Saturday, May 5, 2012

தமிழ் நாட்டின் விழிப்பு


பத்திரிகைகளின் நிலைமை

கும்பகர்ணன் தூங்கினானாம். இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. “ராம ராவண யுத்தத்திற்கு ராமராவண யுத்தமே நிகர்” என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சண்டையின் அதிர்ச்சியில் கூட, கும்பகர்ணனுடைய தூக்கம் கலையவில்லை. ஆயிரக்கணக்கான ஆடுமாடு குதிரைகளின் காலில் கூர்மையான கத்திகைளக் கட்டி அவன் மேலே நடக்கச் சொன்னார்கள்; தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவன் காதுக்குள்ளே போய் இடியிடிக்கச் சொல்லி ராவணன்  கட்டளையிட்டானாம்; மேகங்கள் போய் இடித்தவனாம்; கும்பகர்ணன் குறட்டை நிற்கவேயில்லை.

மேற்படி கும்பகர்ணனைப்போலே சில தேசங்கள் உண்டு. அண்டங்களத்தனையும் இடிந்து விழுந்தாலும் காதுகேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சிலவுண்டு. அந்த தேசங்களிலே வாஸம் செய்வோர் மஹா பாவிகள். மாதுர் துரோகம், பிதுர் துரோகம், சகோதரத் துரோகம், தெய்வத் துரோகம், சுதேசத் துரோகம் முதலிய பெரிய பாதகங்கள் செய்து சீரழிந்த மானிடர் அப்படிப்பட்ட தேசங்களில் வாழ்கிறார்கள்.

ஆனால், ஹிந்து தேசம் அப்படி...யில்லை! இங்கு தமிழ் நாட்டைப்பற்றி முக்யமாகp பேச வந்தோம்; தமிழ்நாடு மேற்படி மஹா பாதக ஜாபிதாவைச் சேர்ந்ததன்று, அன்று!

ராமலிங்க சுவாமிகளும், ‘சுதேசமித்திரன்’ சுப்பிரமணிய அய்யரும், இவர்களைப்போன்ற வேறு சில மகான்களும் தமிழ் நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதி கர்த்தாக்களாக விளங்கினர். ஹிந்து தர்மத்தின் புதுக்கிளர்ச்சிக்கு விவேகாநந்தர் ஆரம்பம் செய்தார். அவரைத் தமிழ்நாடு முதலாவது, மஹாராஷ்ட்ரம் முதலிய ஹிந்து தேசத்து மாகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.

பூமண்டல முழுதிலும் பெரிய விழிப்பொன்று வரப்போகிறது. அதற்காதாரமாக ஹிந்துஸ்தானம் கண்ணைவிழித்து இருபதாண்டுகளாயின. ஹிந்துஸ்தானத்துக்குள் தமிழ்நாடு முதலாவது கண் விழித்தது. ஆனால், இன்னும் பக்தி சரியாகத் தெளியாமல் கண்ணை விழிப்பதும் கொட்டாவி விடுவதுமாக இருக்கிறது.

தேசத்தின் பொதுப்புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானால், அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்ம ஸ்தாபனங்களின் நிலை, கோயில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தாரின் பொது ஞானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாசாரப் பத்திரிகைகளையும் ஓரடையாளமாகக் கருதத்தகும். ஆனால், ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களில் நடக்கும் பத்திரிகைகளுடன் தமிழ்நாட்டுப் பத்திரிகையை ஒப்பிட்டுப் பார்த்து இவற்றின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு, ‘ஆஹா இப்படிப்பட்ட தமிழ் நாடு எங்கே பிழைக்கப்போகிறது?’ என்று எண்ணி, பாழும் நெஞ்சு உடைந்துபோக வேண்டாம், ஏனென்றால், வர்த்தமானப் பத்திரிகை நாமாக உண்டாக்கிய கருவியன்று, பிறரிடமிருந்து கற்றுக்கொண்ட தந்திரம்; சென்ற முப்பது வருஷங்களாகத்தான் தெரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சரியாக முதிர்ச்சி அடையவில்லை. தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் உதவி கிடையாது. பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் எத்தனைக் கெத்தனை மதிப்புக் கொடுக்கிறார்களோ அத்தனைக்கத்தனை நாட்டில் மதிப்பேறி, அதனால் பத்திரிகைகளுக்குத் தகுந்த லாபமுண்டாய், அதிலிருந்து சரியான வித்துவான்களின் கூட்டம் யதேஷ்டமாய்ச் சேர்ந்து, அந்தத் தொழில் மேன்மையடைய இடமுண்டாகும்.

தமிழ்நாட்டில் இப்போது  நடைபெறும் ராஜாங்கம் தமிழ் பாஷையில் தேர்ச்சியுடைய தன்று. தமிழ் பாஷையை முதலாக மதிப்பதன்று. ‘தமிழ் முழு நாகரீகமுடையதா, இல்லையா’ என்பதைப் பற்றி சந்தேகங்களுடையது; ஆதலால், தமிழ்ப் படிப்பில்லாமலும், தமிழ் மணமில்லாமலும் ஸந்தோஷமடைந்திருக்கும் இயல்புடையது.

தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோருக்குச் சரியான திரவிய லாப மில்லாமலிருப்பதற்கு வேறு பல காரணங்களும் உள. அவற்றுள் பத்திராதியர்களின் அஜாக்கிரதை (சோம்பேறித்தனம்) ஒன்று. எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. அவற்றுள் ஒன்று வாரப் பத்திரிகை. அது பழுத்த சுதேசியக் கக்ஷியைச் சேர்ந்தது. ஆனால் தக்க பயிற்சியில்லாதவர்களால் நடத்தப்படுவது. சில தினங்கள் முன்பு அந்தப் பத்திரிகையில் யுத்த சம்பந்தமான தலையங்கம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் ருஷியாவில் “போல்ஷெவிக்” என்ற ஒரு மனுஷ்யன் இருப்பதாகவும், அவன் ஒரு கக்ஷி ஏற்படுத்தி நமது நேசக் கக்ஷிக்கு விரோதம் செய்வதாகவும் சொல்லியிருந்தது! அஃது அந்நாட்டில் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்றாகிய  ‘மாக்ஸிமிஸ்த்’  கக்ஷிக்கு மற்றொரு பெயரென்றும், ஒரு மனுஷ்யனுடைய பெயர் அல்ல வென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்து கொள்ளவில்லை. மேலும் அதே பத்திரிகையில் ஒவ்வொரு வியாசத்துக்கும் தமிழ் மகுடத்துக்கு மேலே இங்கிலீஷ் மகுடமொன்று சூட்டியிருக்கிறது. “ருஷியாவின் நிலைமை” “The Situation, in Russia” “தாய்ப்பாஷையின் மூலமாக் கல்வி கற்றல்” “The Vernaculars as media of instruction’, ஆஹா! நான் மாற்றி யெழுதுகிறேன். தமிழை முதலாவது போட்டு, இங்கிலீஷைப் பின்னே போட்டேன். அந்தப் பத்திரிகைகளில் அப்படியில்லை. இங்கிலீஷை முன்னே போட்டு தமிழைக் கீழே போட்டிருக்கிறது. “அமெரிக்க ஸ்த்ரீ” பார்த்தாயா? என்னைத் தெரியாமலே என் கை முதலாவது தமிழ் வார்த்தை எழுதுகிறது!  “American woman” “அமெரிக்க ஸ்த்ரீ,” “Our Mathadhipaties.” “நமது மடாதிபதிகள்,” என்று எழுதியிருக்கிறது. காயிதப் பஞ்சமான காலம்; என்ன அநாவசியம் பார்த்தீர்களா?

இங்கிலாந்தில் வர்த்தமானப் பத்திரிகைகள் ப்ரான்ஸ் தேசத்து மந்திரிகளுடைய உபந்யாசங்களையும் பெரிய சாஸ்திரிமார், பெரிய கைத்தொழில் நிபுணர், த்ரவ்ய சாஸ்திர நிபுணர், ஜனத் திருத்தத் தலைவர் முதலியவர்களின் உபந்யாசங்களையும் பல ப்ரெஞ்சு ராஜாங்க சம்பந்தமான விவகாரங்களையும், ப்ரெஞ்சு பத்திரிகையிலிருந்து மொழி பெயர்த்துப் போடுகின்றன. அப்படியே பிரான்ஸ் தேசத்துப் பத்திரிகைகள்  ஜெர்மன் பாஷையிலிருந்து பல விஷயங்களை மொழிபெயர்த்து எழுதுகின்றன. ஆனால், அந்த மொழிபெயர்ப்புகளில் ஸ்வபாஷையின் வழக்கங்களையும் பிரயோகங்களையும் கைவிட்டு அன்னிய பாஷையின் வசன நடையைப் பின்பற்றும் வழக்கம் கிடையாது. ஆனால் தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையை விட்டு இங்கிலீஷ் நடையில்  தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது. முதலாவது, நீ எழுதப்போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக் கொண்டு பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ் நாட்டிற்குப் பயன்படும். உனக்கு இஹபர ஷேசங்களுக்கு இடமுண்டாகும். இல்லாது போனால், நீயும் சிரமப்பட்டு மற்றவர்களுக்கும் பயனில்லாமல் போகிறது. சில சமயங்களில் சில பத்திரிகைகளை வாசித்து விட்டு, நான்:- “ஐயோ, இவ்வளவு காயிதத்தில் எத்தனையோ உண்மைகளும், எத்தனையோ ஆச்சரியங்களும், எத்தனையோ சந்தோஷங்களும் எழுதலாமே?” என்று எண்ணி வருத்தப்படுவதுண்டு.

No comments:

Post a Comment