கல்கத்தாவில் “ஸாஹித்ய பரிஷத்” (இலக்கியச் சங்கம்) என்றொரு சங்கமிருக்கிறது.
அதைத் தென்னாட்டிலிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய்ப் பார்த்துவிட்டு
வந்து அச் சங்கத்தார் செய்யும் காரியங்க்ளைப்பற்றி “ஹிந்து” பத்திரிகையில் ஒரு விஸ்தீர்ணமான
லிகிதம் எழுதியிருக்கிறார். மேற்படி பரிஷத்தின் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது
மதுரைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ் நாட்டு முயற்சிகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, நம்மவரின் ஊக்கக்குறை்வைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறார்.
தெலுங்கர், மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு
வருஷாந்தரப் பெருங்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
அவற்றால் விளையும் பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ் நாட்டிற்கு விளையவில்லை.
வங்காளத்திலுள்ள ‘ஸாஹித்ய பரிஷத்’தின் நோக்கமென்ன வென்றால், ‘எல்லா விதமான உயர்தரப்
படிப்புகளும் வங்காளப் பிள்ளைகளுக்கு வங்காளி பாஷையில் கற்றுக் கொடுக்கும் காலத்தை
விரைவில் கொண்டு வந்து விட வேண்டும்’ என்பது ‘விரைவாகவே இந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றி
விடுவார்கள்’ என்பது பல அடையாளங்களினால் நிச்சயமாகத் தோன்றுகிறது என்று அந்த லிகிதக்காரர்
சொல்லுகிறார். வங்காளிகளின் விஷயம் இப்படியிருக்க, மயிலாப்பூரில் சிறிது காலத்திற்கு
முன்னே நடந்த ஸ்ரீ வைஷ்ணவ சபைக் கூட்டத்தில் பெரும்பான்மையோர் இங்கிலீஷ் தெரியாத வைதீக
பிராமணராக இருந்தும் அதிலே சில இங்கிலீஷ் உபந்நியாஸங்கள்
நடந்ததை எடுத்துக்காட்டி மேற்படி லிகிதக்காரர்
பரிதாபப்படுகிறார். ‘நமது ஜனத்தலைவர்கள் இங்கிலீஷில் யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்தினால் ஒழிய நமது பாஷை மேன்மைப்பட
இடமில்லை’ என்று அவர் வற்புறுத்திச் சொல்லுகிறார்.
மேற்படி லிகிதக்காரர், தமது கருத்துக்களை இங்கிலீஷ் பாஷையில்
எழுதி வெளியிட்டிருப்பது போலவே தமிழில் எழுதித் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரப்படுத்தி
இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஸபைகள், ஸங்கங்கள், பொதுக்கூட்டங்கள் வருஷோத்ஸவங்கள்,
பழஞ்சுவடிகள் சேர்த்து வைத்தல், அவற்றை அச்சிடல் இவையெல்லாம் பாஷை வளர்ச்சிக்கு நல்ல
கருவிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ் மக்கள் தமது மொழியை மேன்மைப்படுத்த விரும்பினால்
அதற்கு முதலாவது செய்யவேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது கால விசேஷத்தால் நமது தேசத்திலே
விசாலமான லெளகீக ஞானமும் அதனைப் பிறருக்கு உபயோகப்படும்படி செய்வதற்கு வேண்டிய அவகாசம்
பதிவி முதலிய ஸெளகர்யங்களும் படைத்திருப்பவராகிய இங்கிலீஷ் படித்த வக்கீல்களும், இங்கிலீஷ்
பள்ளிக்கூடத்து வாத்தியார்களும், தமது நீதி ஸ்தலங்களையும், பள்ளிக் கூடங்களையும் விட்டு
வெளியேறியவுடனே இங்கிலீஷ் பேச்சை விட்டுத் தாம் தமிழரென்பதை அறிந்து நடக்கவேண்டும்.
பந்தாடும் போதும், சீட்டாடும்போதும், ஆசாரத் திருத்த ஸபைகளிலும், வர்ணாச்ரம ஸபைகளிலும் எங்கும், எப்போதும், ,இந்தப்
“பண்டிதர்கள்” இங்கிலீஷ் பேசும் வaழக்கத்தை நிறுத்தினால், உடனே தேசம் மாறுதலடையும்.
கூடியவரை, இவர்கள் தமிழெழுதக் கற்றுக் கொள்ள வேண்டும். .இவர்கள் அத்தனை பேரும் தமிழ்
பத்திரிகைகளில் லிகிதங்களாகவும், இவர்கள் எழுதுகிற கதை, காவியம், விளையாட்டு வார்த்தை,
வினை வார்த்தை, சாஸ்திர விசாரணை, ராஜ்ய நீதி எல்லாவற்றையும் தமிழில் எழுத வேண்டும்.
தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோர் இப்போது படுங் கஷ்டம் சொல்லுந்தரம் அல்ல. வெளியூர்
வர்த்தமானங்களைத் தவிர மற்றபடி எல்லா விஷயங்களும் பத்திராதிபர்கள் தாமே எழுதித் தீரவேண்டியிருக்கிறது.
வெளியூர்களிலுள்ள “ஜனத்தலைவரும்” ஆங்கில பண்டித “சிகாமணிகளும்” தமிழ்ப் பத்திரிகைகளைச்
சரியானபடி கவனிப்பதில்லை. அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக் காரியங்களையும், அவரவர் மனதில்
படும் புது யோசனைகளையும் தெளிந்த தமிழிலே எழுதி தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அனுப்புதல்
மிகவும் சுலபமான காரியம். ஜனத்தலைவர்களால் இக்காரியம் செய்ய முடியாத பக்ஷத்தில் பிறருக்குச்
சம்பளம் கொடுத்தாவது செய்விக்க வேண்டும்.
நூலாசிரியர் பாடு
பத்திராதிபரின் கஷ்டங்கள் அதிகமென்று சொன்னேன். இக்காலத்தில்
தமிழ் நூலாசிரியர் படுங் கஷ்டங்களை ஈசனே தீர்த்துவைக்க வேண்டும். உண்மையான கவிதைக்குத்
தமிழ் நாட்டில் தக்க மதிப்பில்லை. இங்கிலீஷ் பாஷையிலிருந்து கதைகள் மொழிபெயர்த்துப்
போட்டால் பலர் வாங்கி வாசிக்கிறார்கள். அல்லது, இங்கிலீஷ் முறையத் தழுவி மிகவும் தாழ்ந்த
தரத்தில் பலர் புது நாவல்கள் எழுதுகிறார்கள்; அவர்களுக்குக் கொஞ்சம் லாபமேற்படுகிறது.
தமிழில் உண்மையான இலக்கியத் திறமையும் தெய்வ அருளும் பொருந்திய நூல்கள் எழுதுவோர் ஒரு
சிலர் தோன்றியிருக்கிறார்கள். இவர்களுடைய தொழிலை அச்சடிப்பாரில்லை; அச்சிட்டால் வாங்குவாரில்லை.
அருமை தெரியாத ஜனங்கள் புதிய வழியில் ஒரு நூலைக் காணும்போது அதில் ரஸ மனுபவிக்க வழியில்லை.
இங்கிலீ்ஷ் படித்த “ஜனத்தலைவர்” காட்டும் வழியையே மற்றவர்கள் பிராமணமென்று நினைக்கும்படியான
நிலைமையில் தேசம் இருக்கிறது. இந்தப் ‘பிரமாணஸ்தர்கள் தமிழ் நூல்களிலே புதுமையும் வியப்பும்
காணுவது சாத்தியமில்லை என்ற நிச்சயத்துடனிருக்கிறார்கள். ஆகவே, நூலாசிரியர், தமக்குத்
தெய்வம் காட்டிய தொழிலிலே மேன்மேலும் ஆவலுடன் பாடுபட வழியில்லாமல், வேறு தொழில் செய்யப்போய்
விடுகிறார்கள்.
காலம் சென்ற ராஜமையர் புதிதாகத் தமிழ்க் கதை எழுதுவதில் உண்மையான
திறமை காட்டியிருக்கிறார். அவருக்குத் தகுந்த சம்மானமில்லை. ஆதலால், அவர் அந்தத் திறமையை
மேன்மேலும் வளர்த்துக் கொண்டு போக இடமில்லாமல், ஆரம்பத்திலேயே கைவிட்டு, இங்கிலீஷ்
மாதப்பத்திரிகை நடத்தப் போய்விட்டார். ஜமீந்தார்கள் மீதும், பிரபுக்கள் மீதும், ‘காமா
சோமா’ என்று புகழ்ச்சிப் பாட்டுகள் பாடினால், கொஞ்சம் சம்மானம் கிடைக்கிறது. உண்மையான
தொழிலுக்குத் தகுந்த பயன் கிடைக்கவில்லை. மேற்படி ‘பிரமாணஸ்தர்’ தமிழ் மணத்தை விரும்பாமல் இருந்ததால், இந்த நிலைமை உண்டாய்விட்டது. ஆகையால்,
இங்கிலீஷ் படித்த தமிழ் மக்கள் – முக்கியமாக,
வக்கீல்களும் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும் – தமது வாக்கிலும் மனத்திலும் தமிழரசியைக்
கொலுவிருக்கும்படி செய்து வணங்கவேண்டுமென்றும், அதுவே இப்போதுள்ள ஸ்திதியில் தமிழ்
வளர்ப்புக்கு மூலஸாதன மாகுமென்றும் அறிக்கையிட்டுக் கொள்ளுகிறேன்.
No comments:
Post a Comment