Tuesday, November 27, 2012

ஜாதி 1

26 டிசமப்ர் 1916

ஜாதி என்ற சொல் இரண்டர்த்த முடையது. முதலாவது ஒரு தேசத்தார் தமக்குள் ஏற்பத்திவைத்துக் கொள்ளும் பிரிவு. வேளாள ஜாதி, பிராமண ஜாதி, கைக்கோள ஜாதி என்பது போல. இரண்டாவது, தேசப் பிரிவுகளைத் தழுவிய வேற்றுமை. ஜப்பானிய ஜாதி, சீன ஜாதி, பார்ஸீ ஜாதி, பாரத ஜாதி, ஆங்கிலேய ஜாதி, ஜர்மானிய ஜாதி, ருமானிய ஜாதி என்பது போல. இவ்விரண்டும் அதிக அனுகூலம் இல்லையென்பது ஸ்ரீமான் ரவீந்திரநாத டாகுருடைய கக்ஷி.

அமெரிக்காவிலேயே பிறந்தவன் தன்னை அமெரிக்க ஜாதியென்றும், இங்கிலிஷ் ஜாதி இல்லையென்றும் நினைத்துக் கொள்ளுகிறான். இங்கிலாந்திலுள்ள ஆஙிலேயனுக்கும், குடியரசுத் தலைவன் வில்ஸனுக்கும் நடை, உடை, ஆசாரம், மதம், பாக்ஷை எதிலும் வேற்றுமை கிடையாது. ஆனால் தேசத்தையொட்டி வேறு ஜாதி, நேஷன். இந்த தேச ஜாதிப்பிரிவு மேற்குப் பக்கத்தாரால் ஒரு தெய்வம் போலே ஆதரிக்கப்படுகிறது. அங்கு யுத்தங்களுக்கு இக்கொள்கை முக்கிய காரணம். எல்லா தேசத்தாரும் ஸகோதரரென்றும், மனுஷ்ய ஜாதி முழுதும் ஒன்றேயென்றும், ஆதலால் தேச வேற்றுமை காரணமாக ஒருவரையொருவர் அவமதிப்பதும் அழிக்க முயல்வதும் பிழைகளென்றும் ஸ்ரீடாகுர் சொல்லுகிறார்.

அமெரிக்காவிலே ஒரு சபையிலே இவர் மேற்படி கொள்கையை எடுத்துக் காட்டுகளையில், அந்த தேசத்தானொருவன் இவரை நோக்கி, “இவ்விதமான கொள்கையிலிருந்து பற்றியே உங்கள் தேசத்தை அந்நியர் வென்று கைப்பற்றிக் கொள்ள நீங்கள் தோற்றுக் கிடக்கிறீர்கள்” என்றான்.

“நாங்கள் இப்போது புழுதியோடு புழுதியாக விழுந்து கிடந்தாலும் எங்கள் பூமி புண்ணிய பூமி. உங்களுடைய செல்வத்தில் மேலே தெய்வசாபமிருக்கிறது” என்று ரவீந்திரநாத டாகுர் அவருக்கு மறுமொழி சொன்னாராம். அதாவது இந்த நிமிஷத்தில் செல்வத்திலும், பெருமையிலும் நம்மைக் காட்டிலும் அமெரிக்கா தேசத்தார் உயர்வு பெற்றிருந்த போதிலும் இந்த நிலைமை எப்போதும் மாறாமலிருக்கு மென்று அமெரிக்கர் நினைபப்து பிழை. நாங்கள் தெய்வத்தையும் தர்மத்தையும் நம்பியிருக்கிறோம். கீழே விழுந்தாலும் மறுபடி எழுந்துவிடுவோம். அமெரிக்கா விழுந்தால் அதோ கதி. ஆதலால் இனிமேலேனும் ஹிந்து தர்மத்தை அனுசரித்து உலக முழுவதிலும் எல்லா தேசத்தாரும் உடன் பிறப்பென்றும் சமானமென்றும் தெரிந்து கொண்டு, பரஸ்பரம் அன்பு செலுத்தினால் பிழைக்கலாமென்று ரவீஇந்திரர் அவர்களுக்குத் தர்மோபதேசம் செய்கிறார்.

வெளித் தேசத்தாருக்குத் தர்மோபதேசம் செய்கையில் நமது நாட்டில் குற்றங்கள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா? இங்கே அநாவசியமான ஜாதி விரோதங்களும் (அன்புக் குறைவுகளும்) அவமதிப்புகளும் வளர விடலாமா? அவற்றை அழித்து உடனே அன்பையும் உடன் பிறப்பையும் நிலை நாட்டுவது நம்முடைய கடமையன்றோ?

No comments:

Post a Comment