Saturday, August 25, 2012

திலகர் முனிவர் கோன்


நாமகட்குப் பெருந்தொண் டியற்றிப்பல்
        நாட்டினோர்தம் கலையிலும் அவ்வவர்
தாமகத்து வியப்பப் பயின்றொரு
       காத்திரக்கட லென்ன விளங்குவோன்;
மாமகட்குப் பிறப்பிட மாகமுன்
       வாழ்ந்திந்நாளில் வறண்டயர் பாரதப்
பூமகட்கு மனந்துடித் தேயிவள்
      புன்மைபோக்குவல் என்ற விரதமே. 

நெஞ்சகத்தோர் கணத்திலும் நீங்கிலான்
      நீதமேயோர் உருவெனத் தோன்றினோன்;
வஞ்சகத்தைப் பகையெனக் கொண்டதை
     மாய்க்குமாறு மனதிற் கொதிக்கின்றோன்;
துஞ்சுமட்டுமிப் பாரத நாட்டிற்கே
     தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும்
அஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல்போல்
    அன்பொடோதும் பெயருடை யாரியன் 

வீரமிக்க மராட்டியர் ஆரதம்
    மேவிப் பாரத தேவி திருநுதல்
ஆர வைத்த திலக மெனக்திகழ்
    ஐயன்நல்லிசைப் பாலகங் காதரன்
சேரலர்க்கு நினைக்கவுந் தீயென
    நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
சீரடிக்க லத்தினை வாழ்த்துவேன்
    சிந்தைதூய்மை பெறுகெனச் சிந்தித்தே.

No comments:

Post a Comment