Sunday, July 22, 2012

பாரஸீகத்துக்கு ஸெளக்ய காலம்


19 நவம்பர் 1920

பாரஸீகத்திலுள்ள ப்ரிடிஷ் துப்புகள், இந்தியத் துருப்புகள் முழுவதையும் ப்ரிடிஷ் கவர்ன்மெண்டார் அங்கிருந்து மீண்டு வரும்படி கட்டளை பிறப்பித்து விட்டார்களென்று ஸமீபத்தில் வந்த லண்டன் தந்தியொன்றில் விளங்குகிறது. இதுபோலவே, மெஸபடோமியாவில் ப்ரிடிஷாரால் அமைக்கப்பட்டு வரும் அராபிய ஆட்சியின் வசம் அந்நாட்டை ஒப்புவிப்பதாகிய நோக்கத்துடன் அங்குள்ள இந்திய, பிரிடிஷ் ஸைந்யங்களையும் மிகவும் குறைத்து விடும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சிறிது காலத்தின் முன்புகூட வடமேற்குப் பாரஸீகத்திலிருந்து போல்ஷ்விக்கரைத் துரத்தும் பொருட்டாக ப்ரிடிஷ் படைகள் உபயோகப்படுத்தப் பட்டனவென்று இந்தியா கவர்ன்மெண்டார் வெளியிட்ட அறிக்கையிலிருந்து லண்டன் “டைம்ஸ்” முதலிய ஆங்கிலப் பத்திரிகைகளுக்குக் கோபமூண்டு அவை ப்ரிடிஷ் கவர்ன்மெண்டாரைக் கண்டித்துதெழுகின்றன. “அந்த அறிக்கை உண்மையா, பொய்யா? பொய்யானால் அதனை உடனே ப்ரிடிஷ் கவர்ன்மெண்டார் மறுக்க வேண்டும். அதனை வெளியிட்டது பற்றி இந்தியா கவர்ன்மெண்டாரைக் கண்டிக்கவும் வேண்டும்” என்று லண்டன் “டைம்ஸ்” சொல்லுகிறது. எது  எப்படியிருந்தாலும், பாரஸீகத்திற்கு இவ்விஷயம் பெரியதோர் நிவர்த்தியாகவே கருதத் தக்கது. ஆரம்பத்தில் இதனால் பாரஸீகத்துக்கு அன்னியர்களிடமிருந்து இடையூறுகளும், கஷ்டங்களும் நேரிடலாம். எனினும், காலக்கிரமத்தில், இதினின்றும் பாரஸீகத்துக்கு வயிற்றுப் பூச்சி வெளியேறியதால் மனிதனுக்கு நலமேற்படுதல் போல முற்றிலும் நன்மைதானேற்படுமென்பது எனக்கு நிச்சயம்.

No comments:

Post a Comment