Friday, September 21, 2012

அருவி (ஞானரதம்)

"அருவிக்கு வா. எழுந்திரு, நீராடப் போவோம்" என்றனள், எனது உயிர்ப் படகிற்கு மீகாமனாக வந்து முளைத்த இளையவள்.

அருவிக் கரைக்கு வந்துசேர்ந்தோம். அருவி உயர்ந்த குன்றுத் தலையிலிருந்து இரண்டு படிகளாக இடை நிலத்திலுள்ள பொய்கையில் வீழ்ந்து, அங்கிருந்து மறுபடி தரையில் விழுகின்றது. நீரருவிக்குப் பல புலவர்கள் மாலை முதலியவற்றை உவமையாகச் சொல்லியிருக்கிறார்கள். அது எனக்கு சம்மதமில்லை. வானும், கடலும், இராமாயணமும் தமக்குத் தாமே நிகர் என்று பெரியோர் சொல்லி யிருப்பதுபோலவே, அருவியையும் உவமையற்றதாகக் கொள்ள வேண்டும். நாங்கள் வருவதற்கு முன்னாகவே அங்கு பலர் வந்து ஸ்நானம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் ஸ்நானம் செய்த வினோதங்களைப் பார்க்கும்போது அற்புதமாயிருந்தது. இப்பொழுது, மண்ணுலகத்திலிருந்து திரும்ப எழுதும்போது, உள்ளபடி யெழுதச் சிறிது கூசுகின்றது. மண்ணுலகத்திலே சிலர் எழுத்திலும் பேச்சிலும் மகா சுத்தர்கள். நினைப்பிலும், நடையிலும் - " கீழே விழுந்த அருவி சிறிய ஆறாக ஓடுகின்றது. அந்த ஆற்றில் வழியெங்கும் சிறு சிறு பாறைகள். ஒவ்வொரு பாறையிலும் ஒவ்வொர் இணை பார்க்கலாம். பாறை மீதிருந்து சிவ்வென்று பறந்து வந்து அருவியை வலம் செய்து இடையே நின்றுகொண்டிருந்து விட்டு மறுபடி தத்தம் பாறைக்குப் போய் விடுவார்கள். தூய நெஞ்சுடையவர்களுக்கு எல்லா விஷயங்களும் தூய்மை கொண்டனவாகவே தோன்றும். கந்தர்வ நாட்டில் எவர் மனத்திலும் விகற்பம் கிடையாது. ஆகையால் ஆடை முதலிய விஷயங்களில் அவர்கள் அதிக நாணம் பாராட்டுவதில்லை. ஆ! என்ன சௌந்தர்யம்!

அருவியில் ஸ்நானம் செய்து முடிந்தபிறகு பக்கத்திலுள்ள ஓர் ஆலயத்திற் சென்று அநேகர் தத்தம் இஷ்ட தெய்வங்களுக்குப் பலவகைகளிலே பூஜை புரிந்தார்கள். சித்திர வித்தையிலே, ஒப்பற்று விளங்கும் கந்தர்வ நாட்டார் தமது கோயில்களிலே யாதொரு பிரதிமைகளும் இல்லாதனவாகச் சில கோயில்கள் வைத்திருக்கிறார்கள். அக் கோயில்களின் சிகரத்திலே 'ஓம்' என்று ஒளியெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. உற்சாகக் கொண்டாட்டங்களும், வேடிக்கைகளும் பிரதானமாகக் கொண்ட ஆலயங்களிலேதான் பிரதிமைகள் வைத்திருக்கிறார்கள். மனப்பூர்வமாக ஆத்மசுத்தி தேட விரும்பும் இடங்களில் பிரதிமைகள் வைப்பதில்லை. அவரவர்கள் தத்தம் இஷ்ட தெய்வங்களைத் தியான ரூபமாக வணங்குகின்றார்கள். "போகத்திற்கும் யோகத்திற்கும் சம்பந்தமுண்டு. கந்தர்வலோகத்திலிருந்து சாந்திலோகம் வெகு சமீபம்" என்று குமாரி சொல்லியதின் பொருள் எனக்குச் சிறிது சிறிதாக விளங்குவதாயிற்று. சௌந்தரியத்தைத் தாகத்துடன் தேடுவோர்களுக்கு சத்தியமும் அகப்பட்டுவிடும். "உண்மையே வனப்பு, வனப்பே உண்மை" என்று ஓர் ஞானி சொல்லியிருக்கிறார். ஆலயத்துக்குள்ளே நானும் குமாரியும் பிரவேசித்தோம். "குமாரி! இஷ்ட தேவதா பூஜைக்குரியது இவ்வாலயம் என்கிறாய். உனக்கு இஷ்ட தெய்வம் எது? நீ எதை வணங்கப் போகிறாய்?" என்று கேட்டேன். குமாரி "எனக்கு இஷ்ட தெய்வம் மதனன். நான் அவனைத் தியானம் செய்வேன், நீ உனக்கு விருப்பமான தெய்வத்தை வரித்துக் கொள்" என்றாள்.

"எனக்கு இஷ்ட தெய்வம் நீயே. நான் உன்னையே தியானம் செய்யப் போகிறேன்" என்று நான் சொன்னேன்.

"நன்று! நன்று!" என்று கூறிச் சிரித்தாள். பிறகு "தோழா, மனங்கொண்டது தெய்வம். நீ எந்த வடிவத்திலே தெய்வத்தை வணங்குகிறாயோ, தெய்வம் உனக்கு அந்த வடிவமாக வந்து அருள் செய்கின்றது. தெய்வமென்பது யாது? தெய்வமென்பது ஆதர்சம்; தெய்வமென்பது சித்த லக்ஷ்யம். தெய்வமென்பது உண்மை. தெய்வமென்பது வனப்பு" என்றாள்.

ஆம். "உலகத்திலே மனிதனாகப் பிறந்தால் இராமனைப் போல ஒழுகவேண்டும். அதிற் சிறந்தது வேறெதுமில்லை" என்று சொல்பவனுக்கு இராமன் தெய்வம். தன்னை மறந்து, தன தின்பம் கருதாமல், சௌந்தரிய வெள்ளத்திலே தனது உயிரை யிழந்து பர்வதகுமாரியை நான் தெய்வமாகக் கொள்ளும் பக்ஷத்தில் எனக்கு அதுவே மோக்ஷ ஸாதனம். காளிதாஸன் தாஸி வீட்டில் செய்த பூஜையைப் பற்றி நம்மவர் சொல்லும் பொய்க் கதையிலே கூட உண்மையிருக்கின்றது.

பர்வதகுமாரி, ஆலயத்துள்ளே ஓர் தனியிடத்தில், கீழ்த்திசை நோக்கிப் பத்மாஸனமிட்டு உட்கார்ந்து கொண்டு கண்ணிலே பரவச வெறி மிதக்க, "ஓம் நம: ப்ரம்மணே" என்று சொல்லிச் சொல்லி ஜபித்தாள். நானும் - விளையாட்டன்று, யதார்த்தமாகவே - அவளெதிரில் பத்மாஸனத்திலிருந்து கொண்டு, திரிகரணங்களையும் அவள்மீது செலுத்தி, "ஓம் நம: குமாரியை" என்று யோகத்திலே அமர்ந்து விட்டேன். யோகந் தெளிந்து எழுந்து நின்றோம். பர்வதகுமாரி 'புறப்படு' என்று சைகை காட்டினாள். காலை ஞாயிற்றின் பால கிரணங்களை தாகந் தீரக் குடித்துக்கொண்டு பறக்கலாயினோம். பறந்து, சித்திர சாலைக்கு வந்து சேர்ந்தோம்.

ஆகா! எத்தனை பெரிய முயற்சியிலே தலையிட்டு விட்டேன்! சாதாரணமாகக் கல்கத்தாவிலுள்ள காட்சிச்சாலையை வர்ணிக்க வேண்டுமென்றால், அதற்கென்று ஓர் நூல் எழுத வேண்டும். கந்தர்வ லோகத்துச் சித்திரசாலையிலுள்ள காட்சிகளை நான் எப்படி எழுதிக் காட்டுவது?

"சித்திரசாலைக்குப் போவோம், வா. நேற்றெல்லாம் இயற்கை நலம் பார்த்தாய் விட்டது. இன்று காலை அருவி பார்த்தோம். இனி உங்கள் நாட்டுச் செயற்கை நலங்களைக் காண வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உண்டாகிறது. இந்த வானமோ மிகப் பெரியது, அதி சுந்தரமானது. அதோ தூரத்திலே தெரியும் குன்றும் அதன் முடியிலே வானமும் சேர்ந்து நிற்குமிடத்தில், எத்தனை அழகாயிருக்கிறது பார்? ஓகோ! - இதையெல்லாம் நின்று பார்த்துக் கொண்டேயிருந்தால், இப்படியே பொழுது போய்விடும். சித்திர சாலைக்குப் போகலாம்" என்றேன். பர்வதகுமாரி கல்லென்று நகைத்தாள். அவள் விழிக்கடைகளிலே குறும்புக் குணம் தோன்றியது.

"குமாரி! இப்படி யெல்லாம் சிரித்தால் பிறகு நீ எனக்கு இஷ்ட தேவதையில்லை. உன்னை முத்தமிடுவேன், பார்த்துக்கொள்" என்றேன்.

பர்வதகுமாரி முன்னிலும் இருமடங்கு நகைத்தாள். நானும் அவளைப் பயமுறுத்தியபடியே தண்டனை செய்தேன். அவள் சினந்தோன்றிய விழிகளோடு பார்த்தாள். "நான்தான் முதலிலேயே எச்சரித்தேனே. நீ ஏன் இரண்டாம் முறை சிரித்தாய்?" என்று வணக்கத்தோடு சொன்னேன்.

"நான் அதன் பொருட்டுக் கோபிக்கவில்லை. கந்தர்வ நாட்டு யுவதிகளை உண்மையான பக்தர்கள் இவ்வித தண்டனை செய்யும்போது கன்னத்தைத் தீண்டுவதில்லை. நீ...க...க..." என்று குழறிவிட்டாள்.

நான் கந்தர்வ விதிப்படியே அந்த அற்புதக் குற்றவாளியின் இதழிலே தண்டனை நிறைவேற்றினேன்.

கலீரென்று நகைத்து, "மூடத் தோழா! இதுதான் சித்திர சாலை" என்றாள்.

ஸ்தம்பிதனாகிவிட்டேன்.

"குமாரி, பரிகாசம் செய்கிறாய். இதுவா சித்திரசாலை!"

"ஆம், இது எங்கள் சித்திரசாலையிலே பூர்வத்தில் ரமா நாதர் என்பவரால் அமைக்கப்பட்ட வனக்காட்சி. இதை வனமென்று நீ நினைத்தது பெரியதில்லை. எங்கள் உலகத்தார்களே இது இயற்கை வனமென்றும் செயற்கை வனமென்றும் தெரியாமல் அடிக்கடி ஏமாந்து போவதுண்டு" என்றாள்.

அப்பால் பிரதிமைகள் வைத்திருக்கும் மண்டபத்திற்குப் போனோம். ஒரு பக்கத்தில் ஜீவராசிகளின் வடிவங்கள் காணப்பட்டன. கண்ணுக்குத் தெரியாமல் பூதக்கண்ணாடியால் பார்ப்பதற்குரிய சிற்றுயிர்களைத் தவிர மற்றபடி அனேகமாக எல்லா ஜந்துக்களின் உருவங்களும் அங்கே யிருப்பது கண்டேன். எனக்கு ஜந்து நூலில் தக்க பயிற்சியும், அபிருசியும் இல்லை யாதலால், அக் காட்சியின் ரஸங்களைப் போதியபடி அனுபவிக்க முடியவில்லை. மற்றொரு புறத்திலே, கந்தர்வப் பிரதிமைகள் வகுப்புற்றிருந்தன. அங்கு, மிகுந்த ஆவலுடன் போனேன். பெண்ணிடத்தேனும், ஆணிடத்தேனும் சுந்தரமான வடிவம் காணப்படுமாயின், அதைப் போன்ற இனிய காட்சிகள் உலகத்திலே பல இல்லை. அசேதனப் பொருள்களிலே கூடச் சிறந்த அழகு தோன்றுமிடத்துக் கையெடுத்துக் கும்பிடத் தக்கதாக இருக்கின்றது. அவ்வாறிருக்க, ஓர் ஸ்திரீ அல்லது புருஷனுடைய முகத்திலே சைதன்ய ஒளியுடன் கலந்து அழகு தோன்றுமாயின், அது மிகவும் கவர்ச்சியுடையதாகு மென்பது சொல்லியாக வேண்டுமோ? மனுஷ்ய வடிவம் சௌந்தரியமா யிருப்பதைக் காண்பதில் எனக்கெப்போதுமே அளவிறந்த தாகமுண்டு, ஆனால், பூலோகத்தில் பரிபூரண சௌந்தரியமுடைய ஸ்திரீ புருஷர்கள் இல்லை. மனதினிடத்தே சுத்தமும் சாந்தியும் இல்லாதபடியால் பூமண்டலத்து மனிதர்கள் பொதுவாகப் பார்ப்பதற்கு விகாரமா யிருக்கிறார்கள், உள்ள நிலை உடலிலே தோன்றி விடுகிறதாதலின். அதிலும் நான் பிறந்த நாட்டிலே பஞ்சத்தாலும், நோயினாலும், அவற்றின் மூலமாகிய அடிமை நிலையாலும் ஆண்களும் பெண்களும் கண்ணால் பார்ப்பதற்குக் கூசும்படி அத்தனை குரூபிகளா யிருக்கிறார்கள். இது பாரத நாட்டிலே தற்காலத்தில் விதியாயிருக்கின்றது. இதற்கு விலக்குகள் உண்டென்பது சொல்லாதே அமையும்.] வல்லோர் தீட்டிய சித்திரங்களும், வல்லோர் செய்த பதுமைகளுமே பாரதவாசிகள் சௌந்தரியக் காட்சியை இழந்து விடாமல் காக்கின்றன. நமது புராதனக் கவிஞர் முதலாயினோரும் நமக்கு இவ் விஷயத்தில் துணை செய்கிறார்கள்.

இத் தருணத்தில் நமது நாட்டுச் சித்திரத் தொழிலை நாம் பாதுகாக்காமலிருப்போமானால், இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கப்பால் பாரத நாட்டில் எவருக்கும் கண்தெரியாமலே போய்விடும். நிற்க, சித்திரசாலையிலே கந்தர்வ வடிவங்களைப் பார்த்தபோது எனக்கு முன்பு மதன விக்கிரகத்தைக் கண்டவுடன் பிறந்த பரவசநிலை பிறக்கவில்லை. ஏனென்றால், கந்தர்வ நாட்டில் தெய்வப் பிரதிமைகளைத் தவிர, மற்றப் பிரதிமைகள், அந்நாட்டுச் சிற்பிகளின் தொழில் வன்மையைக் காட்டுகின்றனவே யல்லாது, அவர்களுடைய உள்ளத் தேட்டத்தை விளக்குந் தகைமையுடையன அல்ல. எப்படியெனில், பூலோகத்திலே யவன (கிரீஸ்) தேசத்துப் பிரதிமைகள் மிகக் கீர்த்தி கொண்டவை. இப்பிரதிமைகளைச் செய்த சிற்பிகள் குறைவுபட்ட மனித வடிவங்களையே பார்த்தவர்களானும், தமது உள்ளத் தேட்டத்தால் பரிபூர்ண சௌந்தரியத்தைக் கண்டுபிடித்து அதைக் கல்லிலே ஸ்தாபித்திருக்கிறார்கள். இத்தன்மை கொண்ட மேலோர் நாம் நல்ல தொழிலாளிகளென்பது மட்டுமேயன்றி வரபு மான்களென்றும், அருட்காட்சி பெற்றோரென்றும் சொல்லுகிறோம். கந்தர்வ லோகத்திலோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்திலே பரிபூர்ண சௌந்தரிய முடையவர்களாயிருப்பதால், சிற்பிகளுக்குப் பிரதிபா சக்தியை உபயோகப்படுத்த இடமில்லாமற் போய்விடுகின்றது. நான் அங்கே கண்ட பிரதிமைகள் அளவற்ற வனப்போடு விளங்கினவென்பது மெய்யே யாகும். ஆனால் அவற்றையொத்த வனப்புடையவர்களாகவே அந்நாட்டு ஸ்திரீ புமான்களும் விளங்குகின்றார்கள். என் பக்கத்திலேயிருந்த ஜீவப் பிரதிமையாகிய பிரிய குமாரியைவிட அழகான பிரதிமை ஒன்று அகப்படுமா என்று தேடித் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை.

உணவுக்குப் புறப்பட்டோம். ஐம்புலன்களுக்கும் தெவிட்டாத நல்லின்பம் கொடுக்கும் உலகமாதலால் அங்கு நாப்புலன்களுக்குச் சிறந்ததோர் விருந்து கிடைக்குமென்றெண்ணி நான் மகிழ்ச்சியோடு சென்றேன். ஓர் பூஞ்சோலைக்கு வந்து சேர்ந்தோம். அங்கு ஓர் குளிர்ந்த லதா மண்டபத்தில் இருந்து கொண்டு குமாரி "ரஞ்ஜனா, ரஞ்ஜனா" என்று கூவினாள். சிறிது தூரத்திலிருந்து குமாரியின் தம்பியாகிய சித்தரஞ்ஜனன் வந்தான். "எனக்கும் நமது விருந்தாளியாகிய இவருக்கும் உணவு கொண்டுவந்து கொடு" என்றாள். ஒரு விதமாக நகைத்துக்கொண்டு இளைஞன் சென்றான். சில நிமிஷங்களுக்கப்பால் அவனும் அவனுடைய நண்பன் ஒருவனும் கையில் பொற்றட்டுகள் ஏந்திக்கொண்டு வந்து அவற்றை எங்கள் பீடங்களுக்கு முன்னேபோடப்பட்டிருந்த பளிங்கு மேஜையின் மீது வைத்தார்கள். அவ்வுணவு யாதாயிருக்கலாமென்று ஆவலுடன் பார்த்தேன். கனிகள், கனிகள், கனிகள். கனிகளைத் தவிர வேறொன்றுமில்லை. எனது உள்ளக் குறிப்பை எப்போதும் அறிய வல்லவளாயிருந்த குமாரி பின் வருமாறு கூறலாயினள்: -

"தோழா, உங்கள் உலகத்தாரைப்போல நாங்கள் உணவிலே மிகுந்த நாட்டம் வைத்துப் பல்வகை கொண்ட சுவைகளைத் தேடுவதில்லை. ஐம்புலன்களிலே நாப்புலன் மற்ற நான்கிற்கும் விரோதி. உணவின்பத்திலே பிரியமுடையவர்கள் செவி, கண் என்ற தெய்வப் புலன்களின் பரம சுகங்களை நான்கு தேர்ந்து உண்பதற்கு வலியிழந்து போய்விடுவார்கள். வெறுமே உயிர் நிற்பதற்கு மட்டிலும் நாங்கள் உண்பதில்லாமல், உணவிலே இன்பம் தேடுவதில்லை. ஆயினும் இக் கனிகளின் சுவை சாமான்யமானதன்று. தின்று பார். பிறகு தெரியும்" என்றாள். சுவையிலும் பயனிலும் மிகுந்த அக்கனிகளைத் தின்று பசி தீர்த்துக் கொண்டோம். பிறகு மதுக்கிண்ணங்களை சித்தரஞ்ஜனன் எங்கள் முன்பு கொண்டு வைத்தான்.

சித்தரஞ்ஜனன் கொண்டு வைத்த கிண்ணங்களை நான் கையால் தொடவில்லை.

பர்வதகுமாரி திரும்பிப் பார்த்தாள்.

"எனக்கு வழக்கமில்லை" என்றேன்.

"இது மண்ணுலக மில்லை" என்றாள்.

"உங்கள் நாட்டுக் காற்றும், ஒளியும், குளிர்ச்சியும், காட்சிகளும் துணைக்கு நீயும் - இத்தனை வகைகள் போதாதா? இத்துடன் மது வேறு குடித்தா அறிவு மயங்க வேண்டும்?" என்று பலவாறு பேசிக் குமாரியின் வற்புறத்தலினால் மதுக் கிண்ணமொன்றை வெறுங்கிண்ணமாக்கினேன். இன்பக் களி நிலை பிறந்தது.

இன்பம் ஒரு ஜ்வரம். ஜ்வரத்திலே உஷ்ணம் ஓர் வரை கடந்து விட்டால் பிறகு குளிர்ச்சி தோன்றி ஜந்நி பிறந்து விடுவது போலவே, இன்பத்தின் முடிமீது துன்பமிருக்கின்றது. மேலே பலவாறாக வகுக்கப்பட்ட இன்பங்களும், பிறவும் கண்டேன். நாட்கள் பல கழிந்தன. இப்போது அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும்போது ஒருவாறு அத்தனை நாட்களும் ஒரு கணம் போலவும், மற்றொரு வகையிலே அந்நாட்களின் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு இன்ப யுகம் போலவும் புலப்படுகின்றது.

நாட்கள் பல கழிந்தன. குமாரியும் எனது உயிர்த்தோழியாய் விட்டாள். நான் எக்காலத்தும் கனவிலே கூடக் கண்டிராத உள்ளக் கிளர்ச்சியும், சோர்வு, நோய், மனத்தளர்ச்சி, மனத்துயர் என்பற்றின் முழுமறதியும் ஏற்பட்டன. எனினும், மனது திருப்தி பெறவில்லை. ஏதோ ஒன்று குறைவாயிருப்பது போலவே தோன்றியது. நாளடைவில் கந்தர்வ நாட்டின்பங்கள் கூட, கைத்துப் போகவில்லை. ஆனால் சாதாரணமாய்ப் போய்விட்டன. ஆரம்பத்திலிருந்தே பரவச நிலைக்கிடமில்லை. கடல், நிலா முதலிய இயற்கை அழகுகளிலே எப்போதும் லயித்தாலும் பரவசந் தோன்றுமெனினும், கள்ள மனம் அவற்றில் நிலைத்திருக்க வன்மையிலதாகி நின்றது. ஆ! குமாரியினிடத்திலே கூட மனம் தொடக்கத்திலே கொண்ட பற்றை நெகிழ்ந்து விட்டது.

ஒரு நாட்காலையில் நான் தனியே உட்கார்ந்துகொண்டு பின்வருமாறு யோசிக்கலாயினேன்: "ஆகா! இன்பக் களஞ்சியமாகிய இந்நாட்டிற்கு வந்துங் கூட நமது மனதிற்குத் திருப்தி விளையவில்லையே. இந்த கந்தர்வ நாட்டிலுள்ளவர்கள் ஒரு நாளைப் போலவே அனுதினம் செய்ததைச் திரும்பச் செய்துகொண்டு மகிழ்ந்த முகத்துடனே சுகத்தில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு இதில் அதிருப்தி ஏற்பட்டதாகத் தோன்றவில்லை. நமக்கு மட்டிலுந்தான் எம்மருந்துக்கும் தீராத மனநோய் பிறந்திருக்கிறது. இதென்ன ஆச்சரியம்!"

நான் இங்ஙனம் சிந்தனை செய்துகொண்டிருக்கையில் குமாரி எங்கிருந்தோ பறந்து வந்து என்னருகே தழுவி வீற்றிருந்தாள். பின், வழக்கம்போலவே எனது உள்ளக் கருத்தை எளிதில் தெரிந்துகொண்டவளாகி எனக்குச் சில அரிய உண்மைகள் கூறுவாளாயினள்.

"தோழா! எங்கள் உலகத்தார் செய்கைகளிலே புதுமையில்லையென்று நீ வியப்படைகிறாய். மண்ணுலகத்தார் வாழ்க்கையை மறந்துவிட்டாயா? அதில் ஏதேனும் புதுமையுண்டா? மனித மிருகங்களிலே பாக்கியம் பெற்ற சில மிருகங்கள் வாலிபத்திலேயே இறந்து விடுகின்றன. சில எண்பது தொண்ணூறு நூறு வருஷங்கள் வரை வாழ்கின்றன. எட்டா மாதத்திலே தின்னத் தொடங்கிய சோற்றை எண்பதாம் ஆண்டிற் கூட சாதாரணமாகக் கருதுகிறானில்லை. மானுடா, உங்கள் உலகத்திலே வாழ்வோர் சோற்றுக்கும் ஆடைக்குமாகப் பொய் பேசுகிறார்கள்; வஞ்சனை செய்கிறார்கள்; நடிக்கிறார்கள்; ஏமாற்றுகிறார்கள்; திருடுகிறார்கள்; ஹிம்ஸைகள் செய்கிறார்கள்; கொலை புரிகிறார்கள்; உடலை விற்கிறார்கள்; அறிவை விற்கிறார்கள்; அடிமைகளாகி ஆத்மாவை விற்கிறார்கள்; மானுடா, உங்கள் உலகத்திலே ஏழைகளாயிருப்போர் பெரும்பாலும் மானமற்ற அடிமைகள்.

அவர்கள் அற்ப சுகத்தின் பொருட்டு எது வேண்டுமாயினும் செய்வார்கள். செல்வராயிருப்போரில் பெரும்பாலார் திருடர்கள். உங்கள் உலகத்திலே எளியோராயிருப்போர் வெறுத்தற் குரிய நீச குணமுடையார். வலியோராயிருப்போர் காலால் மிதித்து நசுக்குதற்குரிய தீக்குணமுடையார். அவர்களெல்லாம் செய்ததைச் செய்ததைச்த் திருப்பிச் செய்யாமல் வேறென்ன செய்கிறார்கள்? உண்டும், உறங்கியும், நடித்தும் சாகிறார்கள். எங்கள் உலகத்திலே மரணமில்லை, பொய்யில்லை. மேலும் தீய நடிப்பு, நீசப்பாசாங்கு, வேஷம் போடுதல், ஒன்று நினைத்து வேறொன்று பேசுதல் - இந்த மகாபாதகக் குணமில்லை. இவற்றால் விளையக்கூடிய துன்பங்கள் அனைத்துமில்லை. ஆயினும், உனக்கு எங்கள் வாழ்க்கையிலே திருப்தியுண்டாகாம லிருப்பது ஓர் குற்றமன்று. ஏனென்றால், மானுட ஜன்மம் எவ்வளவு இழிவுகளுடையதாயினும் ஒரு முக்கியமான விஷயத்திலே எங்கள் பிறப்பைக் காட்டிலும் சிறந்தது. ஆத்மத் தேட்டத்திற்கு மனிதப் பிறவி மிகவும் சௌகரியமானதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. 'திருப்தி எதிலும் ஏற்படாதிருத்தல்' - இந்த ஒரு குணமே மனிதப் பிறவிக்குக் காப்பாகவும், அதன் பெருஞ் சிறப்பாகவும் விளங்குகின்றது. மாயா சம்பந்தமான எந்த நிலையிலும் மனிதன் ஸ்திரமின்மை கண்டு அதிருப்தியடைகின்றான். உங்களிலே பெரும்பான்மையோர் அறிவைப் பலவாறு குழப்பிக்கொண்டு உண்மை நினைப்பே யின்றிப் புழுக்கள் போல மடிவது மெய்யே யாயினும், ஒரு சிலர் பரமநிலை கண்டு விடுகிறார்கள். தேவர்கள் கூட மோக்ஷமடைய வேண்டுமாயின் மனித ஜன்மமெடுத்துத் தீரவேண்டுமென்று நீ கேள்விப்பட்டிருக்கலாம், அது மெய்யே. உங்கள் உலகத்துச் சங்கரன், சுகன், ஜனகன், கிருஷ்ணன், புத்தன், இயேசு முதலியவர்களைப்போன்ற அற்புதப் பெரியோர் எங்கள் நாட்டிலே தோன்றுவது சாத்தியமில்லை. மாயை விலங்கு; அதில் எங்களுக்குப் பொன்விலங்கு பூட்டியிருப்பதால் வெறுப்புண்டாவது எளிதன்று. உங்களுக்குக் கோரமான தளைகள் போட்டிருப்பதால் மேலோர் எளிதாக வெறுப்படைந்து விடுகிறார்கள்.

1 comment: