8 நவம்பர் 1917
பசுவின் சாணத்துக்கு நிகரான அசுத்த
நிவாரண மருந்து உலகத்தில் அக்நியைத்தான் சொல்லலாம். வீடடையும், யாகசாலையையும், கோவிலையும்
நாம் பசுவின் சாணத்தால் மெழுகிச் சுத்தப்படுத்துகிறோம். அதனைச் சாம்பர் ஆக்கி அச்சாம்பரை
விபூதி என்று ஜீவன் முக்திக் குறியாக வழங்குகிறோம்.
பசுவென்பது ஒளிக்குப் பெயர்.
பசுமாடு பத்தினிக்கும் மாதாவுக்கும்
ஸமானம்.
அதன் கண்ணைப் பார்!
அதன் சாணமே விபூதி; அதன் பால்
அமிர்தம்.
வைத்தியரும் யோகிகளும் பசுவின்
பாலை அமிர்தம் என்கிறார்கள். வேதமும் அப்படியேதான் சொல்லுகிறது.
பசுவை ஹிந்துக்களாகிய நாங்கள்
தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும் பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்துமாகிய
இந்த தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதை யாகும்.
இதைத்தான் ஆப்கானிஸ்தானத்து அமீர்
சாஹெப் நமது தேசத்து முஸல்மான்களிடம் சொல்லிவிட்டுப் போனார். ஹிந்துக்களின் கண்ணுக்குப்
படாமல் என்ன இழவு வேண்டுமானாலும் செய்துகொண்டு போங்கள்.
பகிரங்கமாக எங்கள் நெஞ்சை உடையும்படி
செய்வதில் உங்களுக்கு லாபமென்ன? போகாரில் கலகம் நேர்ந்ததுபோல் மொஹரம் பண்டிகை சமயத்தில்
நாட்டில் வேறெந்தப் பக்கத்தில் எவ்விதமான கலகமும் நடக்காமல், மொஹரம் பண்டிகை சுபமாக
முடிவெய்தி, ஹிந்து மஹமதிய ஸஹோதரத்வம் ஸ்தாபனமாய்விட்டது பற்றி நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
ஒரே, ஓரிடத்தில் மாத்திரம் கலகம்!
அதுவும் நடக்காமல் இருந்திருக்க வேண்டும்! அந்தப் பக்கத்து ஜனத் தலைவருடைய குற்றம்;
போனால் போகிறது. ஹிந்து முஸ்லிம் ஒன்று; இணங்கி வாழ்வது நன்று.
பசுவையும், காளையையும் ஹிந்துக்கள்
தெய்வமென்று கும்பிடுவதுபோல், கஷ்டப் படுத்தாமல் மரியாதையாக நமது முன்னோர் நடத்தியபடி
இப்போது நடத்துவதில்லை. வண்டிக்காரன் மாட்டைக் கொல்லுகிறான். இடையன் பசுவுக்குப் பொய்க்
கன்றுக்குட்டி காட்டி, அதன் சொந்தக் கன்றைக் கொல்லக் கொடுக்கிறான். ஹிந்துக்களாகிய
நாம் பார்த்துக் கொண்டு சும்மா தானே இருக்கிறோம்? வெறுமே பூவைப் போட்டுக் கும்பிட்டால்
மாத்திரம் போதுமா?
நம்முடைய பக்தியை நாம் செய்கையில்
காண்பிக்க வேண்டும். காண்பித்தால் பிறரும் நமது கொள்கைகளுக்கு அவமதிப்புச் செய்யாமல்
மரியாதையாக நடந்து கொள்வார்கள்.
No comments:
Post a Comment