Thursday, December 6, 2012

ஜாதி 2

ஜூலை 1917

ஜனவகுப்புகள் தனித்தனி சுபாவங்களுடைய வெவ்வேறு ஜீவன்களாம். ஆனால் “ஜாதி”கள் வெறுமே வலிமைக்காகச் சேர்ந்த கூட்டங்களைத் தவிர வேறில்லை. அதுபற்றியே இவற்றின் உட்குணங்களும் புறச் செய்கைகளும் எங்கும் ஒரே சந்தமாக, ஒரே மாதிரியாக இருக்கின்றன. இவற்றுள்ளே வேற்றுமைகளிருந்தாலும் அவை தொழில் வலிமையைப் பற்றின வேற்றுமைகளே யன்றி குணபேதங்களல்ல. நவீன உலகத்தில் ஜனத்தின் ஜீவ சக்திக்கும், ஜாதியின் நிபந்தனைகளுக்கும் போர் நடக்கிறது.

ஆசியாக் கண்டத்தின் மத்தியின் முன்பு மனிதர் குடியிருந்த நாட்டுக்கும், அதன் மேல் இடைவிடாமல் ஏறிக்கொண்டு வந்த பாலைவனத்து மணலுக்கும் சண்டை நடந்தது. உயிரும் அழகும் கொண்ட நாட்டை மணல் அழித்துவிட்டது. அதுபோல் ஜாதி ஜனத்தை அழிக்கிறது. மனுஷ்யப் பொதுஜன உத்தம லக்ஷணங்களைப் பரவச் செய்தல் முக்கியமில்லை என்ற எண்ணத்திலிருந்து ஜாதியின் திறமை வளர்ப்பதாகிய கல்நெஞ்ச ஸம்ப்ரதயம் பலமடைகிறது. ஸான்ப்ரான்ஸிஸ்கோ நகரத்திலிருந்து லண்டன்வரை, லண்டனிலிருந்து டோக்யோ வரை ஜாதியெண்ணம் ஆதிக்கம் பெற்றிருக்கும் நகரங்களனைத்திலும் ஒரே மாதிரியான இயல்பைக் காணலாம். அவற்றின் முகங்களைக் காட்டுவதில்லை முகமூடிகளைக் காண்பிக்கின்றன. ஜனம் ஜீவனாதலால் அதற்கு ஆத்மப் பிரகாசம் வேண்டும். அது ஸ்ருஷ்டி செய்யும். கல்வி, கலை, கோயில் முதலியன ஜனத்தின் ஸ்ருஷ்டிகளாம். இவை ஒரே விருந்தில் பலவித உணவுகள் போலே உண்மையை அறிந்து இன்பமடைவதில் வெவ்வேறு சுவை தருகின்றன. மனுஷ்ய லோகத்தை உயிர் வளமுடைய தாக்கிப் பலவிதங்களில் அழகு படுத்துகின்றன. ஆனால் ஜாதிகள் ஸ்ருஷ்டி செய்வதில்லை. அவை பெருக்குகின்றன, அழிக்கின்றன; பெருக்குதலாவது சோறு துணி சேர்த்தல் போன்ற தொழில்வகை. பெருக்கும் கூட்டங்கள் அவசியமே. அழிக்குங் கூட்டங்களும் அவசியமாக இருக்கக் கூடும். ஆனால் இவை பேராசையும், விரோதமும் சேரும்போது, மனுஷ்ய ஜீவனை ஒரு மூலையில் ஒதுக்கி விடுகின்றன. இதனால் இசை தவறுகிறது. ஜனங்களின் சரித்திரம் அழிவை நோக்கிக் கழுத்தொடியும் வேகத்துடன் செல்லுகிறது.

மனுஷ்ய ஜாதி உயிருடனிருக்குமிடத்தே ஆதர்சங்களை, உத்தம தர்மங்களைப் பின்பற்றுகிறது. செத்த கட்டுப்பாடாகிவிடும் போது ஆதர்சங்களுக்கு இடங்கொடுப்பதில்லை. அதன் கட்டட மெல்லாம் புறத்தொழிலாகவே நடைபெறுகிறது. உள்ளிருக்கும் தர்மக் காட்சிக்கு அதன் உத்த்ரம் நேரில்லை. பல வளையாத முரட்டுத் தடைகளைக் கடந்து செல்ல வேண்டியதாகிறது.

மனுஷ்ய ஜீவனுக்குத் தனிமைக் குணமொன்றிருக்கிறது. தனிமையாகிய களத்திலேதான் அவனுடைய ஆத்மா தன்னைப் பிரகாசப்படுத்திக் கொள்ளவும் வளரவும் ஸ்வாதீன மடைகிறது. மனிதன் பொது நிலையை விட்டு ஒரு ‘தொழிலாளி’ அதாவது யாதேனுமோர் வியாபாரம், அல்லது விவகாரத்தால் கட்டுப்பட்டவன் ஆகும் போது அவனைச் சுற்றி இறுகலான ஓடு தோன்றுகிறது. இந்தத் தொழிலாளித்தனம் என்ற களத்திலே மனிதர் தத்தம் அறிவுக்குத் தனிவழிகள் காட்டித் தமது பலத்தை ஒரு முகமாக்கித் தாம் தாம் முற்படவேண்டுமென்று பரஸ்பரம் முழங்கைகளால் ஏற்றித் தள்ளுகிறார்கள். தொழிலாளித்தனம் அவசியந்தான். ஆனால் அதை ஆரோக்கிய வரம்பு கடந்து செல்லவிடக்கூடாது. அது மனிதனை அடிமைப்படுத்தவும், குறுக்கவும், கடினமாக்கவும், ஆதர்சங்களில் நம்பிக்கையிழந்து லெளகிகலாபந் தேடுவோனாகச் செய்யவும் இடங்கொடுக்கக் கூடாது.

புராதன ஹிந்து தேசத்தில் ஸ்மிருதியால் தொழில்களில் வரம்புகடவாமல் நிறுத்தப்பட்டன. அவை முதலாவது ஜனங்களின் பொதுத் தேவைகளாகவும், பிறகு அவரவருக்கு ஜீவனோபாயங்களாகவும் கருதப்பட்டன. எனவே எல்லையில்லாத போட்டியின் தூண்டுதலுக்குட்படாமல், தனித்தனி தனது பரிபூரணத் தன்மையைப் பரீக்ஷை செய்ய நேரமிருந்தது.

ஜனங்களுடைய பொதுவான தொழிலாளித் தனத்துக்கு ஜாதியென்று பெயர். அது ஜனங்களுக்குப் பெரிய விபத்தாய்க் கொண்டு வருகிறது. ஏனெனில் அதில் மிகுந்த லாபமுண்டாகிறது; எனவே உயர்ந்த ஆதர்ஸங்களில் நியதிகளில் மனிதருக்குப் பொறுமையில்லாது போகிறது. லாபம் எவ்வளவு அதிகமாகிறதோ அவ்வளவு ஸ்வார்த்தம், பொறாமை, விரோதம், இவற்றின் அல்லல் பலமடைகிறது. இவை மனிதர்களின் மனத்தில் லாபத்தால் விளைகின்றன.

உயிருள்ள ஜனங்கள் ஜாதிகளாக இறுகுதல் மேன்மேலும் அவசியமாகிறது. ஜாதியக் கொள்கையின் வளர்ச்சியால் மனிதனுக்கு மனிதன் பெரிய விபத்தாய்விட்டான். அக் கொள்கை தீராத பயத்தை விளைவிப்பதனால், மேன்மேலும் பெரிய ஆபத்தாக மூண்டு வருகிறது.

கூட்டத்தின் புத்தி ஒரு குருட்டு சக்தி. நீராவி முதலிய பூத சக்திகளைப் போலவே அதையும் பிரமாண்டமான பலம் சேர்க்க உபயோகப் படுத்தலாம். ஆதலால் லோபத்தாலும் பயத்தாலும் தமது ஜனங்களை வலிமைக் கருவிகளாக்க விரும்பும் அரசர் இந்தக் கூட்டப் புத்தியைத் தமக்கு வேண்டிய வழியில் பயிற்சி செய்கிறார்கள். ஜனங்களுடைய மனதில் எங்கும் பயமும், ஸ்வஜாதிக் கர்வமும், பிற ஜாதிகளிடம் விரோதமும் வளர்த்தல் கடமை யென்று நினைக்கிறார்கள். பத்திரிகைகளையும் பள்ளிக் கூடப் புஸ்தகங்களையும் கோயில் ஆராதனைகளையுங் கூட இந் நோக்கத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.

தெய்வ விரோதமான இந்தக் கருட்டுக் கொள்கையைத் தைரியத்துடன் எதிர்த்துப் பேசுவோரை நியாயஸ்தலங்களில் தண்டிக்கிறார்கள்; அல்லது கூட்டத்திலிருந்து விலக்குகிறார்கள்.

தனி மனிதன் (லோபதாப) முதலிய, உணர்ச்சிகளின் சமயத்திலும் யோசனை பண்ணுவதுண்டு. ஆனால் ஒரு கூட்டத்தின் உணர்ச்சியுடன் கலக்கும் போது யோசனை செய்வதில்லை. அவனுடைய தர்மப் புலன் மழுங்கிப் போகிறது. கூட்ட மனங்களில் மனிதத் தன்மையை நசுக்கி விடுவதானால் மிகுந்த பலமுண்டாகிறது. ஏனென்றால் கூட்டப் புத்தி இயல்பில் அநாகரிகமானது. அதன் சக்திகள் பூத சக்திகளைப் போன்றது. இருளின் பெரிய வலியை ஜாதி தனக்குப் பயன்படுத்திக் கொள்வதால் ஜாக்கிறதையாக இருக்கிறது.

சங்கட காலங்களில் ஒரு ஜனத்தின் தற்காப்புச் சிந்தையை ஆதிக்கமுடையதாகச் செய்தல் அவசியமே. அப்போது அதன் ஒற்றுமையுணர்ச்சி கடுமையான விழிப் பெய்துகிறது. இந்த மிகையுணர்ச்சி ஜாதியில் எப்போதும் சாகாதபடி செயற்கையுபாயங்களால் காக்கப்படுகிறது. ஒருவனுடைய வீட்டைத் திருடர் வந்து கொள்ளையிடும் போது அவன் போலீஸ் சேவகனுடைய தொழிலை மேற்கொள்ளவேண்டும். ஆனால் அவனுடைய சாதாரண ஸ்திதியே அப்படியாய்விட்டால் அவனுடைய வீட்டுச் சிந்தை மிகையாகி வீட்டருகே போவோர் வருவோர் மேலெல்லாம் பாய்ந்து விழும்படி செய்கிறது.

இந்த மிகையுணர்ச்சி ஒருவன் கர்வப்படத் தக்க உடைமையன்று. இது மெய்யாகவே ஆரோக்கியத்துக்கு லக்ஷணமன்று. அதுபோலவே ஒரு ஜாதியின் தீராத தற்போதமும் ஜனங்களுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கும். அதனால் தற்காலத்துக்குப் பயன் உண்டாவது போலே தோன்றினாலும் மனிதனுடைய நித்ய ஜீவனுக்கு நஷ்ட முண்டாகும்.

ஒரு கூட்டம் சேர்ந்து யாதேனுமொரு குறுகிய நோக்கத்துக்குத் தம்மைப் பயிற்சி செய்து கொள்ளுமாயின் பிறகு அதையே தளராமல் காத்து அதற்கு மரியாதை செலுத்த வேண்டுமென்று போதனை செய்தல் அந்தக் கூட்டத்திற்கு லாபகரமாகிறது.

ஒரு ஜன முழுதையும் குறுகின ஆதர்ஸப்படி பயிற்சி செய்வதே ஜாதியக் கொள்கை. அது ஜனங்களுடைய உள்ளத்தைக் கவரும்போது தர்மக் குறையையும் குருட்டறிவையும் விளைவிப்பது நிச்சயம். இந்த ஜாதியக் கொள்கையின் காலம் பிரம்மாண்டமான ஸ்வார்த்தமும் செருக்கும் தலைப்பட்ட காலம். இது நாகரிகத்தில் அசாசுவதமான ஓரிடைக்காலமேயன்றி வேறில்லையென்ற நம்பிக்கையை நாம் உறுதியாகப் பற்றி நிற்போம்.

மனித சரித்திரத்தின் இந்த அசாசுவதமான குணத்தைத் திருப்தி செய்யும் பொருட்டு சாசுவதமான வேலை செய்வோர் இனி வரப்போகிற உண்மையான விடுதலைக் காலத்துக்குத் தகுதியில்லாது போவார்கள்.

ஜாதியக் கொள்கை தடையின்றி வளர்வதனால் மனுஷ்ய நாகரிகத்தின் ஆதாரநீதி தன்னையறியாமலே மாறுபடுகிறது. சமூகத்து மனுஷ்யனுடைய உத்தம லக்ஷ்யம் பிறர் நலம். ஆனால் ஜாதி தொழிலாளித்தனம் உடையதாகையால் அதற்குத் தக்கபடியே அதன் உத்தம லக்ஷ்யம் தன் நலம். இதனாலேயே தனி மனுஷ்யன் தக்குனத் தனக்கென்ற அவா உடையவனாக இருந்தால் பழிக்கப்படுகிறான். ஒரு ஜாதி அப்படியிருந்தால் புகழப்படுகிறது. இதனால் ஏக்கத்துக்கிடமான நீதிக் குருட்டுத் தனம் உண்டாகிறது. அது ஜனத்தின் மதத்தை ஜாதியின் மதத்தோடு ஒன்றாகப் போட்டுக் குழப்புகிறது. இதனாலே தான் உலகத்தின் பெரும் பகுதியை கிறிஸ்தவ ஜாதியார் ஆளுவதனாலே கிறிஸ்து மதந்தான் உயர்ந்ததென்று சொல்லுவோர் சிலர் இருப்பதாகக் காண்கிறோம். இது ஒரு திருடன் களவு செய்த சொத்தனை அளவிட்டு அவன் மதக் கொள்கையை ஆதரிப்பதாகும். ஜாதிகள் தாம் பிற மனிதரை யதேஷ்டமாகக் கொன்று முடித்தது பற்றி ஆலயங்களில் விசேஷங் கொண்டாடுகின்றன. “டக” ஜாதிக் கள்வர் கூட்டம் தமது கொள்கையை நிறைவேற்றியது, தாம் வணங்கிய தேவியின் கிருபையென்று நினைத்தார்கள் என்பதை மேற்படி ஜாதிகள் மறந்துவிடுகின்றன. “டக” ஜாதியார் விஷயத்தில் அவர்களுடைய தேவதையை வெளிப்படையாகவே ஸம்ஹார மூர்த்தியென்று சொல்லி வணங்கினார். அதுமேற்படி குற்றவாளி ஜாதியின் கொலையுணர்ச்சியை தெய்வமாக்கினவாறு தனி மனிதனுடைய மனமன்று, கூட்டத்தின் பொது உள்ளம். ஆதலால் தெய்விகமென்று கருதப்பட்டது. அதேமாதிரி நவீன சர்ச்சு (கிறிஸ்தவாலயங்களில்) ஜாதியின் பொது மனமென்ற கூட்டு நிலையில் ஸ்வார்த்தமும் அற்பச் செருக்கும், விரோதமும் தெய்வ பூசையுடன் கூசாமல் வந்து கலந்து கொள்ளுகின்றன.

தன்னலத்தை நாடி யுழைத்தால் முழுமையும் அஹங்காரமாகவே யிருக்க வேண்டு மென்று கட்டாயமில்லை. எல்லா நலத்துடன் அது பெருந்தவங் கூடும், எனவே ஆதர்சிகமாகப் பேசுமிடத்து, ஜன ஸ்வார்த்தத்தில் பிரகாசத்தை நாடும் ஜாதியக் கொள்கை அவமானமடைய ஹேதுவில்லை. ஆனால் நாம் அனுபவத்தில் காண்பது யாதெனில் செல்வமடைந்த ஜாதியொவ்வொன்றும் பிறருக்குத் தீங்கு செய்யும் ஸ்வார்த்தச் செயல்களிலே தான் அதையடந்திருக்கிறது. அதாவது வியாபார வேட்டைகளினாலும், அந்நிய தேச உடைமைகளாலும், அல்லது இரண்டும் சேர்ந்ததாலும் என்க.

இந்த லெளகிகச் செல்வமிகுதி ஓயாமல் ஜனத்தின் ஸ்வார்த்தம் இயல்பைப் போஷிப்பதுமன்றி ஒரு ஜாதிக்கு ஸ்வார்த்தம் (தன்னலம்) அவசியம். ஆதலால் அதுவே தர்மம் என்ற பாடத்தை மனிதரின் உள்ளத்தில் அழுந்தச் செய்கிறது. ஐரோப்பாவில் ஜாதியெண்ணத்தில் அழுத்தம் எப்போதும் வளர்ந்து செல்வதால் அது நேர்ச் செய்கையாலும், தொத்தும் திறத்தாலும் மனிதருக்குப் பெரிய விபத்தாய்க் கொண்டு வருகிறது.

மனுஷ்ய ஸ்வபாவத்திலேயே தீமைகள் இருப்பது மெய்தான். நாம் தர்மவிதிகளை நம்பியிருந்தாலும் தன்னாட்சியில் பயிற்சி பெற்றிருந்தாலும் அவை நம்மையறியாமல் வெளியே கிளைத்து விடுகின்றன என்பதும் மெய்தான். ஆனால் அவை தம் நெற்றி மீது பழிச்சூடு போட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் வெற்றியே அவற்றின் கொடூரரூபத்தை அதிக கோரமாகக் காட்டுகிறது. மனுஷ்ய சரித்திர முழுமையிலும் துன்பப்படுவோர் சிலரும் படுத்துவோர் பிறரும் இருக்கவே செய்வார்கள். தீமையை வெல்லுதல் எக்காலத்திலும் பரிபூரணமாக நிறைவேறாது. தீ எரிவது போல் நமது நாகரிகத்தில் அது தொடர்ச்சியாக நடக்கும் செய்கையாம்.

நித்தியமான பரிபூரணத்வ லக்ஷ்யத்துக்கும் அதன் நிரந்தர ஸ்தானத்துக்கும் உள்ள பொருத்தமே ஸ்ருஷ்டியென்று சொல்லப்படும்.

நன்மையென்னும் உடம்பாட்டு லக்ஷ்யம் ஸாதனக்குறைவு என்ற எதிர்மறையுடன் சமவேகமாகச் செல்லும் மட்டும், அவ்விரண்டுள் முழுப் பிரிவுண்டாகாதிருக்கும் மட்டும் நாம் துன்பத்துக்கும் நஷ்டத்துக்கும் பயப்பட வேண்டா.

ஆதலால் முற்காலங்களில் யாதேனு மொருஜனம் கலகந் தொடங்கிப் பிறருடைய மனுஷ்ய உரிமையைப் பறித்துவிட முயன்ற போது சில சமயங்களில் அந்த ஜனத்துக்கு வெற்றியும் சில சமயங்களில் தோல்வியும் ஏற்பட்டது; அவ்வளவு தான். ஆனால் இந்த ஜாதியக் கொள்கை இன்று சர்வ சம்மதமாய்த் தனது தன்னலம் அளவிலே பிரமாண்டமாக இருப்பது கொண்டு அதை தர்மமென்று காட்டத் தலைப்படுமிடத்தே இந்தக் கொள்கை பிறர் சொத்துக்களை கொள்ளையிடுவது மாத்திரமேயன்றி, மனுஷ்ய ஜாதியின் உயிர் நிலையைத் தாக்குகிறது. தர்ம விதியைப் புறக்கணிக்கும் புத்தியை மனிதருக்கு அவசரமாகவே விளைவிக்கிறது. ஏனெனில் ஜனம் தர்மவிதியை தெய்விகமாக எண்ண, ஜாதி அந்த விதியைக் காற்றிலே தூற்றி விடுகிறதெதனால் எனில், ஜனத்தைக் காட்டிலும் ஜாதியே பெரிதென்ற கொள்கை பலவிதமான தந்திரங்களால் ஜனங்களுக்குக் கற்பிக்கப் படுவதனால் என்க.

ஒரு நோய் மூளையைத் தாக்கும் போது அது, மிகவும் கடுமையாகிறது என்று கேள்விப்படுகிறோம். ஏனென்றால் எல்லாவிதமான வியாதி சக்திகளையும் இடைவிடாமல் முற்றுகை போடுவது மூளையேயாம். ஜாதியத் தன்னலக் கொள்கையின் உள் நிலைமை ஒரு ஜனத்திற்கு நேரிட்ட மூளை வியாதியைத் தவிர வேறில்லை. தற்காலத்து அந்த நோயின் அறிகுறிகள் எவையெனில் சிவந்த கண்களும், குவிந்த முட்டிகளும், கொடுஞ் சொற்களும், கொடுஞ் செயல்களுமாம். இயற்கையிலே உள்ள சொஸ்தமாக்கும் கருவிகளை அது நொறுக்கிப் போடுகிறது.

ஜனசமூகத்தின் உயிருக்கு நல்ல வழி காட்டும் சக்தி யாதெனில் ஆத்ம த்யாகமும், அனுதாபத்துக்கும் கூட்டுத் தொழிலுக்கும் இடமாகிய தர்மசிந்தையுமே என்க. சூழ்ந்திருக்கும் வஸ்துக்களுடன் அனுகூல சம்பந்தம் கொண்டிருப்பதே அதன் தொழிலாம்.

இன்னும் பெருங்கேடு யாதெனில் ஜனங்களின் இந்தக் கோணல் நீதியானது தேசபக்தியென்ற பகட்டான பெயர் புனைந்து கொண்டு தன்னை ஒரு மேலான தர்மமாகக் காண்பித்துக் கொண்டு திரிகிறது. சுழலுகிற தனது தொத்து நோயை உலக முழுவதும் பரப்பித் தன் ஜ்வரத்தை ஆரோக்கியத்தின் சிறந்த குறியென்று முழங்குகிறது. இயற்கையில் தீங்கில்லாத ஜனங்களின் மனத்தில் பொறாமையுண்டாக்குகிறது.

“ஜன்னி நிலையில் இருக்கும் அக்கம்பக்கத்துத் தேசத்தாருக்குள்ள பலம் நமக்கில்லையே, அவர்கள் பிறருக்குச் செய்யும் தீமை நம்மால் செய்ய முடியவில்லையே நாமன்றோ தீமையனுபவிக்கிறோம்” என்று பொறாமையுண்டாக்குகிறது.

எனது ஐரோப்பிய நண்பர் அடிக்கடி என்னிடம், “இத்தனை கொடிய தீமையை அழிக்க உபாய மென்ன?” என்று கேட்கிறார்கள். வெறுமே எச்சரிக்கை செய்துவிட்டு மாற்று வழி சொல்லா திருக்கிறேனென்றே என்மேல் பலர் குற்றஞ் சொல்லுகிறார்கள்; ஒருவித அனுஷ்டானத்தால் நன்மையுண்டாகு மென்று நினைக்கிறோம். அனுஷ்டானத்துக்குப் பின்னே மறைந்து நிற்கும் உள்ள நிலை தவறாக இருந்தால் அனுஷ்டானம் இன்றில்லாவிட்டாலும் நாளைக்குத் தீமையுண்டாக்கவே செய்யும் என்பஹ்டை நாம் மறந்து விடுகிறோம். இன்று ஒரு ஜாதி கொண்டிருக்கும் அனுஷ்டானம் நாளை எல்லா ஜாதிக்கும் பரவும். மனிதர் தமது மிருகக்குணங்களையும் கூட்டக் கோப தாபங்களையும் விடும்வரை புதி அனுஷ்டானம் புதிய தொரு துன்பக் குருவி ஆகுமேயன்றி வேறில்லை அல்லது வியர்த்தமாகும். நாம் தார்மிகமாக ஸ்த்குணத்தையும் கார்யஸித்திக் குரிய அனுஷ்டானத்தையும் ஒன்றாகக் கருதிக் குழம்பியே பழகியிருக்கிறோமாதலால் ஒவ்வொரு புதிய அனுஷ்டானமும் தோற்றுப் போகும் போது தர்ம விதியினிடத்திலேயே அவநம்பிக்கை கொள்ள நேரிடுகிறது.

ஆதலால் நான் எந்தப் புதிய அனுஷ்டானத்திலும் நம்பிக்கை வைப்பதில்லை. தெளிவான யோசனையும், பெருந்தகைமையுடைய உள்ளமும், நேர் நடையுமுடையவர்களாய் உலக முழுதிலும் ஆங்காங்கே இருக்கும் தனித் தனி மனிதர்களிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அவர்களே தர்மத்தின் உண்மைக்கு வாய்க்கால்களாவார்கள். நமது தார்மிக லக்ஷ்யங்கள் உளியும் சம்மட்டியும் வைத்துக் கொண்டு வேலை செய்யவில்லை. சிற்பிகளிடம் அனுமதி கேட்காமல் மரம் வளர்வது போல் மண்ணுக்குள் வேர்களையும் இயற்கையிலேயே விடுகின்றன. இந்தக் காரணத்தாலேதான் ஜப்பானில் ப்ரஞ்ச் தேசத்து யெளவனப் பிராயமுடைய தர்மிஷ்டனொருவனைக் கண்டபோது இனி நாகரிகத்தில் உயர்ந்த காலம் வருவதைப் பற்றி என் மனதில் நிச்சய மேற்பட்டது. ஐரோப்பாவில் அழிவின் பெரிய சக்திகள் களிக் கூத்தாடிக் கொண்டிருக்கையிலே நான் இந்தத் தனியான வெளிக் கீர்த்தி பெறாத ப்ரஞ்சு இளைஞனைக் கண்டேன். அவனுடைய முகத்தில் புதிய ஸூர்யோதயத்தின் ஒளி வீசிற்று. அவனுடைய வாக்கில் புதிய உயிரின் அதிர்ச்சி தோன்றிற்று. எனவே ராஜ்யதந்த்ரிகளின் பஞ்சாங்கத்தில் பதிவாகா விடினும் மஹத்தான புதிய யுகம் ஏற்கெனவே பிறந்து விட்டதென்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

- ரவீந்திரநாத டாகுரின் ஐம் பெருங் கட்டுரைகள் என்ற நூலிலிருந்து மொழி பெயர்த்தவர் பாரதியார்

No comments:

Post a Comment