Sunday, August 26, 2012

என் ஈரோடு யாத்திரை

4 ஆகஸ்ட் 1921

ஈரோட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். அது கொங்கு நாடு. ஆனால், அதற்கும் தென்பாண்டி நாட்டிற்கும் யாதொரு வேற்றுமையும் தென்படவில்லை. ஸ்வதேசீய நிகழ்ச்சி தோன்றிய காலம் முதலாக தமிழகத்தின் உட்பகுதிகளுக்கிடையே உள்ள அகவேற்றுமைகள் குறைவுபட்ட காரணத்தாலே புற வேற்றுமைகளும் குறைவுபடுகின்றன.

இதற்குச் ‘சுதேசமித்திரன்’ முதலிய பத்திரிகைகள் பெரிதும் உதவி புரிந்தன என்பது நிச்சயம்.

கட்டை வண்டி ஒன்று கிடைத்தது. கட்டை வண்டியில் ஒரு மனிதன் நிமிர்ந்து உட்கார இடமில்லை. ஒன்றரை அடி நீளம். மாடு ஒரு சிறு பூனைக்குட்டி போன்று இருந்தது. நான் ஒன்று; வண்டிக்குடையவன் இரண்டு; அவனுக்குக் கீழே கூலிக்கு வண்டி ஓட்டும் சிறுவன் ஒருவன்; எங்கள் மூவரையும் மூன்று பர்வதங்களாக நினைத்து அந்த மாட்டுப் பூனை இழுத்துக்கொண்டு போயிற்று.

அரை மைல் தூரத்தில் உள்ள கருங்கல் பாளையத்தில் எனக்கு வேலை. அங்கு ஒரு சிநேகிதருடைய அழைப்பிற்கிணங்கிச் சென்றிருந்தேன். கருங்கல் பாளையத்துக்குப் போய்ச் சேருமுன்னே மாடு வெயர்த்துப் போய்விட்டது. அதன் மேலே குற்றஞ் சொல்வதில் பயனில்லை. அது சிறு ஜந்து. அதன் மேலே நாங்கள் மூன்று தடி மனிதரும் ஒரு கழுத்தளவுக்குச் செய்யப்பட்ட விதானத்தை உடைய வண்டியும் சவாரி பண்ணுகிறோம்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரத்துக்குள்ளே கருங்கல்பாளையம் என்ற கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அந்தக் கிராமத்தில் ஆண் மக்கள் எல்லோரும் மஹா யோக்கியர்கள், மஹா பக்திமான்கள்; புத்திக் கூர்மையிலும், சுறுசுறுப்பிலும், தேசாபிமானத்திலும் மிகவும் பாரட்டுதற்குரியவர்கள்.

இவர்களுடன் ஸல்லாபம் எனக்கு எல்லா வகைகளிலும் இன்ப மயமாக இருந்தது.

அங்கே ஒரு புஸ்தகசாலை இருக்கிறது. வாசக சாலை. அதன் காரியதரிசி ஒரு வக்கீல். மிக நல்ல மனிதர்; மஹா புத்திமான்; தேசபக்தியில் மிகவும் பாராட்டுதற்குரியவர்.

அந்த வாசகசாலை அவ்வூராரை நாகரிகப்படுத்துவதற்குப் பெரியதோர் சாதனமாக விளங்குகிறது. இங்ஙனம் அதனால் அவ்வூருக்குப் பலவித நன்மைகள் ஏற்பட்டு வருகின்றன என்பதை கனம் நரசிம்மையர் (சேலம் வக்கீல்), ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு, ஸ்ரீ கல்யாணசுந்தர முதலியார் முதலிய முக்கியஸ்தர்கள் தம் நற்சாக்ஷிப் பத்திரங்களாலே தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தச் சபையின் வருஷோத்ஸவக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன். என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னார்கள். எனக்கு ஒரு விஷயந்தான் முக்கியமாகத் தெரியும். அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்கக் கூடுமென்ற விஷயம்.

ப்ரஹ்லாதனைப் போன்ற தெய்வ பக்தியும், மன்மதனைப் போன்ற ஏக பத்தினி விரதமும் ஒருவன் கைக்கொண்டிருப்பானாயின், அவன் இந்த உலகத்திலேயே ஜீவன் முக்தியடைந்து, எல்லா அம்சங்களிலும் தேவ பதவி எய்தியவனாய், எப்போதும் மகிழ்ச்சி கொண்டிருப்பான் என்பது என்னுடைய கொள்கை. இந்தக் கொள்கையை நான் வேதபுராண சாஸ்த்ரங்கள், இதர மத நூல்கள், ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்கள், ஸ்ரீமான் ஐகதீஸ்சந்திர வஸுவின் முடிபுகள் என்னும் ஆதாரங்களாலே ருஜுப்படுத்தினேன். அங்குள்ள பெரிய வித்வான்கள் எல்லோரும் கூடி என்னுடைய தர்க்கத்தில் யாதொரு பழுதுமில்லையென்று அங்கீலாரஞ் செய்துகொண்டார். பிறகு மறு நாள் என்னை ஈரோட்டுக்கு வந்து வாய்க்கால் கரையில் ஒரு பொதுக்கூட்டத்திலே, ‘இந்தியாவின் எதிர்கால நிலை’ என்ற விஷயத்தைக் குறித்துப் பேசும்படி கேட்டுக்கொண்டார்கள். நான் உடம்பட்டேன். மறுநாள் கூட்டத்தைப்பற்றிய விஷயங்களை விவரித்துக் கொண்டு போனால் இந்த வியாசம் மிகவும் நீண்டு போய்விடும். ஆதலால் இன்று இவ்வளவோடு நிறுத்தி மற்றை நாள் சம்பவங்களைப்பற்றி நாளை எழுதுகிறேன்.

No comments:

Post a Comment