Saturday, November 24, 2012

ஸ்ரீ ரவீந்திரர் திக் விஜயம்

25 ஆகஸ்டு 1921                                  துன்மதி ஆவணி 10

“மன்னற்குத் தன் தேச மல்லால் சிறப்பில்லை;
கற்றோர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு.”

ஆஹா, மனிதராகப் பிறந்தோரில் கீர்த்தி பெற்றால் மாத்திரம் என்ன ப்ரயோஜனம்? என் நண்பர் பெயர் சொல்லப்படாத ஒருவருக்குக்கூட ஓரிடத்தில், ஒரு கூட்டத்தினிடையே ஒரு கக்ஷியாருக்குள் ஒருவிதமான கீர்த்தி ஏற்பட்டிருக்கிறது.

நாளை அந்தக் கக்ஷி புகையாய்விடும். அந்தக் கூட்டம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அந்தக் கீர்த்தி, “பொய்யாய்ப் பழங் கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விடுமே.”
கீர்த்தியடைந்தால், மஹான் ரவீந்த்ரதைப் போலே அடைய வேண்டும். வங்காளத்தில் மாத்திரமா? இந்தியா முழுமையுமா? ஆசியா முழுதுமா? ஜெர்மனி, ஆஸ்த்ரியா, பிரான்ஸ் பூமண்டல முழுமையும் பரவின கீர்த்தி. இத்தனைக்கும் அவர் பாடிய பாட்டுகளோ வங்க பாஷையிலே உள்ளன. வெறும் மொழிபெயர்ப்புக்களைத்தான் உலகம் பார்த்திருக்கிறது. அதற்குத்தான் இந்தக் கீர்த்தி. 

ஜெர்மனியிலே, இவருடைய அறுபதாம் வருஷக் கொண்டாட்டம் சில தினங்களின் முன்பு கொண்டாடப்பட்டது. அப்போது (பி) பெர்ன்ஸ்தாப் (எப்) முதலிய மஹா பிரமுகர்கள் கூடி ஒரு ஸமிதி சமைத்துக்கொண்டு, இக்காலத்தில் ஜெர்மன் பாஷையில் எழுதப்பட்டிருக்கும் மிக முக்யமான காவ்யங்களும், சாஸ்த்ர க்ரந்தங்களும், பிற நூல்களும் அடங்கிய மிக விலையுயர்ந்த புஸ்தகத் தொகுதியொன்று டாகுருக்கு ஸம்மானம் செய்தார்கள். 

ஜெர்மனி தேசம் இன்றைக்கும் ஐரோப்பாக் கண்டத்தின் வித்யா ராஜதானியாக விளங்குகிறது. ஜெர்மனியில் நமது பாரத ரவீந்த்ரராகிய நவீந்த்ரருக்கு நடத்தப்பட்ட உபசாரங்களெல்லாம் அவருக்குச் சேரமாட்டா. பாரதமாதாவின் பாத கமலங்களுக்கே சேரும். ஜெர்மனியில் உபசாரம் நடந்த மாத்திரத்திலே, அதைப் பின்பற்ரி மற்ற முக்யமான ஐரோப்பிய தேசங்களெல்லாம் அவருக்குப் பூஜை நடத்துமென்பது சொல்லாமலே விளங்கும். அங்ஙனமே நடத்தியுமிருக்கின்றன என்பதைக் கீழே நன்கு விவரணம் புரிவோம்.

1921ம் வருஷம், மே மாஸம், 21ந் தேதியன்றி, “ஹம்புர் கெர் ஜெய்துங்க” என்ற பத்திரிகையில் ஒருவர் எழுதியிருக்கும் நிருபத்தில் ஸ்ரீமான் டாகுரைப் பற்றிய பின்வரும் வசனங்கள் கவனிக்கத் தக்கன; “ஸ்ரீமான் ரவீந்த்ரநாத டாகுர் ஸபைக்குள் வந்து பிரவேசித்த மாத்திரத்தில் எங்கள் அறிவுக் கெட்டாத ஒரு சக்தி வந்து புகுந்தது போலிருக்கிறது. இந்த மனிதருடைய வாழ்க்கையில் ஒற்றை க்ஷணமாவது இவர் எல்லையில்லாத ஜகத்துடன் லயப்பட்டு நில்லாத க்ஷணம் கிடையாதென்பது தெளிவாகப் புலப்பட்டது. அவருடைய ஆரம்ப வசனங்களே மிகவும் வியக்கத்தக்கனவாக இருந்தன. கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்கும் நிகழ்ந்திருக்கும் ஸந்திப்பே இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஸம்பவமென்று ரவீந்த்ரர் தம்முடைய முதல் வாக்கியமாகக் கூறினர். ஆசியா ஐரோப்பாவிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய உண்மைகள், ஆசியா ஐரோப்பாவிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய சக்திகள் பல இருக்கின்றன என்பதை ரவீந்த்ரர் மறுக்கவில்லை. இதனை மேற்றிசை உபந்யாஸங்களினிடையே அவர் பன்முறை அங்கீகாரம் செய்திருக்கிறார். இந்தியாவுக்கு வந்த பின்னர் சில ஆங்கிலோ இந்தியப் பத்திராதிபர்களுக்குப் பேரானந்தம் விளையும்படி மிகவும் அழுத்தமான பாஷையில் வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் இஃதன்று அவருடைய முக்யோபதேசம். நாம் மேற்றிசையாரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்களைக் காட்டிலும், அவர்கள் நம்மிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் அதிகமென்பதே அவருடைய மதம். ஆசியாவையும் ஐரோப்பாவையும் ஒற்றுமைப்படுத்தினாலன்றி, உலகத்தில் யுத்தங்கள் நிற்கப் போவதில்லை. ஆசியாவும் ஐரோப்பாவும் ஸமத்வம், ஸஹோதரத்வம், அன்பு என்ற தளைகளாலே கட்டப்பட்டாலன்றி, உலகத்தில் ஸமாதானத்துக்கிடமில்லை. ஸமாதானமே யில்லாமல், மனிதர் பரஸ்பரம் மிருகங்களைப் போலே கொலை செய்து கொண்டு வருமளவும், மனிதருக்குள்ளே நாகரிக வளர்ச்சியைப்பற்றிப் பேசுதல் வெற்றுரையேயாகுமென்று கூறி விடுக்க. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இங்ஙனம் ஒற்றுமைப்படுத்துதற்குரிய பல புதிய உண்மைகளையும் அறங்களையும், தம்முடைய அற்புதமான நூல்களாலும், உபன்யாசங்களாலும் தெளிவுபடுத்தி மகான் டாகுர் இந்த பூமண்டலத்தையே தமக்குக் கடன்படுமாறு செய்துவிட்டார். இதனை ஜெர்மனி முற்றிலும் நன்றாக உணர்ந்துகொண்டு, அதன் பொருட்டாக நம் ரவீந்த்ரரிடம் அளவிறந்த மதிப்புச் செலுத்துவதுமன்றி அபாரமான நன்றியும் செலுத்துகிறது.

ஆஸ்த்ரியா தேசத்தில் பாரத கவிராஜ ரவீந்த்ரருக்கு நடந்த உபசாரங்கள் வர்ணிக்கத் தக்கன அல்ல. 1921 ஜூன் 26-ஆந் தேதியன்று, லண்டன் “அப்ஸர்வர்” பத்திரிகையின் வியெந்நா நிருபர் எழுதிய கடிதமொன்றில் பின்வருமாறு கூறுகிறார்:-

”வியெந்நா நகரத்துப் பொதுஜனங்களாலும் பத்திராதிபர்களாலும்,  ஒருங்கே இத்தனை ஆழ்ந்த பக்தி சிரத்தைகளுடனே, இத்தனை ஒருமனமான புகழ்ச்சி வந்தனைகளுடனே நல்வரவேற்கப்பட்டோர் வேறெவரும் கவிகளிடையேயுமில்லை, பெரிய பெரிய ராஜ்ய தந்த்ரிகளிடையேயுமில்லை, வீர ஸேனாதிபதிகளிடையேயு மில்லை; மன்னர்களிடையேயு மில்லை” என. ஆஹா! இஃதன்றோ கீர்த்தி. இதனைக் குறிப்பிட்டன்றோ, முன்பு திருவள்ளுவனாரும் “தோற்றிற் புகழொடு தோன்றுக” என்றார்.
தன் பொருட்டாகச் சேகரிக்கப்படும் கீர்த்தியொரு கீர்த்தியாகுமா? ஒரு தேச முழுமைக்கும் கீர்த்தி சேகரித்துக் கொடுப்போனுடைய புகழே புகழ். ரவீந்த்ரநாதர் இந்தியாவை பூலோக குருவென்று பூமண்டலத்தார் கண்முன்னே நிலைநாட்டிக் கொடுத்தார். அவருடைய திருவடி மலர்கள் வாழ்க.
இந்தியாவின் ஞானோப தேசமாகிய அமிர்தத்துக்கு, ஐரோப்பாவில் உயர்ந்த தரத்து மேதாவிகள் எத்தனை வேட்கையுடன் காத்திருந்தன ரென்பது மேலே கூறிய ஆஸ்த்ரிய நிருபரின் கடிதத்திலே மற்றொரு பகுதியில் பின்வரும் வசனத்தாலே நன்கு விளக்கப்படுகின்றது:- “இந்த நூற்றாண்டின் சிதறுபட்ட குழந்தையாகிய நாம் (ஐரோப்பியர் இப்போது ஒற்றுமையை நாடித் தவிப்பது போல் இதுவரை எப்போதும் தவித்தது கிடையாது.) நரகவாதனைப் படுகிற நாம் இன்னும் எதிர்காலத்தில் இந்த மண் மீது தேவலோக அனுபவங்களெய்துவோம் என்று கனவுகள் காண்பதை விடவில்லை. இப்படியிருந்த எங்கள் முன்னே மற்றொரு லோகத்திலிருந்தொரு மனிதன் வந்தது போலே டாகுர் வந்தார். அவரை நல்வரவு கூறி உபசரிப்பதற்கு இப்போது நாம் தகுதி பெற்றிருப்பதுபோல் இதுவரை எப்போது மிருந்ததில்லை. இப்போது ஆயுத்தமாக இருப்பது போல், இதுவரை எப்போதும் ஆயுத்தமாக இருந்தது கிடையாது. இஃது நேற்று அவருக்கு நடந்த உபசாரங்களாலே நன்கு விளங்கிற்று” என்று அந்நிருபர் கூறுகிறார்.

இனி பிரான்ஸ் முதலிய மற்ற தேசங்களில் இந்தக் கவீசுவரருக்கு நடக்கிற உபசாரங்களைப் பற்றிப் பேசு முன்னர், இவர் இந்தியாவின் எந்த உண்மையைத் தெரிவித்தபடியாலே இங்ஙனம் பாரத பூமிக்கு பூலோக குருத்தன்மை ஏற்படுத்திக் கொடுக்க வல்லோர் ஆயினர் என்பதைச் சற்றே ஆராய்ச்சி புரிவோம்:-

அஃது பழைய வேத உண்மை; எல்லாப் பொருள்களும் ஒரே வஸ்துவாகக் காண்பவன் ஒருவனுக்கு மருட்சியேது? துயரமேது? எல்லாம் ஒரே பொருளென்று கண்டவன் எதனிடத்தும் கூச்சமேனும், வெறுப்பேனும், அச்சமேனும் எய்தமாட்டான். அவன் எல்லாப் பொருள்களிடத்தும் அன்பும், ஆதரவும், ஸந்துஷ்டியும், பக்தியும் செலுத்துவான். எல்லாப் பொருளிலும் திருப்தி பெறுவோன் எப்போதும் திருப்தியிலிருப்பான். இங்ஙனம் மாறாத சந்தோஷ நிலையே முக்தி நிலையென்றும் அமரபதமென்பதும் கூறப்படுவது. இதனை மனிதன் அப்யாஸத்தாலும் நம்பிக்கையாலும் இந்த உலகத்தில் எய்திவிட முடியும். அஃதே வேதரஹஸ்யம்.

இந்த ஆத்ம ஐக்கியமான பரம தத்துவத்தை மிக இனிய தெளிந்த வசனங்களாலே ஐரோப்பாவுக்கு எடுத்துக் கூறியது பற்றியே ரவீந்த்ர கவிச் சக்ரவர்த்திக்கு ஐரோப்பா இங்ஙனம் அற்புத வழிபாடு செலுத்திற்று.

No comments:

Post a Comment