Saturday, September 22, 2012

சத்தியலோகம் (ஞானரதம்)

அடுத்த நாள் சத்திய லோகம் சென்றேன். அங்கே மாசற்ற சூரியப் பிரகாசம் போன்ற ஒளியொன்று பிரகாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். ஆனால் வானத்தில் சூரியனில்லை. அவ்வுலகத்தின் கண் மத்திய பாகத்தில் ஓர் திவ்ய வடிவம் உட்கார்ந்து கொண்டிருந்தது. அதன் முகத்திலிருந்தே கிரணங்கள் பொங்கி வெளிப்பட்டன. அக்கிரணங்களின் ஒளியே வானத்திலுஞ் சென்று மோதுவது கண்டேன். பல பல திசைகளிலே என் ரதத்தைத் திருப்பிவிட்டேன். அந்நாட்டு ஜனங்களெல்லாம் அவரவர்கள் பாட்டில் மிகுந்த முயற்சியுடையவர்கள் போலப் போகிறார்கள். சிற்சில ஜனங்கள் வெயர்க்க வெயர்க்கக் கஷ்டத்துடன் நடந்து செல்கிறார்கள். வேறு சிலர் சிறகு புடைத்துக்கொண்டு அதி வேகமாய்ப் பறக்கிறார்கள். சிலர் மலர்ந்த முகத்துடன் போகிறார்கள். சிலர் மிகக் களைப்படைந்தவர் போலக் காணப்படுகிறார்கள். சிலர் திடீர் திடீரென்று வந்து தோன்றி அவ்வொளி பொறுக்கமாட்டாமல் கண்ணைக் கையால் மூடிக்கொண்டு அவ்வப்பொழுதே மறைந்து விடுகிறார்கள். இங்ஙனம் மறைந்து செல்வோர் என்னைப்போலப் புதிதாகப் பார்க்க வந்தவர்களென்றும், இங்கிருக்க முடியாமல் ஓடி வேறு வேறு உலகங்களுக்குப் போகிறார்களென்றும் தெரிந்து கொண்டேன்.

சிலர் தேவர்களைப் போலிருந்தனர். அவர்களே மலர்ந்த முகத்துடன் உல்லாஸமாகவும் வேகமாகவும் சுற்றித் திரியும் கூட்டத்தார். என்போன்ற மனித உருவ முடையோர்களிலே தான் பலர் களைப்புக் காட்டினர். கந்தர்வ லோகத்திற்கு வந்தவுடன் எனக்கு உருவ மாறுபாடு தோன்றியது போல இங்கே உண்டாகவில்லை. ஓடிப் போனவர்களும் மனித வர்க்கத்தினரேயாம். பருத்த தொந்தியுடன் கையில் பொற்காப்புப் போட்டுக் கொண்டு ஒருவன் வந்தான். அவன் ஓவென்றலறிக் கொண்டு ஓடிப்போய் விட்டான். ஒருவன் மனைவி மக்களுடன் வந்து சேர்ந்தான். "இங்கேன்காணும் கூட்டிக் கொண்டு வந்தீர்" இங்கே, கடைத் தெருவா, கிடைத் தெருவா, கோயிலா, குளமா, வேடிக்கையா, விளையாட்டா? ஒரு மண்ணையுங் காணவில்லை. அவனவன் பைத்தியம் பிடித்தது போல ஓடிக்கொண்டு திரிகிறான். நான், குழந்தைகளையுங் கொண்டு இங்கே ஒரு க்ஷணங்கூட இருக்க மாட்டேன்.

ஊருக்குப் போகலாம் வாரும்" என்று பொதிமாட்டைப் போலிருந்த அந்த ஸ்திரீ கத்தினாள். அந்த மனிதன் - "இருடி, இரு. இந்த ஒரு கிரணத்தை மட்டிலும் பார்த்து விட்டு வருகிறேன், அவசரப்படாதே" என்றான். "கிரணமுமாச்சு, மரணமுமாச்சு. புறப்படும்" என்று அவள் ஏதோ கூச்சலிட்டாள். அவன் மனமில்லாவிடினும் அவள் செய்யும் தொல்லையை எதிர்க்கத் திறனற்றவனாய் மறைந்து விட்டான். இன்னுமொருவன் எட்டு மூட்டைகளை ஒரு வண்டியில் சுமத்திக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். மற்றவர்களெல்லாம் என்னிடம் பேசாமலிருக்க, இவன் மட்டிலும் என்னருகே வந்து, "ஏனையா, ஏடுகளெல்லாம் மிக விசேஷமானவை. ஏதேனும் உமக்கு வேண்டியதைப் பரிசோதனை செய்து பார்த்து விலைக்கு எடுத்துக் கொள்கிறீரா?" என்று கேட்டான். அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே, பின்னே நின்ற வண்டியில் நெருப்புப் பிடித்து ஏடுகள் சாம்பாவது கண்டு நான், "அதோ, பாரையா?" என்றேன். அந்த மனிதன் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு சத்திய லோகத்தை நிந்தனை செய்து கொண்டே போய் விட்டான்.

இன்னும் எத்தனையோ ஜனங்கள் - மனவுறுதியில்லாதோர், சித்தத்தைப் புலன் வழியிலே சிதறவிட்டோர், சத்தியத்தில் மெய்யன்பில்லாது போலியன்பு பாராட்டும் வேஷதாரிகள், இவர்களனைவரும் வந்து வந்து மறைந்து விட்டார்கள். இது நிற்க, மேற்கூறப்பட்ட ஒரு மனிதனைத் தவிர வேறெவருமே என்னிடம் வார்த்தையாடவில்லை யென்று சொல்லியிருக்கிறேன். கல்விப் பயிற்சிக்குத் துணைவேண்டுமென்று பெரியார் சொல்லுகிறார்கள். அது மெய்யே. ஆனால் உண்மைத் தேட்டத்திற்குத் தனித்தனியே போக வேண்டுமென்று இப்பொழுதுதான் கண்டேன். உண்மை தேடப்போகும்பொழுது துணை கூட்டிக்கொண்டு போகலாகாது. உண்மையைக் கண்டு மீண்ட பின்பு அதைப் பிறருக்குக் கூறலாம், கூறுதல் கடமை. ஆனால், ஆரம்பத்தில் தன்னந்தனியாகச் செல்ல வேண்டும். இன்னொருவனைத் துணையாக அழைத்துச் செல்வாயாயின், அவனுக்கும் உனக்கும் விவாதங்கள் உண்டாகும். 'மாறுபடு தர்க்கம் தொடுப்'பதனால் அறிவிலே கலக்க முண்டாகுமல்லாது, தெளிவு ஏற்படாது அறிவுத் தெளிவிலேதான் உண்மை தோன்றும். மேலும் இன்னொருவனோடு சேர்ந்து உண்மை தேடப் போவாயானால், அவன் ஒரு பாதையில் இழுப்பான். நீ மற்றொரு பாதையிலே இழுப்பாய். இரண்டிலொன்று யதார்த்த வழியாக இருக்கும். ஆனால் உங்களுக்குள் விவாதம் தீரும் பொருட்டு, நீங்கள் பெரும்பாலும் என்ன செய்வீர்களென்றால், "அப்பா நீ சொல்லியதும் வேண்டாம். நான் சொல்லியதும் வேண்டாம். இரண்டுக்கும் நடுவாக ஒரு வழியிலே போவோம்" என்று பொது உடன்பாடு செய்து கொள்வீர்கள்.

இந்தப் பொது உடன்பாடு செய்தாலொழிய இருவருக்கும் திருப்தியேற்படாது. இந்தப் பொது உடன்பாட்டுப் பாதை உங்களைக் கழுத்து வரை சேறுள்ள குழிகளிலும், ஏரிகளிலும், மடுக்களிலும், முள்ளிலும், கல்லிலும் பொதி மணலிலுங்கொண்டு இறங்கச் செய்யும். ஆரம்பத்திலே உங்களுக்கு இயற்கையாகக் காணப்படும் இரண்டு பாதைகளில், யதார்த்தப் பாதையை நீக்கிப் பொய்ப் பாதையிலே போனபோதிலும், ஒருவேளை நல்லது. இறுதி வரையில் போய், அங்கே தேடிய உண்மையில்லா திருத்தல் கண்டு, மறுபடி மீண்டு நல்ல மார்க்கத்திலே புகலாம். நீங்கள் அப்படிச் செய்யமாட்டீர்கள். உடன்பாட்டுப்பாதையொன்று கொண்டு அதிலேதான் போவீர்கள். அந்த வழி சூனியத்திலேதான் கொண்டுவிடும். ஞானிகளுடைய "சமரஸம்" பிழையென்று நான் கூறியதாகக் கொள்ளவேண்டாம். சாமானியர்கள் செய்துகொள்ளும் 'ஒப்பு' அதாவது உடன்பாடு எப்போதும் பிழைஎன்பதையே வற்புறுத்திச் சொல்லுகிறேன். எனவே, சத்தியலோக யாத்திரை செய்வோர் யாரும் வீண் சம்பாஷணையிலே காலங் கழிப்பதில்லை யென்பதை அறிந்து கொண்டேன். ஆதலால், நானும் பிறர்களைத் தொந்தரவு செய்யலாகாதென்று சும்மா இருந்து விட்டேன்.

கிரண பரிசோதனையிலே எனக்குப் புத்தி செல்லவில்லை. மத்ய பாகத்திலேயிருந்த திவ்ய வடிவத்தினருகே நேராகப் போய்விட வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. அப்போது உயர ஓர் தொனி பிறந்தது. அதிலே கவனம் செலுத்தினேன். அது சொல்லிற்று: - "நடுவே யிருக்கும் உருவமே பிரமன். அது சத்திய ஸ்வரூபம். திடீரென்று அதனருகே பாய்ந்து விடுதல் யாராலும் முடியாது. ஒரு கிரணத்தைப் பற்றிக்கொண்டு, அதன் வழியே அணுவணுவாக நகர்ந்து செல்லவேண்டும். ஒரே பாய்ச்சலாகப் பாய முயற்சி செய்து நீ வீணே ரதத்தை உடைத்துக் கொள்ள வேண்டாம்" என்று.

எனக்குச் சோம்பர் அதிகம். கிரணங்களோ நெடியவை. இவற்றின் வழியாய் மெல்ல மெல்லப் புழு ஊர்வதுபோல ஊர்ந்து செல்ல எனக்கு மனம் இணங்கவில்லை.

"நன்று. இப்பிரமன் விஷயத்தைப் பின்பு பார்த்துக் கொள்ளுகிறேன். இப்போது இந்நாட்டைச் சுற்றி ஓரமாக ஓர் வளையமிட்டு வருகின்றேன்" என்றெண்ணித் தேரைப் பிரதக்ஷிணமாகச் செலுத்தினேன்.

சிறிது தொலைவு கடந்தவுடனே வேறு வர்ணங்கொண்ட ஒளி கண்டேன். அவ்விடத்தினின்று எங்கே பார்த்தாலும் அந்தப் புதிய வர்ணமே காணப்பட்டது. "இதென்ன விந்தை!" என்று பிரமிப்பு அடைந்து அப்பால் சென்றேன். போகப் போக, புதிய புதிய வர்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்தன.

உண்மை பல வர்ணங்களுடையது என்று தெளிந்துகொண்டேன். நெடுநேரத்தின் பிறகு வடக்குக் கோட்டை வாயிலருகே வந்து சேர்ந்தேன். அங்கிருந்து பார்க்கும்போது மறுபடியும் பிரமனுடைய தெய்வீக வடிவம் என் கண்ணுக்கு நேரே எதிர்க்கெதிராக விளங்கிற்று. இதென்ன செய்தியென்று யோசனை செய்தேன். முகம் முன்பு தோன்றியது போலவே தானிருக்கிறதா என்று கூர்ந்து பார்த்தேன். அப்போது ஒரு புதிய அற்புதங் கண்டேன். நான் எவ்வளவுக்குக் கூர்மையாகப் பார்க்கிறேனோ அவ்வளவு அத் திருமுகத்தின் ஒளி அதிகரித்து வரலாயிற்று. சிறிது பொழுதுக்கப்பால் என் கண்கள் கூசத் தொடங்கிவிட்டன. அதினின்றும் கண்களை மீட்டுக்கொண்டேன். மறுபடியும் முன் கேட்டது போன்ற ஓர் தொனி பிறந்தது:-

"மானிடா! உண்மை தொடக்கத்தில் தெளிவாகத் தெரிவது போலத் தோன்றும். கொஞ்சம் கவனம் செலுத்துவாயானால் கண் கூசத் தொடங்கிவிடும். நீ தளர்ச்சி பெறாமல் ஓர் கிரணத்தைப் பற்றிக்கொண்டு நெருங்கி நெருங்கிப் போவாயாயின், பிறகு கண் வருத்தம் தீர்ந்துவிடும். இறுதியில் நீ அருகே வந்த பிறகு உண்மை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெற்றெனத் தெளிந்து புலப்படும்."

இதைக் கேட்டவுடனே, எனக்கு ஓர் கிரணத்தைத்தான் பற்றிச் செல்லலாமா என்ற விருப்பம் நிகழ்ந்தது. மறுபடியும் எனது சோம்பர்க்குணம் மனதிலே பிரதானமாய் விட்டது. "ஐயோ! இந்தச் சோம்பர் என்ற பாவி! மண்ணுலகத்துப் பெருமையையும், பொருளையும் நான் விரும்பிய காலத்தில் இதுதான் வந்து குறுக்கிட்டது. இப்பொழுது விதிவசத்தால் அவ்வித விருப்பங்களெல்லாம் அகன்றுவிட்டன. எனவே சத்தியலோகத்திற்கு உண்மைத் தேட்டத்தால் வந்து நிற்கும் போதும் அத் தீய சோம்பர் வந்து கெடுக்கின்றது" என்று பலவாறு வருத்த மடைந்தேன்.

No comments:

Post a Comment