Wednesday, September 19, 2012

பறவைக் கூத்து (ஞானரதம்)

ஒரு திசையில் ஒரு வாலிபனும் யுவதியும் ஒருவரை ஒருவர் நோக்கி அப்படியே மயங்கிப் பதுமைகளைப்போல நின்று கொண்டிருந்தார்கள். இஃதன்றிப் பல பல காட்சிகள். இன்னுமோர் புறத்திலே 'பறவைக் கூத்து' நடைபெற்றது. அவர்கள் அந்தரத்திலே ஆயிரம் விதமாக ஒருவரை யொருவர் சுழற்றிக்கொண்டு, அத்தனையிலும் இசை நெறி தவறாமல் கூத்திட்ட விந்தை சிறிதன்று, அக் கூத்துகளிலே ஒன்று மிகவும் நயமாயிருந்தது. இடையில் ஓர் யுவதி. அவளினின்று நான்கு முழுத் தொலை இடையிட்டு இரண்டு வாலிபர்கள் வண்டிச் சக்கரம் தனது குடத்தைச் சுற்றுவதுபோல மேலுங் கீழுமாய் வட்டமிடுவார்கள். ஒருவன் உச்சிமீது நிற்கும்போது மற்றொருவன் தாளின் கீழ் நிற்பான். இவளது கைப்பாரிசங்களில் அவ்வளவே தொலையிட்டு இரண்டு சுந்தரிகள் முளையைச் சுற்றித் திரிகை சுழல்வது போலச் சுழன்று கொண்டிருப்பார்கள். ஒருத்தி இடக்கைக்கு நேரே வரும்போது மற்றொருத்தி வலக்கைக்கு நேரே இருப்பாள். இங்ஙனம் சுற்றும்போது ஒவ்வொரு சுழற்சியிலும் இவ்விரண்டு சந்தி ஸ்தானங்கள் ஏற்படுமல்லவா? அப்போது அவர்கள் முத்தமிடுவதுபோல இதழ்த்தொனி செய்வது, இடையில் நிற்பவள் வாசிக்கும் புள்ளாங்குழல் கீதங்களுக்குத் தாளமாகும். இப்படி ஆயிரம் சேர்ந்து ஒரு பெரிய வளையம்! அரைநாழிகை கழிந்தவுடனே, இந்தப் பாணி கழிந்து மற்றோர் பாணி.

"நேரமாய் விட்டது. நாம் கடற்கரைக்குப் போகலாம்" என்றாள் பர்வதகுமாரி. எனக்கு அந்தத் திருவிழாவை விட்டுப் பிரிந்து செல்ல மனமே யில்லை. ஆனால் பர்வதகுமாரியின் சொல்லைத் தட்ட யாருக்கேனும் மனம் வருமா?

பறந்து பறந்து கடலுக்கருகே வந்து சேர்ந்தோம். நெருங்கி வரவே, உள்ளுயிரிலே புகுந்து இனிய சலனங்கள் தருவதும், காரமில்லாத தழதழத்த இயற்கையுடையதுமான மனோஹரத்தன்மை கொண்டதோர் ஸுகந்தம் புலப்பட்டது. குமாரி சொல்லியிருந்த ஸுகந்த மாளிகை ஸமீபித்து விட்டதென்பதை அறிந்து கொண்டேன். "இம் மாளிகைக்கு இத்தனை இனிய சுகம் எப்படி ஏற்பட்டது?" என்று நான் கேட்க வாயெடுக்கு முன்பாகவே அவள், எனது உள்ளக் கருத்தைத் தெரிந்து கொண்டு பின்வருமாறு கூறலாயினள்:-

"கஸ்தூரிக் கற்களாலும், தேவ சந்தன மரத்தாலும் இம்மாளிகை ஆக்கப்பட்டிருக்கிறது. அன்றியும், இதைச் சூழ்ந்துள்ள பூங்காவனத்திலே உங்கள் உலகத்தில் கண்டறியாத அதிக கந்தமுடைய பலவித மலர்ச்செடிகள் இருக்கின்றன" என்றாள்.

No comments:

Post a Comment