Wednesday, October 17, 2012

பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம்

''காசி'' எழுதுவது:-

புதுச்சேரியில் சில தினங்களின் முன்பு நடந்த பெண்கள் மஞ்சள் குங்குமம் (ஸம்பாஷணை) கூட்டமொன்றில் நடந்த விஷயங்கள் பின்வருமாறு:-

ஆரம்பம்

பார்வதி, லக்ஷ்மி, ஸரஸ்வதி முதலியபடங்களுக்குப் பூஜை முடித்த பிறகு விடுதலைப் பாட்டுகள் பாடப்பட்டன. பிறகு ஸ்ரீமான் ஸ்ரீநிவாஸாசார்யர் புத்திரி மண்டயம் ஸ்ரீமதி கிரியம்மா பின்வரும் உபந்யாஸம்செய்தார்:

முயற்சியின் பயன்

நமது தேசத்தில் தெய்வ பக்தி அதிகமென்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தெய்வத்தை நம்பிவிட்டு நாம் யாதொரு முயற்சியும் செய்யாமல் வெறுமே இருந்தால், தெய்வமும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கும். தெய்வத்தை நம்பி நாமும் முயலவேண்டும். எப்படியென்றால் ஒரு குழந்தை அழாமல் வெறுமே இருந்தால் நாம் அதன்மீது கண்ணைச் செலுத்தாமல் மற்ற வேலைகளில் கவனஞ் செலுத்துகிறோம். அழத்தொடங்கினால் ஆத்திரத்துடன் வேலையைவிட்டு அதை எந்த விதத்திலாயினும் ஸமாதானப்படுத்த முயலுகிறோம். அதுபோல நாம் ஒரு கார்யத்தில் ஊக்கம் வைத்து பிரயத்தினப் பட்டால் அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு முடிவைத் தெய்வம் காட்டும்.

இப்போது நாம் முயற்சி செய்யவேண்டிய விஷயம் பெண் விடுதலை. பல்லாயிரம் வருஷங்களாக, நாம் அடிமைப் பட்டு வருகிறோம். தெய்வம் தானாக நமக்கு விடுதலை கொடுத்ததா? இல்லை.

'உங்களுடைய வழி இதுதான்' என்று ஒரு சட்டம் ஏற்படுத்தி வைத்தது.

இப்போது நாம் 'இப்படி இருக்கமாட்டோம்'என்றால், 'சரி, ஆனால் பாருங்கள். உங்களுக்காக இன்னெருவழி உண்டாக்கியிருக்கிறேன். அதன்படி நடவுங்கள்' என்றுகூறி நம்மை ஊக்கப்படுத்துகிறது.

'நான் தூங்குவேன்' என்று தெய்வத்தினிடம் சொன்னால் தெய்வம்:- 'ஸூசகமாகத் தூங்கு, உனக்குமெத்தென்று படுக்கை போட்டுத் தருகிறேன்' என்று சொல்லி நம்மைத் தட்டித் தூங்கப் பண்ணுகிறது.

'மாட்டோம்! நாங்கள் எழுந்து உலக விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இதோ; இதோ எழுகிறோம்' என்றால், 'எழுந்திரு குழந்தாய், இதோ பார்; "உனக்கு இந்தப் பெரிய வழியை ஏற்படுத்தி இருக்கிறேன்.அந்த வழியே போய் நீ நன்மை அடை' என்கிறது.

ஆதலால், ஸகோதரிகளே, தெய்வத்தை நம்பி நாம் முன்னடையும் வழியை நாமே தேட வேண்டும். 'முயற்சிதிருவினை ஆக்கும்' என்பது முன்னோர் உறுதிமொழி. நாம் எல்லாரும் சேர்ந்து முயற்சி செய்தல் அவசியம். தெய்வம் நன்மை செய்யும். நம்முள் ஏதேனும் வருத்தம் நேர்ந்தால், அதை நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்த இடத்தில் தாக்ஷண்யமில்லாமற் சொல்லித் தீர்த்துக் கொள்ளவேண்டும். நாம் குழந்தைகள். நாம் அழுதால் லோகமாதா பராசக்தி உணவுகொடுப்பாள். நாம் அழுவதற்கு வழி முயற்சியினால் தெய்வத்தை இரங்குவித்தல். ஆதலால் முயற்சிசெய்வோம். ஓம் வந்தே மாதரம்.

அப்பால் ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியின் குமாரியாகிய ஸ்ரீ தங்கம்மா பின்வரும் பத்திரிகையைப்படித்தனர்:-

சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்னே சீன தேசத்தில் செகியாங் மாகாணத்தில் ஷாங் ஸிங் என்ற பட்டணத்தில் ஒரு ராஜாங்க உத்தியோகஸ்தரின் மகளாக 'சியூ சீன்' என்ற நமது கதாநாயகி பிறந்தாள். இவளைக்குறித்துச் சென்ற வருஷம் ஆகஸ்டு மாசத்து 'ஏஷியாடிக்ரெவ்யூ' (ஆசிய பரிசோதனை) என்ற பத்திரிகையில் லயோநெல்கிப்ஸ் என்ற ஆங்கிலேயர் எழுதியுள்ளகதையில் ஸாராம்சமான சில பகுதிகளை இந்த சபையின் முன்னே தெரிவிக்கிறேன்.

ஆசியாவில் பெண் விடுதலைக் கொடியை நாட்ட வேண்டுமென்று பாடுபட்டவர்களில் இவளும் ஒருத்தியாகையால் இவளுடைய கதை பெண் விடுதலையில் நாட்டம் செலுத்தி வரும் உங்கள் அனைவர்க்கும் மிகவும் ரஸமாகத் தோன்றக் கூடும்.

''சியூ சீன்'' என்ற பெயரில் சீன் என்பதற்கு''ஒளியுடைய ரத்னம்'' என்பது பொருள். ''சியூ'' என்ற உபநாமம் ''கார் பருவம்'' (மழை பெய்யுங்காலம்) என்ற பொருள் உடையது. பின்னிட்டு இவள் சிங்ஹஸியாங் என்ற பட்டப்பெயர் தரித்துக்கொண்டாள்; அதன் பொருள் ''ஆண்மக்களுடன் போர் செய்பவள்'' என்பது இவளுக்கு ''சியெந்-ஹெூ நு-சி-யெஹ்'' என்றும் ஒரு பெயருண்டு. அதன் பொருள் யாதெனில் ''கண்ணாடி ஏரிக்கரைப் பெண்வக்கீல்'' என்பது. ''கண்ணாடி ஏரி'' அந்தப் பிரதேசத்தில் ஒரு ஏரிக்குப் பெயர்.

பதினெட்டாம் வயதில் இவள் ''லாங்'' என்ற"பெயருள்ள ஒருவனை மணம் செய்து கொண்டு அவனுடன் சீனத்து ராஜதானியாகிய பெசிங் நகரத்தில் சென்று வாழ்ந்தாள். அங்கே இவளுக்கு ஒரு பெண் குழந்தையும் ஓராண்குழந்தையும் பிறந்தன. 1900 ஆம் வருஷத்தில் பாக்ஸர்கலக நிமித்தமாக பெகிங் நகரத்தில் அன்னிய ராஜ்யப்படைகள் புகுந்து சீனத்துக்குச் செய்த பழிகளைக் கண்டு மனம் பொறுக்காமல், இவள் 'ஐயோ, மனுஷ்ய ஜன்மத்தில் பிறந்தும் நம்முடைய மனுஷ்ய சக்தியைக் காண்பிக்கும் பொருட்டாகக் கஷ்டங்களையும் விபத்துக்களையும் எதிர்த்து உடைக்கும் பாக்கியம் நமக்கில்லாமல் போய்விட்டதே! வீட்டுக் காரியங்களின் அற்பக் கவலைகளுக் கிரையாகி மடியவா நாம் பூமியில் பெண் பிறந்தோம்' என்று சொல்லிபெருமூச்செறிந்து வருத்தப்பட்டாள்.

சீன பாஷையில் தகுந்த பாண்டித்யம் வஹித்திருந்தது மட்டுமேயன்றி இவளிடம் கவிதா சக்தியும் சேர்ந்திருந்தது. சீன ஸம்ப்ரதாயங்களின்படி கணவனுடன் கூடி வாழும் வாழ்க்கை இவளுடைய இயற்கைக்குப் பொருந்தவில்லை. யாதலால், இவள் பாக்ஸர், கலகத்திற்குப்பின் இரண்டு மூன்று வருஷங்களுக்குள் தன் கணவனிடமிருந்து ஸமாதானமாகவே பிரிந்துவந்துவிட்டாள்.

இதனிடையே இவளுக்குப் பூர்வார்ஜிதமாகக் கிடைத்த பணம் முழுதையும் ஒரு அயோக்கிய வியாபாரியிடம் கொடுத்து அவன் மூலமாக வியாபாரச் சூதில் இழந்துபோய்விட்டாள்.

பின்பு ஐப்பானில் போய் ஐரோப்பிய நவீனக்கல்வி பயின்றால் இக்காலத்தில் அதிகப் பயன் பெருகி வாழலாம்'' என்ற எண்ணமுடையவளாய்த் தன்னுடைய ஆபரணங்களை விற்றுப் பணம் சேகரித்துக் கொண்டு ஜப்பானுக்குப் புறப்பட ஆயத்தங்கள் செய்தாள். ஆனால்,இவள் பெகிங் நகரத்திற்குப் புறப்படு முன்னே அங்குசீர்திருத்த கக்ஷியைச் சேர்ந்த ஒருவனை அதிகாரிகள் பிடித்து அடைத்து வைத்திருப்பதாகவும், வக்கீல் நியமிக்கவும், வழக்கு நடத்தவும் பணமில்லாதபடியால் ஏனென்று கேட்பாரில்லாமல் அவன் சிறைக் களத்திற்கிடந்து வருவதாகவும் பணத்திற் பெரும் பகுதியை அவனுக்குக் கொடுத்தனுப்பி விட்டாள்.

மிஞ்சிய சிறு தொகையுடன் 1904-ஆம் வருஷம் ஏப்ரல் மாஸத்தின் இறுதியில் ஜப்பானுக்குக் கப்பலேறினாள். ஜப்பான் ராஜதானியாகிய டோக்யோ நகரத்தில் தன்னுடைய சாமர்த்தியத்தால் விரைவில் கீர்த்தியடைந்து விட்டாள். சீனத்து மாணாக்கரின் ஸபைகள் பலவற்றில் சேர்ந்து விளங்கினாள். மேலும் அப்போது சீனத்தில் அரசு செலுத்திய மஞ்சு ராஜ்யவம்சத்தை ஒழித்துவிட வேண்டு மென்ற கருத்துடன் இவள் தானாகவே பல ராஜ்யப் புரட்சி ஸங்கங்கள் ஏற்படுத்தித் திறமையுடன் உழைத்து வந்தாள். சீனாவில் இப்போது நடைபெறும் குடியரசுக்கு வேர் நாட்டியவர்களில் இவளும் ஒருத்தி.

1905-ம் வருஷத்து வஸந்த காலத்தில் இவள்தன் கல்வியின் பொருட்டுப் பின்னும் பணம் சேர்க்குமாறுசீனத்துக்கு வந்தாள். அப்போது சீனத்திலிருந்த பெரியராஜ்யப் புரட்சித் தலைவர்களுடன் இவள் ஸ்நேகம்ஏற்படுத்திக்கொண்டதுமன்றிக் குடியரசுக் கக்ஷியாரின் மூலஸபையாகிய ''குலாங் - பூ'' (அற்புத உத்தாரண) ஸபையில் சேர்ந்தாள். பிறகு அவ்வருஷம் செப்டம்பர் மாஸத்தில் டோக்யோவுக்குத் திரும்பி அங்கு வாழ்ந்த ஸுனயத்-ஸேன் என்ற மஹாகீர்த்தி பெற்ற குடியரசுக் கக்ஷித் தலைவனுடன் பழக்கம் பெற்றாள்.

அப்பால் சீனத்திலுள்ள ''நான்ஜின்'' நகரத்தில் ஸ்ரீமதி ய்ஜுஹுஹ என்ற தனது தோழியும் தன்னைப் போல் கவி ராணியுமான ஸ்திரீயுடன் சேர்ந்து ஒரு பெண் பள்ளிக்கூடத்து உபாத்திச்சியாக வேலை செய்தாள்.

அப்பால் நாடு முழுதிலும் கலாசாலைகள் ஸ்தாபனம் செய்தும், ரஹஸ்ய ராஜ்யப்புரட்சி ஸபையின் கிளைகள் ஏற்படுத்தியும், பத்திரிகைகள் நடத்தியும் தொழில் புரிந்தாள். இங்கிலீஷ் பாஷையிலும் இவள் தகுந்த தேர்ச்சி பெற்றிருந்ததாக லயோநெல்கிப்ஸ் சொல்லுகிறார்.

அப்பால் இவள் தன் ஜன்ம ஸ்தானமாகிய ஷாவ்ஸிங் நகரத்துக்கு மீண்டும் வந்து அங்கே ஒரு பாடசாலை நடத்தினாள். ஆனால் அது வெளிக்குப் பாடசாலையாகவும் உண்மையில் குடியரசுப் படைப்பயிற்சிக் கூடமாகவும் நடை பெற்றது. மாணாக்கரெல்லாம் படையாட்களாகப் பயிற்சி பெற்றனர்.

இவளுடைய முடிவைக் குறித்து லயோநெல்கிப்ஸ் பின் வருமாறு எழுதுகிறார்: ஒரு நாள் பிற்பகலில்இவளுடைய ஒற்றர் அஞ்சி வந்து மஞ்சுப் படைகள் ஷாவ்ஸிங் நகரத்தின் மீது தண்டெடுத்து வருவதாகக் கூறினார்கள். அவள் மறுபடி ஒற்றுப் பார்த்து வரும்படி சிலரை ஏவினாள். நகரத்தருகிலுள்ள நதியைத் தாண்டிக்கீழ்க் கரைக்கு மஞ்சுப்படை வந்து விட்டதென இவ்வொற்றர் வந்து சொன்னார்கள். பிறகு மிக விரைவில் மஞ்சுப்படை நகரத்துள்ளே புகுந்து விட்டது. மாணாக்கர்கள் அவஸரமாகக் கூட்டங்கூடி பரியாலோசனை நடத்தி இவளைத் தப்பியோடும்படி சொல்லினர். இவள் மறுமொழி கூறவில்லை. மஞ்சுப்படை கலாசாலையின் முன்னே வந்துநின்றது. எனினும் உடனே உள்ளே நுழைய அதற்கு தைர்யம் ஏற்படவில்லை. மாணாக்கர்களில் பெரும்பாலோர் புழக்கடை வழியாக வெளியே குதித்தோடிவிட்டனர். ஏழெட்டுப் பேர்மாத்திரம் ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு வாயிலில் நின்ற தளத்தின் மீது பாய்ந்தனர். எதிர்பார்க்காத இச் செய்கைகளைக் கண்ட மஞ்சுப் படை திகைத்துவிட்டது. அப்போது நடந்த போரில் மஞ்சுப்படையாளர் பலர் கொலையுண்டும் புண்பட்டும் வீழ்ந்தனர். மாணாக்கரிலும் இருவர் மாண்டனர். உள்ளே ஓரறையில் வீற்றிருந்த சியூசீனையும் அவளுடன் அறுவரையும் படைவந்து கைதியாக்கிற்று. மறுநாள் நியாயாதிகாரியின் முன்னே சியூ சீனைக் கொண்டு நிறுத்தி வாக்கு மூலம் கேட்டபோது உடந்தையானவர்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்றகருத்தால் இவள் ஒரு சொல்லேனும் மொழியவில்லை.

'சியூ யூசி யூதெங் சவிஷா ஜென்' என்ற கவிதைவாக்கியத்தை மாத்திரம் எழுதிக்காட்டினாள்.

இதன் பொருள்:- 'மாரி நாட் காற்றும் மாரி நாண்மழையும், மார் புண்ணாக வருத்துகின்றனவே' என்பது.

அப்பால் இவளுக்குக் கொலை தண்டனை விதிக்கப்பட்டது. ஜூலை 15-ம் தேதி யன்று ஸுர்யோதயவேளையில் இவள் ஷங் ஸிங் நகர மண்டபத்தருகே தூக்குண்டாள். அத்தருணத்தில் இளஞ் செந்நிறமுடைய மேகமொன்று இவள் தலையின்மீதே வானத்தில் பறந்ததென்றும், குளிர்ந்த வாடை வீசிற்றென்றும் தூக்கிட்டோரும் பார்த்து நின்றோரும் துக்கத்தால் மெய் நடுங்கினரென்றும், ஆனால் சியூசீன் ப்ரிபூரண சாந்தியுடன் தூக்கு மரத்துக்குச் சென்றாளென்றும் லயோநெல் கிப்ஸ் சொல்லுகிறார்.

சியூ சீன் ஒரு பொதுக்கூட்டத்தில் செய்த உபந்யாஸமொன்றின் ஸாராம்சத்தை லயோநெல் கிப்ஸ் எழுதியிருக்கிறபடிஇங்கு மொழிபெயர்த்துச் சொல்லுகிறேன். அதினின்றும்இவளுடைய உண்மையான குணத்தை அறிந்து கொள்ளுதல்சற்றே எளிதாகுமென்று நினைக்கிறேன். சியூ சீன்சொல்லுகிறாள்:-

ஸஹோதரிகளே, பல்லாயிர வருஷங்களாக நாம்ஆண் மக்களின் கொடுமைக்குக் கீழ்ப்பட்டு வாழ்கிறோம்.எந்தக் காலத்திலும் நமக்கு ஓரணு வளவாயினும் ஸ்வதந்திரம்இருந்தது கிடையாது. மூன்று விதமான கீழ்ப்படிதலென்றும்,"நான்குவிதமான பெண்ணறங்களென்றும் சொல்லிப் பழையசாஸ்திர விதிகள் நம்மை இறுகக் கட்டியது மன்றி இந்தபந்தத்தை எதிர்த்து நாம் ஒரு வார்த்தைகூட உச்சரிக்கக்கூடாத வண்ணமாக நம்மை அடக்கிவிட்டன. ஸ்திரீகளாகியநம்மைச் சிறு குழந்தைப் பிராய முதலாகவே பாதங்களைக் கட்டுதல் என்ற வழக்கத்தால் எண்ணுதற்கரிய துன்பங்களுக்காளாக்கி விட்டார்கள். இந்த முறையால் நமதுபாதம் வற்றிச் சதையும், எலும்பும் குறுகிச் சிதைந்துபோகின்றன. இதனால் நம்முடல் பலமிழந்து உழைப்பதற்குத் தகுதியற்ற தாய் விடுகிறது. எல்லாக் காரியங்களிலும் நாம் ஆண் மக்களைச் சார்ந்து நிற்க நேரிட்டது. விவாகம் நடந்த பின்னர் நம்மைக் கணவர் அடிமைகளைப் போல நடத்துகிறார்கள். அவர்களுக்குத் துணிப்பெட்டி தைத்துக்கொடுக்கவும், சமையல் பண்ணவும், சோறு போடவும்,தேயிலைக் காய்ச்சிக் கொடுக்கவும், வாயில் தெளிக்கவும், குப்பை பெருக்கவும், அவர்களுக்கு ஸ்நானம் செய்துவைக்கவும், பணி செய்யவும் மாத்திரமே நம்முடைய சக்திகளெல்லாம் செலவாகின்றன. முக்கியமான கார்யம் எதிலும் நாம் சிறிதளவேனும் கலக்கக் கூடாது. வீட்டுக்கு யாரேனும் விருந்தாளி வந்தால் உடனே நாம் அந்தர்த்தானம் பண்ணி அறைக்குள்ளே போய்ப் பதுங்கிக் கொள்ளவேண்டும். எதைக் குறித்தும் நாம் ஆழ்ந்த விசாரணை செய்யக் கூடாது. ஏதேனும் வாதத்தில் நீண்ட மறுமொழிசொல்லப் போனால் ஸ்திரீகள் அற்பமதியுடையவர்களென்றும் ஸ்திரபுத்தியில்லாதவர்களென்றும் சொல்லி நம்முடைய வாயை அடைத்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் நம்முடைய தைர்யக் குறைவேயன்றி வேறில்லை. இந்த தைர்யக் குறைவுக்குரிய பல ஹேதுக்களில் நம்மைக் குழந்தைப் பிராயத்திலேயே பாதங்கட்டி விடுதல் ஒன்றாகும். ''மூன்றங்குலப் பொற்றாமரைகள்'' என்றும், அவற்றின் 'மோஹனச் சிறுநடை' என்றும் வர்ணித்துப் பெண் குழந்தைகளின்அடிகளைக் கட்டிப் போடும் தீமையால் நாம் சக்தியிழந்துவிட்டோம். இன்று எனது ரத்தம் கொதிப்புற்று நிற்கிறது. உங்களுடைய ரத்தத்தையும் கொதிக்கும்படி செய்யவிரும்புகிறேன். முதலாவது, இனிமேல் எல்லா ஸ்திரீகளும் சூர்ணம் தடவுவதையும் முகப்பூச்சுகள் பூசுவதையும் நிறுத்திவிட வேண்டும். மோஹப்படுத்த வேண்டுமென்று பொய்ப் பூச்சுகள் பூசக் கூடாது. ஒவ்வொரு மனுஷ்ய ஜந்துவுக்கும் கடவுள் கொடுத்த முகமிருக்கிறது. பாதங்களைக் கட்டும் நீச வழக்கத்தை உடனே வேரோடு களைந்து எறிந்து விடவேண்டும். ஐந்து கண்டங்களிலுமுள்ள வேறெந்த நாட்டிலும் இவ்வழக்கம் கிடையாது. அப்படியிருந்தும் உலகத்தில் சீனாவே அதிக நாகரீகமுடைய தேசமென்று நமக்குள்ளே பிதற்றிக் கொள்ளுகிறோம். பாதக்கட்டு மட்டுமேயன்றி, இன்னும் பழைய கெட்ட வழக்கங்கள் எத்தனை உள்ளனவோ அத்தனையும் ஒழித்தெறிவோம். ஆண்மக்களுக்கு இனி அடிமைகளாக வாழ மாட்டோம். தைர்யத்துடன் எழுந்து நின்று தொழில் செய்து நம்முடைய ஸ்வதந்திரத்தை நிலைநிறுத்திக் கொள்ளுவோம்.

அப்பால் மேற்படி கூட்டத்தில் சகுந்தலா பின்வரும்பாட்டுப் பாடினாள்.

சீனபாஷையில் 'சீயூ சீன்' என்ற ஸ்திரீ பாடியபாட்டின் தமிழ் மொழி பெயர்ப்பு.

விடுதலைக்கு மகளி ரெல்லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவமென்றே
திட மனத்தின் மதுக் கிண்ணமீது
சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம்
உடையவள் சக்தியாண் பெண்ணிரண்டும்
ஒரு நிகர் செய் துரிமை சமைத்தாள்,
இடையிலே பட்ட கீழ் நிலை கண்டீர்
இதற்கு நாமொருப்பட்டிருப்போமோ?

திறமையா லிங்கு மேனிலை சேர்வோம்.
தீய பண்டை யிகழ்ச்சிகள் தேய்ப்போம்
குறைவிலாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண் களெனி லவரோடும்
சிறுமை தீர நந்தாய்த் திரு நாட்டைத்
திரும்ப வெல்வதிற் சேர்ந்திங் குழைப்போம்
அற விழுந்தது பண்டை வழக்கம்
ஆணுக்குப் பெண் விலங்கெனு மஃதே

விடியு நல்லொளி காணுதி நின்றே
மேவு நாக ரீகம் புதிதொன்றே!"
கொடியர் நம்மை யடிமைக ளென்றே,
கொண்டு தாமுதலென்றன ரன்றே!
அடியொடந்த வழக்கத்தைக் கொன்றே
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர் நந்தேசத்து வீரக்
காரிகைக் கணத்தீர் துணிவுற்றே. (3)

அப்பால் சில பெண்கள் பேசினர். மங்களப் பாட்டுடன் 'மஞ்சள் குங்கும'க் கூட்டம் முடிவு பெற்றது.

No comments:

Post a Comment