Tuesday, April 17, 2012

உள்ளிருத்த விளக்கம்


26 அக்டோபர் 1917

1. உச்சரி – சொல் 

உச்சரி என்பதை உத்-சரி என்று பிரித்தால் மேலே (உயர்ந்த படியில் நட) என்று பொருள்படுகிறது. செல்லும்போது மேல் நிலையில் நின்று சொல்க.

2.       ‘கை’ என்பதற்குத் தெலுங்கில்  ‘செய்’ என்று பெயர். க, ச மாறுதல் இயல்பு. ‘கை’ என்று சொல்லுக்கே செய் என்று பொருள். தொழில் செய்யாமல் இருக்கும் கையை நெருப்பிலே வை; கரியாவது கிடைக்கும் என்றர்த்தம். 

3.       காக்கை ஒரு பறவையின் பெயர்.
காக்கை என்றால் காப்பாற்றுதல் என்றும் அர்த்தம். தெருவில் நாம் பண்ணுகிற அசுத்தங்களை யோசிக்கும் போது காக்கை யில்லாமல் போனால் நாமெல்லோரும் நாற்றமெடுத்துச் செத்துப்போவோம் என்பதில் சந்தேகமில்லை.

காக்கைகள் பிதிர்க்களுடைய வாஹனங்கள் என்றும் அவற்றுக்கு சிராத்தாரி ஸமயங்களிலும், தினந்தோறும், வாயஸாந்தம் போடவேண்டும் என்றும் நமது முன்னோர் சொல்லி யிருக்கிறார்கள். காக்கைக்கு நூறு வயது. அது எளிதிலே சாகாது. புயற்காற்றில் பதினாயிரக் கணக்கான காக்கைகள் மடிந்தன. தெருவெல்லாம் காக்கை செத்து விழுந்து கிடந்தது. பார்த்தவர்கள் அழுதார்கள். இரண்டு காக்கையோ மூன்று காக்கையோ மிஞ்சியிருப்பது போலே தோன்றிற்று. இப்போது பார்த்தால் ஏறக்குறைய பழைய ஜனத்தொகை காக ஜாதியில் உண்டாய் விட்டது. காக்கை வலிய பறவை; அது நம்மைக் காக்கிறது; அதை நாம் கும்பிட வேண்டும்.

4.       வருஷம் என்பது மழை; ஆண்டுக்கும் பெயர்.

5.       திருப்பதி என்பது ஒரு க்ஷேத்திரத்துக்கும், ஸெளபாக்ய நிலைமைக்கும் பெயர்.

6.       அன்னம் என்றால் உணவு.

அன்னம் என்பது வஸ்து.

ஸத்தியத்துக்கும், ப்ரஹ்மத்துக்கும் அன்னம் என்பது பெயர். பிராமணர் “ஸத்யந்த்வர்த்தேந பரிஷிஞ்சாமி” என்று சொல்லி அன்னத்தை ஜலத்தில் சுற்றுகிறார்கள். அங்கு ஸத்யம் என்றது ஆகாரத்தை; ரிதம் என்றது ஜலத்தை. ஸத்யம் என்பது உண்மைக்கும், ரிதம் நேர்மைக்கும் பெயர். நேர்மையாவது தைர்யம். நாம் அறிந்த உண்மைப்படி நடக்கும் துணிவு. உண்மை ப்ருதிவியினுடைய அம்சம்; துணிவு ஜலத்தினுடைய அம்சம் என்று வேதாந்த சாஸ்திரம் சொல்லுகிறது.

அன்னம் அமிர்தம்.

வைஷ்ணவர், ‘போஜனமாயிற்றா?’ என்பதற்கு ‘அமுது செய்தாயிற்றா??’ என்கிறார்கள். அன்னம் அமிர்தமென்பதே ராமானுஜருடைய சித்தாந்தம். உண்மையை நேர்மையாலே காக்க வேண்டும்.

ஆதலால் அன்னத்தைக் காப்பாற்றத் தெரியாதவன் மூடன்.

No comments:

Post a Comment