Thursday, October 25, 2012

காட்டுக் கோயிலின் கதை

விவேக சாஸ்திரி தமது மக்களை நோக்கிச் சொல்லுகிறார்:-

முன்னொரு காலத்தில் பொன்னங்காடு என்ற பெருங்காட்டில் வீரவர்மன் என்றொரு சிங்கம் அரசு செலுத்திக் கொண்டு வருகையில், அதனிடத்துக்கு விகாரன் என்ற புறத்து நரியொன்று வந்து வணக்கம் செய்தது. "நீ யார்? உனக்கென்ன வேண்டும்?" என்று வீரவர்மன் கேட்டது.

அப்போது நரி சொல்லுகிறது:- "என் பெயர் விகாரன். வடக்கே நெடுந்தூரத்திலுள்ள பேய்க்காடு என்ற வனத்தில் அரசு செலுத்தும் தண்டிராஜன் என்ற சிங்கத்திடம் என் பிதா மந்திரியாக இருந்தார். அவர் காலஞ் சென்ற பிறகு, அந்த ஸ்தானத்தில் என்னை வைக்காமல், அவ்வரசன் தனது குணத்துக்கிணங்கியபடி கண்டகன் என்ற பெயர் கொண்ட கிழ ஓநாயை மந்திரியாகச் செய்து என்னைப் புறக்கணித்து விட்டான். 'மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்' என்று வசனமிருப்பதால் நான் அந்த ராஜ்யத்தை விட்டுப் பல தேசங்களில் ஸஞ்சாரம் செய்து வருகையிலே, ஸந்நிதானத்தின் வீரச் செயல்களையும் தர்மகுணங்களையும் கேள்விப்பட்டு, 'ஆஹா! வேலை செய்தால் இப்படிப்பட்ட சிங்கத்தினிடமன்றோ செய்யவேண்டும், என்ற ஆவல் கொண்டவனாய், ஸந்நிதானத்தைத் தரிசனம் செய்து நம்முடைய பிறப்பைப் பயனுடையதாகச் செய்து கொள்ளவேண்டுமென்ற நோக்கத்துடன் இங்கு வந்தேன். தம்மைக் கண்ட மாத்திரத்தில் எனது கலி நீங்கிவிட்டது" என்று சொல்லிற்று.

இதைக் கேட்டுச் சிங்கம் புன்னகை கொண்டு, சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு, "சரி, நீ நம்முடைய அரண்மனையில் சேவகம் செய்து கொண்டிரு" என்றாக்கினை செய்தது. மறுநாட் காலையில் வீரவர்மனிடம் அதன் கிழ மந்திரியாகிய தந்திரசேனன் என்ற நரி வந்து சொல்லலாயிற்று:-

"அரசனே, நேற்றுத் தம்மிடம் விகாரன் என்ற பேய்க்காட்டு நரி வந்து பேசியதாகவும் அவனைத் தாம் அரண்மனை வேலையில் நியமித்துக்கொண்டதாகவும் கேள்விப்பட்டேன். என்னிடம் ஆலோசனை செய்யாமல் தாம் இந்தக் காரியம் செய்தது பற்றி நான் வருத்தப்படுகிறேன். ராஜ்ய நீதியில் சிறந்த ஞானமுடைய தாம் புறத்து நரியை, தன்னரசன் காரியத்தை நடத்தத் திறமையில்லாமலோ துரோகத்தாலோ வெளிப்பட்டு வந்திருக்கும் நரியை முன் சரித்திரந் தெரியாத நரியை, இத்தனை அவசரப்பட்டு நம்பின செய்கையை நினைக்கும்போது, எனக்கு ஆச்சரியமுண்டாகிறது" என்றது.

இதைக் கேட்ட வீரவர்மன் நகைத்து 'நீர் சாஸ்திரத்தை நம்பிச் சொல்லுகிறீர். நான் தெய்வத்தை நம்பிச் செய்தேன்' என்றது. அப்போது தந்திரசேனன் என்கிற கிழ நரி சொல்லுகிறது:- "எவன் சாஸ்திரத்தை நம்புகிறானோ' அவனே தெய்வத்தை நம்புகிறான். உலகத்தின் அனுபவமே தெய்வத்தின் வாக்கு. அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது சரியான சாஸ்திரம். நான் லோகானுபவத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்லுகிறேன். இது தெய்வத்தால் ஏற்பட்டதேயன்றி வேறில்லை. ஆதலால் நான் சாஸ்திரத்தை நம்புவதாகவும், தாம் தெய்வத்தை நம்புவதாகவும், பேதப்படுத்திச் சொல்வதின் பொருள் எனக்கு விளங்கவில்லை" என்றது. சிங்கம் மறுமொழியே சொல்லவில்லை. சிறிது நேரம் சும்மா காத்திருந்துவிட்டு, "மௌனம் ஸர்வார்த்த ஸாதகம்" என்றெண்ணிக் கிழ நரி விடை பெற்றுச் சென்றது. அப்போது சிங்கம் விகாரன் என்ற பேய்க்காட்டு நரியைத் தன் முன்னே அழைப்பித்துப் பின்வருமாறு கேட்டது:-

"விகாரா, தண்டிராஜன் உனது பிதாவின் ஸ்தானத்தில் உன்னை நியமிக்காமல், கண்டகனை நியமித்த காரணமென்ன? உன்னிடமிருந்த பிழையென்ன?"

நரி சொல்லுகிறது:- "என் பிரானே, நான் யாதொரு குற்றமும் செய்யவில்லை. ஒரு வேளை என் வயதுக் குறையை எண்ணிச் செய்திருக்கலாம். மந்திரித் தொழிலுக்குக் கிழவனே தகுதியென்று மதியில்லாத ராஜாக்கள் நினைக்கிறார்கள். மேலும்,

"நற்றா மரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போற்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர், முதுகாட்டிற்
காக்கை யுகக்கும் பிணம்" என்றது.

அப்போது சிங்கம் "உங்களுடைய தண்டிராஜனுக்கும் எனக்கும் பகையென்பதை நீ அறிவாயா?" என்று கேட்டது.

"அறிவேன்" என்று நரி சொல்லிற்று.

"தன்னரசனைக் கைவிட்டுப் பகையரசனைச் சார்ந்து வாழவிரும்பும் மந்திரிக்குப் பெயர் தெரியுமா?" என்று வீரவர்மன் கேட்டது. "அவன் பெயர் துரோகி" என்று விகாரன் சொல்லிற்று. சிங்கம் நகைத்தது. "உன்னுடைய குலதெய்வத்தின் பெயரென்ன?" என்று சிங்கம் கேட்டது.

"காட்டுக் கோயில் மாகாளி" என்று நரி சொல்லிற்று. சிங்கத்தின் உடம்பில் நடுக்கமுண்டாயிற்று. உடனே 'ஹா' என்று கத்திச் சிங்கம் தனது கையை உயர்த்திக்கொண்டு சொல்லுகிறது:

"மூட நரியே! எது நேர்ந்தாலும் உன்னைக் கொல்லக் கூடாதென்று நேற்றே என் மனதில் தீர்மானம் செய்து கொண்டபடியால், இப்போது உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். என்னிடம் நீ பொய் சொல்லுகிறாயா? சொல் உண்மையை. உனது குல தெய்வத்தின் பெயரென்ன?" என்று உறுமிக் கேட்டது. விகாரனென்ற நரி நடுங்கிப் போய்ப் பின்வருமாறு சொல்லலாயிற்று.

நரி சொல்லுகிறது:- "ஐயனே, என்னுடைய பூர்வ குல தெய்வம் அதாவது என்னுடைய முன்னோரும் நேற்று வரை நானும் கும்பிட்டு வந்த தெய்வம் வேறு. அதன் பெயர் பேய் நாகன். அந்த தெய்வமே எங்கள் பேய்காட்டுக் காவல் நடத்தி வருகிறது. பேய்க்காட்டரசனாகிய தண்டிராஜனுக்கும் அவனுடைய குடிகள் எல்லோருக்கும் அதுவே குலதெய்வம். பரம்பரை வழக்கத்தால் எனது பிறப்பு முதல் நேற்று தங்களுடைய சந்நிதானத்தைத் தரிசனம் பண்ணும் வரை நானும் பேய் நாகனையே குலதெய்வமாகக் கொண்டாடினேன். தண்டிராஜனுடன் மனஸ்தாபப்பட்டு வெளியேறின கால முதலாக யாதொரு சரணுமில்லாமல் அலைந்து எனக்கு நேற்று இவ்விடத்து சந்நிதானத்தில் அபயங்கொடுத்தவுடனே, எனக்குச் சந்நிதானமே அரசனும், குருவும், தெய்வமும் ஆகிவிட்டபடியால், இவ்விடத்துக்கு குலதெய்வத்தின் பெயர் காட்டுக் கோயில் மாகாளி என்பதைத் தெரிந்து கொண்டு, அந்த மகா சக்தியையே எனக்கும் குலதெய்வமாக வரித்துக்கொண்டேன்" என்றது.

இதைக்கேட்டு 'வீரவர்மன்' காடு குலுங்கும்படி கோப நகை நகைத்துச் சொல்லுகிறது:-

"இன்னும் பொய் சொல்லுகிறாய். உன்னை மீளவும் க்ஷமிக்கிறேன். நேற்று உன்னைப் பார்த்தவுடனே கொல்ல நினைத்தேன். நீ சரணமென்று காலில் விழுந்தபடியால் துரோகியொருவன் வஞ்சகமாக அடைக்கலம் புகுந்தாலும் அவனைக் கொல்லாமல் விடுவது வீரருக்கு லக்ஷணமென்று நினைத்து உன்னைக் கொல்வதில்லை யென்று மனதில் நிர்ணயம் செய்து கொண்டேன். ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேள். நீ நம்மிடம் உளவு பார்க்க வந்த ஒற்றன். அந்த முழு மூடனாகிய தண்டிராஜன் உன்னை இங்கே அனுப்பியிருக்கிறான். நான் இஷ்டப்படும் வரையில் இனி அவனுடைய முகத்தை நீ பார்க்கப் போவதில்லை. உன்னை நம்முடைய அரண்மனையில் வைத்துக் கொள்ளுவேன். ஆனால் என்னுடைய அனுமதியின்றி நீ பொன்னங் காட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேற முயன்றால் உன்னுடைய நான்கு கால்களையும் வெட்டிவிடச் செய்வேன், தெரிகிறதா?"

விகாரன்:- "ஐயனே, என் விஷயமாக சந்நிதானத்தினிடம் யாரோ பொய்க் கதை சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. பொறாமையினாலே செய்திருக்கிறார்கள். எனக்கும் தண்டிராஜனுக்கும் விரோதமென்பதைத் தாங்கள் பேய்க் காட்டுக்கு ஆளனுப்பி விசாரித்துவிட்டு வரும்படி செய்யலாம். அங்கே யாரிடம் கேட்டாலும் சொல்லுவார்கள். இது பொய் வார்த்தையில்லை. காரணம் நேற்றே தெரிவிக்க வில்லையா? என்னுடைய பிதா வகித்த மந்திரி ஸ்தானத்தை அவன் எனக்குக் கொடுக்காமல் அந்த ஓநாய்க்குக் கொடுத்தான். அதிலிருந்து விரோதம். என்னை ஒன்றும் செய்யவேண்டாம். எனக்குத் தாங்களே குரு, தாங்களே பிதா, தாங்களே தெய்வம். தங்களைத் தவிர எனக்கு இப்போது வேறு கதியில்லை" என்றது.

அதற்கு வீரவர்மன்:- "சரி, இனிமேல் பொய் சொன்னால் அவசியம் கண்ணிரண்டையும் பிடுங்கி விடுவேன் சொல்லு, அந்த தண்டிராஜனிடம் சைனியங்கள் எவ்வளவிருக்கின்றன?"

விகாரன்:- "ராஜாதி ராஜனே, நான் அந்தக் காட்டில் எவ்விதமான அதிகாரமும் வகிக்கப்பெறவில்லை. சைனிய உளவுகள் எனக்கெப்படித் தெரியும்?"

இதைக் கேட்டவுடனே சிங்கம் "யாரடா அங்கே சேவகன்?" என்று கர்ஜனை செய்தது. உடனே ஒரு ஓநாய் ஓடி வந்து பணிந்து நின்றது. அதை நோக்கி வீரவர்மன் "ஸேனாபதியை உடனே அழைத்துவா என்று ஆக்கினை செய்தது. "உத்தரவுப்படி" என்று சொல்லி ஓநாய் வணங்கிச் சென்றது.

பிறகு வீரவர்மன் நரியை நோக்கிச் சொல்லுகிறது:-

"விகாரா, நமது ஸேனாபதியாகிய அக்னிகோபன் இன்னும் ஐந்து நிமிஷங்களுக்குள் இங்கே வந்து விடுவான். அவன் வருமுன்பு நான் கேட்கிற கேள்விகளுக்கு நீ தவறாமல் உண்மை சொல்லக் கடவாய். இதோ என் முகத்தைப் பார்" என்றது.

நரி குடல் நடுங்கிப் போய்ச் சிங்கத்தின் முகத்தைச் சற்றே நிமிர்ந்து பார்த்தது. இன்மேல் இந்தச் சிங்கத்தினிடம் பொய் சொன்னால் உயிர் மிஞ்சாதென்று நரிக்கு நல்ல நிச்சயம் ஏற்பட்டு விட்டது.

பிறகு நரி சொல்லுகிறது:-

"ஸ்வாமி, நான் சொல்லுகிற கணக்குத் தவறினாலும் தவறக் கூடும். எனக்குத் தெரிந்தவரையில் உண்மை சொல்லி விடுகிறேன். எனக்கு எவ்வித தண்டனையும் விதிக்க வேண்டாம். எனக்கு உங்களுடைய பாதமே துணை" - என்றது.

வீரவர்மன்: - "பேய்க்காட்டு சைனியம் எவ்வளவு? உடனே சொல்லு. உண்மை சொல்லு."

விகாரன்: - "புலிப்படை முந்நூறு, கரடி இருநூறு, காண்டா மிருகம் நூறு, ஓநாய் ஆயிரம், ஆனைப் படை ஆயிரம், நரிப்படை நாலாயிரம்."

வீரவர்மன்: - "உளவு பார்த்து வரும் காக்கைகள் எத்தனை?"

விகா: - "இருநூற்றைம்பது."

வீர: - "சுமை தூக்கும் ஒட்டகை எத்தனை? கழுதை எத்தனை?"

விகா: - "ஒட்டகை எண்ணூறு. கழுதை பதினாயிரம்."

வீரா: - "எத்தனை நாள் உணவு சேகரித்து வைத்திருக்கிறான்?"

விகா: - "ஞாபகமில்லை."

வீரா: - "கண் பத்திரம்."

விகா: - சத்தியம் சொல்லுகிறேன்; ஞாபகமில்லை."

இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் ஸேனாபதியாகிய அக்கோபன் என்ற வேங்கைப்புலி வந்து கும்பிட்டு நின்றது.

"வருக" என்றது சிங்கம்.

அப்போது விகாரன் என்ற நரி தன் மனதுக்குள்ளே யோசனை பண்ணிக்கொள்ளுகிறது:

"ஹூம்! இந்தச் சிங்கராஜன் மகா வீரனாகவும், மகா கோபியாகவும் இருந்தாலும் நாம் நினைத்தபடி அத்தனை புத்திசாலியில்லை. நம்மை எதிரியின் ஒற்றனென்று தெரிந்து கொண்ட பிறகும் நம்மை வைத்துக்கொண்டு சேனாபதியிடம் யுத்த விசாரணை செய்யப்போகிறான். ஏதேனும், ஒரு யதிர்ச்சா வசத்தால் இவனுடைய காவலிலிருந்து நாம் தப்பியோடும்படி நேரிட்டால், பிறகு இவனுடைய யுத்த மர்மங்களை நாம் தண்டிராஜனிடம் சொல்லக் கூடுமென்பதை இவன் யோசிக்கவில்லை. இவனுக்குத் தீர்க்காலோசனை போதாது."

இங்ஙனம், நரி பலவாறு சிந்தனை செய்யுமிடையே, வாயிற்காப்பனாகிய ஓநாய் ஓடிவந்து "மகாராஜா, புரோகிதர் வந்திருக்கிறார்" என்றது. "உள்ளே வரச்சொல்லு" என்று வீரவர்மன் கட்டளையிட்டது. அப்பால், அங்கிரன் என்ற பெயர்கொண்டதும், வீரவர்மனுடைய குலத்துக்குப் பரம்பரையாகப் புரோகிதஞ் செய்யும் வமிசத்தில் பிறந்ததும், பெரிய மதி வலிமை கொண்டதுமாகிய கிழப்பருந்து பறந்து வந்து சிங்கத்தின் முன்னே வீற்றிருந்தது. சிங்கம் எழுந்து வணங்கிற்று. சிறிது நேரம் உபசார வார்த்தைகள் சொல்லிக் கொண்ட பிறகு புரோகிதப் பருந்து சிங்கத்தை நோக்கி:-

"அந்த நரிதான் பேய்க்காட்டு விகாரனோ?" என்று கேட்டது. சிங்கம் `ஆம்' என்றது. நரி திருடன் போலே விழித்தது. அப்போது சிங்கம் சொல்லுகிறது:- "ஸ்வாமி, இந்த நரியை நான் நயத்தாலும் பயத்தாலும் எனது பக்கம் சேரும்படி சொல்லிவிட்டேன். இவன் தண்டிராஜனிட மிருந்த அன்பை நீக்கி என்னாளாகி விட்டான். இவனை நான் இப்போது நம்முடைய மந்திரி சபையில் இருக்க இடங்கொடுத்ததினாலேயே நான் இவனிடம் பரிபூர்ண நம்பிக்கை கொண்டிருக்கிறேனென்பதைத் தாங்கள் தெரிந்து கொள்ளலாம். இவனுடைய பழைய நினைப்பை மறந்து இப்போது தண்டிராஜனுடைய உளவுகளை நமக்குத் தெரிவிக்கும் தொழிலில் அமர்ந்திருக்கிறான். அதனாலே தான் நமது சபையில் இவனைச் சேர்க்கும்படியாகிறது" என்றது.

பருந்து புன்னகை செய்தது. ஒன்றும் சொல்லவில்லை. அப்போது சிங்கம் கேட்கிறது:-

"ஸ்வாமி, ஒருவன் எதிர்பார்க்காத காரியத்தில் எதிர் பார்க்காதபடி ஆச்சரியமான வெற்றியடைய வேண்டுமானால் அதற்கு வழியென்ன?" என்றது.

அப்போது அங்கிரன் என்ற புரோகிதப் பருந்து சொல்லுகிறது:-

"அரசனே, மந்திரி சபையில் எதிர்பார்க்காத கேள்வி கேட்டாய். உனக்கு நான் மறுமொழி சொல்ல வேண்டுமானால், அதற்கு நீண்ட கதை சொல்லும்படி நேரிடும். மந்திராலோசனை சபையில் முக்கியமான காரியத்தை விட்டுப் புரோகிதனிடம் கதை கேட்க வேண்டுமென்ற சித்தம் உனக்குண்டானால் நான் சொல்வதில் ஆக்ஷேபமில்லை. நேரம் அதிகப்படும். அதுகொண்டு என்னிடம் கோபம் வரக்கூடாது" என்றது. அப்போது சிங்கம் ஒரு துளி சிரிப்போடு சொல்லுகிறது: - "மந்திர சபை பின்னாலேயே தள்ளி வைத்துக் கொண்டோம். இப்போது கதை நடக்குக" என்றது. உடனே, புரோகிதனாகிய அங்கிரன் என்ற பருந்து சொல்லுகிறது.

1 comment: