Monday, October 29, 2012

சந்திரமதி

ராகம்-ஆனந்த பைரவி                                          தாளம்-ஆதி

பச்சைக் குழந்தை யடி! - கண்ணிற்
பாவை யடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது! - என்தன்
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே - நல்ல
நாகமணி யுள்ளதென்பார்;
துச்சப்படு நெஞ்சி லே-நின்தன்
சோதி வளரு தடீ!

பேச்சுக் கிடமே தடி! - நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சர்ய மாயை யடி! - என்தன்
ஆசைக் குமாரி யடி!
நீச்சு நிலை கடந்த - வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல்,
தீச்சுடரை வென்ற வொளி - கொண்ட
தேவி! நினை விழந்தேனடி!

நீலக் கடலினிலே - நின்தன்
நீண்ட குழல் தோன்றுதடி!
கோல மதியினி லே - நின்தன்
குளிர்ந்த முகங் காணுதடி!
ஞால வெளியினி லே - நின்தன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே - நின்தன்
காதல் விளங்குதடி!

No comments:

Post a Comment