Wednesday, May 16, 2012

பிரிட்டிஷ் அநீதிகளை ப்ரயன் தகர்த்தெறிதல்


4 ஆகஸ்டு, 1906

அமெரிக்க ஐக்கிய மாகாணக் குடியரசானது இவ்வுலக ராஜாங்கங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் நாகரீகம், செல்வம், வன்மை, பெருமையென்ற அனைத்திலும் சிறப்பு மிகுந்ததாக விளங்குகிறது. இதன் அதிபராக இப்போது மிஸ்டர் ரூஸ்வெல்ட் பரிபாலனmம செய்கிறார். இவருக்கப்பால், இந்தப் பதவிக்கு வரும்படியான நிலைமையிலிருப்பவர் மிஸ்டர் ப்ரயனேயாவார். மிஸ்டர் ப்ரயன் உலகத்து ராஜதந்திரிகளுக்குள்ளே விசேஷமான அறிவு வன்மையிலும், ஒழுக்க மாண்பிலும், நீதிப்பற்றிலும் முதல் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் சொல்லும் வசனங்களை உலகத்து விற்பன்னர்களும் ராஜதந்திரிகளும் மிகுந்த மரியாதையுடனும் சிரத்தையுடனும் கவனிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்த ராஜதந்திரி சிலதினங்கள் முன்பு இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சிபுரியும் மாதிரிகளை நன்றாய்க் கவனித்து தேர்ச்சியடைந்து இருக்கிறார். இதையெல்லாம் பற்றி இவர் தமது தேசத்திலுள்ள “ஸன்” என்னும் பத்திரிகையொன்றுக்கு 4 பத்திகள் வரக்கூடியதாகப் பெரிய கடிதமொன்று அனுப்பியிருக்கிறார். அந்த மஹா அற்புதமான உபந்நியாசத்தை அடுத்த முறை நமது பத்திரிகையிலே மொழி பெயர்த்தெழுத உத்தேசித்திருக்கின்றோம். இவர் பிரிட்டிஷ் ஆட்சியின் அநீதி குரூரமாக இருந்திருக்கிறதென்பதை எத்தனையோ பலமான விவகாரங்களால் சித்தாந்தம் செய்கிறார்.  இந்தியாவின் விவகாரங்களையெல்லாம் அதிநுட்பமாகப் படித்தறிந்து இவர் எழுதியிருக்கும் கடிதத்தை நோக்கும்போது இவருடைய புத்தி பலத்தைப்பற்றி அளவிறந்த ஆச்சரியமுண்டாகிறது. இங்கிலாந்தின் லாபத்தையே மட்டுமின்றி இந்தியாவின் லாபத்தைச் சிறிதேனும் கவனியாமல் ஆளும் அநியாயம்; வாக்குத் தவறுதல்; இந்நாட்டுச் செல்வத்தை கொள்ளையிட்டுப் போதல்; மரண விகிதத்தின் அதிகரிப்பு; தேச வருமானத்தின் பெரும் பங்கு அனாவசியமான சேனைக்காப்பிலே கொண்டு கொட்டுதல்; நீர் பாய்ச்சல், உரம் முதலிய விவசாய நலன்களைக் கவனியாமை; நிலவரியின் கொடுமை; மற்றத் தீர்வைகளின் பாரம்; ஜனங்களுக்குச் சுயாட்சி கொடுக்காமல் இருப்பதற்கு பிரிட்டிஷார் சொல்லும் போலிக் காரணங்களின்  மடமை, ஜனக்கல்வியை ஆதரியாமல் அமுக்கப் பார்க்கும் பாதகச் செய்கை யென்ற எல்லா விஷயங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து மகா சாமர்த்தியத்துடன் விவரிக்கிறார். சுதேசிய முயற்சி இந்நாட்டிலே தோன்றிய ஜனங்களெல்லாம் ஒற்றுமைப்பட்டு  வரும் மங்களக் குறியைச் சுட்டிப் பேசுகிறார். நமது நாட்டுத் தலைவர்களில் நவுரோஜி, கோகலே, முதலிய பெரியோர்களின் திறமையைப் புகழ்ந்து  கூறியிருக்கின்றார். நம்மவர்கள் விஷயங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம் ராஜாங்கத்தார் கவனியாமல் ஏதோ குழந்தைகள்  பிதற்றுகின்றன என்று சும்மாயிருந்தார்கள். இப்போது ப்ரயன் மோதுகிறாரே! இவருடைய உபந்நியாசம் உலகத்திலுள்ள எல்லா முக்கிய பாஷைகளிலும் மொழிபெயர்க்கப் பெற்று எல்லோரும் படிப்பார்களே, அப்போது பிரிட்டிஷாரைப் பற்றி உலகத்தார் எவ்வளவு இழிவாக நினைப்பார்கள்!


(வில்லியம் ஜென்னிங்ஸ் ப்ரயன் பற்றிய விக்கிப்பீடியா பக்கமும், இந்த கட்டுரையில் பாரதியால் குறிப்பிடப்படும் British rule in India கட்டுரையும். நன்றி @mankuthirai )

No comments:

Post a Comment