Tuesday, August 28, 2012

மஹாமகம்


24 பிப்ரவரி 1921                           ரெளத்திரி மாசி 13

இந்த்ரனை தேவதேவன் என்பர். மற்ற மனிதருக்கு வானவர் எப்படியோ, அப்படி வானவர்க்கவன் என்பது குறிப்பு. வடமொழியில் வால்மீகி, காளிதாஸர்களையும், தமிழில் கம்பனையும் புகழேந்தியையும், இங்கிலீஷில் ஷெல்லியையும், “கவிகளின் கவி” என்று சிறப்பித்துச் சொல்லுகிறார்கள். அதாவது மற்ற மனிதருக்குக் கவிகளால் எத்தனை புதிய சுவை கிடைக்கிறதோ அத்தனை புதிய சுவை கவிஞருக்கு அவ் வால்மீகி முதலியவர்களிடம் கிடைக்கிறதென்பது குறிப்பு.

அதுபோல கும்பகோணத்திலுள்ள அமிர்த வாவிகள் என்று சொல்லப்பட்ட பொற்றாமரைக் குளம், மஹாமகக் குளம். இவ்விரண்டும் புண்ய தீர்த்தங்களுக்குப் புண்ய தீர்த்தமென்று புராணம் சொல்லுகிறது. அதெப்படியெனில் முற்காலத்தில் ஒன்பது தீர்த்த தேவதைகளும் ஈசனிடத்தில் சென்று, “கடவுளே, உலகத்திலுள்ள பாவிகளெல்லாரும் எங்களிடம் வந்து மூழ்கித் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களுக்குக் கரைத்து விட்டுவிட்டுப் புண்யாத்மாக்களாகிச் செல்லுகின்றனர். நாங்கள் சம்பாதிக்கும் இந்தப் பாவங்களுக்கெல்லாம் விமோசனம் அருள் புரிய வேண்டும்” என்று ப்ரார்த்தனை செய்தனர். அவர்களிடம் கருணை பாலித்து எம்பெருமான், “புண்ய தீர்த்தங்களே! பாவங்களாலே தீண்டப்படாத அமிர்த வாவிகள் இரண்டு நான் கும்பகோணத்தில் சமைத்திருக்கிறேன். அவற்றில் சென்று ஸ்நானம் புரிந்தால் உங்களுடைய பாவங்கள் விலகிவிடும்” என்று கட்டளை புரிந்தார். 

பன்னிரண்டு வருஷங்களுக் கொருமுறை இங்கு கங்கை முதலிய தீர்த்த தேவதைகள் வந்து ஸ்நானம் புரியும் ஸமயமாகிய மஹாமக புண்ய காலம் நேற்று (பெப். 22) செவ்வாய்க்கிழமையன்று கும்பகோணத்தில் கொண்டாடப்பட்டது. லக்ஷக்கணக்கான ஹிந்துக்கள் நேற்று அதில் ஸ்நானம் செய்திருப்பார்கள். 

ஆனால், இத்தனை பேர்களும் ஸ்ர்வ பாப ரஹிதர்களாய்ப் பரம சுத்தத் தன்மை யெய்தி விடுவார்களோ என்று சில மதப் பற்றில்லாதார் ஆக்ஷேபிக்கலாம். தீர்த்த ஸ்தலங்கள், புண்ய க்ஷேத்ரங்கள், எல்லா மதஸ்தர்களுக்கும் பொதுவாக அமைந்திருக்கின்றன. யூதர்கள் யெருஸலேமைப் புண்ய க்ஷேத்ரமென்கிறார்கள். கிருஸ்தவர்கள் யெருஸலேம், நஜரேத், ரோமாபுரி முதலிய பல பல புண்ய க்ஷேத்திரங்களைக் கொண்டாடுகிறார்கள். முஸ்லிம்கள் மக்கம், மதீனம், யெருஸலேம்  முதலிய கணக்கற்ற க்ஷேத்ரங்களைக் கொண்டாடுகிறார்கள் பெளத்தர் கயை முதலிய ஆயிரக் கணக்கான புண்ய க்ஷேத்ரங்களைப் போற்றி வருகிறார்கள். எனவே, அறியாமை காரணமாகவோ, மறதி காரணமாகவோ சில கிறிஸ்தவப் பாதிரிகள்  புண்ய க்ஷேத்ர யாத்திரை ஹிந்துக்களுக்கு மாத்திரம் விசேஷமாக ஏற்பட்ட வழக்கமென்று கருதுவார் போல், ஹிந்து மதத்தின் மீது இவ்விஷயத்தில் பழி கூறுவதை நாம் புறக்கணித்து, மதவாதிகளுக்குள்ளே இவ்வழக்கத்தை மறுத்துரைப்போர் யாருமிருக்க நியாயமில்லை யாதலால் மதப் பற்றில்லாதவர்களே மேற்கூறிய கேள்வி கேட்டார்களென்று குறிப்பிட்டோம்.
ஆனால், மதப் பற்றுடையார், அஃதற்றோர் என்னும் இரு திறத்தாரும் உணர்ந்து கொள்ளும்படி, இதுபோன்ற தீர்த்த யாத்திரைகளின் தத்துத்தை இங்கு விளக்குவோம். இவற்றில் பாவமழிந்து புண்யத் தன்மை பெற வேண்டுமானால், உண்மையான நம்பிக்கை யிருக்க வேண்டுமென்று நம்முடைய புராதன ஹிந்து சாஸ்த்ரங்கள் மிகத் தெளிவாக வற்புறுத்தி யிருக்கின்றன. உண்மையான மனக்கோளின்றி கங்கையில் முழுகினாலும், மஹாமகத்தில் மூழ்கினாலும் பாப கர்மந் தொலையாதென்று சாஸ்த்ரங்கள் தெளிவுபடத் தெரிவிக்கின்றன. இனிமேல் நாம் பாவம் பண்ணுவதில்லையென்ற மனோ நிச்சயம் வேண்டும். 

தீர்த்த யாத்திரையின் அர்த்தமும் பயனும்

இந்தத் தீர்மானந்தான் பரிசுத்தத் தன்மை கொடுக்கிறது. ஒருவன் இந்த க்ஷண முதல் பாவம் செய்வதில்லையென்று மனவுறுதி செய்து கொள்ளுதலாகிய அக்நி மயமான செய்கையாலேயே அவன் அதுவரை செய்த பாவமெல்லாம் எரித்துவிடப்படுகிறது. “ஞானாக்நிஸ் ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதேர்ஜுன” என்று பகவத் கீதையில் கடவுள் சொல்லியிருக்கிறார். பாவத்தை இனிச் செய்யவில்லையென்ற தீர்மானம் உண்மையாக இருக்க வேண்டும். ஞானமே அவ்வளவுதான். அதைக் காட்டிலும் பெரிய ஞானமே கிடையாது. சிலர் தவத்தால் ஞானமெய்த நாடுகிறார்கள். சிலர் தானத்தால், சிலர் ஆராய்ச்சியால், சிலர் தியானத்தால், சிலர் பூஜையால் ஞானமெய்த முயலுகிறார்கள். ஆனால் எல்லா வழிகளும் உண்மையான வழிகளே. இவையெல்லாம் ஞானத்தைத் தரும். ஆனால் எந்த வழியாலே தரும்? பாவத்தைத் தீர்த்து விடுதலாகிய வழியிலே தரும். அவற்றால் பாவம் நீங்கும். அதனால் மோக்ஷம் அல்லது அறிவு மயக்கம் தெளியும். அதிலிருந்து ஞானமுண்டாகும். ஞானமாவது எல்லாம் கடவுள் மயமென்ற அனுபவம். பாவமாவது தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவித்தல். இங்ஙனமே, புண்யமாவது தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பக் கலப்பில்லாத சுத்தமான இன்பம் விளைவித்ததற்குரிய செய்கையென்பது சாஸ்த்ர கோடிகளின் பரம ஸித்தாந்தம். எல்லாம் ஆத்மா – எல்லாம் கடவுள் ஆதலால், எல்லாம் தான் என்ற ஞானத்தால் பிற உயிருகளுக்குத் துன்பம் விளைவிக்கும் குணம் நீங்கிவிடும். அதாவது பாவம் போய்விடும். நியாயம் புண்யம்; அநியாயம் பாவம். ஹிதம் புண்யம்; அஹிதம் பாவம். ஸ்த்யம் புண்யம்; அஸத்யம் பாவம். திருப்தி புண்யம்; துக்கம் பாவம். 

மரணமாவது பாவத்தின் கூலியென்று கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது. 

“இங்ஙனம் பாவத்தை துறந்துவிட விரும்புவோனுக்கு மனோ நிச்சயமும், ஞான உதயமும் கதியாயின், பணச் செலவு செய்து ரயிலேறிக் கும்பகோணத்துக்கும், காசிக்கும், ராமேசுவரத்திற்கும் ஏன் போகவேண்டும்?” என்று சிலர் வினவக்கூடும்.

மன மாறுதல்கள் சாசுவதமான இடத்தே விரதங்கள் என்று கூறப்படும். பெரிய சாசுவதமான ஸங்கல்பங்கள் விரதங்களெனப்படும். இந்த விரதங்கள் மனிதருடைய நினைப்பில் நன்றாக அழுந்தும் பொருட்டு ஆன்றோர் உலகமெங்கணும் இவற்றுக்குச் சில சடங்குகள் வகுத்திருக்கிறார்கள். கல்வி தொடங்கப் போகிறபோது ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. விவாகம் பண்ணும்போது மிகவும் கோலாகலமான கிரியைகள் நடக்கின்றன. புதிய வீட்டில் குடி புகும்போது ஒரு சடங்கு நடத்துகிறோம். இவற்றின் நோக்கம், நாம் ஏதேனும் அமங்களத்தை நீக்கி மங்களத்தை சாசுவத உடைமையாகச் செய்து கொள்ள வேண்டுமென்பதேயாம். நான் மேலே கூறியபடி, மரணம் பாவத்தின் கூலி என்று கிறிஸ்தவ வேதம் சொல்லுவதைக் கருதுமிடத்தே, அமங்களமனைத்திலும் அமங்களமானது பாவமென்று விளங்குகிறது. எனவே, மங்களங்களிற் சிறந்தது புண்யமென்பதும் வெளிப்படையாம். 

இப்படிப்பட்ட பாவத்தைக் களைந்து புண்யத்தைப் போர்த்துக்கொள்வதாகிய ராஜ விரதத்துக்கு ஒரு சடங்கு வேண்டாவோ? அவ்விதச் சடங்கே மஹாமக முதலிய புண்ய தீர்த்த யாத்திரை யென்க.

No comments:

Post a Comment