10 பிப்ரவரி
1921 ரெளத்திரி தை 29
பத்திரிகைகளில் “பால்” வேற்றுமை
உயிரில்லாத வஸ்துக்களுக்குக்கூட ஆண்பால், பெண்பால் கற்பித்தல்
கவிகளின் வழக்கம். ஸம்ஸ்க்ருதம் முதலிய புராதன பாஷைகள் சிலவற்றிலும், ப்ரெஞ்சு, ஹிந்து
முதலிய நவீன பாஷைகள் சிலவற்றிலும், பெரும்பான்மையான பொருட்பெயர்களுக்கு மட்டுமேயன்றி,
குணப் பெயர்களுக்குங் கூடப் பால் வேற்றுமைகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த பாஷைகளைக் கற்போர்
சொற்களில் இறுதி யெழுத்துக்களைக் கொண்டும், நெடுங்கால அனுபவத்தைக் கொண்டும் இன்ன சொல்
இன்ன பாலைச் சேர்ந்ததென்று நிர்ணயித்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் தமிழ், இங்கிலிஷ்
முதலிய பெரும்பான்மையான பாஷைகளில் இந்தக் கஷ்டம் கிடையாது. “மக்கள், தேவர், நரகர் உயர்
திணை. மற்றுயிருள்ளவும், இல்லவும் அஃறிணை” என்ற தமிழிலக்கண விதியே பொதுவாக எல்லா பாஷைகளுக்கும்
பொருந்தி நிற்கிறது. எனினும், இப்போது சிறிது காலமாகத் தமிழிலேயே, பத்திரிகைகளின் பெயர்களுக்குச்
சிலர் ஆண்பால், பெண்பால் வகுக்கத் தொடங்கியிருப்பது மிகவும் விநோதமாகத் தோன்றுவதால்,
இங்கு அதைக் குறித்து எழுத நேர்ந்தது. முதலாவது இவ்வழக்கம் “தேச பக்தன்” பத்திரிகையில்
தொடக்க மெய்திற்றென்று நினைக்கிறோம். அப் பத்திரிகையின் பழைய பத்திராதிபராகிய ஸ்ரீமான்
கலியாண ஸுந்தர முதலியாருடைய காலந்தொட்டே அதில், “சுதேச மித்திரன் சொல்லுகிறேன்”, “தேச
பக்தன் சொல்லுகிறான்” என்பன போன்ற பிரயோகங்கள் வழங்கி வருகின்றன. இப்போது ஸ்ரீமான்
முதலியார் நடத்திவரும் “நவசக்தி”ப் பத்திரிகையிலும் அவ்வழக்கமிருந்து வருகிறது. எனவே,
சில தினங்களுக்கு முன் ஏதோ தொழிலாளர் விஷயமாக மேற்கூறிய இரண்டு பத்திரிகைகளுக்குள்ளே
எழுந்திருக்கும் விவாதம் மிகவும் ரஸமாக இருக்கிறது. “தேச பக்த”னை ஆண் பாலாக்கி ஸ்ரீ
முதலியார் எழுதி வருகிறார். “தேச பக்தன்” புதிய பத்திராதிபரோ, “நவ சக்தி”யைப் பெண்
பாலாக்கிவிட்டார்! திருஷ்டாந்தமாக மேற்படி ஆண்பால் பத்திரிகையிலுள்ள பின்வரும் வசனங்களைக்
கவனியுங்கள். “தேச பக்தன் தன் பிரதியை ஏன் அனுப்பவில்லை யென்று நவசக்தி கேட்கிறாள்”,
“அவர் சொல்லி யனுப்பியதையும் நவசக்தி மறந்துவிட்டாள் போலும்.” இந்தப் புதிய வழி ரஸமாகத்தான்
இருக்கிறது. ஆனால் இதைப் பொது வழக்கமாக்க முயன்றால், பலவித ஸங்கடங்கள் ஏற்படுமென்று
தோன்றுகிறது. முக்யமாக, அன்யபாஷைப் பத்திரிகைகளைக் குறித்துப் பேசுமிடத்தே தான் அதிகக்
கஷ்டம்; “லண்டன் டைம்ஸ்”, “ஈவினிக் ந்யூஸ்” என்பன பலவின்பாற் பெயர்களாதலால் ‘டைம்ஸ்
சொல்லுகின்றன’, ‘ஈவினிங் ந்யூஸ் பரிஹாஸம் பண்ணுகின்றன’ என்றெழுத நேரும்! மேலும் ‘பெர்லினர்
தகப்ளாத்’, ‘ப்ராங்க் புர்த்தெர் ஜெய்துங்’ என்பவை போன்ற ஜெர்மானியப் பத்திரிகை நாமங்கள்
ஆண்பாலோ பெண்பாலோ, ஒன்றன்பாலோ, பலர்பாலோ, பலவின்பாலோ அறிகிலோம். இவை போன்ற சிரமங்களைக்
கருதி ஸாதாரணமாக, வழக்கம் போலவே, எல்லாப் பத்திரிகைகளின் பெயர்களையும் ஒன்றன் பாலாகவே
வழங்கி விடுதல் நன்றென்று நினைக்கிறேன்.
“யானைக்கால்” வியாதிக்கு முகாந்தரம்!
தென் இந்தியாவில் ஒரு நகரத்தில் ஒரு செல்வமிகுந்த வியாபாரிக்கு
இரண்டு கால்களிகும் யானைக்கால் நோய் வந்து கால்கள் உரல்களைப் போலாய்விட்டன. ஆனால் அந்தச்
செட்டியார் தமக்கு யானைக்கால் நோயென்று சொல்ல மனமில்லாமல், யாராவது, “காலிலே என்ன?”
என்று கேட்டால் தம்மிடம் மோட்டார் சைக்கிள் வண்டியிருப்பதாகவும், அதில் ஏறிச் செல்லும்போது,
அது தம்மை எங்கேயோ மரத்தில் மோதிக் கீழே தள்ளிவிட்டபடியால் கால்கள் வீங்கி யிருக்கின்றன
என்றும் சொல்வதுண்டு. அதுபோல் ஆங்கிலேய ராஜ தந்திரிகளில் சிலர் தமது தேசத்திலேற்பட்டிருக்கும்
வறுமைக்கும் பணத்தட்டுக்கும் காரணம் சொல்லும் போது தங்கள் தேசத்தில் செழித்துக் கிடக்கும்
செய்பொருள்களை மற்ற ஐரோப்பிய தேசந்தார்கள் விலைக்கு வாங்க முடியாதபடி பரம ஏழைகளாய்
விட்டபடியால் தங்களுடைய வியாபாரம் வீழ்ச்சி பெற்றிருப்பதாகவும் அதனால் பணக் கஷ்டம்,
தொழிலின்மை மிகுதி முதலியன தோன்றிவிட்டதாகவும் “ஷரா” சொல்லுகிறார்கள். ஆனால் மேற்கூறிய
இதர ஐரோப்பிய தேசங்களின் ராஜதந்திரிகள் தத்தம் நாடுகள் ஏழ்மைப்பட்டதற்கு என்ன முகாந்தரம்
சொல்லித் தப்புகிறார்களோ தெரியவில்லை. அவர்கள் இங்கிலாந்தின் மீது குறை சொல்லுகிறார்களோ
அல்லது, ஆசியாவைக் காண்பிக்கிறார்களோ அறியோம்.
புதிதாகச் சென்னை நிர்வாஹ ஸபையில் சேர்ந்த பிராமணரும், (பஞ்சமரும்,
ஐரோப்பியருமாகிய பிறரும்) அல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள் தமிழர்களும் அல்லாதார்
என்பதைத் தமிழராகிய பிராமணரும் (பஞ்சமரும் பிறரு)மல்லாதார் ஒருவன் என்னிடம் வந்து முறையிட்டார்.
ஹும்! இந்தபாஷை சரிப்படாது. நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன். தமிழ் வேளாளரொருவர்
இப்போது மந்திரிகளாகச் சேர்ந்திருக்கும் ரெட்டியாரும், நாயுடும், ஸ்ரீ ராமராயனிங்காரும்
தெலுங்கர்களென்றும், தமிழ் நாட்டுக்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க
செய்தியென்றும் என்னிடம் வந்து முறையிட்டார்.
“ஐஸ்டிஸ் பாடம்”
எனக்கு “ஜஸ்டிஸ்” பத்திரிகையில் வாசித்த வியாஸமொன்று மேற்படி
கதை கூறி வருகையிலேயே ஞாபகத்துக்கு வருகிறது. அதில் அந்த “ஜஸ்டிஸ்” பத்திராதிபர் “ஹிந்து”
பத்திராதிபருக்குப் பல பல ஞனோபதேசங்கள் செய்திருக்கிறார். அவற்றின் மொத்தக் குறிப்பு
யாதென்றால் ஆங்கிலேய அதிகாரிகளின் ஆட்சியை இந்த க்ஷணமே பஹிஷ்காரம் செய்துவிட வேண்டுமென்ற
“காங்கிரஸ்” கக்ஷியைச் சேர்ந்த பத்திராதிபர் யார் மந்திரியாக வந்தாலும் கவனிக்கக் கூடாதென்பது.
அவர்களிடமுள்ள குணதோஷங்களை எடுத்துக் கூறவும், அந்த ஸ்தானத்துக்குப் பிறரை சிபார்சு
செய்யவும் “ஹிந்து”வுக்குத் தகுதி கிடையாதென்பது.
ஏன் தகுதி கிடையாது? அதைக் குறித்துத் தர்க்கமெப்படி? “ஹிந்து”
ஜனங்களுக்குப் பிரதிநிதி; அதிகாரிகளுக்கு விளக்கு. ஜனங்களுடைய நன்மைக்கிசைந்தவாறு அதிகாரிகள்
நடக்கும்படி கவனிக்க வேண்டியது அந்தப் பத்திரிகையின் கடமை. இந்த ராஜாங்கத்தை மாற்றி
இதைக் காட்டிலும் தர்மமான ராஜாங்கம் ஸ்தாபிக்க வேண்டுமென்று நாங்கள் முயற்சி செய்கிறோம்.
இதனிடையே இந்த அதிகாரிகள் எங்கள் வீடுகளில் தீயைக் கொளுத்தினால் நாங்கள் ஒன்றும் பேசாமல்
வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டுமென்று “ஜஸ்டிஸ்” பத்திராதிபரின் தர்க்க சாஸ்த்ரம் போதிக்கிறதா?
நாங்கள் ராஜாங்கத்தைப் புதுப்பிக்க விரும்புவது பற்றி நாங்கள் இவர்களுக்கு உதவி செய்வதை
நிறுத்துவோம். இவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டனம் செய்துகொண்டிருப்போம். ஜனங்களுக்கெடுத்துக்காட்டி,
அந்த உபாயத்தின் மூலமாக, இவர்கள் தங்கள் தவறுகளை நீக்கிக் கொள்ளும்படி வற்புறுத்துவோம்.
ஜன கோபத்துக்கு இவர்கள் எப்போதும் அஞ்சித் தீரவேண்டுமென்பதை நாம் அறிவோம். எனவே இவர்களுக்கும்
நமக்குமிடையே நிகழ்ச்சி பெற்றுவரும் தர்ம யுத்தத்தில் அந்த அறிவைப் பயன்படுத்தாமல்
விடமாட்டோம். எங்களுடைய தர்க்கம் “ஜஸ்டிஸ்” பத்திரிகைக்குத் தெளிவுபடுகிறதென்று நினைக்கிறோம்.
அன்னிய வஸ்து பஹிஷ்காரம்
“ஹிந்து” பத்திராதிபரிடம் “ஜஸ்டிஸ்” பத்திராதிபர் மற்றொரு குற்றம் கண்டு பிடிக்கிறார்.
அதாவது, அன்ய வஸ்து பஹிஷ்காரத்தை ஜனங்களுக்குப் போதித்துவிட்டுத் தாம் அன்ய வஸ்துக்களின்
விளம்பரங்களுக்குத் தமது பத்திரிகையில் இடங்கொடுக்கிறாரென்ற குற்றம்! சபாஷ்! இந்தக்
குற்றத்துக்காக “ஹிந்து” பத்திராதிபருக்குப் பெருந் தண்டம் விதிக்கலாம்! அதிலும் “ஜஸ்டிஸ்”
பத்திரிகை நம்மை ஐரோப்பிய வியாபாரிகளுடைய விளம்பரம் போடும் குற்றத்துக்காகத் தண்டனைக்குட்படுத்த
அதிகாரமுடையது! ஐரோப்பிய ஸம்பந்தமே அங்கில்லையே! இது குற்றமென்று “ஜஸ்டிஸ்” சொல்வது
பேதமை. விளம்பரங்களில்லாமல் இக்காலத்தில் பத்திரிகை நடத்த முடியாது. இந்த இந்தியருக்குத்
தெரியும். ஆதலால் பத்திரிகைக்குள்ளே பத்திராதிபர் எழுதியிருக்கும் கருத்தைக் கவனித்து
நடப்பார்களேயன்றி விளம்பரத்தைக் கவனித்து தேசக் கடமையை நிர்ணயிக்க மாட்டார்கள். “ஹிந்து”
பத்திரிகையில் “சுருட்டு” விளம்பரம் போட்டிருக்கிறது. அதனின்றும் “ஹிந்து” பத்திராதிபர்
உலகத்தாரையெல்லாம் புகையிலைச் சுருட்டுக் குடிக்கும்படி வற்புறுத்துகிறாரென்று நிச்சயித்தல்
பொருந்துமா? “ஜஸ்டிஸ்” பத்திரிகையில் “காந்தி சரித்திரம்” என்ற புஸ்தகத்தின் விளம்பரம்
ப்ரசுரிக்கப்பட்டால அதனின்றும் “ஜஸ்டிஸ்” பத்திராதிபர் மஹாத்மாவின் கொள்கைகளைப் பரப்ப
விரும்புகிறாரென்று நிச்சயித்து விடலாமா? “ஹிந்து” விளம்பரங்களைப் பிரசுரம் செய்வதை
நிறுத்திவிட்டால், ஜஸ்டிஸின் வருமானம் அதிகப்படுமென்பது அப்பத்திரிகையின் ஆட்சேபத்திற்குக்
காரணமோ?
அப்படி நிச்சயிக்கும்படி இந்தியர்கள் அத்தனை மூடர்களல்லர், மேலும்,
மனம் வேறு, சொல் வேறு, செயல் வேறாக நிற்பது தவறென்று “ஜஸ்டிஸ்” பத்திராதிபர் பிறருக்கு
போதிப்பதைப் பார்த்து எனக்கு மேன்மேலும் நகைப்பு விளைகிறது.
No comments:
Post a Comment