Thursday, October 18, 2012

திருவிளக்கு

நிகழும் காளயுக்தி வருஷம் சித்திரை மாதம் 31-ம் தேதி திங்கட்கிழமை யன்று மாலை புதுச்சேரியில் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதி வீட்டில் திருவிளக்கு பூஜை செய்யப்பட்டது. சுமார் ஏழெட்டு ஸ்திரீகள் கூடி விளக்குப் பூஜை முடித்துப் பாட்டுகள் பாடினர். அப்பால் ஸ்ரீ வ.வே. சுப்பிரமணிய அய்யரின் பத்தினியாகிய திருமதி பாக்கியலக்ஷ்மியம்மாள் பின்வரும் உபன்யாஸம் புரிந்தனர்:-

ஊக்கம்

சகோதரிகளே,

பெண் விடுதலை முயற்சிக்கு இந்த ஊர் ஸ்திரீகள் தகுந்த படி உதவி செய்யவில்லையென்று நாம் மனவருத்தப்பட்டு நம்முடைய நோக்கத்தைத் தளரவிடக்கூடாது. நாம் செய்யும் கார்யம் இந்த ஒரூர் ஸ்திரீகளுக்கு மாத்திரமேயன்று; பூமண்டலத்து ஸ்திரீகளுக்காக நாம் பாடுபடுகிறோம்.

உலகமெங்கும் விடுதலை யருவிநீர் காட்டாறு போலே ஓடி அலறிக் கொண்டுவரும் ஸமயத்தில் நீங்கள் நாவு வறண்டு ஏன் தவிக்கிறீர்கள்?

ஸகோதரிகளே, தயங்காதீர்கள், மலைக்காதீர்கள். திரும்பிப் பாராமல் நாம் செய்யவேண்டிய எந்தக் கார்யத்தையும் நிறைவேற்றும் வரை - நம்முடைய லக்ஷ்யத்தை அடையும் வரை - முன் வைத்த காலைப்பின் வைக்காமல் நடந்து செல்லுங்கள். பேடிகளாயிருந்தால் திரும்புங்கள்.

நாம் கொண்ட காரியமோ பெரிது. இதற்குப்பெரிய இடையூறுகள் நிச்சயமாக நேரிடும். ஆனால் நீங்கள் பயப்படக் கூடாது.

'பயமே பாபமாகும்' என்று விவேகாநந்தர் சொல்லியதை மறவாதீர்கள். நந்தனார் விடுதலைக்குப் பட்டசிரமங்களை நினைத்துப் பாருங்கள்.

உங்களில் ஒவ்வொருவருடைய கொள்கைகளை இன்று வாய் விட்டு விஸ்தாரமாகச் சொல்லிவிடுங்கள். மனதிலுள்ள பயம், வெட்கம் என்ற பேய்களை தைர்யவாளால் வெட்டி வீழ்த்திவிட்டு பாரத ஸஹோதரிகள் பாரதமாதாவுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதே என்னுடைய ப்ரார்த்தனை. ஓம் வந்தே மாதரம்.

ஸ்ரீரங்கப் பாப்பா

பிறகு ஸ்ரீமான் மண்டயம் ஸ்ரீநிவாஸாசாரியார் குழந்தை ரங்கா பின் வரும் உபந்யாஸத்தை படித்தது:-

அநாகரீக ஜாதியார்

இந்தியாவில் முன்பு ஆரியர் குடியேறு முன்னே இருந்த பூர்வீக ஜனங்கள் கருநிறமாகவும் சப்பை மூக்காகவும் இருந்தார்கள்; நாகரீகமற்ற பேதை ஜனங்கள். அவர்களுடைய சந்ததியார் இப்போது சில குன்றுகளின் மீதும் சில கனிகளிடையிலும் வஸிக்கின்றனர். இந்த வகுப்பைச் சேர்ந்தஜூலாஸ் குலக் என்ற ஜாதி ஒன்று இப்போது ஒரிஸ்ஸா தேசத்தில் இருக்கிறது. துரைத்தனத்தார் அந்த ஜாதிக்கு இனாமாகத் துணி கொடுத்துக் கட்டிக் கொள்ளும்படி செய்து, துணி கட்டிக் கொள்வோருக்கு வெகுமதி கொடுத்துத் துணிகட்டும் நாகரீகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்திக்கொண்டு வருகிறார்கள். இதுவரை அந்த ஜாதியார் இவைகளை உடைபோல் உடுப்பது வழக்கம். இந்த அநாகரீக ஜாதியிலுள்ள மனுஷ்யர் கூடப் பெண்களை மிருகங்கள் மாதிரியாகவே நடத்துகின்றனர்! ஆதலால், நம்முடைய ஆண் மக்கள் நம்மைக்கீழாக நடத்துவது தங்களுடைய உயர்ந்த அறிவுக்கு லக்ஷணமென்று நினைத்தால் சரியில்லை.  நம்மைக் காட்டிலும் ஆண் மக்கள் சரீர பலத்தில் அதிகம். அதனால் நம்மை இஷ்டப்படி ஸஞ்சரிக்க வொட்டாமலும் பள்ளிக்கூடம் போய்படிக்க வொட்டாமலும் தடுக்க முடிந்தது. இதனால் அவர்கள் நம்மைவிட மேலென்று நினைத்துக்கொள்ளுதல் தவறு.

No comments:

Post a Comment