Sunday, October 7, 2012

கடற் பாலத்தில் வர்ணாசிரம சபை



7 ஏப்ரல் 1917                                                  நள பங்குனி 25
வஸந்த காலத்தில்,  ஒரு நாள் காலையில் இளவெயில் அடிக்கும் நேரத்தில் வேதபுரத்திலுள்ள கடற்பாலத்தின் கடைசியில், நடுக்கடலின் மீது, ஒரு செம்படவன் உட்கார்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தான். அங்கே நானும், எனது நண்பர் சக்ரவர்த்தி சேஷய்யங்காரும் சரீர சுகத்திற்காக நடை பழகப் போனோம். அங்கு புதிதாகச் செய்து வைக்கப்பட்டிருந்த ராஜாங்கத தோணிகளின் நிழலிலே போய்ச் சிறிது நேரம் உட்கார்ந்து ஆயாஸம் தீர்த்துக் கொள்ளலாமென்று சேஷய்யங்கார் சொன்னார். அந்த நிழலிலே போய் உட்கார்ந்தோம். என் கையில் சில வர்த்தமானப் பத்திரிகைகள் கொண்டு போயிருந்தேன். அவற்றையெடுத்து வாசித்துக் கொண்டிருந்தேன். சேஷய்யங்காருக்குப் போது போகவில்லை. அவர் அந்த மீன் பிடிக்கும் செம்படவனிடத்திலே போய்ப் பேச்சுக் கொடுத்தார். அவனோ மீன் சரியாகக் கிடைக்கவில்லையென்ற கோபத்திலிருந்தான். சிறிது நேரம் கழித்த பிறகு சேஷய்யங்கார் என்னை நோக்கி, “வீட்டுக்குக் கிளம்பலாம்; புறப்படும்” என்றார். 

நான் சொன்னேன்:-

“ஸ்வாமி, நான் காலையில் காபி குடித்துவிட்டுத்தான் வீட்டிலிருந்து புறப்பட்டேன். எனக்கு இங்கே சிறிது நேரம் தனியே யிருப்பதில் பிரிய முண்டாகிறது. நீர் அவஸரமானால் வீட்டுக்குப்போம். நான் கொஞ்சம் இங்கே இருந்துவிட்டு வருகிறேன்” என்றேன். 

அப்போது சேஷய்யங்கார் புன்சிரிப்புடனே, “நான் ஆஹாரமில்லாமல் வெளியே புறப்படும் வழக்கம் எப்போதுமே கிடையாது. எனக்கும் பசியில்லை. ஆதலால், நானும் இங்கேயே உம்மோடு சிறிது நேரம் பொழுது போக்கத் தயாராக இருக்கிறேன். இந்த இடத்தில் ஒரு சபை கூடிப் பேசினால் மிகவும் நன்றாக இருக்கும். என்ன செய்யலாம்? அந்தச் செம்படவன் பேச வரமாட்டான். அவன் மீன் கிடைக்கவில்லைல் யென்று என் மேலே கோபித்துக் கொள்ளுகிறான். நீரோ பத்திரிகையிலுள்ள அண்டப் புளுகுகளையெல்லாம், வேத வுண்மை போலே கருதி, மஹா சிரத்தையுடன், நுழைந்து நுழைந்து வாசித்துக் கொண்டிருக்கிறீர். விடுங்காணும்! பத்திரிகையை அப்பாலே போகும். காற்று மிகவும் ரஸமாக வீசுகிறது. எனக்கு இந்த இடத்தை விட்டுப் போக மனதாகவில்லை. ஏதாவது பேச்செடும்” என்று சொன்னார். 

விதியே சேஷய்யங்கார் ரூபமாக வந்து நம்மைப் பேச்சுக்கிழுக்கிற தென்பதை நான் தெரிந்து கொண்டு பின்வருமாறு சொல்லலானேன்:-

“ஸ்வாமீ, என்னால் வஞ்சனையில்லை. சபை போடுவோம், அதைப்பற்றி யாதொரு ஆக்ஷேபமுமில்லை. ஆனால் உபந்யாஸ மெல்லாம் நீர்தான் செய்ய வேண்டும். நீர் உபந்யாசி; நான் தான் சபைக் கூட்டம். நடத்தும்” என்றேன். 

அதற்கு சேஷய்யங்கார் சொல்கிறார்:-

“நாம் உபந்யாஸகர்த்தா, நீர் அக்ராஸனாதிபதி, அந்தச் செம்படவன் தான் சபை” என்றார். 

அப்போது, சற்று தூரத்திலே யிருந்த அந்தச் செம்படவன் சொல்லுகிறான்:-

“சாமிமாரே, நீங்கள் வந்தாலும் வந்தீர்கள்; எனக்கு மூன்று மீன் கூட முழு மீனாகக் கிடைக்கவில்லை.” சேஷய்யங்கார் இதைக் கேட்டவுடனே கால் ரூபாயை அவன் கையிலே கொண்டு போய்க் கொடுத்து அவனை யழைத்து வந்து நாங்களிருந்த நிழலிலே உட்காரும்படி செய்தார். இவருடைய படாடோபத்தைக் கண்டு ஆரம்பத்திலே அவன் கொஞ்சம் பயந்தான். பிறகு அவர் சொன்னபடி கேட்டால் காசு கிடைக்குமென்று தெரிந்து கொண்டு, அவன் எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். 

சேஷய்யங்கார் உபந்யாஸிக்கலானார்:-

“நாலு ஜாதி தான் உண்டு. பிரம, க்ஷத்திரிய, வைசிய, சூத்ரர். படித்தவன் பிராமணன்; வீரன் க்ஷத்திரியன்; தந்திரசாலி வைசியன்; தொழிலாளி சூத்திரன். இது எந்த தேசத்திலும் உண்டு. எந்தக் காலத்திலும் உண்டு. இதை மாற்றவே முடியாது.”

செம்படவன்:- “மெய்தான் சாமி; மெய்தான் சாமி” என்றான்.

சேஷய்யங்கார்:- “இந்தச் செம்படவன் மகன் படித்து சாஸ்திரத் தேர்ச்சி யடைந்து பிரமஞானியாய் விட்டால் அவனுக்கு என் பெண்ணை விவாகம் செய்து கொடுப்பேன். அதில் தோஷமில்லை” என்றார். 

செம்படவன் நடுங்கிப் போனான். ஐயங்காருக்கு புத்தி ஸ்வாதீனமில்லையென்று நினைக்கத் தொடங்கினான். 

சேஷய்யங்கார் மொழிகிறார்:- “ஆனால் குலத்தையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். குலத்தளவே யாகும் குணம் என்று பெரியோர் சொல்லியிருக்கிறார்கள். அம்பட்டனுடைய குழந்தை சிறு பிள்ளையாக இருக்கும்போதே ஒருவரும் சொல்லிக் கொடுக்காமல் தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்ளுகிறது. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்; ராஜா விட்டுப் பிள்ளை இயற்கையாகவே சைன்யம் வகுத்து விளையாடிப் பழகுகிறது. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால் பிறவி ஒருவனுடைய குணத்தையும் தொழிலையும் நிர்ணயிக்கத்தான் செய்கிறது. ஆதலால் இப்போதுள்ள ஜாதிப் பிரிவை அதிகமாக மாற்றக் கூட வேண்டியதில்லை. ‘எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரே மேல் வருக’ என்று சொல்லி பிராமணப் பதவியிலே சேர்க்க வேண்டும். இதற்கிடையே திருஷ்டி தோஷம் புத்திசாலித் தனமில்லை. அதன் உடனே நிறுத்திப் போடவேண்டும். ‘தீண்டாத ஜாதி’ என்கிற பேச்சே கூடாது. அது வெறும் பயித்தியம். நந்தன் சிலையை அறுபத்து மூன்று நாயன்மாருக்கு நடுவிலே வைத்து குருக்கள் மணியடித்துக் கும்பிடவில்லையா? ஜாதியாவது குலமாவது! இவையெல்லாம் லெளகிகம். இதனாலே மனுஷ்ய ஸம்த்வத்துக்குக் குறைவு நேரிடக் கூடாது. ராம்தாஸ், கபீர்தாஸ் அவர்கள் சொன்னதெல்லாம் பொய்யா?”

இவ்வாறு சேஷய்யங்கார் நெடுந்தூரம் சொன்னார். போகப் போக அவருடைய பிரசங்கத்தில் நான் கொஞ்சம் கவனக் குறைவாக இருக்கும்படி நேரிட்டது. ஏனென்றால் இவர் பேசிக் கொண்டிருக்கும் போதே எங்கள் பக்கத்தில் ஒரு கிழவன் வந்து நின்றான். அவனுக்கு சுமார் அறுபது வயதிருக்கும் போலே தோன்றிற்று. ஆனால் திடகாத்திரமுடையவன். அவன் சேஷய்யங்காருடைய பிரசங்கத்தை மிகவும் ஜாக்கிரதையாகக் கேட்டுக் கொண்டு வந்தான். சேஷய்யங்கார் சொல்லும் வார்த்தைகளிலே ஒன்றிரண்டைக் கேட்டுப் புன்சிரிப்புச் சிரித்தான். ஓரிரண்டு வார்த்தைகள் அவன் முகத்திலே கோபக் குறி விளைத்தன. நான் அவனைக் கையினால் சமிக்கை காட்டி என்னருகே வரும்படி சொன்னேன். ஸமீபத்தில் வந்தான். “நீ என்ன ஜாதி?” என்று கேட்டேன். “பறையன்” என்றான். இதைக் கேட்டவுடன் சக்ரவர்த்தி சேஷய்யங்கார் திரும்பிப் பார்த்தார்.

2

சக்ரவர்த்தி சேஷய்யங்கார் கிழச் சாம்பானை உட்காரச் சொன்னார். அவன் உட்கார்ந்தான். “நான் சொல்லிய வார்த்தைகளை நீ மிகவும் கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாயே, நீ யார்? உன் பெயர் என்ன?” என்று சேஷய்யங்கார் சொன்னார்.

அப்போது கிழச்சாம்பான் சொல்லுகிறான்:-

“சாமிகளே, நான் பஞ்சம ஜாதி. என் பெயர் லக்ஷ்மணன். பிராம்மணரே எங்களுக்கு குரு. முன்பொரு மாட்டுக் கொட்டகையில் எங்கள் தாயாகிய ஆதியை பகவன் என்ற பிராம்மணன் மனைவியாகச் செய்து கொண்டான். பிராம்மண ஜாதி எங்களுக்குத் தகப்பன் முறை. இக்காலத்தில் பல எங்களுக்கு உபகாரம் பண்ண வருகிறார்கள். எல்லா மனிதரும் சரிசமானமென்றும் மனிதருக்குள் எவ்விதமான பேதமும் கிடையாதென்றும் பலர் சொல்லுகிறார்கள். எல்லாம் வாய்ப் பேச்சாகத்தானிருக்கிறது. நடத்தையில் ஒன்றையும் காணவில்லை. ஹிந்து மதத்தில் எங்களுடைய நிலைமை தாழ்ந்திருக்கிற தென்றும், கிறிஸ்து மதத்தில் சேர்ந்தால் எங்களுடைய நிலைமை மேன்மைப்படுமென்றும் சொல்லிக் கிறிஸ்தவப் பாதிரிகள் எங்களிலே சிலரைக் கிறிஸ்து மதத்தில் சேர்ந்தார்கள். அதில் யாதொரு பயனையும் காணவில்லை. நூற்றிலொருவனுக்கு பத்துப் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்கிறது. மற்றவர்களெல்லாரும் துரைமாரிடத்தில் சமையல் வேலை பண்ணுதல், பயிரிடுதல், குப்பை வாருதல் முதலிய பழைய தொழில்களைத்தான் செய்து வருகிறார்கள். எனக்கு முன்னோருடைய மதமே பெரிது. கிறிஸ்தவர்களுடன் எங்களுக்குக் கொடுக்கல், வாங்கல், சம்பந்தம், சாப்பாடு ஒன்றுமே கிடையாது. என்ன கஷ்டமிருந்தாலும் நாங்கள் ஹிந்து மதத்தை விடமாட்டோம். உங்களைப்போலே எல்லாப் பார்ப்பாரும் எங்களிடம் அன்பு பாராட்டினால், பிறகு எங்களுக்கு யாதொரு குறையுமில்லை. தொழில் ஏதாயிருந்தாலும் குற்றமில்லை. ஒரே தேசத்தில் பிறந்து, ஒரே மதத்தைச் சேர்ந்து, ஒரே கூட்டமாக இருக்கும் ஹிந்துக்கள் ஒருவருக்கொருவன் அன்போடிருக்க வேண்டாமா? எங்கள் ஜாதிக்காரருக்குச் சோறும் துணியும் நேரே கிடைத்து வருகிறதா என்பதைக்கூட மற்ற ஹிந்துக்கள் கவனியாமலிருப்பது நியாயமா? எந்தத் தொழில் செய்து பிழைத்தாலும் தெய்வ பத்தி இருந்தால் இஹத்தில் மேன்மையும் பரத்திலே மோக்ஷமும் உண்டு. திருவள்ளுவர் எங்கள் குலத்தில் வளர்ந்தார்.”

இங்ஙனம் அவன் பேசிக்கொண்டு போகையில் சக்ரவர்த்தி சேஷய்யங்கார் அவனை நோக்கி, “உனக்கு வயதென்ன?” என்று கேட்டார். 

“நீங்களே சொல்லுங்கள். எனக்கு வயதெவ்வளவிருக்கலாம்?” என்று கிழச் சாம்பான் திருப்பிக் கேட்டான்.

“அறுபதிருக்கும்?” என்றார் அய்யங்கார்.

“என்னைப் பார்த்தவர்களெல்லாம் ஐம்பத்தறுபது வயதென்றுதான் மதிக்கிறார்கள். ஆனால் எனக்கு எண்பது பிராயமாய் விட்டது. இந்தப் பாலம் கட்டினபோது எனக்குத் தெரியும். அந்தக் காலத்தில் நான் இருவது வயதுப் பிள்ளை. நானும் இதில் வேலை செய்தேன். நித்தம் மூன்றணாக் கூலி” என்று கிழவன் சொன்னான். 

“இப்போது உனக்கு ஜீவனம் சுகமான நடந்து வருகிறதா?” என்று அய்யங்கார் கேட்டார்.
“சுகந்தான் சாமி. இரண்டு பெண்ணும் ஒரு பிள்ளையும் கடவுள் கொடுத்திருக்கிறார். இரண்டு பெண்ணையும் சரியான இடத்தில் கட்டிக் கொடுத்துவிட்டேன். மகன் பயிர்த்தொழில் செய்கிறான். நான் மாட்டு வண்டி வைத்திருக்கிறேன். கடலோரத்துக்குக் கிடங்குகளிலிருந்து சரக்கேற்றி வந்தால் வியாபாரிகள் கூலி கொடுப்பார்கள். அதில் எனக்குக் கூடியவரை சரியான வரும்படி கிடைத்து வருகிறது. இப்போது சண்டையினால் மணிலாக் கொட்டை ஏற்றுமதி குறைந்திருக்கிறது. அதனால் எனக்கு வரும்படியில்லாமலிருக்கிறது. இருந்தாலும், கடவுள் கிருபையால் போஜனத்துக்குக் கஷ்டமில்லை” என்று கிழச் சாம்பான் சொன்னான்.

“இவ்வளவு படிப்பு நீ எங்கே படித்தாய்?” என்று நான் அந்தக் கிழச் சாம்பானிடம் கேட்டேன். 

அதற்குக் கிழச்சாம்பான் சொல்கிறான்:-

“என்னுடைய பிதாவுக்கு வாத்தியார் வேலை. அவர் தமிழிலே மேலான படிப்புள்ளவர். நானும் திருக்குறள் முதலிய சாஸ்த்திரங்கள் படித்திருக்கிறேன். படிப்பிலே என்ன பயனுண்டு, சாமி? பெரியோர்களுடைய சேர்க்கையால் தெய்வபக்தி ஏற்பட்டது. அதையே ஊன்றுகோலாகக் கொண்டு பிழைத்து வருகிறேன்” என்றான். 

அப்போது சேஷய்யங்கார் அவனை நோக்கி:-

“இந்த தேசத்து ஜாதிக்கட்டு அநியாயமென்று உனக்குத் தோன்றவில்லையா? தெருவுக்குள் உங்களவர் வரக்கூடாதென்று மற்ற ஜாதிக்காரர் ஏற்பாடு செய்திருப்பது பற்றி உனக்கு வருத்தமுண்டாகவில்லையா? உன் மனம் அதை நினைத்து நினைத்துக் கொதிக்கவில்லையா?” என்று கேட்டார். 

அதற்குச் கிழச் சாம்பான்:-

“இல்லை, சாமீ; என் மனம் அதிலே கொதிப்படையவில்லை. மனிதருடைய இஷ்டப்படி இந்த உலகம் நடப்பதாக மூடர் நினைக்கிறார்கள். நீங்கள் சொல்லிய அநியாயம் என் கண்ணுக்குத் தெரியத் தான் செய்கிறது. அதிலே வருத்தமில்லை. விதிப்படி எல்லாம் நடக்கிறது. அநியாயம் உலகம் முழுதையும் சூழ்ந்திருக்கிறது. சீக்கிரம் அழிந்து போய்விடும். உலகத்தில் அநியாயம் குறைவுபடும்போது எங்கள் ஜாதிக்கும் நியாயம் கிடைக்கும். அதைப் பற்றி எனக்குக் கொஞ்சமேனும் பயமில்லை. எந்த அநியாயமும் உலகத்தில் நீடித்து நிற்காது, ராவணாதிகள் இப்போதிருக்கிறார்களா? அவர்கள் காலத்தில் என்ன அநியாயம் நடந்தது! பிராணர்களுடைய யாகத்தை அழிக்கவில்லையா? மனிதர்களைப் பிடித்துப் பிடித்துத் தின்னவில்லையா?....
கேட்டீர்களா? சாமிமாரே? என் தகப்பனார் இறந்துபோ இப்போது நாற்பது வருஷமாகிறது. அவர் தொண்ணூற்றிரண்டு வயதிருந்தார். சாகும் வரையில் பேச்சு வார்த்தை தள்ளாடவில்லை. உறுதியாகவே யிருந்தார். அவர் செத்துப் போவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னே ஒரு நாள் பாதி ராத்திரியில் என்னை எழுப்பிப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பல செய்திகள் சொன்னார். அதில் ஒரு வார்த்தை இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது. கேட்டீர்களா, சாமிமாரே? என் தகப்பனார் சொன்னார்: ‘அடே, லக்ஷ்மணா, நான் எப்போது செத்துப் போவேனோ தெரியாது. ஆனால் என்னுடைய குரு எனக்குச் சொல்லி வைத்த ஆச்சரியமொன்றை உனக்குச் சொல்லிவிட்டுப் போகிறேன். கலியுகம் ஐயாயிரம் வருஷத்துக்குப் பிறகு ஒரு புதுயுகம் பிறக்கும். அதுதான் கலியுகத்துக்குள்ளே கிருதயுகம். அப்போது இந்த உலகமே மாறும். அநியாயங்களெல்லாம் நொறுங்கித் தவிடுபொடியாகி விடும். நாலு குலம் மறுபடியேற்படும். அந்த நாலு குலத்தாரும் வெவ்வேறு தொழில் செய்து பிழைத்தாலும், ஒருவர்க்கொருவர் அநியாயம் செய்யமாட்டார்கள். துரோகம் செய்யமாட்டார்கள். அன்பே தெய்வமென்று தெரிந்து கொள்ளுவார்கள். அன்பிருந்தால் குழந்தையும் தாயும் ஸமானம்; ஏழையும் செல்வரும் ஸமானம்; படித்தவனும் படியாதவனும் ஸமானம்; அன்பிருந்தால் மனிதனும் தெய்வமும் ஸமானம்; அன்பு பூமியிலே மேலோங்கி நிற்கும். அப்போது மாதம் மூன்று மழை நேரே பெய்யும். பஞ்சம் என்ற வார்த்தையே இராது. தெற்கு தேசத்தில் பிராமண குலத்தில் கபில முனிவரும் அகப் பேய்ச் சித்தரும் திரும்பி அவதாரம் செய்வார்கள். அவர்கள் ஊரூராகப் போய் ஜனங்களுக்கு தர்மத்தைச் சொல்லி ஜாதி வழக்கை யெல்லாம் தீர்த்து வைப்பார்கள். அப்போது தர்மம் நிலைபெற்று நிற்கும். நீ இருக்கும்போதே இந்தப் புதியயுகம் ஆரம்பமாய்விடும். உன் கண்ணாலே பார்ப்பாய்’ என்று என் தகப்பனார் சொன்னார்.”

இங்ஙனம் அந்தக் கிழச் சாம்பான் சொல்லி முடித்தான். பிறகு நேரமாய் விட்டபடியால் சபையைக் கலைத்து விடலாமென்று நான் சொன்னேன். சேஷய்யங்கார் அந்தக் கிழச் சாம்பானைப் பல வார்த்தைகள் சொல்லிப் புகழ்ந்தார். பிறகு அவ்விருவரும் தனியாகப் போய் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பால் சேஷய்யங்கார் செம்படவன் கையில் இன்னும் கால் ரூபாய் கொடுத்து, “என்னால் உனக்கு நஷ்டமேற்பட்டதற்குச் சரியாய்ப் போய்விட்டது” என்றார். கிழச் சாம்பானும் விடை பெற்றுக் கொண்டு போனான். நானும் சேஷய்யங்காரும் திரும்பி வீட்டுக்கு வருகையிலே அவர் என்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. ஏதோ தன் மனதுக்குள் தீர்க்கமான யோசனை செய்து கொண்டு வந்தார். இடையிடையே அவர் முணுமுணுவென்று சொல்லிய வார்த்தைகளில் இரண்டொன்று என் காதில் பட்டது. 

“ஹிந்து தேசமே! உன்னுடைய மஹிமையை நான் என்னென்று புகழ்வேன்?” என்றார். 

குறிப்பு:- இக்கட்டுரையின் இரண்டாம் பாகம் 17-4-1917ல் வெளியானது.

No comments:

Post a Comment