கடலின்மீது கதிர்களை வீசிக்
கடுகி வான்மிசை ஏறுதி யையா !
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு
பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள்.
உடல்ப ரந்த கடலுந் தனுள்ளே
ஒவ்வொரு நுண்டுளி யும்வழி யாகச்
சுடரும் நின்றன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.
என்ற னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திட செய்குவை யையா !
ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா !
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா !
காதல் கொண்டனை போலும் மண்மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே !
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே !
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்
No comments:
Post a Comment