Thursday, July 26, 2012

நேசக் கக்ஷியாரின் “மூட பக்தி”


11 பிப்ரவரி 1921

“ரெயிக் ஸ்தாக்” என்ற ஜெர்மன் ஜனப் பிரதிநிதிகளின் ஸபையில் ஹெர் வோன் ஸிமோன்ஸ் என்ற ஜெர்மானிய மந்திரி சில தினங்களின் முன்பு நேசக் கக்ஷியாரின் பாரீஸ் ஸமாஜத்தில் முடிவு செய்யப்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகைகளைப் பற்றிப் பேசுகையில், ஜெர்மனியுடன் ஸமரஸமான வாதங்கள் செய்து பெறக்கூடியதைக் காட்டிலும் ஜெர்மனிக்குக் “கட்டளை” பிறப்பிப்பதனால் அதிகம் பெறக்கூடுமென்ற மூட பக்தியை நேசக் கக்ஷியார் நீக்கிவிடுதல் தகுமென்று எச்சரிக்கை செய்தார். ஏற்கெனவே ப்ருஸ்ஸெல்ஸ் நகரத்தில் நடைபெற்ற அர்த்த சாஸ்த்ர நிபுணர்களின் ஸங்கத்தில் ப்ரெஞ்ச் பிரதிநிதியாகிய ஸ்ரீமான் லேதூ என்பவரால் திட்டஞ் செய்யப்பட்டு மற்ற ஆங்கில, ப்ரெஞ்சு அதிகாரிகளாலும் அங்கீகரிக்கப் பெற்றிருக்கும் ஏற்பாட்டை நேசக் கக்ஷியார் இங்ஙனம் திடீரென்று கைவிட்டு விட்டதைக் குறித்து ஹெர் வோன் ஸிமோன்ஸ் வியப்புத் தெரிவித்தனர். லண்டனில் நடத்தப்போகிற ஸபைக்கு ஜெர்மன் பிரதிநிதிகளையும் அமைக்கப் போவதாக மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜின் கருத்து. ஆனால் அதன் ஸம்பந்தமான அழைப்புக் கடிதம் இன்னும் தங்கள் வசம் கிடைக்கவில்லையாதலால், அந்த ஸபையில் சேர்வதா, அல்லது அதை பஹிஷ்காரம் செய்வதா என்பதைக் குறித்து இன்னும் ஜெர்மானியர் நிச்சயமுறைக்க இயலாதென்று வோன் ஸிமோன்ஸ் கூறினார் ஆயினும், நேசக் கக்ஷியாரின் தீர்மானங்களை ஆதாரமாகக் கொண்டு மேலே விவாதங்கள் நடத்துவது ஸாத்யமில்லையென்றும், அத்தீர்மானங்களுக்கெதிரிடையாக ஜெர்மானிய ஆலோசனைகளை வெளியிடப் போவதாகவும் அந்த மந்திரி தெரிவித்தார்.

நேசக் கக்ஷியாரின் பாரீஸ் தீர்மானங்களின்படி ஜெர்மனி நாற்பத்திரண்டு வருஷங்களில் இருபத்தீராயிரத்து அறுநூறு கோடி (26000,000,000) தங்க “மார்க்” அல்லது முந்நூராயிரங் கோடி (3000,000,000,000) காயித “மார்க்” செலுத்த வேண்டுமென்றும்,  அதனுடனே, இன்னும் 42 வருஷங்கள் வரை ஜெர்மனியின் ஏற்றுமதிகளில் கிரயத்தில் 100க்கு 12 வீதம் செலுத்திக் கொண்டு வரவேண்டு மென்றும் விதிக்கப்பட்டிருக்கிறது. பிந்திய வகையில் இன்னும் ஓரிரண்டாயிரம் கோடி “மார்க்” அதிகமாகத் தட்டலாமென்று நேசக் கக்ஷியார் நினைப்பதாக வோன் ஸிமோன்ஸ் சொல்லியபோது ரெயிக் ஸ்தாக் அங்கத்தினர் நகைத்தார்களென்று ராய்ட்டர் தந்தி தெரிவிக்கிறது. இதினின்றும் ஜெர்மானியர் நஷ்ட ஈட்டுத்தொகை செலுத்தும் விஷயத்தில் நேசக் கக்ஷியாரின் கட்டளையை உடனே எதிர்ப் பேச்சில்லாமல் நிறைவேற்றுவார்களென்று நினைக்க இடமில்லாமலிருக்கிறது. இந்தத் தீர்மானங்களை ஜெர்மானியர் அங்கீகரியாவிடின், அவர்களுக்கு விதிப்பதாக எண்ணியிருக்கும் தண்டனைகளுக்கிடையே அவர்களை ஸர்வதேச ஸங்கத்தில் சேர்க்கமாட்டோமென்ப தொன்று. ஆனால் அந்த ஸங்கத்தில் தன்னைச் சேர்த்துக் கொள்ளும்படி ஜெர்மனி இன்னும் பிரார்த்தனையனுப்பவில்லை யாதலால், அந்த தண்டனை அதிகமாகப் பொருட் படுத்தத் தக்கதன்றென்று வோன் ஸிமோன்ஸ் குறிப்பிட்டபோது “ரெயிக் ஸ்தாக்” அங்கத்தினர் கரகோஷம் புரிந்தார்களாம்.

அமெரிக்கப் பத்திரிகைகளிற் பெரும்பாலனவும் ராஜதந்திரிகளிற் பெரும்பாலோரும், இவ்விஷயத்தில் ஜெர்மனிக்கனுகூலமாகவே பேசுதல் குறிப்பிடத்தக்கது. ஜெர்மானியரால் இந்த பாரத்தைச் சுமக்க முடியாதென்றும், இந்த ஏற்பாட்டிலிருந்து அமெரிக்க வியாபாரத்துக்கு இடையூறு விளையுமென்றும் அமெரிக்காவில் பலமான நம்பிக்கை யேற்பட்டிருப்பதாக ராய்ட்டர் தெரிவிக்கிறார். ஜனாதிபதி வில்ஸனுடைய பத்திரிகையாகிய “நியூயார்க் உலகம்” என்பது- ‘ஜெர்மன் ஏற்றுமதிகளின் மீது விதிக்கும் தீர்வையால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் வஸ்துக்களின் அளவு குறைந்துவிடும். இதினின்றும் விளைபொருள் வாங்குவதற்கு வேண்டிய நாணயம் ஜெர்மனிக்குக் குன்றிப் போகும். எனவே ஜெர்மனி மீளவும் உத்தாரணம் பெறுதல் இயலாது போய்விடும்’ என்றெழுதுகிறது.

இவ்வாறு அமெரிக்காவில் ஜெர்மனிக்குத் தக்க உபபலமிருப்பதைக் கருதுமிடத்தே, வோன் ஸிமோன்ஸ் சொல்லியபடி நேசக் கக்ஷியாரின் திட்டம் வெறும் மூடபக்தியாகத்தான் முடியுமென்ற எண்ணம் எவருக்குமுண்டாகக்கூடும். ஆனால், இங்ஙனம், மஹாயுத்தத்தால் நேசக் கக்ஷியார்களுக்கு விளைந்திருக்கும் நஷ்டங்களை சிரமமில்லாமல் ஜெர்மனியின் தலையில் கட்டித் தாம் தப்பிவிடலாமென்று கருதும் மூட பக்தியைக் காட்டிலும் மற்றொரு பெரிய மூட பக்தியிருக்கிறது. அதைக் குறித்துச் சில வார்த்தைகள் சொல்லுதல் நமது கடமை என்று நினைக்கிறோம். அந்த மூட பக்தி நேசக் கக்ஷியாருக்குள்ளே பொதுவாக இருப்பினும், அவர்களுக்குள் மந்திராலோசனை முதலிய விஷயங்களில் தலைமை பூண்டிருக்கும் இங்கிலாந்தினிடம் மிகவும் விசேஷமாகக் காணப்படுகிறது. இதனை ஒரு திருஷ்டாந்த மூலமாக விளக்குகிறோம்.

ரெயிக் ஸ்தாக்கில் மேற்கூரிய ஸ்ரீ ஸிமோன்ஸின் உபந்யாஸம் இந்த மாஸம் (பெப்ருவரி) முதல் தேதியன்று நடைபெற்றது. அதே முதல் தேதியன்று ஐர்லாந்தில் கார்க் நகரத்தில் ராணுவ விசாரணைக் கொலைத் தண்டனையொன்று நினைவேற்றப்பட்டது. ராணுவ விசாரணையின் தீம் இதுதாஅன். முதலாவது கொலைத் தண்டனை யென்று ராய்ட்டர் தெரிவிக்கிறார். கொரி யென்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவனிடம் அனுமதிச் சீட்டில்லாத கைத் துப்பாக்கி யொன்றிருந்ததாகக் குற்றஞ்சாற்றி, அக்குற்றத்துக்காக அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அடக்கு முறைகளால் ஐர்லாந்துக் கலகத்தை நசுக்கிவிடத் தீர்மானஞ் செய்திருக்கிறார்களென்று இதனால் நன்கு விளங்குகிறது. இதைத்தான் நாம் பரம மூடபக்தியென்று சொல்லுகிறோம். ஜனங்கள் ஏற்கெனவே கொடுமையை எதிர்த்துக் கலகம் புரியும்போது, அந்தக் கலகத்தை அடக்க இன்னும் அதிகக் கொடுமையை வழங்குதல் உபயோகமற்ற தீமையை மிகுதிப்படுத்தக் கூடிய – முறை யென்பதை உலக சரித்திரம் மீட்டும், மீட்டும், மீட்டும் எத்தனையோ திருஷ்டாந்தங்களால் விளக்கியிருக்கிறது. எனினும் அதே முறையைத்தான் ஸிரியாவில் ப்ரான்ஸ் தேசத்தார் கையாள முயலுகிறார்கள். மெஸபொடோமியாவிலும் அராபியாவிலும் ஆங்கிலேயர் அதைத்தான் கையாண்டு வருகிறார்கள். அச்சம், சினம் முதலிய சித்த விருத்திகள் தோன்றும் போது ஸாதாரன மனிதர் புத்திதவறி வேலை செய்தல் ஸஹஜம். அந்த ஸமயத்தில் ஜனங்களுக்கு யுக்தி, அனுபவம், சாஸ்திரம் என்ற மூன்று வித ப்ரமாணங்களும் மறந்துபோய் விடுகின்றன. எனவே புத்தி ஹீனமான கார்யங்கள் செய்து பெரிய நஷ்டங்களுக்குள்ளாகின்றனர். 

ஆனால், இவ்விதமான கார்யங்களை ராஜாங்கத்து மந்திரிகள் செய்வாரானால், அவர்கள் ராஜ்ய பாரத்துக்குத் தகுதியற்றோராய் விடுகிறார்கள். மேலும், மனுஷ்ய ஸஹோதரத்வம், ஸமத்வம் இவை ஐர்லாந்துக்குண்டா, இல்லையா? அரபியாவுக்கும் மெஸபொடோமியாவுக்கும், இந்தியாவுக்கும், எகிப்துக்கும் அவை உண்டா, இல்லையா? இல்லையெனில், ஏன் இல்லை? தெய்வ விதிகளுக்கு மாற்றில்லை. கொடுமையும் அநீதியும் செய்வோர் கொடுமைக்கும் அநீதிக்கும் இரையாவர். பிறரை அடிமைப்படுத்துவோர், தாம் அடிமைகளாக்கப்படுவர். அநியாயம், ஸமத்வ விரோதம் முதலியவற்றால் ஐரோப்பிய மஹாயுத்தத்தில் அபாரமான கஷ்டங்களுக்குட்பட்டும், ஐரோப்பிய ராஜதந்திரிகளுக்கு இன்னும் புத்தி தெளியாமலிருப்பது பற்றி விசனப்படுகிறோம்.

No comments:

Post a Comment