28 டிசம்பர் 1905 விசுவாவசு மார்கழி 14
(சக்கரவர்த்தினி மாதாந்திரப் பத்திரிகையில் வெளியானது)
இப்போது பெங்கால மாகாணத்திலிருக்கும் ஒவ்வொரு ஹிந்துவாலும் ஸாம
கீதத்தைப்போல அத்தனை பக்தியுடன் பாடப்பட்டு வருகின்ற வந்தேமாதரம் என்ற திவ்ய கீதத்தை
நான் மொழி பெயர்க்கக்த் துணிந்தமை, கர்வங்கொண்ட செய்கையென்று பலர் கருதக்கூடும். ௸ கீதமெழுதிய பெங்காலி வித்வானாகிய பங்கிம் சந்திர பாபுவின் தைவிகச்
சொற்களைத் தமிழ்ப்படுத்த எனக்குப் போதிய வன்மையில்லாவிடினும் தமிழ்நாட்டாருக்கு அச்
செய்யுளின் பொருளுணர்த்த வேண்டுமென்ற ஆசைப் பெருக்காலேயே யான் இதனைத் துணிந்திருக்கிறேன்.
இவ் வாந்தேமாதரம் என்ற கீதம் பங்கிம் சந்திர சாடர்ஜியின் நூல்களிலே மிகச் சிறப்புக்
கொண்டதாகிய ஆனந்த மடம் என்ற நாவல் கதையினிடையே அமைக்கப்பட்டிருக்கின்றது.
ஆனந்த மடம் என்ற கதையானது உண்மையாகவே நடந்த சரித்திரத்தைத் தழுவியது.
வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாயிருந்த காலத்தில் சந்நியாசிகள் சேர்ந்து நடத்திய ஓர்
பெருங் கலகத்தைப் பற்றியே ௸ நூல் விரித்துக் கூறுகின்றது.
பெங்காலத்தில் 1774-5 வருஷத்தில் பெரும் பஞ்சம் உண்டாயிற்று. அதற்கப்பால் அனேக
ஆயிரம் சந்நியாசிகள் ஒன்றாய்க் கூடி அந்நியர்களைத் தமது தாய்ப் பூமியிலிருந்து
ஒழித்துவிட வேண்டுமென்னும் ஒரே நோக்கத்துடன் கலகஞ் செய்யத் தொடங்கினார்கள்.
இவர்கள் இரகசியமாகக் சந்திக்கும் பொருட்டு ஆள்
நுழையக் கூடாத கருங்காட்டில் ஆனந்த மடம் என்பதோர் இடம் வைத்திருந்தார்கள். இவர்கள்
மகமதியப் படைகளைப் பல இடங்களில் தோல்வி செய்ததுமன்றி ஓர் ஆங்கிலேயப்
பட்டாளத்தையும் முறியடித்தார்கள். எனினும் பிரிட்டிஷார் விடாமல் தாக்கியதன்பேரில்
இந்த வீர சந்நியாசிக் கூட்டத்தார் கடைசியாகப் பிரிந்து போயினர். இந்த வீரத்
துறவிகளில் ஒருவராகிய பவாநந்தர் வந்தே மாதரம் என்ற ஆரம்பங்கொண்ட அரிய கீதத்தைப்
பாடியாதாக பங்கிம் புலவர் தமது நூலில் அமைத்திருக்கிறார்.
25 வருஷங்களுக்கு முன் இவர் இந்தப் பெருநூலைப்
பிரசுரித்தபோது அந்தக் கீதத்தின் கண்ணே பெரும் பகுதி சமஸ்கிருதமாகவே
யிருந்தபடியால் அவருடைய நேயர்கள் பலர் அதைக் குறை கூறினார்கள். ஆனால் அம்மகான்
அவர்களுடைய அபிப்பிராயத்தைப் பொருட்டாக்கவில்லை. எழுதி 25 வருஷங்களுக்குள்ளாக
மேற்படி திவ்ய கீதம் பெங்காலத்து ஜனங்கள் எல்லோருடைய நாவிலுமிருக்குமென்பதை அந்தக்
கவியரசர் அறிந்திருந்தார் போலும். அதிலிருக்கும் சம்ஸ்கிருதம் வெகு
எளிதாயிருப்பதால் எந்தப் பெங்காளிக்கும் வெகு சுலபமாகப் பொருள் விளங்கிவிடும்.
அதுவுமின்றி அந்தக் கீதமானது பழமையில் முன்னோர்களால் வழங்கப்பட்டு வந்ததும்
ஒப்பற்றதுமான சம்ஸ்கிருத பாஷையோடு தற்காலப் பாஷை கலப்புற்று அமைக்கப்
பெற்றிருப்பதால் பூர்வ காலத்துடன் தற்காலத்தை இணைப்பதாக இருக்கின்றது. தாய்த்
தேசத்தை அந்தப் பாடலில் தாயென்று வழங்கியிருப்பது மிகவும் பொருத்தமுடையதே.
பலரால் இக்கீதத்திற்கு எழுதப்பட்டிருக்கும்
இங்கிலீஷ் மொழிபெயர்ப்பானது பெங்காலி கீதத்திலிருந்து சில இடங்களில்
மாறுபடுகின்றது. அவ்வாறு மாறுபட்ட இடங்களில் என்னால் கூடிய அளவு பெங்காலிச்
சொற்களை அநுசரித்தே தமிழ் மொழி பெயர்ப்பெழுதியிருக்கிறேன். எனது தமிழ் எத்தனை
குறைவுபட்டிருந்த போதிலும் தெய்வப் புலவராகிய பங்கிம்பாபுவின் மதிப்பைக் கருதித்
தமிழுலகத்தார் இதனை நன்கு ஆதரிப்பார்களென்று நம்புகிறேன்.
வந்தேமாதரம்
No comments:
Post a Comment