ராஜமகேந்திரபுரத்தில் வீரேசலிங்கம் பந்துலு வீட்டைத் தேடிப் போய் விசாலாட்சி விசாரித்தாள். அவர் அங்கில்லை யென்றும், அவள் வந்த நாளுக்கு முதல் நாள்தான் புறப்பட்டுச் சென்னப்பட்டணத்துக்குப் போனா ரென்றும் தெரிய வந்தது. சென்னை எழும்பூரில் பண்டித வீரேசலிங்கம் பந்துலு ஒரு தனி வீட்டில் தம் மனைவியுடன் வந்து தங்கியிருந்தார்.
விசாலாட்சி சென்னப்பட்டணத்துக்கு வந்து, மறுநாட் காலையில் எழும்பூரில் அவர் இருந்த வீட்டிற்குப் போனாள். உள்ளே அவர் மாத்திரம் நாற்காலி மேஜை போட்டு உட்கார்ந்து கொண்டு ஏதோ நூலெழுதிக் கொண்டிருந்தார்.
விசாலாட்சி அவரை நமஸ்காரம் பண்ணினாள். ஜீ. சுப்பிரமணிய அய்யரிடமிருந்து தான் வாங்கிக்கொண்டு வந்த கடிதத்தைக் கொடுத்தாள். வீரேசலிங்கம் பந்துலு தன் எதிரேயிருந்த நாற்காலியின் மீது விசாலாட்சியை உட்காரச் சொன்னார். அவள் தன் மடியில் சந்திரிகையை வைத்துக்கொண்டு அந்நாற்காலியின் மீதுட்கார்ந்தாள். வீரேசலிங்கம் பந்துலு அவள் கொணர்ந்த கடிதம் முழுதையும் வாசித்துப் பார்த்துவிட்டு, அவளை நோக்கி 'இன்றைக்கென்ன கிழமை?' என்று தமிழில் கேட்டார். அவள் 'புதவாரமு' என்று தெலுங்கில் மறு மொழி சொன்னாள்.
"மீகு தெலுகு வச்சுனா?" என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார். "அவுனு சால பாக வச்சுனு" என்றாள் விசாலாட்சி.
இங்கு நமது கதை வாசிப்போரிலே பலருக்குத் தெலுங்கு பாஷை தெரிந்திருக்க வழியில்லை யாதலால், அவ்விருவருக்குள் தெலுங்கில் நடைபெற்ற சம்பாஷணையை நான் தமிழில் மொழி பெயர்த்துத் தருகிறேன்.
"உனக்குத் தாய் தந்தையர் இருக்கிறார்களா?" என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.
"இல்லை" என்றாள் விசாலாட்சி.
"அண்ணன், தம்பி, அக்காள், தங்கை ?"
"எனக்கு யாருமே இல்லை. அதாவது, என்னுடைய விவகாரங்களில் கவனம் செலுத்தி என்னைக் காப்பாற்றக் கூடிய பந்துக்கள் யாருமில்லை. அப்படியே சிலர் இருந்தபோதிலும், நான் இப்போது விவாகம் செய்து கொள்ளப் போவதினின்றும் அவர்கள் என்னை ஜாதிக்குப் புறம்பாகக் கருதி விடுவார்கள்" என்று விசாலாட்சி சொன்னாள்.
"உனக்கு என்னென்ன பாஷைகள் தெரியும்?" என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.
"எனக்குத் தமிழ் தெரியும். தெலுங்கு தெரியும். இரண்டு பாஷைகளும் நன்றாக எழுதவும் வாசிக்கவும் பேசவுந் தெரியும்" என்று விசாலாட்சி சொன்னாள்.
"இங்கிலீஷ் தெரியுமா?" என்று பந்துலு கேட்டார்.
"தெரியாது" என்றாள் விசாலாட்சி.
"கொஞ்சங் கூட?" என்று கேட்டார்.
"கொஞ்சங் கூட தெரியாது" என்றாள்.
"சங்கீதம் தெரியுமா?" என்று பந்துலு கேட்டார்.
"எனக்கு நல்ல தொண்டை. என் பாட்டை மிகவும் நல்ல பாட்டென்று என் சுற்றத்தார் சொல்வார்கள்" என்று விசாலாட்சி சொன்னாள்.
"வீணை, பிடில், ஹார்மோனியம் - ஏதேனும் வாத்தியம் வாசிப்பாயா?" என்று பந்துலு கேட்டார்.
"ஒரு வாத்தியமும் நான் பழகவில்லை" என்றாள் விசாலாட்சி.
"தாளந் தவறாமல் பாடுவாயா?" என்று பந்துலு கேட்டார்.
"தாளம் கொஞ்சங்கூடத் தவறமாட்டேன்" என்று விசாலாட்சி சொன்னாள்.
"எங்கே? ஏதேனும் ஒரு பாட்டுப் பாடிக் காட்டு, பார்ப்போம்" என்று பந்துலு கேட்டார்.
அந்த சமயத்தில் சமையலறைக்குள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவளாகிய வீரேசலிங்கம் பந்துலுவின் கிழமனைவி உள்ளேயிருந்து இவர்கள் பேசிக் கொண்டிருந்த கூடத்துக்கு வந்து ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்தாள். அவளைக் கண்டவுடன், விசாலாட்சி எழுந்து நமஸ்காரம் பண்ணினாள். அவள் ஆசீர்வாதங் கூறி வீற்றிருக்க விடை கொடுத்து விசாலாட்சியின் மடியிலிருந்த குழந்தையை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.
குழந்தை வீறிட்டு அழத் தொடங்கிற்று.
"என்னிடம் கொடு, நான் அழாதபடி வைத்துக் கொள்ளுகிறேன்" என்று பந்துலு சொன்னார், அவள் அக் குழந்தையைத் தன் கணவனிடம் கொடுத்தாள். அவர் மடிக்குப் போனவுடனே குழந்தையாகிய சந்திரிகை அழூகையை நிறுத்தியது மட்டுமன்றி வாயைத் திறந்து புன்னகை செய்யத் தொடங்கினாள்.
"கிழவருக்கு வேறொன்றுந் தெரியாவிட்டாலும், குழந்தைகளை அழாதபடி வைத்துக் கொள்வதில் மிகவும் சமர்த்தர்' என்றாள் கிழவி.
"ஆமாம்! எனக்கென்ன தெரியும்? படிப்புத் தெரியுமா, இழவா? நீ தான் சகல கலா பண்டிதை" என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலு முறுவலித்தார்.
அப்பால், வீரேசலிங்கம் பந்துலு நமக்கு ஜீ. சுப்பிரமணிய அய்யர் எழுதிய கடிதத்தில் கண்டபடி விசாலாட்சியின் விருத்தாந்தங்களை யெல்லாம் விரித்துக் கூறினார்.
அவருடைய மனைவி இதைக் கேட்டு:- "சென்ற வாரம் தங்களைப் பார்க்கும் பொருட்டுத் தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் ஒரு அய்யங்கார் வந்திருந்தாரன்றோ? அவர் தமக்கு ஒரு விதவைப் பெண் பார்த்து விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று தங்களை வேண்டினாரன்றோ? அவருக்கு இந்தப் பெண்ணைக் கொடுக்கலாம். இவளுடைய முதல் புருஷன் ருது ஆவதற்கு முன்னே யிறந்தானா? பிந்தி இறந்தானா?" என்று வினவினாள்.
அப்போது வீரேசலிங்கம் பந்துல்லு:- "அந்த விஷயம் உனக்குச் சொல்லத் தவறி விட்டேனா? இதோ சொல்லுகிறேன் கேள். இவளுக்குப் பத்தாம் வயதிலே அந்தப் புருஷன் இறந்து போனான். அவன் இறந்துபோய் இப்போது பதினைந்து வருஷங்களாயின" என்றார்.
"சரி; அப்படியானால் அந்தப் டிப்டி கலெக்டர் யாதோர் ஆக்ஷேபமின்றி இவளை மணம்புரிந்து கொள்வார். முதற் புருஷனுடன் கூடியனுபவிக்காமல் கன்னிப் பருவத்திலே தாலியறுத்த பெண் தமக்கு வேண்டுமென்று அவர் சொன்னாரன்றோ?" என்று கிழவி கேட்டாள்.
"ஆம்; இவள்தான் அவர் விரும்பிய லக்ஷணங்களெல்லாம் பொருந்தியவளாக இருக்கிறாள். இவளை அவர் அவசியம் மணம் புரிந்து கொள்ள விரும்புவார். நீ சொல்லுமுன்பே, நான் இந்தக் கடிதத்தை வாசித்துப் பார்த்த மாத்திரத்தில், மேற்படி டிப்டி கலெக்டர் கோபாலய்யங்காரை நினைத்தேன், ஆனால் 'இந்தப் பெண் அவரை மணம் புரிந்து கொள்ள உடன்படுவாளோ' என்பதுதான் சந்தேகம்" என்று பந்துலு சொன்னார்.
இதைக் கேட்டவுடனே கிழவி:- "ஏன்? அவரிடத்தில் என்ன குற்றங் கண்டீர்? எலுமிச்சம் பழம்போலே நிறம்; ராஜபார்வை; பருத்த புஜங்கள்; அகன்ற மார்பு; ஒரு மயிர் கூட நரையில்லை; நல்ல வாலிபப் பருவம். டிப்டி கலெக்டர் உத்தியோகம் பண்ணுகிறார். எத்தனை கோடி தவம் பண்ணியோ, இவளுக்கு அப்படிப்பட்ட புருஷன் கிடைக்க வேண்டும்" என்றாள்.
அப்போது வீரேசலிங்கம் பந்துலு:- "அந்த கோபாலய்யங்கார் நீ சொன்ன லக்ஷணங்களெல்லாம் உடையவரென்பது மெய்யே. ஆனால் சாராயம் குடிக்கிறார். மாம்ச போஜனம் பண்ணுகிறார். கட்குடியர். வேறென்ன நல்ல லக்ஷணங்களுமுடையவராக இருப்பினும் அவற்றை விரைவில் இழந்து விடுவார்கள். அவர்களுடைய செல்வமும் பதவியும் விரைவில் அழிந்து போய் விடும்" என்றார்.
இது கேட்டு விசாலாக்ஷி:- "சரி, அவர் என்னை விவாகம் செய்துகொள்ளும்படி ஏற்பாடு செய்யுங்கள். அவருடைய கெட்ட குணங்களை யெல்லாம் நான் மாற்றி விடுகிறேன்" என்றாள்.
"குடி வழக்கத்தை மாற்றப் பிரமதேவனாலேகூட முடியாது" என்று வீரேசலிங்கம் பந்துலு சொன்னார்.
அதற்கு விசாலாக்ஷி:- "என்னால் முடியும். சாவித்ரி தன் கணவனை யமனுலகத்திலிருந்து மீட்டுக் கொண்டு வரவில்லையா? பெண்களுடைய அன்புக்குச் சாத்தியப்படாதது யாதொன்றுமில்லை. நான் அவருடைய மாம்ச போஜன வழக்கத்தை உடனே நிறுத்தி விடுவேன். மது வழக்கத்தை ஓரிரண்டு வருஷங்களில் நிறுத்தி வைப்பேன். மற்ற லக்ஷணங்களெல்லாம் அவரிடம் நல்லனவாக இருப்பதால் இவ்விரண்டு குற்றங்களிருப்பது பெரிதில்லை. நான் அவரை மணம் புரிந்து கொள்ள முற்றிலும் சம்மதப் படுகிறேன்" என்றாள்.
இது கேட்டு வீரேசலிங்கம் பந்துலு:- "சரி. பாட்டுப் பாடத் தெரியுமென்றாயே? ஏதேனும் கீர்த்தனம் பாடு, கேட்போம்" என்றார்.
"சுருதிக்குத் தம்பூர் இருக்கிறதோ?" என்று விசாலாட்சி கேட்டாள்.
'ஹார்மோனியம் இருக்கிறது' என்று சொல்லி வீரேசலிங்கம் பந்தலுவின் மனைவி உள்ளே போய் ஒரு நேர்த்தியான சிறிய அழகிய 'மோஹின்' பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து விசாலாக்ஷியிடம் கொடுத்தாள்.
பெட்டியை மடிமீது வைத்து விசாலாட்சி முதற் கட்டை சுருதி வைத்துக்கொண்டு மிகவும் சன்னமான அற்புதமான குரலில் தியாகய்யர் செய்த "மாருபல்கு கொன்னா லேமிரா" (மறுமொழி சொல்லாதிருப்ப தென்னடா?) என்ற தெலுங்குக் கீர்த்தனையைப் பாடினாள். கால் விரல்களினால் தாளம் போட்டாள்.
அப்போது அந்த வீட்டு வாசலில் ஒரு மோட்டார் வண்டி நின்ற சத்தம் கேட்டது. சேவகனொருவன் ஒரு சீட்டைக் கொண்டுவந்து வீரேசலிங்கம் பந்துலுவிடம் கொடுத்தான். அதைப் பார்த்தவுடனே வீரேசலிங்கம் பந்துலு எழுந்து தன் கையிலிருந்த குழந்தை சந்திரிகையை விசாலாட்சியிடம் நீட்டினார். அவள் மேற்படி கீர்த்தனத்தில் பல சங்கதிகளுடன் அனுபல்லவி பாடி முடித்து மறுபடி "மாரு பல்க" என்ற பல்லவி யெடுக்குந் தறுவாயிலிருந்தாள்.
வீரேசலிங்கம் பந்துலு குழந்தையை நீட்டினவுடனே, விசாலாட்சி தன் கையிலிருந்த ஹார்மோனியப் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு எழுந்து நின்று குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டாள்.
"என்ன விசேஷம்? யார் வந்திருக்கிறார்கள்?" என்று பந்துலுவை நோக்கி அவருடைய மனைவி கேட்டாள்.
"கோபாலய்யங்காரே வந்து விட்டார். பழம் நழுவிப் பாலில் விழுந்தது" என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலு மேல் வேஷ்டியை எடுத்துப் போர்த்துக்கொண்டு, மட மட வென்று வெளியே சென்றார்.
இவர் வெளியே போனவுடன், கிழவி விசாலாட்சியை நோக்கி, "அவர்களிருவரும் வந்தால் தமக்குள்ளே பேசிக்கொண்டிருப்பார்கள். நாம் சமையலறைக்குப் போய்விடுவோம். இன்று பகலில் கோபாலய்யங்கார் இங்கேயே போஜனம் பண்ணுவார். அவர் பந்துலுவைப் பார்க்க வந்தால், ஒரு வேளை ஆகாரமாவது இங்கு செய்யாமல் போவது வழக்கமில்லை. மேலும் இப்போது அவருக்கு ரஜாக்காலம். ஆதலால் நாம் விருந்துக்கு அழைத்தால் மறுத்துச் சொல்ல வேண்டிய ஹேது இராது. நீயும் இங்கேயே இரு. நாளைக்குப் போகலாம். பந்துலுவுக்கும் எனக்கும் மாத்திரமென்று ஒரு ரஸம், அன்னம், சட்னி, அப்பளம் பண்ணிவைக்கக் கருதியிருந்தேன். இப்போது விருந்து வந்து விட்டது. நேற்று வாங்கிக் கொண்டு வந்த வெங்காயமும் புடலங்காயும் நிறைய மிஞ்சிக் கிடக்கின்றன. வெங்காய சாம்பார், தேங்காய் சட்னி, மைசூர் ரஸம், புடலங்காய் பொடித்தூவல், வடை, பாயஸம் இவ்வளவும் போதும். அப்பளத்தை நிறைய பொரித்து வைப்போம். கோபாலய்யங்காருக்குப் பொரித்த அப்பளத்தில் மோகம் அதிகம். சரி, நீ காலையில் ஸ்நானம் பண்ணிவிட்டுத் தான் வந்திருக்கிறாய். குழந்தையை வேலைக்காரியிடம் கொடுத்தால் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பாள். நீ கைகால் அலம்பிவிட்டு என்னுடன் சமையலுக்கு வா" என்றாள்.
விசாலாட்சி "அப்படியே சரி" என்றாள். மாதர் இருவரும் சமையலறைக்குள்ளே புகுந்தனர். வேலைக்காரியும் குழந்தை சந்திரிகையும் அவ்வீட்டுக் கொல்லையிலிருந்த விஸ்தாரமான பூஞ்சோலையில் மர நிழலில் வீற்றிருந்து பட்சிகளின் விளையாட்டுக்களையும் அற்புதமான பாட்டுகளையும் ரஸித்துக் கொண்டிருந்தனர்.
குழந்தை சந்திரிகைக்கு வயது இப்போது மூன்று தானாயிற்று. எனிலும், அது சிறிதேனும் கொச்சைச் சொற்களும் மழலைச் சொற்களும் இல்லாமல் அழுத்தந்திருத்தமாக வார்த்தை சொல்லும். அந்தக் குழந்தையின் குரல் சிறிய தங்கப் புல்லாங்குழலின் ஓசையைப் போன்றது. குழந்தையின் அழகோ வர்ணிக்குந் தரமன்று. தெய்விக ரூபம்; வனப்பின் இலக்கியம்.
சோலைப் பறவைகளெல்லாம் இக் குழந்தையின் அழகைக் கண்டு மயங்கிக் களிகொண்டு இதன் தலையைச் சுற்றிச் சுற்றி வட்டமிடலாயின. பலவிதக் குருவிகளும், குயில்களும், கிளிகளும், நாகணவாய்களும் தங்களுக்குத் தெரிந்த நாதங்களில் மிகவும் அழகிய நாதங்களைப் பொறுக்கியெடுத்து, இக்குழந்தையின் முன்னே வந்து நின்றொலித்தன. வானரங்கள் தமக்குத் தெரிந்த பாய்ச்சல்களிலும் நாட்டியங்களிலும் மிகவும் வியக்கத்தக்கனவற்றை இக் குழந்தைக்குக் காண்பித்தன.
புன்னகை செய்த மலர்ச் சிறுவாயைச் சந்திரிகை மூடவே யில்லை. வானமும், சூரியனும், ஒளியும், மேகங்களும், மரங்களும், செடிகளும், கொடிகளும், மலர்களும், சுந்தரப் பட்சிகளும் கூடிக் காலை நேரத்தில் விளைவித்த அற்புதக் காட்சியிலும், பறவைகளின் ஒலிகளிலும் சந்திரிகை சொக்கிப்போய் விட்டாள்.
ஒரு சமயம் அவள் தன்னை மறந்து எழுந்து வானத்தை நோக்கி நின்று இரண்டு கைகளையும் கொட்டிக்கொண்டு கூத்தாடுவாள். ஒரு சமயம் பட்சிகளின் ஒலிகளை அனுசரித்துத் தானும் கூவுவாள். இங்ஙனமிருக்கையில், வேலைக்காரி குழந்தையை நோக்கி:- "நீ ஒரு பாட்டுப் பாடு" என்றாள். "அத்தை கற்றுக் கொடுத்த `நந்தலால்' பாட்டுப் பாடலாமா?" என்று சந்திரிகை கேட்டாள்.
"அந்த அம்மா உனக்குத் தாயில்லையா? அத்தையா?" என்று வேலைக்காரி கேட்டாள்.
அதற்குச் சந்திரிகை:- "என் தந்தையும், தாயும் நான் பிறந்தன்றைக்கே செத்துப் போய்விட்டார்கள். இந்த சங்கதி எனக்கு அத்தை சொன்னாள். நடுராத்திரி வேளையாம். பூமி நடுங்கிற்றாம். பேய்க்காற்றடித்ததாம். சோனை மழை பெய்ததாம். எங்கள் ஊர் முழுதும், எல்லா வீடுகளும் இடிந்து விழுந்து, அத்தனை ஜனங்களும் செத்துப்போய் விட்டார்களாம். எங்கள் வீடும் இடிந்து அப்பா, தாத்தா, பாட்டி, என்னுடைய அக்காமார் ஐந்து குழந்தைகள் ஆகிய எல்லாரும் செத்துப் போய்விட்டார்கள். அம்மாவும் அத்தையும் இருந்த குச்சில் மாத்திரம் இடிந்து விழவில்லை. அம்மா வயிற்றுக்குள்ளே நான் இருந்தேன். அப்பால் நான் அந்த இராத்திரியிலேயே பிறந்தேன். நான் பிறந்தவுடனே அம்மா செத்துப் போனாள். இதுவெல்லாம் அத்தை எனக்குச் சொன்னாள். அது முதல் எனக்குப் பசுவின் பாலும் சாதமும் கொடுத்து, அத்தைதான் காப்பாற்றிக்கொண்டு வருகிறாள்" என்று தன் குழந்தை பாஷையில் கால்மணி நேரத்தில் சொல்லி முடித்தது. ஆனால் உடைந்த சொற்களும், நிறுத்தி, நிறுத்தி, யோசித்து, யோசித்து, மெல்ல மெல்லப் பேசுவதும் இருந்தனவேயல்லாது, பொருள் விளங்காததும் உருச் சிதைந்ததுமாகிய குதலைச் சொல் ஒன்றுகூடக் கிடையாது.
இங்ஙனம் அந்த அழகிய குழந்தை பேசிக் கொண்டு வருகையில் அதன் விழிகளிலும் இதழ்களிலும் பொறி வீசியெழுந்த அன்புச் சுடரையும் அறிவுச் சுடரையும் பணிப் பெண் மிகவும் உற்றுநோக்கி கவனித்துக் கொண்டு வந்தாள். அவள் அதன் அழகில் மயங்கிப்போய் அதனை எடுத்து மார்பாரத் தழுவிக் கொண்டு முகத்தோடு முக மொற்றி முத்தமிட்டாள்.
அந்த சமயம் காலை பதினொரு மணியிருக்கும். சுகமான காற்று வீசிக் கொண்டிருந்தது. அந்தப் பணிப் பெண் அவளை முத்தமிடும் செய்கையை இருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். அவ்விருவரில் ஒருவர் அவள்மீது காதல் கொண்டார்.

No comments:
Post a Comment