Thursday, November 22, 2012

தென்னாப்பரிக்காவில் நம்மவர்கள்

25-12-1910 (இந்தியா பத்திரிக்கை)

தென் ஆப்பரிக்காவில் ஸமத்துவத்தின் பொருட்டாகவும் ஆரிய ஜாதியின் மானத்தைக் காக்கும் பொருட்டாகவும் நம்மவர்கள் பட்டுவரும் துயரங்களைப் புதிதாக எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

வீடு வாசலையும் பொருளையும் இழந்தவர்கள் பலர். துன்பம் பொறுக்க முடியாமல் இந்தியாவுக்குத் திரும்பியோடி வந்துவிட்டவர்கள் பலர். அங்கேயே இறந்தவர்கள் பலர். பிராணனுக்குத் தீங்கு நேரிடினும் மானத்தை இழக்க மனமற்றவர்களாய் அந்நாட்டு மிருகச் சட்டத்தை மீறி நடந்து சிறைச்சாலையில் வருந்துவோர் பலர்.

கல்வியிலும் செல்வத்திலும் குலத்திலும் மஹோன்னத ஸ்தானத்திலிருந்தவர்கள் இப்போது அந்நாட்டுச் சிறைக்கூடங்களில் மலக்கூடை சுமப்பது முதலிய வேலை செய்ய நேர்ந்துவிட்டது.

அங்குள்ள ஆரிய ஸ்திரீகளோ தமது கணவரிடமும், ஸஹோரதரரிடமும் “சிறையிலிருந்து படாத பாடுபட்டு இறந்தாலும் இறந்துவிடுங்கள். ஆரிய ஜாதிக்கு அவமானந்தரும் சட்டத்துக்கு உட்படாதேயுங்கள்” என்று போதிக்கிறார்கள்.

காய்கறிகள் விற்றும், கையால் உழைத்தும் புருஷரைச் சிறைக் களத்தில் விட்டுவிட்டு நமது உத்தம ஸ்திரீகள் ஜீவனம் செய்கிறார்கள்.

இப்போது அவ்வித ஜீவனத்திற்கும் பல இடுக்கண்கள் நேர்ந்துவிட்டன. பண உதவி வேண்டுமென்று நமது வீர சகோதரர்களும் சகோதரிகளும் தாமே வாய்திறந்து கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

பம்பாயிலிருந்து ஆயிரக்கணக்கான தொகை போய்விட்டது. பெங்காளத்திலும் பெருந் தொகைகள் சேர்த்து வருகிறார்கள்.

சென்னப்பட்டணத்தில் இதன் பொருட்டு வைத்திருக்கும் சபையாருக்கு இன்னும் அதிகமாகப் பணம் சேரவில்லை.

தென் ஆப்பரிக்காவிலுள்ள இந்தியர்களிலே பெரும்பாலோர் தமிழர்கள், அப்படி யிருந்தும் நாம் இவ்விஷயத்தில் அஜாக்கிரதையாக இருப்பது கிரமமன்று.

ஆகையால் “இந்தியா பத்திரிகை நிதி”யென்பதாக ஒன்று சேர்த்துச் சென்னைப்பட்டணத்திலுள்ள சபையின் காரியதரிசிக்கு அனுப்ப உத்தேசித்திருக்கிறது.

தமிழர்களனைவரும் உதவி செய்ய வேண்டும்.

தென் ஆப்பரிக்கா பாரத சஹாய நிதி


            ரூ           அ.         பை
”இந்தியா பத்திராதிபர்” 10 0 0
கு. சண்முகவேலு செட்டியார் 10 0 0
ஸி. சுப்பிரமணிய பாரதி 5 0 0
வந்தே மாதரம் 5 0 0

No comments:

Post a Comment