செப்டம்பர் 8, 1906
சீனா தேசமானது இந்தியாவைக் காட்டிலும் ஜனத்தொகையிலே பெரியது;
இந்தியாவைப் போலவே மஹா புராதனமான நாகரீகம் உடையது என்ற போதிலும், கால அளவில் அது சிறிது
சிறிதாக நாகரீகக்குறை வடைந்து போய் நவீன நாகரீகம் பெற்ற மேற்கு தேசத்தார்களால் சிறிதேனும்
மதிக்கப் பெறாத நிலைக்கு வந்துவிட்டது.
ஆனால், ஜப்பான் மேல் திசையாருக்கு பாடம் கற்பித்துத் கொடுத்த
பிறகு கிழக்குத் திசை நாடுகள் எல்லாவற்றுக்கும் புதிய உயிர் பிறந்திருக்கிற தல்லவா?
மேலும், சீனா இந்தியாவைப்போல பராதீனப்பட்ட நாடில்லை. சுயாதீன சம்பத்துடையது. ஆதலால்,
அது எளிதில் அபிவிருத்தி பெறுவதைத் தடுக்க எதிரிகள் அதிகமாகவில்லை. எனவே, சீனா ஜப்பானுடைய
திருஷ்டாந்தத்தால் உற்சாகம் பெற்றுத்தான் நாகரீகமடைந்து உலகத்து ஜாதியாருக்குள்ளே நிலைமையடைவதற்கு
மிகவும் ஆவலுடன் பிரயத்தனங்கள் செய்து வருகிறது.
- சேனைகள் நவீன முறைப்படி தயார் செய்யப்படுகின்றன.
- இளைஞர் அன்னிய தேசங்களுக்கு ராஜாங்கச் செலவில் அனுப்பப்பெற்று அன்னிய கைத்தொழில் முறைகள், நாகரீக புதுமைகள், சாஸ்த்ராபிவிருத்திகள் என்பனவற்றை பெற்றுத் திரும்புகிறார்கள்.
- மேற்கூறியவர்களுக்கே நாட்டில் உயந்த உத்தியோகங்கள் கொடுக்கப்படுகின்றன.
- பெண்கல்வி அபிவிருத்தியின் பொருட்டாகச் செய்யும் முயற்சிக்கு அளவில்லை.
- உள்நாட்டிலேயே பல புதிய காலேஜ்களேற்படுத்தி நாகரீக தேசங்களிலிருந்து தக்க நிபுணர்களைத் தருவித்துக் கல்வி போதிக்கப்பட்டு வருகின்றது.
- கீழ்தர ஜனங்களுக்குள்ளேயும் கல்வி பரவும் பொருட்டாகப் பல முயற்சிகள் நடைபெறுகின்றன. இவை போன்ற அபிவிருத்திகள் எத்தனையோ உள.
இப்போது சிறிது காலமாக ஜனப்பிரதிநிதிகளை வைத்து ஆட்சி நடத்தும் மேல்நாட்டு முறைமை அனுசரிக்க வேண்டுமென்று ஆலோசனை நடைபெற்று வந்தது. ஜனப் பிரதிநிதிகளாலே ஜனங்கள் ஆளப்பெறுவதும், மனுஷ சுதந்திரமே தேசாபிவிருத்திக்கு இன்றியமையாத விஷயங்களென்றும் உலக சரித்திரம் நமக்கு நன்கு புலப்படுத்திவிட்டது. ஆதலால், இந்த பெரு விஷயத்தைப் பற்றி சீன கவர்ன்மெண்டார் கருதத் தொடங்கியது மஹா சந்தோஷகரமான சமாசாரம். இதன்பின், சீன சக்ரவர்த்தி “தேச ஜனங்கள் பக்குவநிலை அடைந்தவுடனே” பிரதிநிதியாட்சி முறைமை ஏற்படுத்தத் தான் தயாராயிருப்பதாக ஒரு சன்னத்துப் பிறப்பித்திருக்கிறாரென்பதாக ஓர் தகவல் கிடைத்திருக்கிறது. சுயாதீனப் பிரியர்களாகிய எல்லோர் மனதிலும் இது மகிழ்ச்சியுண்டாக்குமென்று நம்புகிறோம்.
சீனா தனது தூக்க நிலையிலிருந்து எழுந்துவிட்டதானால் பிறகு கீழ்த்திசை முழுவதும் உன்னத நிலைக்கு வந்துவிடுமென்பதில் சந்தேகமில்லை. இது நிற்க, சீன சக்கரவர்த்தியின் சன்னத்திலே “தேச ஜனங்கள் பக்குவ நிலையடைந்தவுடனே” என்று எழுதப்பட்டிருப்பது சிறிது அபிவிருத்திக்கு இடமாயிருக்கிறது. சுயாதீனம் கொடுத்துத்தான் ஜனங்களை சுயாதீனத்துக்கு தகுதியாக்க வேண்டும், அவர்கள் தகுதியடையும் வரை பார்த்திருந்து பிறகு கொடுக்கலாமென்பது மூடத்தனமான யோசனை. நீச்சுத் தெரிந்த பிறகுதான் தண்ணீரில் இறங்கலாமென்பது எவ்வளவு மடமை?
No comments:
Post a Comment