Monday, September 10, 2012

கிளிக் கதை

எண்ணூறு வருஷங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் மிளகாய்ப்பழச்சாமி என்றொரு பரதேசி இருந்தான். அவன் நாள்தோறும் இருபது மிளகாய்ப்பழத்தைத் தின்று ஒரு மிடறு தண்ணீரும் குடிப்பான். அவனிடம் ஒரு கிளியுண்டு. மடத்துக்கு வரும் ஜனங்களிடம் ஸ்காந்த புராணம் சொல்லிப் பிரசங்கம் செய்வது அந்தப் பரதேசியின் தொழில். பிரசங்கந் தொடங்கு முன்பு பரதேசி கிளியை நோக்கி:

"முருகா, முருகா, ஒரு கதை சொல்லு" என்பான்.

உடனே கிளி ஏதோ கங்கா மங்கா வென்று குழறும். பரதேசி சொல்லுவான்:

"அடியார்களே இங்கிருப்பது கிளியன்று. இவர் சுகப் பிரம ரிஷி. இவர் சொல்லிய வசனம் உங்கள் செவியில் தெளிவாக விழுந்திருக்கும். சிறிது கவனக் குறைவாக இருந்தாலும் நான் அவர் சொல்லியதை மற்றொரு முறை சொல்லுகிறேன்.

கங்கா மங்கை மைந்தன்
பாம்பைத் தின்றது மயில்
மயிலின் மேலே கந்தன்

"இதன் பொருள் என்னவென்றால்......" இவ்விதமாகத் தொடங்கிப் பரதேசிக் கந்த புராண முழுவதையும் நவரஸங்களைச் சேர்த்துச் சோனாமாரியாகப் பொழிவான். ஜனங்கள் கேட்டுப் பரவசமடைந்து போய் பொன் பொன்னாகப் பாதகாணிக்கை குவிப்பார்கள். அவன் அந்தப் பணத்தை எவ்விதமாகச் செலவழிப்பானோ யாருக்கும் தெரியாது. அது தேவர் மனுஷ்யர் அசுரர் மூன்று ஜாதியாருக்கும் தெரியாத ரகஸ்யம்.

இருந்தாலும் ஊரில் வதந்தியெப்படி யென்றால், இவன் மேற்படி பொன்னையெல்லாம் மலையடிவாரத்தில் ஏதோ ஒரு குகைக்குள் பதுக்கி வைத்திருப்பதாகவும், இருபது வருஷத்துக்குப் பிறகு அத்தனை பொன்னையும் எடுத்துப் பெரிய கோவில் கட்டப்போவதாகவும் சொல்லிக் கொண்டார்கள்.

இப்படி யிருக்கும்போது ஒருநாள், திடீரென்று மிளகாய்ப் பழச்சாமி மறைந்து போய்விட்டான். பொழுது விடிந்து தூப்பு வேலை செய்யும் கிழவி வந்து பார்க்கும்போது மடம் திறந்து கிடந்தது. உள்ளே போய்ப் பார்த்தால், சாமியார், கூடு, கிளி, தடி, புஸ்தகம், திருவோடு முதலிய யாதொரு வஸ்துவுமில்லை. கிழவி கூவிவிட்டு வீடுபோய்ச் சேர்ந்தாள். ஊரதிகாரிக்குத் தெரிந்தது. பொன்னை ஒரு வேளை பரதேசி மறந்துபோய் வைத்துவிட்டுப் போயிருக்கக் கூடும்; அதையெடுத்து யாதேனும் ஓர் தர்மம் பண்ணலாமென்ற தர்ம சிந்தையினால் அதிகாரி சேவகரை விட்டு மலையிலுள்ள பொந்து முழுவதையும் தொளை போட்டுப் பார்க்கச் சொன்னான். சிற்சில இடங்களில் ஓரிரண்டு பொன் அகப்பட்டது. தேடப்போனவர்களில் பலரைத் தேள் கொட்டிற்று. அநேகரைப் பாம்பு தீண்டிற்று. அதிகாரி தேடுவதை நிறுத்திவிட்டான். சில தினங்களுக்கப்பால் வாழைப்பழச் சாமியாரென்ற மற்றொரு பரதேசி ஒரு கட்டுக் கட்டிவிட்டான். அதெப்படி யென்றால், மிளகாய்ப் பழச்சாமி பொற்குடத்துடன் ஆகாயத்தை நோக்கிப் பறந்து போய் மேகமண்டலத்துக்குள் நுழைந்ததைத் தான் பக்கத்திலேயிருந்து பார்த்ததாகவும், தானேயிருந்து வழியனுப்பினதாகவும், புரளி பண்ணினான்.

அதிகாரி அடியார் விசுவாச முள்ளவனாகையால் அந்தப் பரதேசி சொன்னதை நம்பி, அவர் பொன்னைத்தான் தேடப்போனது குற்றமென்று நினைத்து, மேற்படி மிளகாய்ப் பழச்சாமிக்கு வருஷந்தோறும் மேற்படி மடத்தில் குருபூஜை நடத்தி வைப்பதாகவும், மடத்தை வாழைப்பழச் சாமி வைத்துக் கொண்டு கந்த புராணப் பிரசங்கஞ் செய்து வந்தால் திருவிளக்குச் செலவு தான் கொடுத்து விடுவதாகவும் சொன்னான். வாழைப்பழச்சாமி சம்மதி கொண்டு மடத்தை ஒப்புக்கொண்டான்.

இவனுடைய விசேஷ மென்ன வென்றால், இவன் நாளொன்றுக்கு இருபது வாழைப்பழம் தின்று ஒரு மிடறு தண்ணீர் குடிப்பான். அதன் பிறகு ஜலபானம் கிடையாது.

இவனும் ஒரு கிளி வளர்த்தான். அதற்கும் கங்கா மங்கா என்று கற்றுக்கொடுத்து, அதையும் சுகப்பிரம ரிஷியென்று சொன்னான். ஆனால் பிரசங்கம் செய்வதில் பழைய சாமியாருக்குள்ள திறமையில் நூற்றிலொரு பங்கு கூட இவனிடம் கிடையாது. ஆகையால் இவனுக்குப் பழைய வரும்படியில் நூறிலொரு பங்குகூடக் கிடையாது. இருந்தாலும் சொற்பத்தைக் கொண்டு ஒருவாறு வாழைப் பழச் செலவை நடத்தி வந்தான்.

இப்படி யிருக்கையில் ஒருநாள் நாலைந்து புதிய சீடருக்குக் கந்தபுராணம் சொல்லத் தொடங்கி வாழைப்பழச்சாமி தனது சுகப்பிரம ரிஷியிடம் கேள்வி போட்டுக் கொண்டிருக்கையிலே, திடீரென்று மடத்துக்குள் பழைய மிளகாய்ப்பழச்சாமி தனது கிளிக்கூடு சகிதமாக வந்து தோன்றினான், சாமிக்கும் சாமிக்கும் குத்துச் சண்டை. மிளகாய்ப் பழச்சாமி காலை வாழைப்பழச்சாமி கடித்துக் காலிலே காயம். வாழைப்பழச்சாமிக்கு வெளிக்காயம் படவில்லை. உடம்புக்குள்ளே நல்ல ஊமைக் குத்து. அப்போது வந்த ஜ்வரத்தில் ஆறு மாசம் கிடந்து பிழைத்தான். குத்துச் சண்டையின் போது கிளியும் கூட்டுக்குள் இருந்தபடியே ஒன்றுக்கொன்று கங்கா மங்கா என்று அம்பு போட்டதுபோல் தூஷணை செய்து கொண்டன. அந்தச் சமயத்தில் ஊர்க்கூட்டம் கூடி, அதிகாரியிடமிருந்து சேவகர் வந்து இரண்டு பரதேசிகளையும் பிடித்துக்கொண்டு போய் நியாய ஸ்தலத்தில் விட்டார்கள்.

வாழைப்பழச்சாமியை ஊரை விட்டுத் துரத்திவிடும்படிக்கும், மிளகாய்ப்பழச்சாமி மடத்தை எடுத்துக் கொள்ளும் படிக்கும், இனிமேல் கந்த புராண உபந்யாஸத்தில் வரும் பொன்னில் ஆறிலொரு பங்கு கோயிலுக்கும், நாலில் ஒரு பங்கு அதிகாரிக்கும் செலுத்தி விடும்படிக்கும் நியாய ஸ்தலத்தில் தீர்ப்புச் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment