Saturday, August 18, 2012

பீடிகை - ஞானரதம்

பின்மாலைப் பொழுது. திருவல்லிக்கேணி, வீரராகவ முதலித் தெருவில் கடற்பாரிசத்தை நோக்கியிருக்கும் ஓர் வீட்டு மேடையின் மீது சிரமபரிகாரத்தின் பொருட்டு ஓர் மஞ்சத்தின்மீது படுத்துக் கொண்டிருந்தேன். ஆனந்தகரமான கடற்காற்று, நான் படுத்திருந்த முன்னறையிலே நான்கு பக்கங்களிலிருந்தும், கண்ணாடிச் சாளரங்களின் மூலமாகவும், புறக்கதவு நிலைகளின் மூலமாகவும், வந்து நிரம்பிய வண்ணமாக இருந்தது. அந்தக் காற்றும் பின்மாலை யொளியும் கலந்ததினால் உண்டாகிய தெளிவும் இன்பமும் என்னால் கூறிமுடியாது. "ஆகா! இப்போது போய் ஸ்நானம் செய்துவிட்டு, நேர்த்தியான ஒரு குதிரை வண்டியில் ஏறிக்கொண்டு, கடற்கரையோரமாகத் தெற்கே அடையாற்றுக்குப் போய், - வழியெல்லாம் காளிதாஸனுடைய சாகுந்தலத்தையேனும், அல்லது ஓர் உபநிஷத்தையேனுங் கொண்டுபோய்ப் படித்து இன்பமடைந்து கொண்டே திரும்பினால் நல்லது" என்ற சிந்தனை உண்டாயிற்று. ஆனால், என்னிடம் குதிரைவண்டி கிடையாது என்ற விஷயம் அப்போழுதுதான் ஞாபகத்திற்கு வந்தது.

"அடடா! மிகுந்த செல்வம் இல்லாததனால் - உலகத்தில் பல விதமாகிய இழிவான இன்பங்கள் மட்டுமல்ல, - உயர்ந்த இன்பங்கள்கூடப் பெறுவதற்குத் தடை ஏற்படுகிறதே!" என்று எண்ணினேன். அப்பொழுது, என் மனம் - "மூடா, சகல மனிதர்களிடத்திலும், ஈசன் ஞானம் என்பதோர் தெய்வீக ரதத்தைக் கொடுத்திருக்கின்றார். அது விரும்பிய திசைகளுக்கெல்லாம் போய் விரும்பிய காட்சிகளை யெல்லாம் பார்த்து வரக்கூடிய வல்லமை உடையது; அதைப் பயன்படுத்தி இன்பமடையாமல் எந்த நிமிஷத்திலும் உன்னைக் கீழே தள்ளித் தீங்கு செய்யக்கூடியதாகிய இழிவு மர வண்டியிலே ஏன் விருப்பம் கொள்கிறாய்?" என்றது. உடனே ஞானமாகிய ரதத்தைக் கொண்டு தயார் செய்து வைக்கும்படி எனது சேவகனாகிய "சங்கற்ப" னிடம் கட்டளையிட்டேன். ரதம் வந்து நின்றது. அதில் ஏறிக்கொண்டேன். ஆனால் எனது ஞானரதம் மற்றவர்களுடையதைப்போல் அத்தனை தீவிரம் உடையதன்று. எளிதாக நெடுந்தூரங் கொண்டு போகத் தக்கதும் அன்று. கொஞ்சம் நொண்டி. என்ன செய்யலாம்? இருப்பதை வைத்துக்கொண்டு தானே காரியங் கழிக்கவேண்டும்? ஆகவே, அந்த ரதத்தின் மீது ஏறிக்கொண்டேன். அதிலேறி நான் கண்டு வந்த காட்சிகளும் அவற்றின் அற்புதங்களுமே இந்தப் புஸ்தகத்தில் எழுதப்படுகின்றன.

No comments:

Post a Comment