Thursday, August 23, 2012

உலக நிலை


19 ஜனவரி 1921                                           ரெளத்திரி தை 7

லார்ட் மில்நரைத் தள்ளியதன் முகாந்தர மென்ன?

குடியேற்ற மந்திரி ஸ்தானத்திலிருந்து லார்டு மில்நர் விலகிக் கொண்டதாகவும், அவர் எகிப்தின் விஷயத்தில் செய்த வேலையினால் அந்த விலகுதல் ஏற்படவில்லை யென்றும் ராய்ட்டர் இந்தியாவுக்கு மிக ஸங்கரஹமாக ஸாதித்திருக்கிறார். “என் பிதா மெத்தையில் ஒளிந்திருக்க வில்லை” யென்று, கதையில் ஸாக்ஷ்ய முரைத்த குழந்தையின் நல்லெண்ணத்தை எய்தியே ராய்ட்டர் இங்ஙனம் தந்தி கொடுத்திருக்கிறாரென்று வெளிப்படையாகவே தோன்றுகிறது. எகிப்துக்கு, ஆதியில், (ப்ரான்ஸ், அமெரிகா முதலிய தேச ராஜ்யங்களின் தூண்டுதலாலே) ஏறக்குறைய ஸ்வாதீனமே கொடுப்பதாக விளம்பரம் செய்துவிட்டார்கள். ஸுயேஸ் கால்வாயைத் தமக்கு வைத்துக் கொண்டார்கள். வேறு சில பூமிகளையும் பல உரிமைகளையும் கவர்ந்து கொண்டனர். இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு பரிபூர்ண ஸவாதீனம் கொடுப்பதாகவே வாக்குறுதி செய்து, பூமண்டலமறிய முழங்கி விட்டார்கள். இந்தியாவைப் போல் எகிப்து பண வரவுள்ள பூமியில்லை. மெஸபடோமியாவை விழுங்கியதற்கு இஃதொரு பரிஹாரம் போன்றதாய் முஸல்மான்களை நமக்கு வசப்படுத்தக் கூடும். ஸுயேஸ் கால்வாய்தான் எகிப்திலே ஸாராம்சம், அதை நாம் வைத்துக்கொண்டாய்விட்டது. மேலும் நமது படை எப்படியேனும் எகிப்திலிருக்குமாதலால், எகிப்து தேசத்து ராஜாங்கத்தாரை ஸ்வாதீனங் கொடுத்த பின்னரும், நமது கைப் பொம்மைகளாக நம் இஷ்டப்படி ஆட்டிவரலாம். இப்போதைக்கு ப்ரான்ஸ், அமெரிகா முதலிய நேச கோடிகளின் வயிற்றெரிச்சலுக்கு இஃதோர் ஆறுதல் போலாகக்கூடும். தவிரவும், அந்த தேசம் விடுதலைக்காக எப்பாடும் படக்கூடிய நிலைமையிருக்கிறது. என , இங்ஙனம் பல காரணங்களை உத்தேசித்து ஆங்கில மந்திரிகள் ஆரம்பத்தில் எகிப்துக்கு ஸ்வாதீனங் கொடுப்பதாகிய இதிஹாஸத்தை ப்ரசுரப் படுத்தினார்கள். பின்னிட்டு, “நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கிறது” என்ன செய்யலாம்? லாய்ட் ஜ்யார்ஜ் உபதேசம் பண்ணுகிறார். கடவுள் தீர்ப்புப் பண்ணுகிறார். 

எதிர்பாராத விளைவுகள்

ஆங்கில மந்திரிகள் தினை விளைத்தோ மென்று கருதித் தினையறுக்கச் சென்ற இடத்தே பனை முளைத்திருக்கிறது. எகிப்துக்கு இவர்கள் ஸ்வாதீன விளம்பரம் செய்ததினால், முஸ்லிம் உலகத்தின் கோபம் ஆறவில்லை. முன்னிலும் அதிகமாகக் கொதித்தெழுந்தது. எகிப்தை விடப் போகிறார்களா? வாஸ்தவந்தான். துருக்கியை ஏன் விடவில்லை? விடுவிக்கவில்லை? மெஸபொடோமியாவை, ஸிரியாவை ஏன் விடவில்லை?  விடுவிக்கவில்லை? பாரஸீகத்தை ஏன் விழுங்க முயன்றார்கள்? இந்தியாவுக்கு விடுதலை எப்போது? இத்தனை கேள்விகள் சீறுவாணம் வீசிக் கொண்டிருந்த இடத்தில் எகிப்துக்கு இவர்கள் ஸ்வாதீன விளம்பரம் செய்ததினின்றும் உலகத்து முஸல்மான்களின் புதிய மனக் கொதிப்புக்கள் அடங்கவில்லை. இப்படித்தான் நேருமென்பதை யாரும் முன் யோசனையால் தெரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜுக்கும் அவருடைய ப்ரிய ராஜரீகத் துணைவருக்கும் ஊஹ சக்திகுறைவு. நாளைக்குக் காலையில் இன்னகார்யம் இப்படியாகக் கூடுமென்பதை யுணரும் எதிர்கால ஞானமில்லாதோர் மந்திரி ஸ்தானத்துக்குத் தக்கோரல்லர். எனினும், இவர்கள் அதனாலே ஸங்கடங்களுக்குட்படுவது கிடையாது. 

மாற்றிச் சொல்லும் வித்தையில் மஹா மஹோபாத்யாயர்

ஏனெனில் ஒரு முறை சொல்லியதை மறுமுறை மனஸ்ஸாக்ஷியை வீசி யெறிந்துவிட்டு, மாற்றிச் சொல்லும் வித்தையில் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜும், அவருடைய ஸஹ மந்திரிகளும் மஹா மஹாபாத்யாயப் பட்டம் பெற்றிருக்கிறார்கள் அமெரிக்காவிலிருந்து “ஸ்வதந்தர பரியோஷணை ஸங்கத்தின் (!) அத்யக்ஷகர்களாகிய ஆங்கில மந்திரிகள் எதிர்பார்த்த கைம்மாறுகள் கிடைக்கவில்லையென்று புலப்படுகிறது. அதினின்றும், எகிப்துக்குக் கொடுத்த வாக்குறுதியை அசைக்கலா மென்ற உத்தேசம் மேற்படி அத்யக்ஷகர்களுக்கேற்பட்டு விட்டதோ என்றெமக்கோர் ஐயமுண்டாகிறது. அங்ஙனம் அந்த வாக்குறுதியைக் கொஞ்சம் புதிய வ்யாக்யானங்களுக் குட்படுத்துவதற்கு முகவுரையாக லார்ட் மில்நரைச் சிறிது காலத்துக்கு விலக்கி வைத்திருக்கிறார்களென்று தோன்றுகிறது. ஆனால் இதிலும் உத்தேசந்தான் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் கூட்டத்தாருக்குரியது. தீர்ப்பு கடவுளுக்குரியது. முதலாவது, கடவுளுக்கும் இரண்டாவது எகிப்துக்குமுரியது. 

“கிலாபத்” விஷயம்

ஸ்மர்னாவில் ஆஹாரமின்றி வருந்தும் முஸ்லிம்களுடைய ஸம்ரக்ஷிப்புக்கு பாரத மத்ய “கிலாபத்” ஸமிதியார் ஐயாயிரம் பவுன் அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது. இது போன்ற செயல்களே உலகத்து முஸ்லிம்களுக்குள் ஏற்கெனவே யுள்ளதாகிய ஸஹோதரப் பற்றுதலை இன்னும் உறுதிப் படுத்தும் நற்செயல்களாம். இது நிற்க, கிலாபத் ஸமிதிகளின் முயற்சியால் ஒத்துழையாமைக் கொள்கை நாட்டில் உறுதியடைந்து வருதல் யாராலும் மறுக்க முடியாத செய்தி. இந்த ஸமயத்தில் இந்தியா கவர்ன்மெண்டார் அசிரத்தையாக இருப்பதைப் பார்த்து நமக்குப் பெரு வியப்புத் தோன்றுகிறது. “ஸெவர்” உடம்பாடு, அநீதி, நஷ்டம், அபகீர்த்தி – இவை வேண்டுமா? முஸ்லிம்களின் நட்பு, நீதி, கீர்த்தி, நஷ்டமெய்தாமை இவை வேண்டுமா? இந்திய முஸ்லிம்களே இக்காலத்தில் உலகத்து முஸல்மான்களுக்கு முக்யப் பிரதிநிதிகள். இந்திய முஸ்லிம்கள் என்ன நினைப்புகள் கொண்டிருக்கிறார்களென்பதை இந்தியா கவர்ன்மெண்டார் மேன் மேலும் அழுத்தமாக வற்புறுத்தித் தெரிவித்தாலன்றித் தாமாகவே தெரிந்து வேலை செய்யக்கூடிய அத்தனை புத்திமான்களுமல்லர் லாய்ட் ஜ்யார்ஜ் சபை மந்திரிகள்.

No comments:

Post a Comment