Tuesday, December 4, 2012

சென்னை ஹைகோர்ட்

11.08.1906

ஹைகோர்ட்டில் காலியான இரண்டு ஸ்தானங்களிலே ஒன்றில் மிஸ்டர் மில்லர் நியமனமாய் விட்டார். மற்றொன்றிலே ஸ்ரீ சங்கரன் நாயர் நியமிக்கப்படுவாரென நாமெல்லாம் எதிர் பார்த்திருந்தோம். இதற்கு முன் மேற்படி ஸ்தானத்தில் இரண்டு தடவை ஆக்டிங் வேலை பார்த்து, மிகுந்த சாமர்த்தியம் காட்டி ஜனங்களின் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் பாத்திரமாகி நிற்கும், மிஸ்டர் நாயரைக் கவர்ன்மெண்டார் இந்தச் சமயத்தில் மறந்து விடுவார்களென்று எவரும் நினைக்கவேயில்லை... இங்ஙனமிருக்க கவர்ன்மெண்டார் இப்போது மேற்படி ஸ்தானத்திலே ஸர்க்கார் வக்கீல் (அட்வகேட் ஜெனரல்) ஆகிய மிஸ்டர் வாலிஸ் என்பவரை நியமிக்க நிச்சயித்திருப்பதாக அறிந்து மிகவும் வருத்தமடைகிறோம். இதற்கு முன் சங்கரன் நாயருக்கு ஆக்டிங் உத்தியோகம் தரும் போதெல்லாம் மேற்படி வாலிஸ் எங்கே போயிருந்தார்? அப்போதே அவருக்கேன் கொடுத்திருககக் கூடாது? அவரைக் காட்டிலும் ஸ்ரீ நாயர் தகுதியுள்ளவரென்ற எண்ணங் கொண்டுதானே கவர்ன்மெண்டார் நாயருக்கு உத்தியோகமளித்தார்கள். இப்போது லார்டு ஆம்ப்டில் கவர்னராயிருப்பாரானால் மிஸ்டர் சங்கரன் நாயருக்கே மேற்படி ஸ்தானம் கொடுக்கவேண்டுமென்று நிச்சயித்திருப்பார். நமது தற்காலக் கவர்னராகிய ஸர்.ஆர்தர் லாலி இதுவரை இருக்குமிடந் தெரியாமல் மறைந்திருந்து விட்டு இப்போது ஆரம்பத்திலே செய்யப்போகும் ஓர் பெரும் காரியத்தைத் தாமாக ஆரம்பிக்கிறாரே என்பது நமக்கு விசனமுண்டாக்குகிறது. சங்கரன் நாயரைப் போன்ற தகுதியுள்ள வக்கீல் ஒருவர் தமக்குக் கடைசியாக ஜட்ஜி ஸ்தானம் ஸ்திரமாகக் கிடைக்குமென்ற நிச்சயமிருந்தாலொழிய இரண்டு மூன்று தடவை டெம்பரரி வேலைக்கு வர ஒப்புக்கொண்டிருப்பாரா?

இந்த விஷயங்களிலே கவர்ன்மெண்டார் ஜாதி பேத ஆலோசனைகளைக் கொணர்ந்திருக்க மாட்டார்களென்று நம்புகிறோம். எப்படியிருந்த போதிலும் ஸ்ரீ சங்கரன் நாயர் நியமனம் பெறாவிட்டால், அதிலிருந்து பொது ஜனங்களுக்கு மிகுந்த மன வருத்தமும், கவர்ன்மெண்டார் செய்கையிலே வெறுப்பும் உண்டாகும் என்பதில் ஆஷேபமில்லை. சென்னைக் கவர்ன்மெண்டாரின் நியமனத்துக்கு இன்னும் இந்தியா மந்திரியின் அனுமதி கிடையாமலிருப்பதால் பொது ஜனங்களின் உணர்ச்சியை இந்தியா மந்திரிக்கே நேரில் அறிவித்துக் கொள்ள வேண்டுமென்று சென்னை மஹாஜன சபையாரும், வக்கீல் சங்கத்தாரும் எண்ணி அங்ஙனமே தந்தியனுப்பியிருக்கிறார்கள். மேற்படி ஸ்தானத்தில் சங்கரன் நாயர் நியமிக்கப் பட்டாலொழிய ஜனங்களுக்கு அதிருப்தி உண்டாகுமென்பதை இவர்கள் மிஸ்டர் மார்லிக்கு அறிவித்திருக்கிறார்கள். மிஸ்டர் மார்லி எவ்விதம் செய்வாரோ அறிகிலோம்.

No comments:

Post a Comment