Wednesday, October 31, 2012

மணித் திரள்


14 பிப்ரவரி 1921                               ரெளத்திரி மாசி 3

வாளும் எழுதுகோலும்

என்றைக்குமே ராஜ்ய தந்த்ரத்தில் வாளைக் காட்டிலும் எழுதுகோலுக்கே மகிமை அதிகம். அதிலும் ஐரோப்பிய மஹா யுத்தத்தின் பிறகு இக்கொள்கை முன் எப்போதையுங் காட்டிலும் அதிக ஆழமாகவும் உறுதியாகவும் பூமண்டலத்து ராஜ்ய தந்திரிகளின் மனதில் பதிந்து விட்டது. ப்ரான்ஸ் தேசம் ஒன்றில் மாத்திரமே இந்த மஹா யுத்தத்தில் பத்து லக்ஷம் ஜனங்கள் மடிந்திருப்பதையும் இன்னும் பல லக்ஷங்கள் அங்கஹீனராய் விட்ட்டதையும் எடுத்துக்காடி, அப்பால் இங்கிலாந்திற்கும் இதைவிடக் குறையாத நஷ்டமேற்பட்டிருக்கு மென்பதைச் சுட்டிச் சில தினங்களின் முன்பு ஸ்ரீமான் க்ளெ மான்ஸோ என்ற ப்ரெஞ்ச் ராஜதந்திரி (இப்போது இந்தியாவில் யாத்திரை செய்துகொண்டு வருபவர்) இனிமேலேனும் உலகத்தார் யுத்தப் பைத்தியத்தை விட்டுத் தொலைத்தல் அவஸரமென்பதை வற்புறுத்தியது நேயர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

அமீர் அமானுல்லாகான்

1921 ஜனவரி 10-ஆந் தேதி திங்கட்கிழமையன்று காபூல் நகரத்தில் ப்ரிடிஷ் தூதர்களை வரவேற்கும் பொருட்டாக ஒரு பெரிய தர்பார் நடத்தப்பட்டது. அப்போது ஆப்கன் அரசராகிய அமீர் அமானுல்லாகான் செய்த உபந்யாஸத்தினிடையே, காபூலில் நடத்தும் ஆங்கில-ஆப்கன் ஆலோசனை ஸபையில் தம்முடைய முக்ய ப்ரதிநிதியாக ஸர்தார்-இ-ஆலா முஹம்மது கான் தர்ஜியை நியமனம் செய்ததற்குப் பின் வருமாறு காரணம் சொன்னார்:- “ஸர்தார் முஹம்மத் நாதிர்கான் போர்த் தொழிலாளியாதலால் நான் அவரை நியமனம் செய்யவில்லை. ஸர்தார்-இ-ஆலா முஹம்மது கான் தர்ஜி எழுதுகோற் பயிற்சியுடையவராதலால் அவரையே நியமனம் செய்திருக்கிறேன். ஏனென்றால் இந்தக் காலத்தில் வாளைக் காட்டிலும் எழுதுகோலே அதிக அவசியமானது” என்றார். இந்த உண்மையான கொள்கையை ஆப்கன் அமீர் எப்போதும் மறக்காமலிருப்பாரென்று நம்புகிறோம். தேசத்தின் அபிவிருத்திருக்குப் பரோபகார சிந்தையுள்ள மேதாவிகளின் இடையறாத உழைப்பே ஸாதனம். வாள் சிறிது காலத்துக்குக் காப்பாற்றுவதுபோலே நடிக்கும். பிறகு ஸர்வ நாசத்தில் கொண்டே சேர்க்கும். எனவே இந்தியாவுக்கு “வாள் பலம்” அல்லது தற்கால பாஷைப்படி பீரங்கி பலம் இப்போதில்லாமை கருதி, நாம் எப்படி விடுதலை பெறப்போகிறோமென்று எவரும் ஏங்குதல் வேண்டா. தைர்யமும் ஒற்றுமையும் தந்திரமும் சேர்ந்தால் இவற்றுக்கெதிரே கோடி பீரங்கிகள் நிற்பினும் அஃதோர் பொருட்டன்று.

“டைம்ஸ் ஆப் இந்தியாவின் விகடம்”

பம்பாயில் பிரசுரமாகும் “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகையின் பிரதிநிதியொருவருடனே ஸ்ரீ ஆகாகான் செய்த ஸம்பாஷணை அப்பத்திரிகையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஸ்ரீ ஆகாகான் துருக்கி உடம்பாட்டை மாற்றும் விஷயத்தில் இங்கிலாந்து தலைமை வஹித்து நடத்தவேண்டுமென்று சொல்லியிருந்தார். இப்போது ஆகாகானுடைய இஷ்டப்படியே நடந்துவிட்டதாக அப்பத்திரிகை தன் தலையங்கமொன்றில் ஸந்தோஷச் செய்தி தெரிவிக்கிறது! என்ன நடந்தது? ஆங்கிலேயர் முற்பட்டு முண்டு வேலை செய்து “ஸேவர்” உடம்பாட்டின் அநீத நிபந்தனைகளை மாற்றித் துருக்கியை அதன் பழைய பெருமையில் ஸ்தாபித்து விட்டார்களா? அஃதன்று! துருக்கியுடம்பாட்டின் விஷயமாக எதிர்காலத்தில் செய்யவேண்டிய கார்யங்களைக் குறித்து ஆலோசனை செய்யும் பொருட்டு அடுத்த மாஸம் லண்டனில் ஒரு ஸபை நடத்தப்போவதாகத் தீர்மானித்திருக்கிறார்கள். இதைத்தான் அந்தப் பத்திரிகை ஆகாகானுடைய அபீஷ்ட ஸித்தியாகக் காண்பிக்கிறது! ஆனால் லண்டனில் இந்த ஸபை நடத்துவது மிகவும் கெட்ட அடையாளமென்று நான் கருதுகிறேன். ஏனென்றால் ப்ரான்ஸ் மந்திரிகளும் இத்தாலி மந்திரிகளும் இவ்விஷயத்தில் துருக்கிக்கு ஒரு வேளை அனுதாபம் செய்யக்கூடும். மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் முதலிய ஆங்கில மந்திரிகளோ எப்படியாவது கிரேக்கரின் நட்பைப் பாதுகாக்க வேண்டுமென்பதிலும், துருக்கியிடமிருந்து பறிக்கப்பட்ட நாடுகளை அதனிடம் மீட்டும் ஒப்புவிக்கக்கூடா தென்பதிலும் ஒரே உறுதியாக நிற்கிறார்கள்.

கிறிஸ்தவ நாகரிகத்துக்கு காவலாளி

வேல்ஸ் தேசத்து லிபரல் மஹா ஸங்கத்தின் நிர்வாக உத்யோகஸ்தருடன் சில தினங்களுக்கு முன்பு மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் ஒரு ரஹஸ்ய ஸம்பாஷணை நடத்தினார். எனினும் இந்தக் கூட்டத்தில் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் பேசிய விஷயம் பின்னிட்டு இங்கிலாந்தில் ப்ரசுரமாய், ராய்ட்டர் தந்தி மூலமாக நமக்கெட்டி யிருக்கிறது. அதிலே கூட மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் ஜெர்மனி கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டுத்தொகையை விட்டுக் கொடுப்பதும் கிறிஸ்தவ ஜனங்களை மீட்டும் துருக்கியின் ராஜாங்க நுகத்தடியின் கீழே கொணர்வதும் “லிபரல்” கக்ஷியின் நோக்கத்துக்கு விரோதமென்று வற்புறுத்திக் காட்டியிருக்கிறார். இதுபோலவே, துருக்கியிடமிருந்து பறிக்கப்பட்ட பூமிகளை அதன்பால் மீட்டும் விடுவதினின்றும் கிறிஸ்தவ நாகரிகத்துக்கு ஹானி வருமென்ற தமது கொள்கையை ஆங்கிலத் தலைமை மந்திரி இதுவரை எத்தனையோ முறை சொல்லியிருக்கிறார். எனவே, லண்டனில் இப்படிப்பட்ட மந்திரிகளின் ஆதிக்கத்தின் கீழே நடத்தப் போகிற கூட்டத்தில் துருக்கிக்கு எள்ளளவேனும் நியாயம் கிடைக்காது. கிரேக்க தேசத்துக்குப் பிடுக்கிங்க் கொடுத்த பிரதேசங்களில் கிறிஸ்தவர்கள் வாஸம் புரிவதால் அவற்றைத் துருக்கிக்கு மீட்டும் ஒப்புவிப்பது சரியில்லையென்று சொல்லும் ஆங்கிலேய முதல் மந்திரி மெஸபொடோமியாவில் கிறிஸ்தவ ஜனத்தொகையில்லை யென்றுணர்ந்தும் அதையேன் துருக்கியிடம் கொடுத்துவிடக்கூடாது? அந்த மெஸபோடோமியாவை இங்கிலாந்து கிறிஸ்தவ நாகரிகத்தால் மஹிமைப்படுத்த எண்ணங்கொண்டுவிட்டது. ஆதலால் அதையும் விடக்கூடவில்லை; என்ன செய்யலாம்?

மயிலே, மயிலே

“மயிலே, மயிலே, இறகு போடு” என்றால் போடாது. வற்புறுத்தி இறகைப் பிடுங்கவேண்டும். வெறும் வாய்ப் பேச்சால் இங்கிலாந்தினிடமிருந்து நீதி பெறுதல் ஸாத்யமில்லை. இந்தியாவிலும், மற்ற முஸ்லிம் தேசங்களிலும் பலமான கிளர்ச்சி நடத்தினாலன்றி, “ஸேவர்” உடம்பாடு நியாயப்படி மாற்றப்படுதல் ஸாத்யமில்லை. “கிளர்ச்சி செய்யுங்கள்!” “கிளர்ச்சி செய்யுங்கள்!” “கிளர்ச்சி செய்யுங்கள்!” என்று முக்காலும் கூறி, ஸ்ரீமான் தாதாபாய் நவுரோஜி கல்கத்தா காங்கிரஸ் ஸபையில் செய்த உபதேசத்தையே இன்று நான் முஸ்லிம் உலக முழுமைக்கும் செய்கிறேன். ஆசியா வாஸிகள் அனைவருக்கும் செய்கிறேன்.

அடக்கு முறைகள்

1921 பெப்ருவரி 10-ஆந் தேதியன்று ஸ்ரீ காசியில் தேசீய ஸர்வ கலாசாலையொன்று மஹாத்மா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது. அந்த விசேஷம் நடக்கும்போது பிரமாண்டமான ஜனத்திரள் கூடியிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த ஜக்யமாகாணத்து விவசாயிகளின் தலைவராகிய பாபா ராம் சந்தர் என்ற ஸந்யாஸியைத் துப்பாக்கியில் மருந்தேற்றிக் கொண்டு போலீஸார் பெருங்கூட்டமாக வந்து கைது செய்ததாகத் தெரிகிறது. கூட்டத்தார் மனக் கொதிப்பினால் கலகம் செய்வார்களென்றும், அதை முகாந்திரமாகக் காட்டித் தாங்கள் ஏராளமாக ஜனங்களைச் சுட்டுத் தள்ளுவதுமன்றி, மஹாத்மா காந்திக்கும் ஏதேனும் ஆபத்துண்டாக்கலாமென்றும் போலீஸார் எதிர்பார்த்தனர் போலும். ஆனால் அந்த அவமானத்தை ஜனங்கள் ஸமாதானமாகப் பொறுத்திருக்கும்படி தலைவர்கள் சொல்லியது கேட்டு ஜனங்கள் சும்மா இருந்துவிட்டனர். எனவே, போலீஸார் பாபா ஒருவரை மாத்திரங்கொண்டு மீண்டேகினர். தேசீய ஸர்வ கலாசாலையின் ஆரம்ப விசேஷங்கள் நடத்தும் இடத்திலே தானா பாபாவைப் பிடிக்கவேண்டும்? தனியாக அவர் வீட்டிலிருக்கும்போது பிடிக்கக் கூடாதா? கூட்டத்தார் அவசரப்பட்டு மனம் பதறி ஏதேனும் செய்திருந்தால் என்னென்ன ஆபத்துக்கள் விளைந்திருக்குமோ யார் அறிவார்? இங்ஙனம் முற்றிலும் விரும்பத்தகாத விரஸமான வழிகளீல் ராஜாங்கத்தார் அடக்கு முறைகளை அனுஸரிப்பதினின்றும் அவர்களுக்கு ஏற்கெனவே தேசத்திலுள்ள மதிப்புக் குறை இன்னும் மிகுதியுறு மென்பதை அவர்கள் அறியாதது பற்றி வருத்தமடைகிறோம். மேலும் போலீஸார் இப்படி அநாகரிகமாக வேலை செய்த போது கூட மனக்கொதிப்புக்கிடங்க் கொடுக்காமல் தலைவர்களின் சொற்படி கேட்டு ஜனக்கூட்டத்தார் அடங்கியிருந்தது நமக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. பொறுத்தார் ரன்றோ பூமியாள்வார்?

No comments:

Post a Comment