Friday, August 17, 2012

குணமது கைவிடேல்

சுதேசிய முயற்சி நாட்டிலே தோன்றிய பிறகு பல விஷயங்களில் குணங் கண்டிருக்கிறோம். கைத்தொழில் அபிவிருத்தி, தேசீய வர்த்தகம், ஜனஐக்கியம், சுய பாஷைகளின் வளர்ச்சி முதலிய பல அம்சங்களிலே கைகண்ட பலன் பார்த்திருக்கிறோம். இதை நாம் இன்னும் எத்தனைக் கெத்தனை ஆவலுடன் பரிபாலித்து வருகிறோமோ அத்தனைக்கத்தனை நாடு பலவிதங்களிலேயும் க்ஷேமப்பட்டு வரும்.

ஆனால், சென்ற சில வருடங்களாக ஆங்கிலேய அதிகாரிகளிலே சில சில்லரை உத்தியோகஸ்தர்கள் தம்மவர்களாகிய ஆங்கிலேய வர்த்தகர்களுக்கு இதனால் நஷ்டமும் தமக்கே சில அசௌகரியங்களும் உண்டாவது கருதி, இதைச் சிலர் தப்பான வியாஜங்களைச் சொல்லி அடக்கிவிடப் பார்க்கிறார்கள். ஆட்டுக் குட்டியைத் தின்ன விரும்பிய ஓநாய், "ஏ ஆட்டுக்குட்டியே, நீ என்னைத் திட்டினாயாமே" என்று கேட்ட கதைபோல, இந்த ஆங்கிலேய உத்தியோகஸ்தர்கள், நம்மை இராஜ துரோகிகளென்று பொய்க்குற்றஞ் சார்த்தித் தண்டனைகள் செய்து நமது காரியத்தைக் கெடுத்துவிடப் பார்க்கிறார்கள். இங்ஙனம் ஆங்கிலேய அதிகாரிகளிலே பலர் பொய்யான கோப நடிப்பு நடித்துக் கொண்டு நம்மவர்களிலே சில முதல்வர்களுக்கு மிருகத்தனமான தண்டனைகள் விதித்து விட்டதினின்றும், "கிராமாந்தரங்களிலே சாமான்ய ஜனங்கள் சிலர் சுதேசியம் என்று சொன்னாலே ராஜாங்கத்தாருக்கு விரோதமாகலாம் என்றெண்ணி நடுநடுங்கி, தமது மனத்திற்குள்ளே நமது தர்மத்தில் அபிமானங் கொண்டவர்களாயிருந்தாலும் அச்சத்தினால் வெளிக்கு அசிரத்தை காண்பிக்கிறார்கள்.

இது நிஷ்காரணமான பயம். அவசியமற்ற மூடத்தனம். "வந்தே மாதரம்" (தாயை வணங்குகிறேன்) என்பது எந்தச் சட்டத்திற்கு விரோதம்? உள் நாட்டு சாமான்களையே கிரயத்துக்கு வாங்குவேன் என்ற விரதம் செய்து கொண்டால் எவனுடைய சட்டத்திற்கு விரோதம்? என் பணம், அதைக் கொடுத்து எனக்கு இஷ்டமான சாமான் வாங்கிக் கொள்ளுகிறேன். இதில் ராஜாங்கத்தார் ஏன் தலையிட வேண்டும்? கள், சாராயம் நாட்டிலே பரவாமல் தடுப்பதற்கு, ஆங்கிலேய ராஜாங்கத்தார் யாதொரு உதவியுஞ் செய்யாமல் தீர்வை லாபத்தைக் கருதி மதுபானத்தைப் பரவச் செய்துகொண்டு வருகிறார்கள். எத்தனையோ சீர்திருத்தச் சங்கத்தார்கள் (சுதேசிகள் மட்டுமல்ல, மாக்னிக்கல், சாமுவேல் ஸ்மித் முதலியபல ஆங்கிலேயர்களுங்கூட) இது கூடாதென்று முட்டி முட்டிப்பார்த்தும், ஆங்கிலேய கவர்ன்மெண்டார் சிறிதேனும் கவனிக்காமலிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment