப்நிஷத்துக்களிலிருந்தும், பிரமாணங்களிலிருந்தும், தர்ம சாஸ்திரங்களிலிருந்தும் தெரிந்து கொள்ள முடியும்.
இதற்கும் மேற்கூரிய மத்ய காலத்துக்குமிடை நின்ற காலத்துக் கல்விமுறை இதிஹாஸ, புராணங்களில் மிகவும் தெளிவாகப் புலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் புராதன ராஜரீக முறைகளை ஸவிஸ்தாரமாக ஆராய்ச்சி யென்பதொர் திரிகாலக் கண்ணாடி மூலமாக உணர்ந்து கொள்வதில் சரித்திரம் பயில்வோருக்குள்ள சிரமம் பூர்வகாலக் கல்வி முறைகளை உணர்ந்து கொள்வதில் ஏற்படாது. 

இந்தக் கல்வி முறைமை வேத காலந்தொட்டு நேற்றுவரை பலவகை வடிவங்களில் மாறி வந்திருக்கிறதெனினும், அதன் யதார்த்த ஸ்வரூபம் எப்போதும் மங்கியது கிடையாது. ஆகம ஞானம் அதன் லக்ஷியம் எப்போதும்! தெய்வ பக்தி அதன் கவசம் எப்போதும்! 

நல்லொழுக்கமும், நீதியும், அன்பும் அதன் முறைகள் எப்போதும்! மேலே ஸ்ர்வகலாசாலை விசாரணை ஸபையார் முன்பு செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டியபடி குறைந்த பக்ஷம் மூவாயிரம் வருஷங்களாகக் காப்பாற்றிக்கொண்டு வந்த, நீண்ட பக்ஷம் எத்தனையோ ஆயிரம் நூற்றாண்டுகளாக இந்தியாவில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தக் கல்வி முறை பதினெட்டாம் நூற்றாண்டினிடையே  திடீரென்று சிதறி விழுந்ததின் காரணம் யாதெனில்; ஸ்ரீமான் எஸ்.கே தத்தர் சொல்லுகிறார்:-

“இந்தக் கல்விக்கு திரவிய லாபமில்லாது போயிற்று. இனி, மீள, என்றேனும் ஏற்படக் கூடுமென்ற நம்பிக்கையும் இல்லாமற் போய்விட்டது. ஆதலால், இந்தியர்கள் இந்தக் கல்வியை ஆதரிக்க மனமில்லாதோராயினர்” என்றார்.

ஐரோப்பாவின் கல்வி  முறை அந்த சமயத்திலே தான் ஐரோப்பாவிலே மத ஸம்பந்தங்களை வேரறுத்து சுத்த லெளகிகமாக மாறிக்கொண்டிருந்தது. எனவே ஐரோப்பியக் கல்வி ராஜாங்கத்தாரால்  இந்த தேசத்தில் வற்புறுத்தப்பட்ட  காலத்தில் அது மத ஒழுக்கங்களை ஆதாரமாகக் கொண்ட இந்நாட்டுக் கல்வி முறையுடன் சிறிதேனும் அனுதாபமில்லாததாயிற்று.
மேலே காட்டிய அறிக்கையில் இந்தியாவின் கல்வி நோக்கத்தைக் குறித்துக் காட்டுமிடத்தே “கல்விப் பயிற்சி”யாவது அறிவை பொருட்டாகவே தேடுதல் என்று விளக்கியிருக்கிறார். அதாவது “திரவிய லாபத்தை”க் கல்விப் பயிற்சிக்கு லக்ஷியமாகக் கொள்ளாமல்; அறிவுப் பயிற்சி தன் அளவிலே செய்யத் தக்கதென்றும், செய்தற்குரிய  கடமையென்றும் தெரிந்து கொள்ளுதல்.

இந்தியக் கல்விக்கு லக்ஷணம் இஃதனால் பதினெட்டாம் நூற்றாண்டில் அது திரவிய லாபந்தராமை பற்றிக் கைவிடப்பட்டதென்று சொல்லுதல் முன்னுக்குப் பின் முற்றிலும் முரண்படுகிறதன்றோ?



No comments:

Post a Comment