Friday, July 15, 2011

பொய்யோ மெய்யோ


முன்னுரை:

எல்லா சாத்திரங்களும் ஏறக்குறைய உண்மைதான். ஆனால் எல்லோருக்கும், எப்போதும் ஒரே சாஸ்திரம் ஒத்துவராது. சின்ன திருஷ்டாந்தம் சொல்லுகிறேன். 

ஒரு செல்வர், கிழவனார்; ஒரு வேளை ஆகாரம் செய்து கொண்டு, லெளகிக விஷயங்களைக் தான் கவனியாமல் பிள்ளைகள் கையிலே கொடுத்துவிட்டு, நியம நிஷ்டைகள் ஜபதபங்களுடன் சுந்தர காண்டத்தையும் கடோபநிஷத்தையும் பாராயணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறாமலிருப்பதே மேலான வழி என்ற கொள்கை இந்தக் கிழவனாருக்குச் சரிப்பட்டுவரும். 

ஒரு 16 வயது ஏழைப்பிள்ளை; தகப்பனில்லை; வீட்டிலே தாயாருக்கும் தங்கைக்கும் தனக்குமாக எங்கேனும் போய் நாலு பணம் கொண்டுவந்தால்தான் அன்றன்று அடுப்பு மூட்டலாம். இவன் மேற்படி சுந்தரகாண்ட வழியைப் போய்ப் பிடித்தால் நியாயமாகுமா? 

’இந்த உலகமே பொய்’ என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது. சந்நியாசிகள் இதை ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கட்டும். அதைப்பற்றி இந்த நிமிஷம் எனக்கு வருத்தமில்லை. குடும்பத்திலிருப்போருக்கு அந்த வார்த்தை பொருந்துமா? நடுவீட்டில் உச்சரிக்கலாமா? அவச்சொல்லன்றோ? நமக்குத் தந்தை வைத்துவிட்டுப் போன வீடும் வயலும் பொய்யா? தங்கச் சிலைபோல் நிற்கிறாள் மனைவி; நமது துயரத்துக்கெல்லாம் கண்ணீர்விட்டுக் கரைந்தாள்; நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள்; நமது குழந்தைகளை வளர்த்தாள்; அவள் பொய்யா? குழந்தைகளும் பொய்தானா? பெற்றவளிடம் கேட்கிறேன் குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா?

வீடு கட்டிக் குடித்தனம் பண்ணுவோருக்க்கு மேற்படி சாஸ்திரம் பயன்படாது. நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்குமாம், இவற்றைத் தரும்படி தத்தம் குல தெய்வங்களை மன்றாடிக் கேட்க வேண்டும். எல்லாத் தெய்வங்களும் ஒன்று. அறம், பொருள், இன்பம் என்று மூன்றிலும் தெய்வ ஒளி காணவேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானே கிடைக்கும். 

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்

கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்

கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?

வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

பின்னுரை: 
முதற்பாட்டிலே நிற்பது நடப்பது முதலியன உலகத்தில் தோன்றும் வடிவங்கள்; கற்பது கேட்பது முதலியன செய்கைகள்; மூன்றாம் பாட்டிலே, கோலமும் பொய்களோ, அந்தக் குணங்களும் பொய்களோ என்பது, தெளிவாகச் சொன்னால், “தேளின் உருவம் மாத்திரம் பொய்யோ? அது கொட்டுவதும் பொய்தானோ?” என்ற கேள்வி.
                                                             

1 comment:

  1. அருமையான பாடல். நினைக்க நினைக்க வியப்பாக இருக்கிறது.

    நன்றி.

    ReplyDelete