Tuesday, November 20, 2012

நெல்லையப்பரும் வெள்ளையப்பரும் திருநெல்வேலி ராஜவிச்வாஸிகள்

1-2-1910 விஜயா

இந்த தை மாதம் 29ம் தேதிக்குச் சரியான ஜனவரி மாதம் 13ந் தேதி திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி ஸமேத ஸ்ரீ நெல்லையப்பருக்குத் தைப்பூசத்தன்று ஸிந்து பூந்துறையில் வழக்கப்படி தீர்த்தவாரி நடந்தது. மறுநாள் வழக்கப்படி தெப்ப உத்ஸவம் வெகு விசேஷமாய் பல ஆடம்பரங்களுடன் நடைபெற்றது.

மறுநாள் கிரமப்படி தெப்பத்தை அவிழ்க்கவில்லையாம். அவ்வூர் முனிசிபல் செக்ரிடரி, கோவில் தர்மகத்தா, போலீஸ் இன்ஸ்பெக்டர் இவர்கள் மூவரும் சேர்ந்து, அதே இடத்தில் அதே தெப்பத்தில் மறுநாள் சாயங்காலம் முதல் நாளைவிட அதிக அலங்காரங்கள் செய்து தீவட்டி, மத்தாப்பு, தாஸிகள், சாமரைகள், நாகஸுரம் முதலான ஸங்கீத மேள வாத்தியங்கள் முதலானவைகளுடன் வெகு அட்டகாசமாய் ஜில்லா ஜட்ஜி, போலீஸ் சூப்ரிண்டெண்டு , ஜில்லா ஸர்ஜன், ஜில்லா எஞ்ஜிநீயர் ஆகிய நான்கு துரைகளையும் இவர்களின் துரைஸானிகளுடன் தெப்பத்தில் ஏற்றி ஏழு சுற்று இழுத்து ஆங்கில உத்ஸவத்தைப் பூர்த்தி செய்தார்கள். இத்துடன் போதாமல், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஹேட்டுகள், துரைகளின் பட்லர்கள், ஆயாமார்கள், வண்டிக்காரக் குசினிகள் இவர்களுக்கும் பிற்பாடு தெப்ப உத்ஸவம் நடந்ததாம்!

ராஜ விச்வாஸிகளின் லக்ஷணம் இதுதான் போலும்!

நமது தெய்வங்களின் ஸ்தானத்தில் பரங்கிகளை உட்காரவைத்துத் தெய்வங்களுக்குச் செய்யும் உபசாரங்களைச் செய்ய அந்த தர்மகர்த்தாவுக்கும் மற்ற இரண்டு இந்திய கனவான்களுக்கும் எப்படி மனம் ஒப்பியதோ, தெரியவில்லை. இனி இவர்கள் கோயிலின் விக்ரஹங்களை உடைத்து, ஆங்கில அதிகாரிகளை அவ்விடம் வைத்து, தெய்வங்களின் நகைகளை அவர்களுக்குச் சாற்றி, அதன் காலில் விழுவார்கள் போலும்!

சபாஷ்! இதுவன்றோ ராஜ பக்தி! நாட்டில் கேட்பாரில்லாமல் போய்விட்டது. இதுவும் கலிகால விந்தையே!

இதைப் பற்றிய விவரங்களை நாளைக் கெழுதுவோம்.

No comments:

Post a Comment