Saturday, September 15, 2012

உபசாந்திலோகம் (ஞானரதம்)

எனது ஞானத் தேரை நோக்கி "இந்த க்ஷணமே என்னை, துக்கமில்லாத பூமி எங்கேனும் உளதாயின், அங்கு கொண்டு போ" என்று ஏவினேன். ஆகா! இந்த ரதத்தை வைத்துக்கொண்டிருந்தும், இத்தனை நாள் எனக்குக் கவலையும், மன உளைச்சலும் இல்லாதிருக்க வழி தெரியாமல் போய்விட்டதே! எத்தனை நாள் எனது மனம் தூண்டிற் புழுவைப் போலத்துடித்துக் கொண்டிருக்க, அதை நிவிருத்தி செய்வதற்கு யாதொரு உபாயமும் அறியால் பரிதபித்திருக்கின்றேன். அம்மம்மா! இந்த உலகத்துக் கவலைகளை நினைக்கும்போதே நெஞ்சம் பகீரென்கிறது. அவற்றுக்குள்ள விஷ சக்தியை என்னென்பேன்? ஒருவனது முகத்திலுள்ள அழகையும், குளிர்ச்சியையும், இளமையையும் இந்தக் கவலைகளே அழித்து விடுகின்றன. கண்களின் ஒளியை மாற்றிப் பசலையும், உடல் நிறம் மங்குதலும் உண்டாக்கி விடுகின்றன. நெற்றியிலே வரிகளும், கன்னங்களிலே சுருங்கல்களும், இந்த நீசக் கவலைகளினாலேயே ஏற்படுகின்றன. எனது தொண்டையின் இனிய குரல் போய், கடூரமான கரகரப்புச் சத்தம் உண்டாகிறது. மார்பிலும், தோளிலும் இருந்த வலிமை நீங்கிப் போய்விடுகிறது. இரத்தம் விரைவாக ஓடுதலின்றி, மாசு நீரோடை போல மந்தம் அடைகின்றது. கால்களில் தீவிரமில்லாமற் போய்விடுகிறது. கவலைகள் என்ற விஷ ஜந்துக்கள் ஒருவனுடைய சரீரத்தை உள்ளூர அரித்து விடுகின்றன. சரீரத்தை மட்டுமா? அறிவையும் பாழாக்குகின்றன. மறதியை அதிகப்படுத்தி விடுகின்றன. முக்கியமான செய்திகளெல்லாம் நல்ல சந்தர்ப்பத்திலே நினைவிற்கு வராமல் போய் விடுகின்றன. படித்த படிப்பெல்லாம் பாலைவனத்திலே பெய்த மழைபோல நிஷ்பலனாய் விடுகின்றது. அறிவிலே பிரகாசமில்லாமல், எப்போதும் மேகம் படர்ந்தது போலாய்விடுகிறது. யோசனை தட்டுகிறது. ஐயோ! இந்தக் கவலைகளாகிய சிறிய சிறிய விஷப் பூச்சிகளுக்குள்ள திறமை வைத்திய சாஸ்திர நிபுணர்கள் கூறும் மகா கொடூரமான கண்ணுக்குத் தெரியாத - நோய்ப் பூச்சிகளுக்குக் கூடக் கிடையாது.

"ஞானரதமே, நீ நம்மை இப்போது கவலையென்பதே இல்லாத உலகத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்" என்று கட்டளையிட்டேன். அப்போது மனம் வந்து ரதத்தைத் தடுத்துக் கொண்டது. "அது அத்தனை சுகமான உலகமன்று. கவலை இல்லாமலிருந்தால் மட்டும் போதுமா" வேறு, இன்பங்கள் அனுபவிக்கக் கூடிய இடம் ஏதேனும் தமக்குத் தோன்றவில்லையா? கவலையே இல்லாத இடத்தில் சுகமும் இராது என்று எனக்குத் தோன்றுகிறது. மேலும், - மேலும், - என்னவோ; இன்ன காரணமென்று சொல்ல முடியாது. ஆனால் அங்கு போவதில் எனக்குப் பிரியமில்லை" என்று மனம் கூறிற்று.

நான் கோபத்துடன், "சீச்சீ! பேதை மனமே, உனக்கு ஓயாமல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேதனைகளையும் உளைச்சல்களையும் கண்டு இரங்கி, நான் உன்னைச் சிறிது நேரமேனும் அமைதி யுலகத்திற்குக் கொண்டுபோய் வைத்துத் திரும்பலாம் என்று உத்தேசித்தேன். இதற்கு நீயே ஆக்ஷேபம் சொல்ல வருகிறாயா?" என்று கண்டித்தேன். மனம் பிணங்குதல் மாறாமல் மறுபடியும் எதிர்த்து நின்றது.

எனக்கு இந்த மனம் என்ற மோகினியிடத்தில் காதல் அதிகமுண்டு. ஆதியில் எவ்வாறு இந்த மோகம் உண்டாயிற்று என்பதை இங்கே விஸ்தரிக்க முடியாது. அது ரகஸ்யம். ஆனால், நாளேற நாளேற நான் வேறு இந்த மனம் வேறு என்ற த்வைத சிந்தனையே பெரும்பாலும் மறந்து போகும் வண்ணமாக எனக்கு இம் மோகினியிடத்தில் பிரேமை மிகுந்து போய்விட்டது. இந்த மனம் படும் பாடுகளைக் கண்டு பொறுக்காமலேதான் நான் சாந்திலோக தரிசனத்திலே விருப்பம் கொண்டேன். இப்போது மனம் அந்த யோசனையில் நிஷ்காரணமாக வெறுப்புக் கொள்வதைக் கண்டு எனக்குத் திகைப்பும், இரக்கமும், கோபமும் கலந்து பிறந்தன. எவ்வளவோ விதங்களில் மனத்தைச் சமாதானம் செய்ய முயன்றேன். மனம் பின்னும் கண் மூடிக்கொண்டு ஒரேயடியாக மூடச் சாதனை சாதிக்கத் தொடங்கிற்று. எனக்கு இன்ன செய்வதென்று தெரியவில்லை. பிறகு, ஒரே நிச்சயத்துடன், "மனமே, நான் இந்த விஷயத்தில் உன் பேச்சைக்கேட்கவே மாட்டேன். உன்னுடைய நான்மையைக் கருதியே நான் செய்கிறேன். - ஞானரதமே, - உடனே புறப்படு" என்றேன்.

அடுத்த நிமிஷத்தில் உபசாந்தி பூமிக்கு வந்து சேர்ந்தோம்.

நெடிதோங்கி வளர்ந்த கோட்டைச் சுவர் வாயிலிலே போய் ரதம் நின்று விட்டது. நான் தூரத்திலிருந்தே அந்தக் கோட்டையைப் பார்க்க முடிந்ததாயினும், எனது ஞானத்தேர் போனவுடன் அந்த வாயிற்கதவுகள் தாமே திறந்து விடும் என்று எண்ணினேன். அவ்வாறு திறக்கவில்லை. என்ன ஆச்சரியம்! ஞானத்தேர்கூட நுழைய முடியாதபடி அத்தனை பரிசுத்தமானதா இந்த லோகம் என்று வியப்புற்றேன். எனது மனமோ முன்னைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக நடுங்கத் தொடங்கிற்று. அதற்கு என்னிடம் பேசக்கூட நாவெழவில்லை. கோட்டை வாயிலுக்கு வெளியே ஒரு வாயில் காப்பான் உருவின கத்தியுடன் நின்று கொண்டிருந்தான். நெருப்பு நிறங் கொண்டதும், இமயமலையைக்கூட ஒரே வெட்டில் பொடிப் பொடியாகச் செய்து விடுமென்று தோன்றியதுமாகிய அந்த வாளின்மீது "விவேகம்" என்று கண்ணைப் பறிக்கக்கூடிய ஜோதி யெழுத்திலே எழுதப்பட்டிருந்தது. வாயில் காப்பான், "யார் அது? எங்கு வந்தாய்?" என்றான்.

நான் அவனுக்கு வந்தனம் கூறிவிட்டு, "உபசாந்தி லோகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பலாமென்ற எண்ணத்துடன் வந்தேன்" என்று சொன்னேன். அதைக் கேட்டு அவன் கடகடவென்று குலுங்கக் குலுங்க நகைக்கலாயினன்.

"ஏனையா சிரிக்கிறீர்?" என்று கேட்டேன். அவன் மறுமொழி கூறாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.

ஏழை மனமோ நிமிஷத்துக்கு நிமிஷம் அதிக திகிலுறுவதாயிற்று. எனக்கு மிகவும் திகைப்புண்டாய் விட்டது. எனவே, கோபத்துடன் வாயில்காப்பானை நோக்கி "ஏனப்பா, உள்ளே போகலாமா, கூடாதா? ஒரே வார்த்தையில் சொல்லிவிடு. கலகலவென்று சிரித்துக் கொண்டிருக்கிறாயே?" என்று கேட்டேன்.

அதற்கு வாயில்காப்பான், "உனக்கும் உபசாந்திக்கும் வெகுதூரம்" என்று தனது வாய்க்குள்ளேயே (ஆனால் எனது செவியிலே படும்படி) முணு முணுத்து விட்டுப் பிறகு "கோபங்கொள்ளாதே அப்பா; நீ உபசாந்தி லோகத்தை ஏதோ நாடகசாலை போலக் கருதிப் பார்த்துவிட்டுத் திரும்ப உத்தேசமிருப்பதாகக் கூறியது எனக்கு நகைப்பை உண்டாக்கிற்று. சாதாரணமாக, இவ்வுலகத்துக்கு வருபவர்கள் திரும்ப வெளியே போகும் வழக்கம் கிடையாது" என்று இரைந்து கூறினன்.

"அது சரி, உள்ளே நாங்கள் பிரவேசிக்கலாமா, கூடாதா? தயவுசெய்து சொல்லும்."

"நீ சாதாரணமாகப் பிரவேசிக்கலாம். இது சகல ஜீவர்களுக்கும் தாய்வீடு. இங்கு வரக்கூடாது என்று எந்த ஜீவனையும் தடுக்க எனக்கு அதிகாரமில்லை. ஆனால் வைராக்கியக் கோட்டையைக் கடந்து உள்ளே செல்லும் உரிமை உன்னுடன் வந்திருக்கும் மனம் என்ற பொய்ப் பொருளுக்குக் கிடையாது. அது உள்ளே போகுமானால், அக்கினி லோகத்திலே பிரவேசித்த பஞ்சுப் பொம்மைபோல நாசமடைந்துவிடும்" என்றான்.

மனம் ஆரம்பத்திலேயே உபசாந்தி லோகம் என்ற பெயரைக் கேட்டவுடன் நடுங்கத் தொடங்கியதற்கும், அது என்னை அங்கு போகவேண்டாமென்று பிரார்த்தனைகள் செய்ததற்கும், கோட்டையருகே வந்தவுடன் தர்ம தேவதையின் முன் வந்து நிற்கும் கொடுங்கோலரசரைப்போல நிலைமயங்கி அதற்கு அளவுகடந்த திகிலுண்டானதற்கும் காரணம் இன்னது என்பதை இப்போதுதான் அறிந்தேன். அப்பால் அந்த உலகத்திற் பிரவேசிக்கவேண்டும் என்ற விருப்பம் எனக்கு நீங்கிப் போய்விட்டது. மனத்தினிடம் வைத்திருந்த மோகத்தால், அதைக் கொன்றுவிட்டு நான் இன்பமடைவதில் பிரியங் கொள்ளவில்லை.

"என்னை இப்போது என்ன செய்யச் சொல்லுகிறீர்?" என்று வாயில்காப்பானிடம் கேட்டேன். அதற்கு அவன்

"மானுடா, மனம் இறந்த பிறகுதான் உபசாந்தியுண்டு; அது இருக்கும் வரையில், கவலைகள் நீங்கி இருக்கலாம் என்ற எண்ணம் வீண். கவலைகளாகிய அசுரர்களை இடைவிடாது பெற்றுத் தள்ளிக்கொண்டே இருக்கும் தாய் மனமேயாகும். உனக்கு அந்தப் பொய்யரக்கியிடம் இன்னும் பிரேமை தீரவில்லை. பக்குவம் வந்த பிறகு, நீ தானே இங்கு வந்து சேரலாம். இப்போது போய் வா" என்று சொன்னான். திடீரென்று அந்தக் கோட்டை, வாயில்காப்பான் எல்லாம் மறைந்து போய்விட்டது. அரை க்ஷணம் கண்ணிருட்சி உண்டாயிற்று. பிறகு கண்ணை விழித்துப் பார்த்தேன். மறுபடி, வீரராகவ முதலித் தெருவில், முன்னே கூறப்பட்ட வீட்டு மாடியில், தனியே கட்டிலில் நான் படுத்துக் கொண்டிருப்பதையும், கடற்பாரிசத்தினின்றும் இனிய காற்று வீசிக்கொண்டிருப்பதையும் கண்டேன்.

"சரி, போனது போகட்டும். இந்த உபசாந்திப் பேறு நமக்கு இப்போது கிடைக்கவில்லை. ஆயினும் பாதகமில்லை. ஏழை மனத்தைக் கொன்றுவிட்டு நாம் மட்டும் தனியே இன்பமுற விரும்புவதும் நான்றி கெட்ட செய்கை யாகுமல்லவா? அதன் கவலைகளையும், உளைச்சல்களையும் பற்றி யோசித்தேனே யொழிய அதன் மூலமாக எனக்குக் கிடைத்திருக்கும் பெரிய பெரிய நன்மைகளைச் சிந்தித்தேனில்லை. எனக்கு உலக வாழ்க்கையே இந்த மனத்தினால்தானே எய்திற்று. இதை ஈசனென்றே சொல்லத்தகும். மேலும், எனக்கு அதையும், அதற்கு என்னையும் காட்டிலும் உயிர்த்துணைவர் யார் இருக்கிறார்கள்? அதற்குத் துரோகம் செய்யலாமா? எத்தனை கோடி கவலைகள் இருப்பினும் பெரிதில்லை. மனம் செத்து நான் தனியே வாழ்வதாகிய உபசாந்தி லோகம் எத்தனை அரிதாயிருப்பினும், அது எனக்கு வேண்டாம்" என்று தீர்மானம் செய்து கொண்டேன், "உபசாந்தி என்று கத்தும் மனிதர்களை உலகத்தார் பிரமஞானிகளென்றும், மகரிஷிகளென்றும் புகழ்கிறார்களே!

அந்த மனிதர்களெல்லாம் மூடர்களும், துரோகிகளுமாவார்களென்று எனக்குத் தோன்றுகிறது" என்று சொல்லிக்கொண்டேன்.

நான் இவ்வாறு ஆலோசிப்பதை அறிந்துகொண்ட மனம், "அப்பாடா!" என்று பெருமூச்சு விட்டு, தன் நடுக்கமெல்லாம் தீர்ந்து ஆறுதலுடனிருந்தது. எனக்கும் சந்தோஷம் உண்டாயிற்று. எனது மனமோகினிக்கு ஓர் முத்தங் கொடுத்தேன்.

No comments:

Post a Comment