Sunday, July 8, 2012

அனந்த சக்தி

எறும்பு இறந்துபோன புழுவை இழுத்துச்செல்லுகிறது; எதனால்? சக்தியினால். தூமகேது அநேகலட்சம் யோசனை தூரமான தனது வாலை இழுத்துக்கொண்டு திசைவெளியில் மஹா வேகத்தோடு சுழலுகின்றது; எதனால்? சக்தியினால். அந்த தூமகேது எழுபத்தைந்து வருஷத்தில் ஒரு மண்டலமாகத் தன்னைச்சுற்றிவரும்படி சூரிய கோளம் நியமிக்கிறது; எதனால்? சக்தியினால்.

ஓர் கன்னிகை பாடுகிறாள். நெப்போலியன் ஐரோப்பாக் கண்டம் முழுவதையும் வெல்லுகிறான். இவை இரண்டிற்கும் "சக்தியே ஆதாரம். கண்ணுக்குப்புலப்படுவதும், ஊக்கத்திற்குப் புலப்படுவதுமாகிய வெளியுலகங்கூட எல்லையற்றதென்று பண்டிதர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த எல்லையற்ற உலகத்தை இயக்கும்சக்தி தானும் எல்லையற்ற தாகும். அநந்தமானது; அதனிலும் பெரிது. இவ்வித சக்தியை மனிதன் பாவனை செய்வதால்பலவிதப் பயன்களுண்டு ."யத்பாவயஸி தத் பவஸி," எதனைப் பாவிக்கிறாயோ நீ அதுவாக ஆகின்றாய்.

ஆனால், இங்ஙனம் பாவனை செய்வது லேசானகாரியமென்று நினைத்துவிடலாகாது. உயிர் தழும்பியதும் கனல்வதுமான சிரத்தையுடன் பாவனை செய்ய வேண்டும். இதனை வீண் கதையென்று நினைத்து விடவேண்டாம். விடாமல்அனுஷ்டானம் செய்து பார்த்தால் இதன் பயன் தெரியும்.

ஞானிகளென்றும் யோகிகளென்றும் சொல்லப்படுவோர், இந்த சக்தியை, மனதறிந்து சில முறைகளை அனுஷ்டித்து பெறுகிறார்கள். ஸாமான்ய ஜனங்கள் விஷயம்தெரியாமல் இயற்கை முறையிலே சிறிது பெற்றவர்களாகின்றனர்.சக்தி சிறிதும் இல்லாவிட்டால், ஒருவன் க்ஷண நேரங்கூடமூச்சு விட்டுக் கொண்டு இவ்வுலகத்தில் இருக்க முடியாது. வெளிக் காற்றிலே உலவி அத்துடன் யோகப்படுவதால் சக்திஉண்டாகிறது. சரீரத்தை உழைப்புக்கு உட்படுத்துவதால் இடைவெளியெங்கும் ததும்பிக் கிடக்கும் சக்தி அதனுள்ளேகுடி கொள்ளுகிறது. அறிவைப் பல ஷயங்களிலே சிரத்தையுடன் செலுத்தி உழைப்பதனால் சக்தி உண்டாகிறது. இங்ஙனம் சிறிதுசிறிது ஏற்படும் சக்தியினாலேயேதான் உலகத்தில் மனிதர்கள் ஜீவித்திருக்கிறார்கள்.

தமிழ் ஜனங்களுக்குள் சக்தி மேன்மேலும் பெருகச் செய்ய வேண்டுமென்பது நமது நோக்கம். இந்தநோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டாகவே நாம் உயிர்தரிக்கின்றோம். ''மாதா'' இந்த நாட்டு ஜனங்களுக்குச் சக்தியதிகரிக்கும்படி செய்க; அக் காரியத்தை நிறைவேற்றுதற்குரிய சக்தியை எனக்கருள் புரிக'' என்றுநம்மில் ஒவ்வொருவனும் தியானம் புரிய வேண்டும். ஆட்டம் ஆடுதல், கூத்து முதலியவை, மற்போர்முதலியவற்றிலே பழகுதல், பாடுதல், தர்க்கம், வாதம், தவம், பிரமச்சரியம், சுத்தம் முதலியவற்றால் ஓர் ஜாதிக்குசக்தி அதிகப்படுகிறது. மனம், வாக்கு, செயல் மூன்றும்சுத்தமாக இருக்கவேண்டும். உள்ளும் புறமும் மாசில்லாதுசெய்யப் பழகவேண்டும். பயம், ஸந்தேஹம், சலனம்மூன்றையும் வெறுக்க வேண்டும். இதனால் சக்தியேற்படும்.

புராதன ஸம்பிரதாய மென்பதால் மட்டுமே ஒன்று பொய்யாய்விடமாட்டாது; புதியதென்பதால் மாத்திரமே ஒன்றை மெய்யாகக் கொண்டு விடுதலும் பிழை. ஆராய்ந்து, அனுபவத்தால் பார்க்குமிடத்தேதான், ஒருவிஷயத்தின் மெய்மையும் பொய்ம்மையும் விளங்கும். நமது முன்னோர்கள் "யோகம்" என்றதோர் மார்க்கம் ஏற்படுத்தி யிருக்கிறார்கள். இஃது ஹடயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என நான்கு வகைப்படும்.இவற்றில் ஹடயோகந்தான் மிகக் குறைந்த பயன் தரக்கூடியது; மற்ற மூன்றிலும் அனந்த சக்திகள் பெறலாம்.விஷயம் தெரியு முன்பாகவே, ''இதில் பயனென்ன விளையப் போகிறது'' என்று சந்தேகப்படுதல் தெளிந்தோர் செய்யும் காரியமன்று; அவற்றை ஆராய்ச்சி செய்து பார்க்கவேண்டும். அங்ஙனம் சாதனை செய்தவர்களுக்கு பலவிதஅபூர்வ சக்திகளுண்டாயிருப்பதைக் கண்ணாரக் காண்கிறோம்.நமக்கும் ஏன் இந்த சக்திகள் ஏற்படக் கூடாது?

இந்த மூடத் தமோ குணத்தால் என்ன சுகங்கள்கண்டு விட்டோம்? சோம்பராலும் அற்ப விஷயங்களிலேஆசை கொண்டு மனதைக் கடலில் அகப்பட்ட துரும்புபோலச் சலிக்க விடுவதாலும் என்ன பேறுகள் பெற்றுவிட்டோம்?

துணிவு, உள்ளத் தூய்மை, ஏதாவதொரு மகத்தானலட்சியத்திலே அறிவை ஆணி கொண்டடித்ததுபோலப்பற்றுறச் செய்து கொள்ளுதல், லாப நஷ்டங்களிலே சிந்தனைஇல்லாமை - இவைதான் யோகத்தின் இரகசியம்.

No comments:

Post a Comment