Tuesday, October 2, 2012

விடுதலை (சந்திரிகையின் கதை)

ஒருகால் விடுதலை யுற்றான்
எப்போதும் விடுதலை யுற்றான்"


மறுநாட் பொழுது விடிந்தது. சோமநாதய்யர் வீட்டில் சிராத்தம், அவருடைய பிதாவுக்கு. முத்தம்மா தூரங்குளித்து வீட்டு வேலைக்கு மீண்டுவிட்டாள். முத்துசுப்பா தீட்சிதரும், குப்புசாமி தீட்சிதரும் பிராமணார்த்த பிராமணராக அழைக்கப்பட்டிருந்தனர். அவ்விருவருள்ளே முத்துசுப்பா தீட்சிதரே புரோகிதர். இவ்விருவரும் காலையில் பத்து மணிக்கே வந்துவிட்டார்கள். ஆனால் பகல் இரண்டு மணி வரை சோமநாதய்யர் மெத்தையைவிட்டுக் கீழே இறங்க முடியவில்லை. அவருக்குப் பலமான தலை நோவு.

இதனிடையே தீட்சிதரிருவரும் சும்மா பதுமைகள்போல் உட்கார்ந்திருக்க மனமில்லாமல் வேதாந்த விசாரணையில் புகுந்தனர்.

முதுசுப்பா தீட்சிதர் சொன்னார்:- "ஜீவன் முக்தி இகலோகத்தில், அதாவது, இந்த சரீரத்தில் சாத்தியம்" என்றார்.

"ஆனால் இந்த சரீரத்தில் ஏற்படும் முக்தி எப்போதைக்கும் சாசுவதமாக நிற்பது நிச்சயமில்லை" என்று குப்புசாமி தீட்சிதர் சொன்னார்.

"உமக்கு விடுதலை என்றால் இன்னதென்ற விஷயமே புலப்படவில்லை யென்று தெளிவுபட விளங்குகிறது. விடுதலை யென்பது ஒருகாற் பெறப்படுமானால் மறுபடி தளையென்பதே கிடையாது. முக்திக்குப் பிறகு பந்தமில்லை. சர்வபந்த நிவாரணமே முக்தி. அந்த சர்வபந்த நிவாரணமாவது சர்வதுக்க நிவாரணம், சர்வ துக்கங்களையும் ஒரே யடியாகத் தொலைத்து விடுதல். அந்த நிலைமை பெற்ற பிறகும் ஒருவன் மறுபடி பந்தத்துக்குக் கட்டுப்பட இடமுண்டாகுமென்று சொல்லுதல் பொருந்தாது" என்று முத்துசுப்பா தீட்சிதர் சொன்னார்.

"சுவர்க்க லோகத்திற்குப் போன பிறகும் அங்கிருந்து வீழ்ச்சியேற்படுவதாக நம்முடைய சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே. அதன் தாத்பர்யமென்ன?" என்று குப்புசாமி தீட்சிதர் கேட்டார்.

"அந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. ஜீவன் முக்திக்கு நான் சொன்னது தான் சரியான அர்த்தம். அதை எந்த சாஸ்திரத்திலும் பார்த்துக்கொள்ளலாம்" என்று முத்துசுப்பா தீட்சிதர் சொன்னார்.

இவர்கள் இந்த விஷயத்தைக் குறித்து நெடுநேரம் வார்த்தையாடிக் கொண்டிருந்தார்கள்.

கடைசியாக சோமநாதய்யர் மாடியை விட்டுக் கீழேயிறங்கி வந்தார். அவர், "இந்த தர்க்கத்தின் விஷயமென்ன?" என்று கேட்டார்.

"ஒருமுறை ஜீவன் முக்தி பெற்றால் அது எப்போதைக்கும் சாசுவதம்தானா? மீட்டும் பந்தப் ப்ராப்தி ஏற்படுமா? என்ற விஷயத்தைக் குறித்து விசாரணை செய்கிறோம்" என்று குப்புசாமி தீட்சிதர் சொன்னார்.

"இந்த விஷயத்தில் தங்களுடைய அபிப்ராய மெப்படி?" என்று சோமநாதய்யரை நோக்கி முத்துசுப்பா தீட்சிதர் கேட்டார்.

"எனக்கு வேதாந்த விவகாரங்களில் பழக்கம் போதாது" என்று சோமநாதய்யர் சொன்னார்.

திடீரென்று விசாலாக்ஷி அவர்களுக்கு முன்னே தோன்றி, "ஜீவன் முக்தி இவ் வுலகில் சாத்திய மென்பதே பொய்.

நீங்கள் அதை யடைந்திருக்கிறீர்களோ? அடைந்தோர் யாரையேனும் பார்த்திருக்கிறீர்களோ?" என்று கேட்டாள்.

"சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இருந்தார்; அவர் பெரிய ஜீவன் முக்தர்" என்று சோமநாதய்யர் சொன்னார்.

அன்று சாயங்காலம் முத்தம்மாளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு விசாலாக்ஷி சந்திரிகையுடன் மயிலாப்பூரிலிருந்து புறப்பட்டுப் பட்டணம் தங்கசாலைத் தெருவிலிருந்த மற்றொரு பந்துவின் வீட்டில் போய் இறங்கினாள். இந்த பந்து யாரெனில் விசாலாக்ஷியின் பெரிய தாயார் மகள். அந்த அம்மாள் பெயர் பிச்சு. அவளுடைய புருஷனாகிய சங்கரய்யர் தங்கசாலைத் தெருவில் மிகவும் கீர்த்தியுடன் மிட்டாய்க்கடை வைத்துக் கொண்டிருந்தார். அதில் அவருக்குக் கன லாபம்; அவர் கையில் தங்கக் காப்பு; வயிர மோதிரங்கள்; கழுத்தில் பொற்சரளி.

அவருக்கு வயது முப்பதுக்கு மேலிராது. மிகவும் அழகான புருஷன். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவர் வீட்டுக்கு நம்முடைய விசாலாக்ஷி போய்ச் சேர்ந்தாள்.

அங்கு இவள் போன தினத்துக்கு மறுநாள் காசியிலிருந்து ஒரு பால சந்நியாஸி வந்திருந்தார். இவர் ஜாதியில் தென்தேசத்துப் பிராமணர். ஆனால் பார்வைக்கு வடதேசத்தார்களைப் போலவே சிவப்பாகவும் புஷ்டியாகவும் உயரமாகவும் ஆஜாநுபாகுவாகவும் இருப்பார். மிகவும் அழகிய வடிவமுடையவர்.

இவருக்கு நாலைந்து பாஷைகள் நன்றாகத் தெரியும். இவர் சங்கீதத்தில் அபார வித்வான். இவர் தம்மை ஜீவன்முக்தி அடைந்து விட்டதாகச் சொல்லிக் கொண்டார். எனினும், சதா இவருடைய முகத்தில் கவலைக் குறிகள் இருந்து கொண்டே யிருந்தன. மகா மேதாவி. உலகத்து சாதாரண மூட பக்திகளை யெல்லாம் போக்கிவிட்டார்; ஆனால் தீய விதியின் வசத்தால் தமக்குத்தாமே மானஸீகமான பல புதிய மூட பக்திகளும் பொய்ப் பிசாசுகளும் உற்பத்தி செய்து கொண்டு ஓயாமல் அவற்றுடன் போராடிக் கொண்டிருந்தார்.

அதாவது, அவர் இன்னும் ஜீவன்முக்தி அடைந்துவிடவில்லை. அடைய வேண்டிய மார்க்கத்திலிருந்தார். எனிலும், தாம் முக்தி அடைந்து விட்டதாகவே அவர் பிறரிடம் சொல்லியது மட்டுமின்றித் தம்முடைய மனதுக்குள்ளும் அவ்வாறே நிச்சயப்படுத்திக் கொண்டு விட்டார்.
திடீரென்று விசாலாக்ஷி அவர்களுக்கு முன்னே தோன்றி, "ஜீவன் முக்தி இவ் வுலகில் சாத்திய மென்பதே பொய்.

விசாலாக்ஷி தம் வீட்டுக்கு வந்த தினத்திற்கு மூன்று நாட்களின் பின்பு ஒருநாள் மாலையில், நிலவு தோன்றும் பருவத்தில் மிட்டாய்க்கடை சங்கரய்யர் தமது வீட்டு மேடையில் அழகிய நிலா முற்றத்தில் நான்கு நாற்காலிகள் போட்டு நடுவே மேஜையின் மீது பக்ஷணங்கள், தேநீர், வெற்றிலை, பாக்கு, பூக்கொத்துக்கள் முதலியன தயார் செய்து வைத்தார்.

சங்கரய்யரும், காசியிலிருந்து வந்திருக்கும் பால சந்நியாஸியும், சங்கரய்யருடைய மனைவி பிச்சுவும், விசாலாட்சியும், நால்வரும் அந்த நான்கு நாற்காலிகளின் மீதிருந்து கொண்டு சிற்றுண்டி யுண்ணத் தொடங்கினர். குழந்தை சந்திரிகை கீழே படுத்து உறங்கி விட்டாள். இவளுக்குக் காவலாகக் கீழ இடைச்சி, ஒரு வேலைக்காரி படுத்திருந்தாள்.

நேர்த்தியான நிலவிலே மிட்டாய்க்கடை சங்கரய்யர் வீட்டு மேடையில், அந் நால்வரும் பல வகையான இனிய பண்டங்களை மெல்ல மெல்ல எடுத்துண்டு கொண்டிருக்கையிலே சங்கரய்யருக்கும் காசியிலிருந்து வந்த சந்நியாஸிக்கும் வேதாந்த விஷயமான சம்பாஷணை தொடங்கிற்று. சங்கரய்யர் வேதாந்த கிறுக்குடையவர். அதனாலேதான், அவர் இந்த சந்நியாஸியைக் கண்டு பிடித்தவுடனே பரம குருவாக பாவித்துத் தம் வீட்டுக் கழைத்து வந்து தம்முடனேயே சில தினங்கள் தங்கியிருக்கும்படி கேட்டுக் கொண்டார். சந்நியாஸியின் பெயர் நித்யானந்தர். அவருக்கு வயது இருபத்தெட்டுக்கு மேலிராது. மகாசுந்தர ரூபி. வடிவெடுத்த மனமதனைப் போன்றவர். அவரைக் கண்ட மாத்திரத்திலேயே நமது விசாலாட்சி அவர் மீது அடங்காத மையல் கொண்டு விட்டாள். சந்நியாஸியும் அங்ஙனமே விசாலாட்சியின் மீது பெரு மையல் பூண்டார். சந்நியாஸி மையல் கொள்ளுதல் பொருந்துமோ என்று நீங்கள் கேட்பீர்களாயின் அது சரியான கேள்வியன்று. மன்மதனுடைய பாணங்கள் யாரைத்தான் வெல்ல மாட்டா?

'காற்றையும் நீரையும் இலையையும் புசித்து வந்த விசுவாமித்திரன் முதலிய மகரிஷிகள் கூட மன்மதனுடைய அம்புகளை எதிர்த்து நிற்க வலிமையற்றோராயினர்' என்று பர்த்ருஹரி சொல்லுகிறார். எட்டயாபுரம் கடிகை முத்துப் புலவர் தம்முடைய நூல்களுளொன்றில் மன்மதனை எல்லாக் கடவுளரிலும் வலிமை கொண்ட பெரிய கடவுளாகக் கூறுகிறார்.

பார்வதியை மறந்து தவம் செய்து கொண்டிருந்த சிவபிரான் மீது மன்மதன் அம்புகள் போட்டபோது, அவர் கோபங் கொண்டு மன்மதனை எரித்தாரேயன்றி, அவன் அம்புகளின் திறமையை விழலாக்கி மறுபடி யோகம் பண்ணத்தொடங்கினாரோ? அன்று; அவர் காமனம்புகளுக்குத் தோற்று ஜகன்மாதவை மணம் புரிந்து கொள்ளத் திருவுளங் கொண்டருளினார். மேலும், மன்மதன் மகா விஷ்ணுவின் குமாரன், பிரமாவுக்குச் சகோதரன். அவனே பிரமா. அவனாலே படைப்புத் தொழில் தோன்றுதல் பிரத்யக்ஷமன்றோ?

நித்யானந்த பால சந்நியாஸி ரிக்வேத முழுதையும் ஸாயண பாஷ்யத்துடன் படித்தவர். உபநிஷத்துக்களில் முக்கியமான தசோப நிஷத்துக்களை சங்கரபாஷ்யத்துடன் கற்றுணர்ந்தவர். மற்றும் எண்ணற்ற அத்வைத நூல்களிலும் விசிஷ்டாத்வைத நூல்களிலும், தர்க்கம் மீமாம்ஸை யோகம் ஸாங்க்யம் முதலிய சாஸ்திரங்களிலும், புராண இதி ஹாஸங்களிலும், காவியங்களிலும், நாடகங்களிலும் அபாரமான பயிற்சியுடைமையால், ஹிந்து மதத்துக்கும் நாகரிகத்துக்கும் தக்க பிரதிநிதியாகக் கருதத் தக்கவர்.

தவிரவும், ஹிந்தி, வங்காளி, மஹாராஷ்டிரம், தெலுங்கு, தமிழ், இங்கிலீஷ் இந்த ஆறு பாஷைகளிலும் மிக உயர்ந்த தேர்ச்சி கொண்டவராய், இவற்றில் எழுதப்பட்ட மிகச் சிறந்த சாஸ்திரங்களையும் காவியங்களையும் நன்கு பயின்று சிறந்த அறிவுத் தெளிவு படைத்தவர். எனவே, இவர் சொல்லும் வேதாந்தம் வெறுமே வாய்ப்பேச்சு மாத்திரமன்று. உள்ளத்தில் பலவித ஆராய்ச்சிகளாலும், உயர்ந்த கேள்விகளாலும், தெளிந்த வாதங்களாலும் நன்றாக அழுந்திக் கிடந்த கொள்கை. இவருக்கு ஜீவன்முக்தி பதம் ஏற்படுவதற்கு ஸ்திரீயில்லாத குறைதான் ஒரு பெருந் தடையாக நின்றது. ஏனெனில், பொருளில்லாவிடினும் கல்வியில்லாவிடினும் ஒருவன் ஜீவன்முக்தி பதமெய்தலாம். ஆனால் காதல் விஷயத்தில் வெற்றி பெறாதவன் முக்தியடைந்து இவ்வுலகில் வாழ்வது மிகவும் சிரமம் என்று தோன்றுகிறது.

பௌத்த மதத்தின் மேம்பாட்டினாலே தான், ஆரம்பத்தில் பெண்ணுடன் கூடிவாழும் வாழ்க்கையை விட்டு முக்தி தேடப் புகும் வழக்கம் இந்நாட்டிலும் உலகத்திலும் ஊர்ஜிதப் பட்டதென்று நினைக்க ஹேது இருக்கிறது. பூர்விக வேதரிஷிகள் எல்லோரும் பத்தினிகளுடன் வாழ்ந்ததாகவே முன்னூல்கள் சொல்லுகின்றன. பௌத்த மதத்திலிருந்து தான் ஹிந்து மதமும் பிற மதங்களும் ஒரேயடியாக உலகத்தைத் துறந்து விடுவதாகிய நித்ய சந்நியாஸ முறையைக் கைக்கொண்டனவென்று கருதுகிறேன். வேதரிஷிகள் மோக்ஷத்துக்குச் சாதனமாகச் செய்த வேள்விகளிளெல்லாம் அவர்களுடன் மனைவியருமிருத்தல் அவசியமாகக் கருதப்பட்டது. பூர்வ விஷயங்கள் எங்ஙனமாயினும் "இல்லறமல்லது நல்லறமன்று" என்னும் ஒளவை வாக்கியத்தையே நான் பிரமாணமாகக் கொண்டிருக்கிறேன். காதல் தவறான வழிகளில் செல்லும்போதும் உண்மையினின்றும் நழுவும் போதும் மாத்திரமே, அது இவ் வுலகத்தில் பெருந் துன்பங்களுக்கு ஹேதுவாகிறது. உண்மையான காதல் ஜீவன்முக்திக்குப் பெரிய சாதனமாகும். 'உண்மையான காதலின் பாதை மிகவும் கரடுமுரடானது' என்று ஷேக்ஸ்பியர் என்ற ஆங்கிலக் கவியரசர் சொல்கிறார். அந்தக் கரடுமுரடான பாதையிலே ஒருவன் சிறிது தூரம் மனத் தளர்ச்சி யில்லாமலும் பாவ நெறியில் நழுவிச் செல்லாமலும் உண்மையுடன் செல்வானாயின் இன்பத்தை சுத்த நிலையில் காணலாம். இவ்வுலக இன்பங்கள் சாசுவதமில்லையென்றும் க்ஷணத்திலே தோன்றி மறைவன என்றும் சொல்வோர் சித்தத்தில் உறுதியில்லாதவர்கள். இவ் வுலக இன்பங்கள் எண்ணத்தொலையாதன. இவ்வுலகத்தின் காட்சியே முதலாவது பெரும் பேரின்பம். சூரியனும், வெயிலும், பட்சிகளும், இனிய தோற்றமுடைய மிருகங்களும், சோலைகளும், மலைகளும், நதிகளும், காடுகளும், அருவிகளும், ஊற்றுக்களும், வானவேளியும், வானமூடியும், சந்திரனும், நிலவும், நக்ஷத்திரங்களும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத ஆனந்தந் தருவன.

ஏழை மானிடரே! இவையெல்லாம் சாசுவதமல்லவா? க்ஷணந்தோறும் தோன்றி மறையும் இயல்பு கொண்டனவா? தனித் தனி மரங்கள் மறையும். ஆனால் உலகத்தில் காடுகளில்லாமல் போகாது தனிப்பக்ஷிகளும் மிருகங்களும் மறையும். ஆனால் மிருகக் கூட்டமும் பக்ஷி ஜாதியும் எப்போதும் மறையாது. இவற்றின் நிலைமை இங்ஙனமாக, மலை, கடல், வானம், இடைவெளி, சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் இவை எப்போதும் மாறுவனவல்ல. எப்போதோ யுகாந்தரங்களில் இவையும் மாறக் கூடுமென்று சாஸ்திரிகள் ஊகத்தாலே சொல்லுகிறார்கள். ஆனால் அந்த ஊகவாதத்தைப் பற்றி நாம் இப்போது கவனிக்கவேண்டிய அவசியமில்லை. இன்னும் எத்தனையோ கோடி வருஷங்களுக்குப் பிறகு இவை ஒருவேளை அழியக் கூடுமென்று அந்த சாஸ்திரிகள் சொல்லுமிடத்தே நாம் அவற்றை நித்திய வஸ்துக்களாகப் போற்றுதல் தவறாகாது. இது நிற்க.

இன்னும் உலகத்தில் மனிதனுக்கு நெடுங்கால இன்பங்கள் வேறெத்தனையோ இருக்கின்றன. நேராக உண்டு வந்தால், அதாவது பசியறிந்து உண்பதென்ற விரதங் கொண்டால், மனிதருக்கு உணவின்பம் எப்போதும் தெவிட்டாது. நோயின்றி இருந்தால் ஸ்நானத்தின் இன்பம் என்றும் தெவிட்டாது. இன்னும் நட்பு, கல்வி, சங்கீதம் முதலிய கலைகள் எக்காலமும் தெவிட்டாத இன்பங்கள் இவ்வுலகத்தில் மனிதருக்கு எண்ணின்றி நிறைந்து கிடக்கின்றன. இப்படியிருக்க இவ்வுலக இன்பங்கள் க்ஷணத்தில் தோன்றி மறையும் இயல்புடையன என்றும், நீர்மேற் குமிழிகளொத்தன என்றும் சொல்வோர் அறிவில்லாதோர், சோம்பேறிகள், நெஞ்சுறுதி யில்லாதோர்.

இன்பமயமான இவ்வுலகத்தில் காணப்படும் எல்லா இன்பங்களைக் காட்டிலும் காதலின்பமே சாலவுஞ் சிறந்தது. அதில் உண்மையும் உறுதியுங் கொண்டு நின்றால், அது எப்போதும் தவறாததோர் இன்ப ஊற்றாகி மனித வாழ்வை அமர வாழ்வுக்கு நிகராகப் புரிந்து விடும். ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயையே, ஒரு ஸ்திரீ ஒரு மனிதனையே, மாறுதலின்றிக் காதல் செய்து வருதலாகிய வழக்கம் மனிதருக்குள் ஏற்படுமாயின் அவர்கள் காதலின்பம் எத்துணை சிறந்த தென்பதையும் எத்தகைய பயன்கள் தருவதென்பதையும் தாமே எளிதில் உணர்ந்து கொள்ள வல்லோராவர்.

இங்ஙனம் ஆலோசனை புரிந்து நித்யாநந்தர் என்ற பால சந்நியாஸி தாம் விசாலாக்ஷி மீது காதல் கொண்டது தவறில்லை யென்று தீர்மானித்துக் கொண்டார். ஒருநாள் மாலையில் நித்யாநந்தரும் விசாலாக்ஷியும் மிட்டாய்க்கடை சங்கரய்யர் வீட்டு மேடையில் தனியே சந்தித்தார்கள். அவ்விருவருள் நெடுநேரம் சம்பாஷணை நடந்தது. தாம் ஸன்யாஸத்தை விட்டு நீங்கி லௌகிக வாழ்க்கையில் புகுந்து விசாலாக்ஷியை மணம் புரிந்துகொள்ள நிச்சயித்ததற்குள்ள காரணங்களை யெல்லாம் அவர் விசாலாக்ஷியிடம் விரிவாக எடுத்துரைத்தார். அவளும் அக்காரணங்கள் நியாயமானவையே யென்று மிகவும் சுலபமாக அங்கீகாரம் செய்து கொண்டாள். கதையை வளர்த்துப் பிரயோஜன மென்ன? அவ்விருவரும் சந்திரிகை சகிதமாக உடனே புறப்பட்டு எழும்பூரில் வீரேசலிங்கம் பந்துலு இருந்த வீட்டுக்குச் சென்றார்கள். அங்கு போகு முன்னாகவே நித்யாநந்தர் தம்முடைய காவியுடையைக் கழற்றி எறிந்துவிட்டு வெள்ளை வேஷ்டியும், நேர்த்தியான சட்டையும், பஞ்சாபித் தலைப்பாகையும் அணிந்து கொண்டார்.

"இந்த லௌகிக ரூபத்தில் சுவாமிகளைப் பார்த்தால் நேபாளத்து ராஜா மகனைப் போல் இருக்கிறது" என்று சங்கரய்யர் சொன்னார். "இன்னும் என்னை ஸ்வாமிகளென்று சொல்லாதேயுங்கள். சந்நியாசக் கோலத்தையும் தொலைத்தேன்; பழைய நித்யாநந்தனென்ற பெயரைக்கூடத் தொலைத்துவிட்டேன். இனிமேல் எனது பிரிய காந்தையாகிய விசாலாக்ஷியின் பெயருக்கேற்ப விசுவநாத சர்மா என்று பெயர் வைத்துக்கொள்வேன்" என்றார். எனவே, நானும் இக்கதையில் இனிமேல் இவருக்கு நித்யாநந்தர் என்ற பெயரை நீக்கி விசுவநாத சர்மா என்ற பெயரையே வழங்கிவருதல் அவசியமாகிறது.

விசுவநாத சர்மாவை இந்த லௌகிக வேஷத்தில் பார்த்த மாத்திரத்திலே விசாலாக்ஷிக்கு ஏற்கெனவே அவர் மீதேற்பட்டிருந்த கண் தலை தெரியாத காதல் முன்னிலும் ஆயிர மடங்கு அதிகமாய், அவளை வெறி கொண்டவள் போலாக்கிவிட்டது.

இவ்விருவரும் வீரேசலிங்கம் பந்துலு விருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, விசாலாட்சி பந்துலுவிடத்திலும் அவர் மனைவி யிடத்திலும் தன்னை விசுவநாத சர்மா மணம் செய்து கொள்ள இணங்கிய செய்தியையும், அவ்வாறு இணங்கும்படி நேர்ந்த பூர்வ விருத்தாந்தங்களையும் எடுத்து விஸ்தாரமாகச் சொன்னாள். வீரேசலிங்கம் பந்துலுவுக்கு அளவிறந்த மகிழ்ச்சி யுண்டாய்விட்டது. ஏற்கெனவே இவ்விஷயத்தில் அவர் பல இடங்களில் முயற்சி செய்து பார்த்து வெற்றிபெற வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய முயற்சி யில்லாமலே தமது விருப்பம் நிறைவேறிவிட்டமை கண்டு அவருக்கு அத்தனை பூரிப்புண்டாயிற்று.

"எல்லாம் தெய்வச் செயல், நாமொன்று நினைக்க தெய்வமொன்று செய்கிறது" என்று சொல்லி அவர் மனமாரக் கடவுளைப் போற்றித் தொழுதார். பிறகு விசுவநாத சர்மாவையும் விசாலாட்சியையும் பிரம ஸமாஜத்தில் சேர்த்தார். கோபாலய்யங்காருடைய விவாகம் நடந்து இரண்டு வாரத்துக்குள் மறுபடி சென்னை பிரம ஸமாஜ ஆலயத்திலேயே, அந்த ஸமாஜ விதிகளின்படி விசாலாட்சிக்கும் விசுவநாத சர்மாவுக்கும் விவாகம் நடந்தேறிற்று. விவாகம் நடந்த ஒரு வாரத்துக்குள் மிட்டாய்க்கடை சங்கரய்யரின் முயற்சியாலும் வேறு சில நண்பர்களின் முயற்சியாலும் நமது விசுவநாத சர்மாவுக்கு ஒரு உத்தியோகம் ஏற்பட்டது. தங்கசாலைத் தெருவிலே மூன்று, நான்கு குஜராத்தி லக்ஷப் பிரபுக்களின் பிள்ளைகளுக்கு ஹிந்தி, ஸம்ஸ்கிருதம், இங்கிலீஷ் மூன்றும் இராப்பாடம் சொல்லிவைக்க வேண்டியது. இதற்காக அவருக்கு அறுபது ரூபாய் மாதந்தோறும் சம்பளம் கிடைத்தது. சங்கரய்யர் வீட்டுக்குச் சமீபத்தில் இரண்டு மனைகளுக்கப்பால் ஒரு வீடு காலியாக இருந்தது. சிறிய வீடு. கீழே இரண்டு மூன்று அறைகள். உயர்ந்த மாடி. அந்த வீட்டுக்குப்பின் அழகான தோட்டமிருந்தது. அதில் ஒரு சிறிய கூரை பங்களா புதிதாகத் தயார் பண்ணி, அதில் நாற்காலி, மேஜை, புஸ்தகங்கள், பிள்ளைகள் வந்தால் உட்காருவதற்கு நாற்காற் பலகைகள் முதலியன வாங்கி வைப்பதற்குரிய செலவெல்லாம் சங்கரய்யர் செய்தார். அந்த வீட்டில் புதிதாக விவாகமான தம்பதிகளை சங்கரய்யர் குடியேற்றினார். இவருக்கு விசுவநாத சர்மாவிடம் முன்னைக் காட்டிலும் நூறு பங்கு அதிக பக்தி ஏற்பட்டது. சில மாதங்கள் கழிந்த பிறகு, மேற்கூறிய குஜாராத்திப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வரும்படி தவிரவும் விசுவநாத சர்மாவுக்கு வேறு வரும்படி கிடைக்கத் தொடங்கிற்று. ஆரம்பத்தில் அவர் சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலீஷ், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு வியாசங்களும், தலையங்கங்களும் எழுதி சாஸ்திர விஷயங்களைப் போலவே லௌகிக விஷயங்களிலும் பயிற்சியால் உயர்ந்த ஞானமேற்படுத்திக் கொண்டார். எழுதும் திறமையிலோ,

இங்கிலீஷிலும், தமிழிலும் அவருக்குச் சமமான தொழிலாளி இந்த தேசத்திலேயே குறைவென்று கூறலாம். அதனால் பத்திராதிபர்கள் அவரெழுதும் வியாசங்களை மிகவும் ஆவலுடன் ஏற்றுக்கொண்டு தக்க சம்பளம் கொடுக்கத் தொடங்கினார்கள். இங்கு கொஞ்சம் கை தேறியவுடனே, அவர் தக்க மனிதர்களுடைய சிபார்சால் பம்பாய், கல்கத்தா முதலிய வெளி நகரங்களில் பிரசுரமாகும் உள்நாட்டுப் பத்திரிகைகளுக்கும், இங்கிலாந்து, அமெரிக்காவிலுள்ள பத்திரிகைகளுக்கும் விஷயதானம் செய்யும் பதவி பெற்றார். இதிலெல்லாம் அவருக்கு மாசந்தோறும் ஐந்நூறு ரூபாய்க்குக் குறையாத வரும்படி வரத் தொடங்கிற்று. அவர் தீராத உழைப்பாளியாய் விட்டார்.

அவருடைய முகத்தில் முன்னிருந்த கவலைக் குறிகளெல்லாம் நீங்கிப்போய் விட்டன. எப்போதும் அவர் முகத்தில் சந்தோஷமும் திருப்தியும் நிலவலாயின. விசாலாட்சியோ முன்னிருந்த அழகைக் காட்டிலும் முந்நூறு பங்கு அதிக அழகு படைத்து விட்டாள். அவர்கள் வீட்டிற்கு ஒரு பசு வாங்கினார்கள். அந்த பசுவைக் கறக்கவும், குழந்தைக்குப் பொழுதுபோக்கவும், மற்றபடி வீடு வாயில் பெருக்குதல், பாத்திரந் தேய்த்தல் முதலிய தொழில்கள் செய்யவும், விசாலாட்சி மிகவும் புத்தியும் அனுபவமும் உண்மையும் உழைப்புமுடைய வேளாளக் கிழவியொருத்தியை நியமனம் செய்து, அவளுக்கு வீட்டிலேயே போஜனமும் மாசம் எட்டு ரூபாய் சம்பளமும் ஏற்படுத்தினாள். இவர்களுடைய வீட்டுச் செலவெல்லாம் நூறு ரூபாய்க்கு மேலாகாது. எனவே, மாசந்தோறும் நானூறு ரூபாய்க்குக் குறையாமல் விசுவநாத சர்மா ஒரு பெரிய நாணயமுடைய குஜராத்தி வியாபாரியிடம் வட்டிக்குக் கொடுத்துவரத் தொடங்கினார். சிறிது காலத்துக்குப்பின் விசுவநாத சர்மா தமக்குப் பத்திரிகை தொழிலிலேயே ஏராளமான திரவியம் கிடைப்பதினின்றும், பிள்ளைகளுக்குப் பாடங் கற்றுக் கொடுப்பதாகிய சிரமமான தொழிலை விட்டு விட்டார்.

காலையில் எழுந்து கைகால் சுத்தி செய்து கொண்டவுடனே தினந்தோரும் அவர் தங்கசாலைத் தெருவினின்றும் புறப்பட்டுச் சென்னை ஹைகோர்ட்டுக்கு எதிரே கடற்கரையில் வந்து நெடுநேரம் உலாவி விட்டு சுமார் ஒன்பது மணிக்கு வீட்டுக்குத் திரும்புவார். வந்தவுடனே ஸ்நானம் பண்ணிவிட்டு போஜனம் செய்வார். பதினோரு மணி முதல் மாலை மூன்று மணிவரை தமது எழுத்து வேலை நடத்துவார். அப்பால் இடைப்பகல் சிற்றுண்டி யுண்டு.

தேயிலை நீர் குடிப்பார். அப்பால் ஒரு மணி நேரம் படிப்பிலும், மறுநாள் எழுதுவதற்கு வேண்டிய ஆலோசனைகளிலும் செலவிடுவார். அப்பால் தம்முடைய சிறு குதிரை வண்டியில் விசாலாட்சியையும் சந்திரிகையையும் ஏற்றிக்கொண்டு கடலோரத்தில் சவாரிவிடுவார். இரவு ஏழுமணி நேரத்துக்கு வீட்டுக்குத் திரும்புவார்கள். எட்டு மணி நேரமாகும்போது இராத்திரி போஜனம் தொடங்கும். அப்பால் விசாலாட்சியும் சர்மாவும் பேச்சிலும் விளையாட்டிலும் மன்மதக் கேளிகளிலும் பொழுது கழிப்பார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு முன்பு அவர்கள் நித்திரை செய்யப் போவதே கிடையாது. என்ன தான் பேசுவார்களோ, ஏதுதான் பேசுவார்களோ கடவுளுக்குத்தான் தெரியும். ஒவ்வோரிரவும் இவ்விருவரும் பேசுவதும் சிரிப்பதும் பக்கத்து வீடுகளிலிருப்போருக்கெல்லாம் பெரும்பாலும் தூக்கம் வராதபடி செய்யும். ஒருவர் பேச்சு மற்றொருவருக்குத் தேனாய்த் திரட்டுப் பாகாய்க் கேட்கக் கேட்கத் தெவிட்டாமலிருக்கும். சில இரவுகளில் விசாலாட்சி ஹார்மோனியம் சுருதி போட்டுக்கொண்டு பாடுவாள். இவள் பாட்டின் அற்புதத்தில் மயங்கி வெறிகொண்டு விசுவநாத சர்மா தன்னை மறந்து எழுந்து குதிக்கத் தொடங்கிவிடுவார். சில சமயங்களில் இருவரும் கை கோத்துக்கொண்டு நாட்டியம் புரிவார்கள். வேலைக்காரக் கிழவியும் குழந்தையும் ஓரறைக்குள் படுத்துக் கொண்டு தூங்கிப்போய் விடுவார்கள். தோட்டத்திலிருந்த சிங்காரப் பரணில் இந்த தம்பதிகளின் களிகள் நடைபெறும்.

இவ்விருவரும் ஒருவர்க்கொருவர் படைத்த காதல் மானுஷிக மன்று; தெய்விகம். அது கலியுகத்துக் காதலன்று; கிருத யுகத்துக் காதல். ஒரே பெண்ணிடம் மாறாத காதல் செலுத்துவதாகிய ஏகபத்னி விரதத்தில் ஸ்ரீீ ராமபிரான் புகழ் பெற்றவன். ஆனால் அவனும் பத்தினியிடம் சம்சயங்கொண்டு இலங்கையிலே அவளைத் தீப்புகச் செய்தான். பின்பு உலகப் பழிக்கு அஞ்சி, அவளைக் காட்டுக்குத் துரத்தினான். இவ்விதமான களங்கங்கள் கூட இல்லாதபடி நமது விசுவநாதசர்மா சாக்ஷாத் வைகுண்ட நாராயணனே ஸ்ரீதேவியிடம் செலுத்துவதுபோன்ற பரம பிரேமை செலுத்தினார். சிவன் பார்வதி தேவியிடம் செலுத்தும் பக்தி நமது விசுவநாத சர்மாவால் விசாலாக்ஷியிடம் செலுத்தப்பட்டது. அவளும் இப்படிப் பரம ஞானியாகிய கணவன் தன்னிடம் தேவதா விசுவாஸம் செலுத்துவது கண்டு பூரிப்படைந்து, தான் அவரை சாக்ஷாத் பகவானாகவே கருதி மகத்தான பக்தி செலுத்தி வந்தாள். இப்படியிருக்கையிலே விவாகம் நடந்து ஒன்றரை வருஷமாவதற்குள் விசுவநாத சர்மாவுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. அவர் மிகச் சிறந்த ஞானியாயினும் யோகாப்பியாஸத்தால் முக்தி யடைவது சுலபமென்று கருதி மனதைப் பலவகைகளில் இடையறாமல் அடக்கி அடக்கி பலாத்காரஞ் செய்துகொண்டு வந்ததினின்றும், புத்தி கலங்கிவிட்டது. எழுத்து வேலை சரியாக நடத்த முடியவில்லை. வீட்டிலேயே ஒரு நாட்டு வைத்தியர் வந்து பார்த்துச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார். மந்திரவாதிகளை அழைத்துப் பார்க்கலாம் என்று சங்கரய்யர் சொன்னதற்கு விசாலாட்சி அது அவசியமில்லை யென்று சொல்லிவிட்டாள்.

விசாலாக்ஷியின் கதி மிகவும் பரிதாபகரமாயிற்று. திடீரென்று சுவர்க்கலோகத்தில் இந்திரபதவியினின்று தள்ளுண்டு மண்மீது பாம்பாகி விழுந்த நகுஷன் நிலைமையை இவள் ஸ்திதி ஒத்ததாயிற்று.

காதலால் மோக்ஷமே பெறலாமென்று விசுவநாத சர்மா சொல்லியதை இவள் மனம் பூர்த்தியாக நம்பித் தனது அற்புத சௌந்தர்யமும் ஞானத் தெளிவுமுடைய அக்கணவனை ஒருங்கே மன்மதனாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் கருதிப் போற்றி வந்து அவனன்பினால் ஆனந்தபரவச மெய்தியிருந்தாள்.

அவனுக்கு இந்தக் கொடிய நோய் நேர்ந்ததைக் கண்டு துன்பக் கடலில் அமிழ்ந்திப் போய் விட்டாள். இடையிடையே விசுவநாத சர்மாவுக்குப் புத்தி தெளியும் நேரங்களும் வருவதுண்டு. அப்போது, அவர் விசாலாக்ஷியை அழைத்துத் தன் அருகில் இருத்திக் கொண்டு: - "கண்ணே, நீ எதற்கும், எதற்கும், எதற்கும் கவலைப்படாதே. கவலைப்படாதிருத்தலே முக்தி. கவலைப்படாதிருந்தால் இவ்வுலகத்தில் எந்த நோயும் வாராது. எவ்வித ஆபத்தும் நேராது. தவறி எவ்வித நோய், அல்லது எவ்வித ஆபத்து, நேர்ந்தபோதிலும் ஒருவன் அவற்றுக்குக் கவலையுறுவதை விட்டு விடுவானாயின், அவை தாமே விலகிப் போய்விடும். கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம் பயமும், துயரமும், கவலையும் இல்லாதிருந்தால் இவ்வுலகத்தில் எக்காலமும் சாகாமல் வாழலாம். நான் என்னை மீறிச் சில பயங்களில் ஆழ்ந்து விட்டேன். அதனாலேதான் எனக்கு இந்த நோய் வந்திருக்கிறது. இது இன்னும் சிறிது காலத்துக்குள் நீங்கிப் போய்விடும். நமக்கோ பணத்தைப் பற்றிய விசாரமில்லை. நான் மூன்று வருஷம் எழுதாமலும், ஒரு காசுகூட சம்பாதிக்காமலும் இருந்த போதிலும் குஜாராத்தியானிடம் போட்டிருக்கும் பணத்தை வாங்கிச் சம்பிரமமாகச் சாப்பிடலாம். என்னைப்பற்றிய விசாரங்களுக்கும் உன் மனதில் இடங்கொடாதே.

இடுக்கண் வந்துற்றகாலை, எரிகின்ற விளக்குப்போல
நடுக்க மொன்றானுமின்றி நகுக; தாம் நக்க போதவ்
விடுக்கணையரியு மெஃகாம், இருந்தழு தியாவ ருய்ந்தார்?


என்று சீவகசிந்தாமணியில் திருத்தக்க தேவர் பாடியிருக்கிறார்.

அதாவது, 'துன்பம் நேரும்போது நாம் சிறிதேனும் கலங்காமல் அதை நோக்கி நகைக்க வேண்டும். அங்ஙனம் நகைப்போமாயின் நமது நகைப்பே அத்துன்பத்தை வெட்டு தற்குரிய வாளாய்விடும். அவ்வாறின்றி வீணே உட்கார்ந்து துயரப்படுவதனால் மனிதருக்கு உய்வு நேராது (நாசமே எய்தும்)'. இந்த உபதேசத்தை நீ ஒருபோதும் மறக்காதே. என் கண்ணே, என் உயிரே, விசாலாக்ஷி, நீ என்ன நேர்ந்தாலும் மனதைத் தளரவிடாதே. நீ எக்காலமும் எவ்வித நோயுங் கவலையுமின்றி வாழவேண்டு மென்பதே என் முக்கிய விருப்பம். உன் மனம் நோக நான் பார்த்து சகிக்க மாட்டேன்" என்று பலபல சொல்லி மனைவியைச் சமாதானப் படுத்த முயல்வார். ஆனால், இவர் இங்ஙனம் பேசிக்கொண்டிருக்கையிலேயே விசாலாக்ஷியின் கண்களில் ஜலம் தாரை தாரையாகக் கொட்டத் தொடங்கிவிடும். அவள் கோவென்றழுது விம்முவாள். இதைக் கேட்டு விசுவநாத சர்மாவும் ஓலமிட்டழத் தொடங்குவார். இப்படி இவர்களிருவரும் கூடிப் பெருங்குரலிட்டழுது கொண்டிருக்கையில் ஒரு சமயம் வைத்தியர் வந்து விட்டார். இந்தக் கோலத்தைப் பார்த்து வைத்தியர் விசாலாக்ஷியைக் காண்பதினின்று நேரும் துக்கத்தால் சர்மாவின் நோய் மிகுதிப்படு மென்றும், ஆதலால் இனிமேல் விசாலாக்ஷி தன் கணவனை அடிக்கடி தனியாகச் சந்திக்கக் கூடாதென்றும், அப்படியே சந்தித்த போதிலும் சில நிமிஷங்களுக்கு மேலே அவருடன் தங்கியிருக்கக் கூடாதென்றும், எப்போதுமே அவர் தன்னிடம் அதிகமாகப் பேச இடங்கொடுக்கக் கூடாதென்றும் அவளிடம் தெரிவித்தார். அவளும் எவ்விதத்தாலும் தன்னால் தன் கணவனுக்கு அதிகக் கஷ்டம் நேரலாகாதென்ற நோக்கத்துடன், ஆகாரம் போடும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில், சர்மாவை அடிக்கடி பார்க்காமலும், அவருடன் அதிகமாகப் பேசாமலும் ஒதுங்கியே காலங் கழித்து வந்தாள். ஆனால் இதினின்று விசுவநாத சர்மாவின் துயரமும் மனக்கலக்கமும் அதிகப்பட்டனவே யன்றிக் குறைவுபடவில்லை. தம்மை விசாலாக்ஷி புறக்கணிக்கிறாளென்று சர்மா எண்ணவில்லை.

அவர் அப்படி எண்ணக் கூடியவருமல்லர். ஆனால் தனது தேக நிலையைக் கருதி அவள் மிகவும் மனத்தளர்ச்சியும் துக்கமுமெய்தி அதுபற்றியே தோட்டத்துப் பங்களாவுக்கு அவள் அடிக்கடி வந்து தன்னைப் பார்க்காமலும், அதிகமாகத் தன்னிடம் வார்த்தையாடாமலுமிருக்கிறாள் என்று அவர் நினைத்துக்கொண்டார்.

இங்கு வியாதிகளின் சம்பந்தமாக ஒரு சிறு கதை சொல்லுகிறேன். வாந்தி பேதிப் பிசாசு முன்னொரு காலத்தில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு அரபியாவிலுள்ள மக்கா நகரத்துக்குப் போய்க் கொண்டிருந்ததாம். போகும் வழியில் பாரஸீகத்தில் பெரிய தபஸ்வியும் ஞானியுமாகிய ஒரு மஹமதியப் பக்கிரி. அந்தப் பேயைக் கண்டு "எங்கே போகிறாய்?" என்று கேட்டார். அது கேட்டு வாந்தி பேதி சொல்லுகிறது: "மக்கா நகரத்தில் இப்போது வருஷத் திருவிழா தொடங்கியிருக்கிறது. நானா திசைகளினின்றும் எண்ணற்ற ஜனங்கள் திருவிழாவுக்காக அங்கு வந்து கூடியிருப்பார்கள். அவர்களை வேட்டையாடும் பொருட்டு மக்காவுக்குப் போகிறேன்" என்றது.

அது கேட்டு அந்த சந்நியாஸி:- "சிச்சீ! மூர்க்கப் பிசாசே! மக்கத்தில் அல்லாவைத் தொழும் பொருட்டு நல்ல பக்தர்கள் வந்து திரண்டிருப்பார்கள். அவர்களை நீ போய்க் கொல்ல நான் இடங்கொடுக்க மாட்டேன்" என்றார்.

அதற்கு வாந்திபேதிப் பேய் சொல்லுகிறது:- 'ஸ்வாமியாரே, என்னையும் அல்லாதான் படைத்து மனித உயிர்களை வாரிக் கொண்டு போகும் தொழிலுக்கு நியமனம் செய்திருக்கிறார். உலகத்தில் நடக்கும் எல்லாக் காரியங்களும் அல்லாவின் செயல்களே யன்றி மற்றில்லை. அவனின்றி யோர் அணுவுமசையாது. ஆதலால் எனது போக்கைத் தடுக்க உம்மால் முடியாது.

முடியுமெனிலும் நீர் அதனைச் செய்தல் நியாயமன்று. மேலும் மக்கத்துக்கு வந்திருப்போர் அத்தனை பேருமே புண்யாத்மாக்களென்றும் தர்மிஷ்டர்களென்றும் உண்மையான பக்தர்களென்றும் நினைத்து விடக் கூடாது. எத்தனையோ பாவிகளும், அதர்மிஷ்டரும், கொரான் விதிகளை மீறி நடப்போரும் அங்கு வந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. தவிரவும் புண்யாத்மாக்களுக்கு இவ்வுலகில் சாவு கிடையாதென்று அல்லா விதிக்கவில்லை. பாவிகள் மாத்திரமே யன்றி புண்யவான்களும் சாகத்தான் செய்கிறார்கள். வேறு நோய்களால் நெடுங்காலம் வருந்தி வருந்தித் துடித்துத் துடித்துச் சாவதைக் காட்டிலும் என்னால் துரிதமான மரணமெய்துதல் மனிதருக்கு நன்றே யன்றித் தீங்காகாது. ஆதலால் எப்படி யோசித்த போதிலும், நான் சொல்வதை நீர் தடுக்க முயலுதல் பொருந்தாது. எனிலும், மகானாகிய உம்முடைய மனதுக்குச் சற்றே திருப்தி விளைவிக்கத் தக்கதாகிய வார்த்தையொன்று சொல்லுகிறேன். அதாவது, நீர் அங்கு இத்தனை பேரைத்தான் கொல்லலாமென்று தொகை குறிப்பிட்டுக் கட்டளையிடும். அந்தத் தொகைக்கு மேலே நான் ஒற்றை உயிரைக் கூடக் கொல்வதில்லை யென்று பிரதிக்கினை செய்து கொடுக்கிறேன்" என்றது.

இங்ஙனம் வாந்தி பேதிப் பேய் சொல்லியதைக் கேட்ட முனிவர் - "சரி; போ. அங்கு அநேக லக்ஷக்கணக்கான ஜனங்கள் திரண்டிருப்பார்கள். அவர்களில் நீ ஒரே ஓராயிரம் பேரைத்தான் கொல்லலாம். அதற்குமேல் ஓருயிரைக்கூடத் தீண்டலாகாது. ஜாக்கிரதை! போய் வா" என்றார்.

நல்லதென்று சொல்லிப் பேய் பக்கிரியிடம் விடைபெற்றுக் கொண்டு மக்கத்துக்குப் போயிற்று. அப்பால் சில தினங்கள் கழிந்த பின், அந்தத் திருவிழாவுக்கு வந்தவர்களில் லக்ஷம் பேர் வாந்தி பேதியால் இறந்து போயினரென்ற செய்தி பக்கிரியின் செவிக் கெட்டிற்று. அவர் தம்மை வாந்தி பேதிப் பேய் வஞ்சித்து விட்டதாகக் கருதி மிகவும் கோபத்துடனும் மனவருத்தத்துடனுமிருந்தார். மறுநாள் வாந்தி பேதிப் பேய் அந்த வழியாகவே மக்கத்தினின்றும் இந்தியாவுக்கு மீள யாத்திரை செய்து கொண்டிருக்கையில் அந்தப் பக்கிரியைக் கண்டு வணங்கிற்று. பக்கிரி பெருஞ் சினத்துடன் அப் பேயை நோக்கி - "துஷ்டப் பேயே, பொய் சொல்லிய நாயே, என்னிடம் ஆயிரம் பேருக்கு மேலே கொல்வதில்லை யென்று வாக்குறுதி செய்து கொடுத்துவிட்டு அங்கு, மக்கத்திலே போய், லக்ஷம் ஜனங்களை அழித்து விட்டனையாமே? உனக்கு என்ன தண்டனை விதிக்கலாம்?" என்றார்.

இதைக்கேட்டு வாந்தி பேதிப் பேய் கலகல வென்று சிரித்தது. அது சொல்லுகிறது - "கேளீர், முனிசிரேஷ்டரே, நான் உமக்குக் கொடுத்த வாக்குறுதி தவறாதபடியே ஆயிரம் பேருக்கு மேல் ஓருயிரைக்கூடத் தீண்டவில்லை. ஆயிரம் பேரே என்னால் மாண்டவர். மற்றவர்கள் தமக்குத்தாமே பயத்தால் வாந்தியும் கழிச்சலும் வருவித்துக்கொண்டு மாய்ந்தனர். அதற்கு நான் என்ன செய்வேன்? என் மீது பிழை சொல்லுதல் தகுமோ?" என்றது.

அப்போது முனிவர் பெருமூச்சு விட்டு - "ஆகா! ஏழை மனித ஜாதியே, பயத்தாலும், சம்சயத்தாலும், உன்னை நீயே ஓயாமல் கொலை செய்து கொண்டிருக்கிறாயே! உன்னுடைய இந்த மகா மூடத்தன்மை கொண்ட மதியையும், இம் மதியை உன்னிடத்தே தூண்டிவிடும் மகா பயங்கரமான விதியையும் நினைக்கும் போது என் நெஞ்சம் கலங்குகிறதே! நான் என் செய்வேன், நான் என் செய்வேன்! நான் என்ன செய்வேன்! சுப்! நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லா ஹோ அக்பர். அல்லா மகான். அவருடைய திருவுளப்படி எல்லாம் நடைபெறுகிறது. அவர் திருவடிகள் வெல்லுக" என்று சொல்லி முழங்கால் படியிட்டு வானத்தை நோக்கியவராய் அல்லாவைக் கருதி தியானம் செய்யத் தொடங்கினார். பேயும் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு போய் விட்டது.

இந்த மாதிரியாக நான் ஒரு கதை வாசித்திருக்கிறேன், நோய்க்கு முக்கியமான காரணம் ஜீவர்களின் மனதில் தோன்றும் பயம், கவலை, கோபம், சம்சயம், பொறாமை, வெறுப்பு, அதிருப்தி முதலிய விஷ குணங்களேயாமென்பது இந்தக் கதையின் பொருள். இதை நான் அங்கீகரிக்கிறேன். உள்ளத்திலே தோன்றும் அச்சம் முதலியனவே நோய்களைப் பிறப்பிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அங்ஙனம் பிறக்கும் நோய்களை நன்கு போஷணை செய்து வளர்ப்பதும், அதினின்றும் மரணத்தின் வரவை மிகவும் எளிதாக்கித் தருவதுமாகிய தொழில்கள் பெருமாலும் வைத்தியர்களாலேயே செய்யப்படுகின்றன என்று தோன்றுகிறது. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழி முற்றிலும் உண்மை யெனவே நான் நினைக்கிறேன்.

இதினின்றும் வைத்திய சாஸ்திரம் பொய்யென்றாவது, வைத்தியர்களெல்லாருமே தமது சாஸ்திரத்தை நன்கு கற்றுணராத போலி வேஷதாரிகளென்றாவது, மனமறிந்த அயோக்கியர்களென்றாவது, வேண்டுமென்று மனிதனைக் கொல்லுகிறார்களென்றாவது நான் சொல்ல விரும்புவதாக யாரும் நினைத்துவிடலாகாது.

வைத்திய சாஸ்திரத்தில் எத்தனையோ கண்கண்ட பயன்களிருப்பதை நான் அறிவேன். வைத்தியர்களிலே பலர் தமது சாஸ்திரத்தில் உண்மையான உயர்ந்த தேர்ச்சியுடையோராகவும் ஜீவகாருண்யத்தில் சிறந்த மகான்களாகவும் இருப்பதை நான் அறிவேன். ஆனாலும், வியாதிகள் பல்குவதற்கும், மரணம் இங்ஙனம் மனிதரைப் பூச்சிகளிலுங் கடையாக வாரிக்கொண்டு போவதற்கும் உலகத்து வைத்தியர்கள் பெரும்பாலும் ஹேதுவாகிறார்களென்ற என் கொள்கை தவறானதன்று. ஒன்றுக்கொன்று விரோதமாகத் தோன்றும் இவ்விரண்டு கொள்கைகளும் எங்ஙனம் ஏககாலத்தில் உண்மையாகு மென்பதைத் தெரிவிக்கிறேன்.

ஆனால், ஏற்கனவே இந்த அத்தியாயம் மிக நீண்டு போய் விட்டது. நம்முடைய கதையின் போக்கோ சிறிது நேரம் விசாலாக்ஷியையும் விசுவநாத சர்மாவையும் விட்டுப் பிரிந்து வேறு சிலருடைய விருத்தாந்தங்களைக் கூறும்படி வற்புறுத்துகின்றது. ஆதலால் மேற்படி வைத்தியர் சம்பந்தமான விவகாரத்தைப் பின் ஓரத்யாயத்தில் விளக்கிக் காட்டுகிறேன்.

No comments:

Post a Comment