Friday, November 9, 2012

ஸங்கீத விஷயம் - தாள ஞானம்...

தாள ஞானம்

நமது குடும்ப ஸ்திரீகளின் பாட்டிலே முக்கியமான குறை என்னவென்றால் இவர்களிலே பெரும்பாலோருக்குத் தாள ஞானமில்லை.

பெண்களுக்குத் தாளஞானம் ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் சிரமமென்றும் இயற்கையிலே அவர்களுக்கு "லயவுணர்ச்சி" கொஞ்சம் குறைவென்றும் சிலர் தப்பாக நினைக்கிறார்கள். பெண்கள் குதித்துப் பாடும்போது பாருங்கள் 'டணீர், டணீர்' என்று எப்படித் தாளம் விழுகிறது. நமது பெண்கள் கீர்த்தனங்கள் முதலியவற்றை தாளமில்லாமற் பாடுவதற்குக் காரணம் பயிற்சிக் குறைவேயல்லாது வேறொன்றுமில்லை. அவர்களுக்கு நாம் சரியானபடி பாட்டுக்கற்றுக் கொடுப்பதில்லை.

"தாஸிகளா? கச்சேரி நடத்தப் போகிறார்களா? தாளம் தவறாமல் பாடி என்ன ஆகவேண்டும்?" என்று சிலர் பேசுவதுண்டு. தாளம் தவறிப் பாடினால் காதுக்கு விரஸமாக இருக்கும். ஜனங்களுக்குப் பிரிய முண்டாகாது. வீட்டிலும் அதே காரணந்தான். எனது மகள் பிழையாகப் பாடினால், பக்கத்தில் இருந்து கேட்கும் எனது காதுக்கு ஸுகப்படாது. அவளுக்கும் பாட்டில் நல்ல ருசி ஏற்படாது.

பெண்கள் பாடவே கூடாதென்று ஒரேயடியாக நிறுத்தி விட்டீர்களானால் ஒரு தொல்லையுமில்லை. பிறகு உலக வாழ்வுமில்லை. கல்யாணப் பாட்டுக்களும், தாலாட்டுப் பாட்டுக்களும், காதற்பாட்டுக்களும் நின்றுபோனால், பிறகு சுடுகாடுதான் மிச்சமிருக்கும். அப்படி நிறுத்த வேண்டுமென்று எவனும் விரும்பமாட்டான். ஆண்களைப் போலவே பெண்களும் எப்போதும் பாடத்தான் செய்வார்கள். ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு ஸங்கீதத்திலே அதிகத் தொடர்பு உண்டு. "செய்வன திருந்தச்செய்." பாட்டுப் பாட விரும்புவோர் நல்ல பாட்டிற் பழகவேண்டும். பாட்டுக் கேட்க வழி தேடவேண்டும். பாட்டினால் மகிழ்ச்சி உண்டாகிறது. லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படுகிறது; உபசாந்தி பிறக்கிறது.

ஹார்மோனியம்

தமிழ்நாட்டு மாதர்களுக்குள்ளே நல்ல பாட்டு வளர்ச்சி பெறவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆனால், அதற்கு ஹார்மோனியப்பெட்டி ஒரு விக்கினமாக வந்து சேர்ந்திருக்கிறது. இந்தப் பெட்டி நமது நாட்டிலே பழகுவதினால் சங்கீதத்திற்குப் பல விதமான தீங்கு உண்டாவதாக வித்வான்களிலே பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அதை நிறுத்துவதற்கு யாரும் வழி தேடவில்லை. நமது சங்கீதத்திலுள்ள சுருள்கள் வீழ்ச்சிகள் முதலியவற்றை ஹார்மோனியத்தில் காட்டமுடியாது. ஆதலால், அந்த வாத்தியத்தில் அதிகம் பழக்கமுடையோரிடம் நமது ஸங்கீதத்தில் உள் விசேஷ நயங்கள் மங்கிப் போகின்றன. இதையெல்லாங்காட்டிலும், அந்தப் பெட்டி போடுகிற பெருங்கூச்சல்தான் என் காதுக்குப் பெரிய கஷ்டமாகத் தோன்றுகிறது.

மேலும், ஸங்கீதத்திலே கொஞ்சமேனும் பழக்கமில்லாதவர்களுகெல்லாம் இந்தக்கருவியைக் கண்டவுடனே "ஷோக்" பிறந்துவிடுகிறது. சத்த முண்டாக்குவதற்கு நல்ல துருத்தி கைக்கு ஒத்ததாகப் பின்னே வைத்திருக்கிறது. ஒரு கட்டையை உள்ளே அழுத்தி, முன்பக்கத்துச் சாவிகளை இழுத்துவிட்டு, துருத்தியை அசைத்தால், "ஹோ" என்ற சத்தமுண்டாகிறது. உடனே பாமரனுக்கு மிகுந்த சந்தோஷ முண்டாகிறது. "நாம் அல்லவா இந்த இசையை யுண்டாக்கினோம்?" என்று நினைத்துக்கொள்கிறான். உடனே வெள்ளைக் கட்டைகளையும் கருப்புக் கட்டைகளையும் இரண்டு தட்டுத்தட்டுகிறான். பேஷான தொனிகள்! மேலான தொனிகள்! "பாமரன்பூரித்துப் போகிறான். முதல் நாள், முதல் தடவை, தொட்ட மாத்திரத்திலே இவ்வளவு கோலாஹலம் உண்டாகிறது. பிறகு ஸரளி, அலங்காரம், பிள்ளையார் கீதம், சங்கராபரண வர்ணம், ''பவநுத'' கீர்த்தனம் - இத்தனையும், ஹார்மோனியத்தில் மூன்று மாதத்திற்குள் பழக்கமாய் விடுகிறது. பாமரனின் மனதிலே "நாம் ஒரு வித்வான்" என்ற ஞாபகம் உறுதியாகப் பதிந்து விடுகிறது. ராக விஸ்தாரங்களைத் தொடங்கி விடுகிறான். ஒரு வீட்டில் "ஹார்மோனியம்" வாசித்தால் பக்கத்திலே ஐம்பது வீட்டுக்குக் கேட்கிறது. அறியாதவன் தனது அறியாமையை வீட்டில் இருந்தபடியே இரண்டு மூன்று வீதிகளுக்குப் பிரசாரம் பண்ணவேண்டுமானால், அதற்கு இந்தக் கருவியைப்போலே உதவி வேறொன்றுமில்லை. வீணை தவறாக வாசித்தால் வீட்டில் உள்ள ஜனங்களுக்கு மாத்திரந்தான் துன்பம்; ஹார்மோனியம் தெரு முழுவதையும் ஹிம்ஸைப்படுத்திவிடுகிறது. ஒரு தேசத்தாரின் செவியைக் கெடுத்து ஸங்கீத உணர்ச்சி குறையும்படி செய்ய வேண்டுமானால், கிராமந்தோறும் "நாலைந்து ஹார்மோனியம்" பரவும்படி செய்தால் போதும்.

நாடகக்காரர் வாய்ப்பாட்டுக்குச் சுருதி போடும் பொருட்டு இதை வைத்துக் கொள்ளுதல் ஒரு வேளை பொருந்தும். ஸாமான்ய ஜனங்கள் இதை சுருதிக்கு வைத்துக்கொள்வதனால் பல தீங்குகள் உண்டாகின்றன. இத்தீங்குகள் யாவை என்பதையும் நமது நாட்டுக்குப் பொருத்தமான வாத்தியங்கள் எவை என்பதையும் பெண்கள் பாட்டைநேராக்குவதற்கு இன்னும் என்ன வழிகள் தேடவேண்டுமென்பதையும் ஆராய்ச்சி செய்வோம்.

தம்பூர்

நாடகக்காரர் தவிர மற்ற ஸாமான்ய ஜனங்கள் வீடுகளிலும் பஜனைக் கூடங்களிலும் பாடும்போது தம்பூர் சுருதி வைத்துக் கொள்வதே பொருந்தும். ஹார்மோனியம் பேரிரைச்சல் போடுவதிலே பாட்டின் சத்தம் கணீரென்று கேட்பதில்லை. பாட்டுக் கீழாகவும் சுருதி மேலாகவும் நிற்கிறது. அஸாதாரணமான உச்ச சாரீரமுடைய சிலர் மாத்திரமே ஹார்மோனியத்தின் சுருதிக்குமேலே பாடக் கூடும்; பொதுப்படையாக சாத்தியமில்லை. பாட்டுக்கு உதவியாக சுருதி ஒலிக்கவேண்டும். பாட்டை விழுங்கும் சுருதி பிரயோசனமில்லை. அது வெறும் மடமை.

வீணை

வாத்தியம் படிக்க விரும்பும் ஸ்திரீகள் வீணை பழகவேண்டும். வீணை ஆரம்பத்திலே கொஞ்சம் சிரமம். போகப்போக ஸுலபமாய் விடும். இந்தக்கருவியிலே தேர்ச்சியேற்பட்டால் அது தான் வாஸ்தவமான சங்கீதத் தேர்ச்சி யாகும். பெண்கள் வீணை வாசிப்பதினால், நாட்டிலே ரஸப்பயிற்சியும் வாழ்க்கைநயமும் உண்டாகும். மைசூரிலும் மலையாளத்திலும் பழகியவர்களுக்கு, 'பெண்கள் வீணை கற்றுக் கொள்ளுதல் சிரமமில்லை'என்பது தெரியும். வீணை பழகினால் அதிலேயே நல்ல தாளஞானம் உண்டாய்விடும். வீணை மனிதர் குரல் போலவே பேசும். இன்பச் சுருள்களுக்கும் பின்னல்களுக்கும் வீணை மிகவும் பொருத்தமானது. அதன் ஒலி சாந்திமயமானது. ஸரஸ்வதி தனது கையில் வீணையை தரித்துக்கொண்டிருக்கிறாள். காளிதாஸ கவி பராசக்தியைப் பாடும்போது "மாணிக்ய வீணாம் உபலாலயந்தீம்" என்று தொடங்குகிறார்.

பொய்த் தொண்டை

ஆணாயினும் பெண்ணாயினும் கள்ளத் தொண்டை வைத்துக்கொண்டு பாடலாகாது. தொண்டையைத் திறந்து பாடினால்தான் சுகமுண்டாகும். இயற்கையிலே ஆணுக்குக் கனமாக குரலும் பெண்ணுக்கு ஸன்னமான குரலும் ஏற்பட்டிருக்கின்றன. பெண்களிலே சிலர் இயற்கை ஸன்னத்தை அதிக ஸன்னப்படுத்த வேண்டுமென்று கருதிக் கள்ளத் தொண்டையிற் பாடுகிறார்கள். வேறு சிலர் லஜ்ஜையினாலே கள்ளத் தொண்டைக்கு வந்து சேருகிறார்கள். இதுவும் தவறேயாம். தொண்டையைத் திறந்து தெளிவாகப் பாடுவதிலே லஜ்ஜைப்பட யாதொரு நியாயமுமில்லை.

No comments:

Post a Comment