வீரத்தாய்மார்கள் என்ற கட்டுரையை யொட்டி பிரம்மஸ்ரீ. மு. இராகவையங்காரவர்களுக்கு எழுதிய லிகிதம்.
இந்தியா ஆபீஸ்,
பிராட்வே, மதறால்,
18th October 1907
அநேக நமஸ்காரம்,
ஒவ்வொரு காலத்துச் சோம்பர் மிகுதியாலும், ஒவ்வொரு காலத்தே முயற்சி
மிகுதியாலும், தங்களைப் போன்ற பெரியோர்களுக்கு அடிக்கடி கடிதங்களெழுதிப் புனிதத் தன்மை
பெறுவதற்கு அவகாசமில்லாதவனாக இருக்கின்றேன்.
சென்ற முறை வெளிவந்த “செந்தமிழ்”ப் பத்திரிகையிலே தாங்கள் எழுதியிருக்கும்
“வீரத்தாய்மார்கள்” என்ற அற்புத உரையைக் கண்டு மகிழ்ச்சி பூத்து அம் மகிழ்ச்சியைத்
தமக்கு அறிவிக்கும் பொருட்டாக இக்கடிதம் எழுதலானேன்.
தாங்கள் பாண்டித்தியத்தை நான் புகழ வரவில்லை. அதனை உலகமறியும்.
தங்களுடைய பரிசுத்த நெஞ்சிலே எழுந்திருக்கும் “ஸ்வதேச பக்தி” என்ற புது நெருப்பிற்குத்
தான் நான் வணக்கம் செய்கிறேன்.
“காலச் சக்கரம் சுழலுகிறது” என்று அவ்வுபந்நியாசத்தின் இறுதியிலே
குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆம்! காலச் சக்கரம் சுழலவே செய்கின்றது; அச்சுழற்சியிலே, சிறுமைச் சேற்றில் ஆழ்ந்து கிடந்த
‘நீச பாரதம்’ போய் ‘மஹா பாரதம்’ பிறக்கும் தறுவாய் வந்துவிட்டது.
‘தாழ் நிலை’ என்ற இருளிலே மூழ்கிக் கிடக்கும் பாரத வாஸிகளுக்கு
மஹாபாரதம் காட்டத் தோன்றியிருக்கும் சோதிகளிலே தமது நெஞ்சிற் பிறந்திருக்கும் நெருப்பொன்றாகும்.
அதற்கு வணக்கம் செய்கிறேன். அது வளர்க. ஓம்!
ஸி. சுப்பிரமணிய பாரதி.
குறிப்பு:- ஸ்ரீ அழகிய சிங்கப் பெருமாளையங்கார் (பச்சையப்பன்
காலேஜ்) அவர்களும் அவர் தம்பி ஸ்ரீகிருஷ்ணமாசாரியாரும் தங்களுக்கு ஸாஷ்டாங்க வணக்கம்
கூறும்படி என்னிடம் கற்பித்தார்கள்.
No comments:
Post a Comment