சென்னைப் பட்டணத்திலிருந்து பம்பாய்க்குப் போகும் (மதறாஸ் தென் மராட்டிய) ரெயில் பாதையில் 'வொண்டி மிட்ட' என்றொரு ஸ்டேஷன் இருக்கிறது. அதற்குப் பக்கத்திலுள்ள 'வொண்டிமிட்ட' என்னும் ஊர் மிகவும் அழகுடையது. 'வொண்டிமிட்ட' என்றால் 'ஒற்றைமலை' என்று அர்த்தம். ஒற்றைக் குன்று; அதனடியிலே பெரிய ஏரி. மேலே இராமலிங்கேசர் ஆலயம். தெலுங்குப் பாஷையில் மிகச் சிறந்த காவியமாக ஸ்ரீ பாகவதத்தை எழுதிய 'போத்தன்னா' என்ற மகாகவி அந்த ஊரிலே பிறந்தவர். இவருடைய பாகவதம் நம்முடைய இராமாயணத்தைப்போல "ஸம்ஸ்கிருத நூலைத் தழுவி எழுதப்பட்ட வழிநூல் ஆயினும் படிப்பவருக்கு முதனூலத்தனை பெருமை தோன்றும்படி அமைந்திருக்கிறது. நாம் கம்ப ராமாயணத்தைக் கொண்டாடுவது போலவே, தெலுங்கர் 'போத்தன்னா' வின் பாகவதத்தைக் கொண்டாடுகிறார்கள். சில தினங்களின் முன்பு 'ஹிந்து'ப் பத்திரிகையில் மேற்படி 'போத்தன்னா'வைப் பற்றி கும்பகோணம் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக இருக்கும் ஸ்ரீ வெங்கடேசய்யர் என்பவர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். 'போத்தன்னாவின் ஜன்ம நக்ஷத்திரத்தைக் கண்டுபிடித்து அதனை 'வொண்டிமிட்டா'வில் வருஷந் தோறும் கொண்டாட வேண்டுமென்றும் அதற்குத் தெலுங்கு தேசத்திலும் வெளிப் பக்கங்களிலுமுள்ள ஆந்திர பாஷாபிமானிகள் எல்லோரும் வந்து கூடவேண்டுமென்றும் ஸ்ரீ வெங்கடேசய்யர் சொல்லுகிறார். அவருடைய ஜன்ம நக்ஷத்திரம் நிச்சயமாகத் தெரியாத பக்ஷத்தில், ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியன்று அவர் ஞாபகத்தைக் கொண்டாடலாமென்கிறார். இது சரியான வார்த்தை.
கம்பர், திருவள்ளுவர், இளங்கோ
ஆனால், தமிழ் நாட்டில் இது போன்ற விஷயங்களைக் கவனிப்பார் இல்லை. தமிழ் நாட்டு வீரருக்கும் கவிகளுக்கும் லோகோபகாரிகளுக்கும் இதுவரை எவ்விதமான திருவிழாவையும் காணவில்லை. பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமான பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஓரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக்காலத்து சக்திமான்களை வியப்பதும், அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழக்குவதும் கூடியவரை பின்பற்ற முயல்வதுமாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சாமான்களை என்ன வகையிலே கவனிப்பார்கள்?
எதனை விரும்புகிறாமோ அது தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது; பேணாத பண்டம் அழிந்து போகும். பழக்கத்தில் இல்லாத திறமை இழந்துவிடப்படும். அறிவுடையோரையும் லோகோபகாரிகளையும், வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப்போகும். தமிழ்நாட்டில் இப்போது 'புதிய உயிர்' தோன்றியிருப்பதால், நாம் இவ்விஷயத்தில் தமோ குணஞ் செலுத்தாமல், கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மகாகவிகளுக்கு ஞாபகச் சிலைகளும் வருஷோத்ஸவங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். திருவள்ளுவர் மயிலாப்பூரிலே பிறந்தவர். அங்கே திருவள்ளுவர் கோயில் இப்போது இருக்கிறது. ஜன்மதினம் நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு வேளை அந்தக் கோயிற் பூசாரிக்குத் தெரியக்கூடும்.
ஐந்து மகா காவியங்களிலே சிறந்ததாய் 'சிலப்பதிகாரம்' செய்த இளங்கோ முனிவர் வஞ்சி நகரத்தில் பிறந்தவர். இந்த வஞ்சி நகரம் இப்போது திருச்சினாப் பள்ளிக்கு அருகேயுள்ள கரூர் என்று பண்டித மு. ராகவய்யங்கார் தீர்மானம் செய்கிறார். இந்த ஆசிரியரது ஜன்ம தினத்தையும் நிச்சயமாகச் சொல்வதற்கு வழியில்லை.
மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயிலைச் செம்மையாகக் கட்டவேண்டும். இப்போது மிகவும் ஏழை நிலைமையில் இருக்கிறது. திருவெழுந்தூரிலும், கரூரிலும் ஞாபகச் சின்னங்கள் ஏற்படுத்த வேண்டும். ஜன்ம தினங்கள் நிச்சயப் பட வழியில்லை. ஆதலால் ஸரஸ்வதி பூஜைக்கு முன்பு அல்லது பின்பு குறிப்பிட்டதொரு தினத்தில் இந்த மகான்களின் ஞாபகத்தைக் கொண்டாடுதல் பொருத்த முடைய செய்கையாகும். நவராத்திரி உத்ஸவங்கள் நமக்குள் வழக்கமாக உள்ளதால், அந்த ஸமயத்தை ஒட்டி நமது மகாகவிகளுக்குத் திருவிழாக் கொண்டாடுதல் ஸுலபமாக இருக்கும்.
பண்டித ஸபைகளையும், பொதுஜன ஆரவாரங்களையும் கோலாஹலமாக நடத்தி, எல்லா வர்ணத்தாரும் எல்லா மதஸ்தரும் சேர்ந்தால், சந்தோஷமும் அறிவுப்பயனும் உள்ள மாண்பும் பெற இடமுண்டாகும். மதபேதங்கள் பாராட்ட இடமில்லாத திருவிழாக்கள்தமிழ் நாட்டில் எவ்வளவு அவசிய மென்பதை ஒவ்வொரு அறிவாளியும் எளிதாக ஊகித்துக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment