Tuesday, November 13, 2012

நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்

ருஷ்யாவில் ஜார் சக்ரவர்த்தியின் ஆட்சிபெரும்பாலும் ஸமத்வக் கக்ஷியார் அதாவது போல்ஷிவிஸ்ட் கக்ஷியாரின் பலத்தாலே அழிக்கப்பட்டது.எனினும் ஜார் வீழ்ச்சியடைந்த மாத்திரத்திலே அதிகாரம் போல்ஷிவிஸ்ட்களின் கைக்கு வந்துவிடவில்லை. அப்பால் சிறிது காலம், முதலாளிக் கூட்டத்தார் கெரன்ஸ்கி என்பவரைத் தலைவராக நிறுத்தி, ஒருவிதமான குடியரசு நடத்தத் தொடங்கினார்கள். ஆனால் கெரன்ஸ்கியின் ஆட்சி அங்கு நீடித்து நடக்க வில்லை. இங்கிலாந்து, ப்ரான்ஸ் முதலிய நேச ராஜ்யங்களிடமிருந்து பலவகைகளில் உதவிபெற்ற போதிலும் புதிய கிளர்ச்சிகளின் வெள்ளத்தினிடையே, கெரன்ஸ்கியால் தலைதூக்கி நிற்க முடியவில்லை. சில மாதங்களுக்குள்ளே கெரன்ஸ்கி தன் உயிரைத் தப்புவித்துக்கொள்ளும் பொருட்டாக ருஷ்யாவினின்றும் ஓடிப்போய், நேசவல்லரசுகளின் நாடுகளில் தஞ்சமென்று குடிபுகநேரிட்டது.

போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே அதற்குப் பலவகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம்கடமையாகக் கருதியவர்களிலே சிலர் அதன்மீது ராஜரீகநெறிகளிலே குற்றங்கள் சுமத்தியது போதாதென்று, போல்ஷிவிஸ்ட் கக்ஷியார் ஸ்திரீகளையும் பொதுவாகக் கொண்டு ஒருத்தியை பலர் அனுபவிக்கிறார்களென்று அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. ஆனால், 'கெட்டிக்காரன்புளுகு எட்டு நாளைக்கு' ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டுவிடும். ஒரு பெரிய ராஜ்யத்தைக்குறித்து எத்தனை காலம் பொய் பரப்பிக் கொண்டிருக்கமுடியும்? சில தினங்களுக்கு முன்பு, இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் 'மாஞ்செஸ்டர்கார்டியன்' என்ற பத்திரிகை நவீன ருஷியாவின் விவாகவிதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களைப் பிரசுரம் செய்திருக்கிறது.

அவற்றைப் பார்க்கும்போது, நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான உயர்ந்தபக்குவ நிலையை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கிறதென்று தெளிவாகவிளங்குகிறது ஆண், பெண் இருபாலாரும் பரிபூரண ஸமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இருபாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக்கட்டைச் சமைக்கவேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம். பெண்களுக்கு விடுதலை தாங்கள்வேறு பல ஜாதியார்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையிலே பார்த்தால், ஐரோப்பாவின் இதரப் பகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷியா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ள தென்பது பரத்யக்ஷமாகத் தெரிகிறது.

''மாஞ்செஸ்டர் கார்டியன்'' சொல்லுகிறது:-''தெற்கு ஸோவியட் (போல்ஷிவிஸ்ட்) ருஷியாவில் இதுவரையிலிருந்த வீண் நிர்ப்பந்தங்கள் இனி விவாக விஷயத்தில் இல்லாதபடி ஒழித்துவிடப்படும். அதாவது, வேற்றுமைகள் முதலியன விவாகங்களுக்குத் தடையாகக்கணிக்கப் படமாட்டா! இப்போதுள்ள சட்டப்படி ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலோரும் ஸமானமாகவே கருதபடுவர். எல்லாக் குழந்தைகளும் ஸமூஹச் சட்டப்படி பரிபூரண சமத்வம் உடையனவாம். பாதுகாப்பில்லாத குழந்தைகள் யாருக்குப் பிறந்த போதிலும், அவற்றைப்பாது காக்க ஒரு தனி இலாகா ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் ராஜாங்க சாஸனப்படி நடைபெறும் விவாகங்களையே அங்கீகாரம் செய்யும். பெண்கள் பதினாலு வயதுக்குள்ளும், ஆண்கள் பதினெட்டு வயதுக்குள்ளும் விவாகம் செய்துகொள்ள வேண்டும். இரு திறத்தாரும் மனமொத்தால் தான் விவாகம் செய்யலாம். விவாகம் முடிந்ததும் புருஷன் அல்லது ஸ்திரீயின் பெயரைக் குடும்பத்தின் பெயராக வைத்துக்கொள்ளலாம். விவாகத்துக்குப் பிறகு தம்பதிகள் பரஸ்பரம் உதவியாக வாழக் கடமைப் பட்டிருக்கிறார்கள். புருஷனேனும் ஸ்திரீயேனும் விவாக பந்தத்தை நீக்கிக்கொள்ள விரும்பினால், அங்ஙனமே நீக்கிக் கொள்ளச் சட்டம் இடங்கொடுக்கிறது.

மேற்படி விவரங்கள் 'மான்செஸ்டர் கார்டியன்' பத்திரிகையிலே காணப்படுகின்றன. சில தினங்களின் முன்பு ஒருகிராமாந்தரத்து ஸ்திரீ 'மாதர் நிலை' என்ற மகுடத்தின் கீழே 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் ஒரு வியாஸம் எழுதியிருந்தார். அந்த வியாஸத்தை வாசித்துப் பார்த்தால் (ஸ்ரீ மான்காந்தி சொல்லுவது போல) எவனுக்கும் அழுகை வராமல் இராது. அந்த வ்யாஸத்தில் நம்முடைய தேசத்து ஸ்திரீகளை நம்மவரில் ஆண்மக்கள் எத்தனை இழிவாகவும் குரூரமாகவும் நடத்துகிறார்களென்பதை அந்த ஸ்திரீ மிகவும் நன்றாக எடுத்து விளக்கியிருந்தார். உலகத்தில் ஒரு ஸ்திரீ ஜனன மெய்திய மாத்திரத்திலே பூமாதேவி மூன்றே சொச்சம் முழம் கீழே அமிழ்ந்து போய் விடுவதாக இந்நாட்டில் முந்தைய ஆண்மக்கள் எழுதி வைத்திருப்பதையும் அதுபோல் ஸ்திரீகளை இழிவாகவும் குறைவாகவும் சொல்லும் வேறு பல 'சாத்திர' வசனங்களையும் மேற்கோள் காட்டி, அந்த மாது நம் பெண்மக்களின் ஸ்திதி, விலங்குகளின் ஸ்திதியைக் காட்டிலும் பரிதாபத்துக்கு இடமாக விளக்கி மிகவும் வருத்த முணர்த்தியிருந்தார்.

இப்படிப்பட்ட நம்முடைய ஸ்திரீகளின் நிலைமையை நவீன ருஷ்யாவில் ஸ்திரீகளின் விஷயமாக ஏற்பட்டிருக்கும் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்த சக்தியினாலே கீழே வீழ்த்திற்று என்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப் புலப்படும். நாம் ஐரோப்பியர் காட்டும் நெறிகளை முற்றிலுமே கைப்பற்றிக் கொள்ளுதல் அவசியமில்லை. திருஷ்டாந்தமாக, நாம் குழந்தைகளை குடும்ப சம்ரக்ஷணையினின்றும் பிரித்து ராஜாங்க ஸம்ரக்ஷணையில் விடவேண்டியதில்லை. பெண்கள் 14வயதுக்குள்ளும் ஆண்கள் 18 வயதுக்குள்ளும் விவாகம் பண்ணித் தீர வேண்டுமென்று நிர்பந்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. விவாகத்தை ரத்து செய்யும் விஷயத்தில் அவஸரப்பட வேண்டியதில்லை. பொறுமையை உபயோகப்படுத்தி விவாகக் கட்டை நிரந்தரமாகப் பாதுகாப்பதே மனித நாகரீகத்தின் சிறப்பாதலால் நாம் அதற்குரிய ஏற்பாடுசெய்வோம். ஆனால் 'ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலோரும் ஸமானமாகவே கருதப்படுவார்கள்' என்று ருஷ்யச் சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கருத்தைஅனுஸரித்தல் மிக, மிக, மிக, மிக அவசரம்.

Monday, November 12, 2012

முகமதிய ஸ்திரீகளின் நிலைமை

இரண்டு தினங்களுக்கு முன்பு என்னுடைய முகம்மதிய நண்பர் ஒருவர் என்னைப் பார்க்கும் பொருட்டு வந்திருந்தார். இவர் இஸ்லாம் மார்க்கத்தில் ஆழ்ந்த பற்றுதல் உடையவர். எதிர்காலத்தில் இஸ்லாம் மதம் மிகுந்த மகிமையும் ஒளியும் உடையதாய் உலகத்துக்கு எண்ணிறந்த நன்மைகள் செய்யப்போகிறதென்று இவர் உறுதியாக நம்புகிறார். இவரது நம்பிக்கை நிறைவேறு மென்பதற்கு பல அடையாளங்கள் இக்காலத்தில் உலகமெங்கும் தோன்றுவதால், நானும் இவருடைய கருத்தை அங்கீகாரம் செய்கிறேன். ஆதலால், இவருக்கும் எனக்கும் மிகுந்த நட்பேற்பட்டு வளர்ந்து வருகிறது.

இவர் அன்று மாலை என்னிடம் முதலாவது கேட்ட கேள்வி:-

''சென்ற 22-5-20-ல் சுதேசமித்திரன் பத்திரிகை 7-ம் பக்கத்தில் `ரெயில்வே ஸ்தானம்? என்றொரு கதை எழுதியிருந்தீர்களே'' அது மெய்யாகவே நடந்த விஷயமா'' வெறும் கற்பனைக் கதை தானா?'' என்றார்.

''வெறும் கற்பனை'' என்று நான் சொன்னேன்.

'என்ன கருத்துடன் எழுதினீர்?'' என்று அவர் கேட்டார்.

அதற்கு நான்:- ''பொதுவாக நான் கதைகளெழுதும் போதும், வெறுமே கற்பனை நயத்தைக் கருதி எழுதுவது வழக்கமேயன்றி ஏதேனும் ஒரு தர்மத்தைப் போதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதும் வழக்கமில்லை. தர்மபோதனைக்கு வியாஸங்களெழுதுவானேன்'' கற்பனைப் புனைவையே அதில் நான் முக்கியமாகக் கருதுவேன். எனிலும் என்னை மீறியே கதைகளிலும் பெரும்பாலும் தர்மபோதனைகள் வந்து நுழைந்து விடுகின்றன. அவ்வாறே இந்த ''ரெயில்வே ஸ்தானம்'' என்ற கதையிலும் ஒரு தர்மக் கொள்கை இருக்கத்தான் செய்கிறது. ஒருவன் பலமாதரை மணம்புரிந்து கொண்டால் அதினின்றும் அவனுக்குக் கஷ்டம் தான் விளையுமென்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காணவேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்துகொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படி கதையினால் குறிப்பிடப்படும் உண்மைகளாகும்? என்றேன். அப்போது அந்த முஸ்லீம் நண்பர்:- ''அந்தக் கதையில் ஒரு பிழை இருக்கிறது'' என்றார்.

"என்ன பிழை?" என்று கேட்டேன்.

''அக் கதையில் ஒரு முகம்மதியப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி சகோதரமான மூன்று பெண்களை மணம் புரிந்துகொள்ளுதல் முகம்மதிய சாத்திரப்படி ''ஹராம்'' (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி  உயிருடனிருக்கையில்அவளுடன் பிறந்த மற்ற ஸ்திரீயை ஒரு முஸ்லீம் மணம் புரிந்துகொள்ளக்கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை'' என்று அந்த முகம்மதிய நண்பர் சொன்னார்.

இதைக் கேட்டவுடன் நான்:- ''சரிதான், எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்குளுக்குள்ளே உண்டாதலால், அதுபோலவே முகம்மதியர்களுக்குள்ளேயே இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதி விட்டேன். எனவே அந்தக் கதாநாயகனாகிய முகம்மதியப்பிரபுவுக்கு அவனுடைய சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தானென்பதை மாற்றித்தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தானென்று திருத்தி வாசிக்கும்படி ''சுதேச மித்திரன்' 'பத்திரிகையில் எழுதி விடுகிறேன்'' என்றேன். (ரெயில்வே ஸ்தானம் என்ற கதையில் நான் மேலே கூறிய சாதாரணத்தவறு புகவிட்டது பற்றி பத்திராதிபரும் பத்திரிகை படிப்போரும் என்னைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன். உலகமெல்லாம் மாதர்களுக்கு நியாயம் செய்ய வேண்டுமென்ற கிளர்ச்சி நடப்பதை அனுசரித்து முஸ்லீம்களும் ஏக பத்தினி விரதம், பெண் விடுதலை, ஆண் பெண் சமத்துவம் என்ற கொள்கைகளைப் பற்றிமேன்மை அடைய வேண்டுமென்பதே என் கருத்து. இந்தக் கருத்து நிறைவேறும்படி பரமாத்மாவான அல்லாஹூத்த ஆலா அருள் புரிவாராக).

இதிலிருந்து சம்பாஷணை பொதுவாக முகமதிய விவகாரங்களின் விஷயத்தைக் குறித்து நடைபெறலாயிற்று. அப்பால் முகம்மதிய மாதர்களின் ஸ்தானத்தைக் குறித்துப் பேசலானோம்.

என்னுடனே ஒரு ஹிந்து நண்பர் இருந்தார். அவர் அந்த முஸ்லீம் நண்பரை நோக்கி:- ''உங்களுக்குள்ளே ஸ்திரீகளை அந்தப்புரத்தில் மறைத்துவைப்பதாகிய (கோஷா) வழக்கம் எக்காலத்தில் ஏற்பட்டது?'' என்று கேட்டார்.

அது கேட்டு அந்த முகம்மதிய நண்பர்:-''முகம்மது நபி (ஸல்லல்லாஹி அலகிவஸல்லா) அவர்கள்காலத்திற்கு நெடுங்காலம் முன்னே இந்த வழக்கம் அரேபியாவில் இருந்து இடையே மாறிப்போய்விட்டது.பிறகு முகம்மது நபி அதை மீளவும் விதியாக்கினார்''என்றார். அப்போது நான் ''மதவிஷயங்களை அதாவதுஅல்லாவிடம் செலுத்தவேண்டிய பக்தி முதலிய விஷயங்களைத் தவிர, விவாகம், ஸ்திரீகளை நடத்த வேண்டிய மாதிரி முதலிய ஜனசமூகத்தின் ஆசார நியமங்களில் காலத்துக்குத் தக்கபடி புதிய மாறுதல்கள் செய்து கொள்ளலாமன்றோ?'' என்று கேட்டேன்.

''அங்ஙனம் ஆசார விஷயங்களிலே கூடமாறுதல்கள் செய்ய எங்கள் சாஸ்திரங்கள் இடங்கொடுக்கவில்லை!'' என்று அந்த முஸ்லீம் நண்பர் சொன்னார். ''எந்த சாஸ்திரங்களுமே ஆசார நியமங்களில், அதாவது நம்மால் விதிக்கப்பட்ட புதிய ஆசாரமுறையில் அதற்குப்பிறகு யாதொரு மாறுதலும் ஏற்படக்கூடாதென்று விதிப்பதுதான் வழக்கம். ஆனால் அதன்படி எங்கும் நடப்பதில்லை. எல்லா ஜாதிகளிலும் எல்லா ஜன சமூகங்களிலும் எல்லா தேசங்களிலும் எல்லா மதஸ்தர்களுக்குள்ளும் காலத்துக்குக் காலம் ஆசாரங்களில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் வருகின்றன'' என்று நான் சொன்னேன்.

''புராதன நபிகளால் விதிக்கப்பட்ட ஆசாரங்களில் சில முகம்மதிய நபியின் காலத்தில் மாறவில்லையோ? அது போல் முகம்மது நபியின் காலத்தில் ஏற்பட்ட ஆசாரங்களை அதன் பிறகு மாற்றக்கூடாதோ?'' என்று என் ஹிந்து நண்பர் கேட்டார்.

அது கேட்ட என் முஸ்லீம் நண்பர்: ''கூடாது. ஏனென்றால் முகம்மது தான் கடைசி நபி. அவருடைய உத்தரவுகள் கடைசியான உத்தரவுகள். அவற்றை மாற்றுவதற்கு இடமில்லை'' என்றார்.

''முந்திய நபிகளின் கட்டளைகளும் கடவுளுடைய நேரான கட்டளைகளேயன்றி அந்தந்த நபிகளின் சொந்தக் கருத்துக்களல்ல என்பதை இஸ்லாமானவர்கள் அங்கீகாரம் செய்கிறார்கள். காலத்தின் மாறுதலுக்கிணங்க, அல்லா, தன் பழைய கட்டளைகளைமாற்றி ஒவ்வொரு புதிய நபி மூலமாகவும் புதிய கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார்; எனவே, முகம்மது நபி இருந்த காலத்துக்கும் தேசத்துக்கும் பொருந்த அவர் மூலமாகப் புதியகட்டளைகள் கொடுக்கப்பட்டன மதக்கொள்கைகள் எக்காலத்துக்கும் எந்த தேசத்திற்கும் பொது. ஆதலால் அவற்றை மாற்றக்கூடாது. வெறுமே ஜனங்கட்கு சம்பந்தமான ஆசார விவகாரங்களை காலதேசங்களுக்குப் பொருந்தும்படி மாற்றலாமென்று முகம்மது நபி சொல்லவில்லையா?'' என்று அந்த ஹிந்து நண்பர் கேட்டார்.

அங்ஙனம் எங்கள் நபிநாயகம் அவர்கள் உத்தரவு கொடுக்கவில்லை'' என்று என் முஸ்லீம் நண்பர் தெரிவித்தார்.

''உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமோ? நீங்கள் கொரான் முழுதும் வாசித்திருக்கிறீர்களோ?'' என்றுநான் கேட்டேன்.

அதற்கு என் முஸ்லீம் நண்பர்:- ''நான் கொரான் முழுதும் ஓதியதில்லை. என் சுற்றத்தாரில் சிலர் கொரான் முற்றிலும் ஓதியிருக்கிறார்கள். இந்த விஷயத்தைப்பற்றி அவர்களிடம் கேட்டுத் தெரிவிக்கிறேன்'' என்றார். பிறகு இந்த விஷயத்தை விட்டுவிட்டோம்.

அப்பால் நான் என் முஸ்லீம் நண்பரை நோக்கி:- ''தென் ஜில்லாக்களிலே தமிழ்ப் பேசும் முஸ்லீம் (ராவுத்தர்) களுக்குள்ளே கோஷா வழக்கம் காணப்படவில்லையே! அதன் காரணம் யாது?'' என்று கேட்டேன்.''இங்கும் சிலர் அந்த வழக்கத்தைப் பரிபாலிக்கத்தான் செய்கிறார்'' என்று என் முஸ்லீம் நண்பர் சொன்னார்.

''எனினும் பலர் அதைப் பரிபாலிக்கவில்லையே? அதன் முகாந்திரம் யாது?'' என்று கேட்டேன்.

''வேதசாஸ்திர விதிகளில் அவர் செலுத்தக்கடமைப்பட்ட அளவு பயபக்தி செலுத்தாமலிருப்பதே அதற்கு முகாந்திரம்'' என்று என் முஸ்லீம் நண்பர் தெரிவித்தார்.

''அப்படியிருந்தும், தென் ஜில்லாக்களிலுள்ள இந்த முஸ்லீம்கள் மற்றப் பக்கத்து முஸ்லீம்களைக் காட்டிலும் அல்லாவின் பக்தியிலும் மதப்பற்றுதலிலும் சிறிதேனும் குறைந்தவர்களில்லை என்பது பிரத்யக்ஷ மன்றோ? அங்ஙனமாக, இவர்கள் கொரான் விதிகளில் போதிய அளவு பயபக்தி செலுத்தாமல் இருக்கிறார்கள் என்று சொல்லுதல் நியாயம் அன்று. இந்த கோஷா விஷயத்தில் மாத்திரம் இந்த தேச சம்பிரதாயங்களைத் தழுவி நடக்கிறார்கள். இவர்களுடைய கூட்டத்தில் எத்தனை ஞானிகளும் பக்திமான்களும் அவதாரம் செய்திருக்கிறார்கள். அவர்கள் இந்த கோஷா விஷயத்தை இக்கூட்டத்தின் மீது வற்புறுத்தாமல் தான் இருந்திருக்கிறார்கள். ஆதலால் மதபக்தி முதலிய விஷயங்களில் மாறுதல்கள் கூடாதேயொழிய, ஆசாரங்களில் காலத்துக்குத் தகுந்த இடத்துக்குத் தகுந்த மாறுதல்கள் செய்து கொள்ள இஸ்லாம் சாஸ்திரங்களே அனுமதி தரக்கூடும் என்று நினைக்கிறேன்'' என்று நான் சொன்னேன்.

இது கேட்டு அந்த முஸ்லீம் நண்பர் மீளவும்:-''நான் நன்றாகக் கொரான் ஓதியவர்களை விசாரித்து இந்த விஷயத்தில் முடிவு சொல்லுகிறேன்'' என்றார். ''இடைக்காலத்து சாஸ்திரங்கள் இந்த விஷயத்தில் அதிக முரண் செலுத்தக் கூடும். ஆதலால் சாட்சாத் கொரான் வேதத்தையே நன்றாகப் படித்து உணர்ந்தவர்களிடம் விசாரணை செய்யுங்கள்'' என்றேன்.

''சரி, அங்ஙனமே செய்கிறேன்'' என்று என் முஸ்லீம் நண்பர் சொன்னார்.

பிறகு துருக்கி தேசத்தில் ஸ்திரீகளுக்குள்ளே பிரம்மாண்டமான விடுதலைக் கிளர்ச்சி நடந்து வருவதைப்பற்றியும் அங்கு பல மாதர்கள் கோஷா வழக்கத்தை முற்றிலும் ஒழித்துவிட்டு, கல்வி கேள்விகளில் உயர்ந்த தேர்ச்சியுடையோராய், தங்களுக்குள்ளே சபைகள் சேர்த்தும் தாங்களே உபந்நியாஸங்கள் முதலியன நடத்தியும், உலகத்துமற்ற மாதர்களைப்போல் துருக்கியிலுள்ள மாதரும் கல்வி, விடுதலை, ஆண்களுடன் சமத்துவம் இவற்றை எய்திமேன்படுமாறு அதிதீவிரமான முயற்சிகள் செய்து வருவதைப்பற்றியும் நான் சில வார்த்தைகள் சொன்னேன்.

அப்பால் எங்கள் காலைக் கூட்டம் கலைந்துவிட்டது. என் முஸ்லீம் நண்பரும் தம் வீட்டுக்குப் போயினர்.

Sunday, November 11, 2012

அபிநயம்

கூத்தில் அபிநயமே பிரதானம்.

தாள விஸ்தாரங்களைக் கூத்தன் தனது உடம்பிலே தோற்றுவிப்பதே கூத்தின் உடல். அபிநயமே கூத்தின் உயிர். தாளந் தவறாமல் ஆடிவிட்டால் அது கூத்தாகாது.

தற்காலத்தில் சில பாகவதர்கள் கதாகாலக்ஷேபங்களில் இடையே கொஞ்சம் கூத்தாடிக் காட்டுகிறார்கள். இதற்குச்சிலர் "பட்டணம் கிருஷ்ண பாகவதரின் வழி" என்று பெயர் சொல்லுகிறார்கள். 'இந்தக் கூத்து வெறுமே யதார்த்த நாட்டியமென்று பிறர் நினைக்க வேண்டும்' என்று உத்தேசித்தே அந்த பாகவதர்கள் அப்படிச் செய்கிறார்கள்.

பாகவதர் ஒருவர் வேதபுரத்தில் நந்தனார் சரித்திரம் நடத்தினார். நந்தன் அடிமை, ஐயர் ஆண்டை. ஐயருக்கு முன்னே நந்தன் போய் நிற்கிறான். "நைச்ய" பாவம் என்றது நைச்யத் தோற்றம். நைச்யம் என்பது நீசன் என்ற சொல்லடியாகத் தோன்றி நீசத்தன்மை என்று பொருள்படும் குணப்பெயர். இங்கு நீசன் என்பது அடிமை. எனவே, நைச்ய பாவமென்றால் அடிமைத் தோற்றம். இதை, அந்த பாகவதர் பல அபிநயங்களினாற் காட்டினார். நிரம்ப நேர்த்தியான வேலை செய்தார். புருவத்தை அசைக்கிற மாதிரிகளும், கடைக்கண் காட்டுகிற மாதிரிகளும், தோளையும் வயிற்றையும் குலுக்குகிற மாதிரிகளும், மெல்ல மெல்ல பாகவதருடைய அபிநயங்கள் பக்தி ரஸத்திலிருந்து சிருங்கார ரஸத்தின் தோரணைகளுக்கு வந்து சேர்ந்தன. மேற்படி சிருங்காரத்தின்அபிநயங்களிலேயும் மேற்படி பாகவதர் குற்றமில்லை. புருவமும்,கடைக்கண் முதலியவற்றை மிகத் திறமையுடன் வெட்டுகிறார். சிருங்கார ரஸத்திற்கு, ''பாவம் ரதி; சந்திரன், சந்தனம் முதலியன உத்தீபனங்கள் அல்லது தூண்டுதல்கள்'' என்றும் சாஸ்திரம் சொல்லுகிறது. மேற்படி பாகவதர் சந்திரன் முதலியவற்றைக் கண்ணாலே குறிப்பிடுகிறார்.

ஆனால் இவர் புருஷராக இருந்தும் புருஷாபி நயங்கள் குறைவாகவும், நாயிகாபிநயங்கள் அதிகமாகவும் கற்றிருக்கிற விந்தை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நைச்ய பாவத்திலே, அதாவது அடிமைத் தோற்றம் காட்டுவதிலே கூட, இவர் இந்தப் பெண்மையைக் கலப்பதனால் அதிக மிசிரம் ஏற்படுகிறது. ஆண்டையின் முன்னே வந்து நிற்கும் நந்தன் பறையன் பாதியும் தாஸி பாதியுமாகக் காட்டுகிறார்.

இருந்தாலும், பாகவதருடைய முகத்தில் காட்டும்அபிநயங்களைப் புகழ்ந்து சொல்லுதல் நம்முடைய கடமை. ஊடலை மாத்திரம் முகத்தில் தொண்ணூற்றொன்பது அபிநயங்களிற் காட்டுகிறார். இப்படி மற்ற வகுப்புக்களையும் சேர்த்தால் எத்தனைவித அபிநயங்களாகும்? நிறைய ஆகும் அல்லவா? கருணா ரஸத்தின் பாவம் சோகம் என்று சொல்லப்படும். இதைக் காட்டுவதில் மேற்படி பாகவதருக்குத் தோடாப் பண்ணிப்போடத் தகும். இன்னும் ஒன்று, கடைசி. அதிலேதான் அந்த பாகவதர் முதல் தரமான வேலைசெய்கிறார். அதாவது, பயாநக ரஸத்தைப் பதினாயிரம் அபிநயங்களிற் காட்டுகிறார். இந்த ரஸத்திற்குப் பாவம் பயம். மானுக்கும், முயலுக்கும், சில மனுஷ்யருக்கும் இயற்கையாகவுள்ள பயத்தை இவர் அபிநயத்தில் பூதக் கண்ணாடிபோலக் காட்டுகிறார். இந்த பாகவதர் சில தினங்களின்முன்பு என்னைப் பார்க்க வந்தார். ”ஹாஸ்ய ரஸம், ரௌத்ரரஸம், வீரரஸம், அற்புதம், சாந்தம் என்ற ஐந்து ரஸங்களையும் நீங்கள் தீண்டவேயில்லை. அதென்ன காரணம்?"என்று கேட்டேன். அந்த பாகவதர் சொல்லுகிறார்: "நான் என்ன செய்வேன்? நான் நாட்டிய சாஸ்திரம் படித்தது கிடையாது. ஊரிலே கண்ட அபிநயங்களை நான் நடித்துக்காட்டுகிறேன். ஹிந்துக்களிலே அடிமைத் தனம் அதிகம்.ஆதலால், எனக்கு "நைச்ய பாவம்" என்ற அடிமைத் தோற்றம் காட்டுதல் மிகவும் ஸுலபமாக வருகிறது. வீர ரஸம் காட்டச்சொன்னால் எப்படிக் காட்டுவேன்? நான் பிறந்தது முதலாக இன்று வரை ஸஞ்சாரம் செய்து வந்திருக்கிற ஏழெட்டு ஜில்லாக்களில் ஒரு வீரனைக்கூடப் பார்த்ததில்லை. வீரரஸத்திற்கு நான் எங்கே போவேன்?" என்று சொன்னார். அப்போது நான் "ரஸபண்டாரம்" என்ற ஸம்ஸ்க்ருதசாஸ்திரத்திலிருந்து பின்வரும் பொருளுடைய சுலோகங்களை அவருக்குப் படித்துக் காட்டினேன். அந்த நூல்சொல்லுகிறது:-

"லோக நடையினாலே சாஸ்திரம் பிறக்கிறது. அந்த சாஸ்திரத்தைப் பயிற்சியினாலே விஸ்தாரப் படுத்துகிறார்கள். ரஸதிருஷ்டி ஏற்படுவதற்கு இயற்கையே மூலம். ரஸவான்களுடைய பழக்கத்தாலும் பக்தி வழிகளை அனுசரிப்பதனாலும் ஒருவன் ரஸக்காட்சியை வருவித்துக் கொள்ளலாம்.

"ராகத் துவேஷங்களை ஜயிப்பதனால் ஒருவன் சித்தசமாதி யடைகிறான். அப்போது ஞானதிருஷ்டி யுண்டாகிறது. அந்த ஞானதிருஷ்டி யுடையவர்கள் புறப்பயிற்சியில்லாமலே சாஸ்திரங் களுக்குக் கண்ணாடிபோல் விளங்குவார்கள்.

"சிங்கார ரஸத்தை ஒரு கூத்தன் காண்பிக்கும்அபி நயங்களில் கூத்துப் பெண்ணுடைய அபிநயங்கள் கலக்கலாகாது. ஆண் மகனே பெண்ணுருக் கொண்டு கூத்தாடுவானாயின், அப்போது பெண்மை அபிநயங்கள் காண்பிக்கத்தகும். ஆண்மகன் உருமாறாமல் கூத்தாடும்போது பெண்மை தோன்றலாகாது.

"வீர ரஸத்தில் ஒருவன் தேர்ச்சியடைய விரும்புவானாயின், ராமன் முதலிய அவதார புருஷர்களுடைய வடிவை அவன் தியானம் செய்யக் கடவான். நாராயண உபாஸனையே கூத்தனுக்கு வீர ரஸத்தில் தேர்ச்சி கொடுக்கும்.

"பயாநக ரஸத்தை ஸபையிலே கூத்தன் அதிகமாக விவரிக்கலாகாது. எந்த நாட்டிலே கூத்தர் பயாநகத்தையும் சோகத்தையும் அதிகமாகக் காட்டுகிறார்களோ, அந்த நாட்டில்பயமும் துயரமும் அதிகப்படும்.

"நைச்ய பாவம் அதிகமாகத் தோன்றும் கூத்தினாலே, ஒரு நாட்டார் அடிமை இயற்கை மிகுதியாக உடையவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆதலால், கூத்தர் கூத்துகளில் அடிமைத் தோற்றத்தை மிதமிஞ்சிக் காட்டாதபடி நாட்டார் கவனித்துக் கொள்ளவேண்டும்.

"நாட்டிய சாஸ்திரத்தை உண்மையாகப் பயின்றால், அதிலிருந்து ஆண்களுக்கு ஆண்மையும், பெண்களுக்குப் பெண்மையும் உண்டாகும். அதை நெறி தவறிப் பயிற்சிசெய்தால் அதிலிருந்து ஆணுக்குப் பெண்மையும், பெண்ணுக்கு ஆண்மையும் விகாரமாகத் தோன்றும்.

"நாட்டிய சாஸ்திரத்தை ஆதியிற் பரமசிவன் நந்திக்குக்கற்றுக் கொடுத்தார். அப்போது, பகவான் நந்தியை நோக்கி, ''கேளாய், நந்தி! அபிநயம் தவறுவதாலே ஜனங்கள் நரகத்தை அடைகிறார்கள். தர்மிஷ்டனாகிய கூத்தன் அபிநய உண்மைகளை ஆசார்யனிடமிருந்து நியமங்களுடனே கற்றுக்கொள்ள வேண்டும். அடிமைகள் கூத்துப் பழகினால் அபிநய தர்மங்களைச் சிறிதேனும் தெரிந்து கொள்ளாமல் எப்போதும் அடிமைக் கூத்தொன்றே ஆடிக்கொண்டிருப்பார்கள். அங்ஙனம் அடிமைகள் சாஸ்திர விரோதமாக நைச்யம் ஒன்றையே காட்டி நடத்தும் கூத்தைப் பார்ப்போர் நரகத்தை அடைகிறார்கள்' என்று சொல்லி, மேலும் சொல்லுகிறார்:- ''தர்மிஷ்டனாகிய சிஷ்யன், நெறிப்படி ஆசார்யனிடமிருந்து கற்றுக்கொண்ட நாட்டியத்தில் நவரஸங்களும் ஸமரஸப்பட்டுக் காண்போருக்கு ஆனந்தத்தையும், லக்ஷ்மீ கடாக்ஷத்தையும் ஏற்படுத்தும். நல்ல ஆசார்யன் இல்லாமல் இந்த நாட்டிய சாஸ்திரத்தைப் பழகுவோன் உண்மையான பக்தி யுடையவனாக இருக்க வேண்டும். தெய்வபக்தியினாலே ஸகல வித்தைகளும் வசப்படும்."

இங்ஙனம் மேற்படி ரஸ பண்டாரமென்ற நூலிலிருந்து நான் பல சுலோகங்களை அவருக்குப் படித்துக் காட்டினேன்.

இதையெல்லாம் கேட்டவுடன் அந்த பாகவதர் மிகவும் சந்தோஷமடைந்தவராய், "இந்த சாஸ்திரத்தை என்னிடம் கொடுங்கள். நான் எழுதிக்கொண்டு இந்தப் பிரதியைக் கொடுத்து விடுகிறேன்" என்றார். "அப்படியே செய்யுங்கள்" என்று சொல்லி அந்தச் சுவடியை அவரிடம் கொடுத்தேன்.

அந்த சாஸ்திரத்தில், ''ரஸ ஞானத்திற்கு உபாஸனையே முக்ய ஸ்தானம், என்பது மிகவும் அழுத்திச் சொல்லப்படுகிறது. அதன் பேரில், தாம் சில தினங்களின் முன்பு வேதநாயகர் கோயிலைப் பிரதக்ஷணம் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது இந்த ஊர்க் குள்ளச்சாமி என்ற பரதேசி தம்மை இடையே நிறுத்தி, "ஓம் சக்தி" என்ற மஹாசக்தி மந்திரத்தைத் தமக்கு உபதேசம் செய்துவிட்டுப் போனதாகவும் அதிலிருந்து தாம் பராசக்தி உபாஸனை செய்து வருவதாகவும் சொன்னார்.

நான் மிகவும் சந்தோஷத்துடன், அவரை வண்டியேற்றி வழியனுப்பிவிட்டு வந்தேன். அவர் இன்னும் நம்முடைய புஸ்தகத்தை திரும்பக் கொடுத்தனுப்பவில்லை.

Saturday, November 10, 2012

பெண்ணின் பாட்டு

இதிலுள்ள வகுப்புக்கள்

இருபாலருக்கும் பொதுவான சந்தங்கள் இருப்பதுடன், பெண்களுக்கு மாத்திரம் சிறப்பான பாட்டுக்களும் சந்தங்களும் இருக்கின்றன. பண்டைத் தமிழ் நாட்டு மாதர் பாடிக் கொண்டிருந்த பல பாட்டு வகைகள் இப்போது வழக்கின்றி இறந்து போய்விட்டன.

ஆனால், ஜீவன் பெண்ணென்றும், பரமாத்மா ஆணென்றும் பாவனை செய்து பழைய பக்தர் பாடியிருக்கும் பாட்டுக்களில் பெண்களுக்குரிய சில பாட்டு வகைகள்காணப்படுகின்றன.

திருஷ்டாந்தமாக, திருவாசகத்திலே பின்வரும் வகைகள் காணலாம்.

1.எம்பாவை (பெண்கள் நீராடப்போவது).
2. அம்மானைப் பாட்டு.
3. தும்பி, குயில், கிளி முதலிய தூதுப் பாட்டுகள்.
4. தெள்ளேணம் (நடுவே ஒரு பெரிய முரசை வைத்துக்கொண்டு, பெண்கள்சுற்றியிருந்து இரண்டு கைகளிலும் கோல் கொண்டு கொட்டி அந்தத் தாளத்திற்கு இசையப்பாடுதல்.)
5. சுண்ணம் இடித்தல். சுண்ணமென்பது கந்தப் பொடி.
6. சாழல்.
7. உந்தி. (இவ்விரண்டும் பெண்களுடைய விளையாட்டு என்று தெளிவாகிறது. ஆனால் விளையாட்டின் விவரங்கள் தெரியவில்லை.)
8. பூவல்லி (பெண்கள் பூக் கொய்யும்போது பாடுவது.)
9. தோணோக்கம் (பெண்கள் தோள் கோத்துப் பாடிக் குதிப்பது.)
10. ஊசல் (இதை இக்காலத்தில் "ஊஞ்சற் பாட்டு" என்கிறோம்.)
11. காலைத் துயில் எழுப்பும் பாட்டு.

இங்ஙனம், தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சப்பாணி முதலிய வேறு பல வகைகளுமிருந்தன. 'பிள்ளைத் தமிழ்' என்ற நூல் வகுப்பைக் காண்க. இவற்றிலே, தாலாட்டு, ஊஞ்சல், அம்மானை, பள்ளியெழுச்சி என்ற நான்கு வகையும் வெவ்வேறு சந்தங்களுடன் இக்காலத்தில் நமது பெண்களுக்குள் வழங்கி வருதல் காண்கிறோம். பழைய காலத்து வகைகளை நாம் விஸ்தாரமாகக் கவனிப்பதற்கு வேண்டிய ஸௌகரியங்கள் இல்லை. ஆதலால், பெயர் மாத்திரமே குறிப்பிட்டிருக்கிறோம்.

குடும்பத்துப் பெண்களிலே சாஸ்திரப்படி ஸங்கீதம் கற்றுக்கொள்வோரின் தொகை மிகவும் குறைவு. நகரப் பழக்கமும் சுக ஜீவனமும் உடைய குடும்பங்களில் மாத்திரமே பெண்களுக்கு வாத்தியார் வைத்துப் பாட்டுக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆயினும், வாத்தியார் இல்லாமல் சாஸ்திர வழிகளில் வாஸனை ஏற்பட்டவர் பலர் உண்டு.

இவர்களை யல்லாது, பொதுப் படையாகப் பார்க்குமிடத்து, நமது மாதர் பாட்டுக்களின் இனம் பின்வருமாறு:-

(1) கல்யாணப் பாட்டு. நலங்கு, பத்யம், ஊஞ்சல், ஓடம் முதலியன. (2) கும்மிப் பாட்டு. குதித்துப் பாடுகிற பாட்டுக்கள். இவ் வகுப்பில், கிளிப் பாட்டு, பல்லிப்பாட்டு முதலியனவும் அடங்கும். (3) அம்மானை, தூது, மாலை, சோபனம் முதலிய நீண்ட கதைப் பாட்டுக்கள். (4) பொதுத் தாலாட்டு, விளையாட்டுப் பாட்டுக்கள், ஜாவளிகள், கீர்த்தனை முதலியன.

மேலும், பண்ணைகளில் வேலை செய்யும் பெண்கள், நெல் குத்துவோர், சுண்ணாம்பு இடிப்போர், குறிகாரி, தொம்பச்சி முதலிய வகுப்பினர் தமக்கென்று தனியான மெட்டுக்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேற்கூறப்பட்ட பாட்டுக்களில் மிக இன்பமான சந்தங்கள் பல இருக்கின்றன. இவை கால வெள்ளத்தில் மறைந்துபோகு முன்பாக ஸங்கீத வித்வான்கள் பொறுக்கியெடுத்து ஸ்வர நிச்சயம் செய்து வித்தைப் பழக்கத்திலே சேர்த்து விடவேண்டும்.

பெண்களுக்குக் கல்விப் பயிற்சி. ஏற்பட்டால் இப்போதுள்ள கொச்சை மொழிகளும், பிழைகளும், ரஸக் குறைவும் பொருந்திய பாட்டுகளை மறந்து விடுவார்கள். ஆனால், அத்துடன் பழைய ஸங்கீதக் கட்டுக்களை மறந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய வழிகளை முற்றிலும் மறந்துபோய் நமது பெண்கள் நாடக மெட்டுக்கள் முதலியவற்றையே பாடத் தொடங்கிவிட்டால், தமிழ் நாட்டில் ஸங்கீத வுணர்ச்சி நாசமாய்விட ஹேது உண்டாகும்.

கொச்சை மொழிகளும் ரஸக் குறைவும் மலிந்த பாட்டுக்களென்று சொன்னோம். ஆனாலும் ஒரு கூடைப் பதரில் ஓருழக்கு அரிசி யகப்படும். அதை நாம் இழந்துவிடக்கூடாது. கவிதைத் தேட்டமுடையோர் நமது பெண்களின் பாட்டைத் தேடிப் பார்த்தால், சிற்சில விடங்களில் நல்ல கவிதை கிடைக்கும். பாட்டி ராமாயணத்தில் குசலவரின் கதையை ஒரு நீளப்பாட்டாகச் சொல்லுவாள். அதில் சீதையின் கஷ்டங்களைக் கேட்கும்போது குழந்தைகளெல்லாம் கண்ணீர் விட்டழும். ராமனைக் குசலவர் வெல்லும் இடத்து வரும்போது மனதிலே ஆத்திரம் பொங்கும். 'ராமனுக்கு வேணும்; நன்றாக வேணும் என்று தோன்றும். நலங்குப் பாட்டு, கும்மி முதலிய வற்றிலே கூடச் சில இடங்களிலே முத்துபோல வார்த்தைகள் அகப்படும். தொழிற் பெண்களின் பாட்டு மிகவும் ரஸமானது. சந்தமும் இன்பம்; ஒன்றுக்குப் பாதி நல்ல கவிதை.

பெண்களின் பாட்டில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களில் பெரும் பகுதி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இதன் சம்பந்தமாக இங்கே இன்னும் சில வார்த்தைகள் சேர்க்க விரும்புகிறேன். வீட்டிலே பந்துக்களின் முன்பும், விவாக ஸந்தர்ப்பங்களிலும் பாடும்போது கூச்சத்தினாலே பாட்டை விடக்கூடாது. வித்தை விஷயத்தில் கூச்சங்காட்ட நியாயமில்லை. வித்தைப் பயிருக்கு விடுதலை நீர் பாய்ச்ச வேண்டும் மேலும் பெண்களுக்குள்ளே பொதுக் கல்வியை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்க்கவேண்டும். கல்வியறிவில்லாத மூடர் எந்தத் தொழிலும் நேரே செய்ய மாட்டார்கள். தவிரவும் பார்ஸி மெட்டிலே ஆரத்தி யெடுப்பது, இங்கிலீஷ் நலங்கு முதலிய கோரமான விகாரங்களுக்குத் துணை செய்யக்கூடாது. நமது நாடக சாலைக்குள்ளே கல்வியறிவும், சாஸ்திரப் பழக்கமும், நாகரீகமும் நுழையுங்காலம் வரை, நமது பெண்கள் நாடகப் பாட்டுகளை கவனியாமல்இருப்பது நன்று. வேதாந்தக் கொடுமையையும் கொஞ்சம் குறைத்துவிட்டால் பெரிய உபகாரம்.

Friday, November 9, 2012

ஸங்கீத விஷயம் - தாள ஞானம்...

தாள ஞானம்

நமது குடும்ப ஸ்திரீகளின் பாட்டிலே முக்கியமான குறை என்னவென்றால் இவர்களிலே பெரும்பாலோருக்குத் தாள ஞானமில்லை.

பெண்களுக்குத் தாளஞானம் ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் சிரமமென்றும் இயற்கையிலே அவர்களுக்கு "லயவுணர்ச்சி" கொஞ்சம் குறைவென்றும் சிலர் தப்பாக நினைக்கிறார்கள். பெண்கள் குதித்துப் பாடும்போது பாருங்கள் 'டணீர், டணீர்' என்று எப்படித் தாளம் விழுகிறது. நமது பெண்கள் கீர்த்தனங்கள் முதலியவற்றை தாளமில்லாமற் பாடுவதற்குக் காரணம் பயிற்சிக் குறைவேயல்லாது வேறொன்றுமில்லை. அவர்களுக்கு நாம் சரியானபடி பாட்டுக்கற்றுக் கொடுப்பதில்லை.

"தாஸிகளா? கச்சேரி நடத்தப் போகிறார்களா? தாளம் தவறாமல் பாடி என்ன ஆகவேண்டும்?" என்று சிலர் பேசுவதுண்டு. தாளம் தவறிப் பாடினால் காதுக்கு விரஸமாக இருக்கும். ஜனங்களுக்குப் பிரிய முண்டாகாது. வீட்டிலும் அதே காரணந்தான். எனது மகள் பிழையாகப் பாடினால், பக்கத்தில் இருந்து கேட்கும் எனது காதுக்கு ஸுகப்படாது. அவளுக்கும் பாட்டில் நல்ல ருசி ஏற்படாது.

பெண்கள் பாடவே கூடாதென்று ஒரேயடியாக நிறுத்தி விட்டீர்களானால் ஒரு தொல்லையுமில்லை. பிறகு உலக வாழ்வுமில்லை. கல்யாணப் பாட்டுக்களும், தாலாட்டுப் பாட்டுக்களும், காதற்பாட்டுக்களும் நின்றுபோனால், பிறகு சுடுகாடுதான் மிச்சமிருக்கும். அப்படி நிறுத்த வேண்டுமென்று எவனும் விரும்பமாட்டான். ஆண்களைப் போலவே பெண்களும் எப்போதும் பாடத்தான் செய்வார்கள். ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு ஸங்கீதத்திலே அதிகத் தொடர்பு உண்டு. "செய்வன திருந்தச்செய்." பாட்டுப் பாட விரும்புவோர் நல்ல பாட்டிற் பழகவேண்டும். பாட்டுக் கேட்க வழி தேடவேண்டும். பாட்டினால் மகிழ்ச்சி உண்டாகிறது. லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படுகிறது; உபசாந்தி பிறக்கிறது.

ஹார்மோனியம்

தமிழ்நாட்டு மாதர்களுக்குள்ளே நல்ல பாட்டு வளர்ச்சி பெறவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆனால், அதற்கு ஹார்மோனியப்பெட்டி ஒரு விக்கினமாக வந்து சேர்ந்திருக்கிறது. இந்தப் பெட்டி நமது நாட்டிலே பழகுவதினால் சங்கீதத்திற்குப் பல விதமான தீங்கு உண்டாவதாக வித்வான்களிலே பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அதை நிறுத்துவதற்கு யாரும் வழி தேடவில்லை. நமது சங்கீதத்திலுள்ள சுருள்கள் வீழ்ச்சிகள் முதலியவற்றை ஹார்மோனியத்தில் காட்டமுடியாது. ஆதலால், அந்த வாத்தியத்தில் அதிகம் பழக்கமுடையோரிடம் நமது ஸங்கீதத்தில் உள் விசேஷ நயங்கள் மங்கிப் போகின்றன. இதையெல்லாங்காட்டிலும், அந்தப் பெட்டி போடுகிற பெருங்கூச்சல்தான் என் காதுக்குப் பெரிய கஷ்டமாகத் தோன்றுகிறது.

மேலும், ஸங்கீதத்திலே கொஞ்சமேனும் பழக்கமில்லாதவர்களுகெல்லாம் இந்தக்கருவியைக் கண்டவுடனே "ஷோக்" பிறந்துவிடுகிறது. சத்த முண்டாக்குவதற்கு நல்ல துருத்தி கைக்கு ஒத்ததாகப் பின்னே வைத்திருக்கிறது. ஒரு கட்டையை உள்ளே அழுத்தி, முன்பக்கத்துச் சாவிகளை இழுத்துவிட்டு, துருத்தியை அசைத்தால், "ஹோ" என்ற சத்தமுண்டாகிறது. உடனே பாமரனுக்கு மிகுந்த சந்தோஷ முண்டாகிறது. "நாம் அல்லவா இந்த இசையை யுண்டாக்கினோம்?" என்று நினைத்துக்கொள்கிறான். உடனே வெள்ளைக் கட்டைகளையும் கருப்புக் கட்டைகளையும் இரண்டு தட்டுத்தட்டுகிறான். பேஷான தொனிகள்! மேலான தொனிகள்! "பாமரன்பூரித்துப் போகிறான். முதல் நாள், முதல் தடவை, தொட்ட மாத்திரத்திலே இவ்வளவு கோலாஹலம் உண்டாகிறது. பிறகு ஸரளி, அலங்காரம், பிள்ளையார் கீதம், சங்கராபரண வர்ணம், ''பவநுத'' கீர்த்தனம் - இத்தனையும், ஹார்மோனியத்தில் மூன்று மாதத்திற்குள் பழக்கமாய் விடுகிறது. பாமரனின் மனதிலே "நாம் ஒரு வித்வான்" என்ற ஞாபகம் உறுதியாகப் பதிந்து விடுகிறது. ராக விஸ்தாரங்களைத் தொடங்கி விடுகிறான். ஒரு வீட்டில் "ஹார்மோனியம்" வாசித்தால் பக்கத்திலே ஐம்பது வீட்டுக்குக் கேட்கிறது. அறியாதவன் தனது அறியாமையை வீட்டில் இருந்தபடியே இரண்டு மூன்று வீதிகளுக்குப் பிரசாரம் பண்ணவேண்டுமானால், அதற்கு இந்தக் கருவியைப்போலே உதவி வேறொன்றுமில்லை. வீணை தவறாக வாசித்தால் வீட்டில் உள்ள ஜனங்களுக்கு மாத்திரந்தான் துன்பம்; ஹார்மோனியம் தெரு முழுவதையும் ஹிம்ஸைப்படுத்திவிடுகிறது. ஒரு தேசத்தாரின் செவியைக் கெடுத்து ஸங்கீத உணர்ச்சி குறையும்படி செய்ய வேண்டுமானால், கிராமந்தோறும் "நாலைந்து ஹார்மோனியம்" பரவும்படி செய்தால் போதும்.

நாடகக்காரர் வாய்ப்பாட்டுக்குச் சுருதி போடும் பொருட்டு இதை வைத்துக் கொள்ளுதல் ஒரு வேளை பொருந்தும். ஸாமான்ய ஜனங்கள் இதை சுருதிக்கு வைத்துக்கொள்வதனால் பல தீங்குகள் உண்டாகின்றன. இத்தீங்குகள் யாவை என்பதையும் நமது நாட்டுக்குப் பொருத்தமான வாத்தியங்கள் எவை என்பதையும் பெண்கள் பாட்டைநேராக்குவதற்கு இன்னும் என்ன வழிகள் தேடவேண்டுமென்பதையும் ஆராய்ச்சி செய்வோம்.

தம்பூர்

நாடகக்காரர் தவிர மற்ற ஸாமான்ய ஜனங்கள் வீடுகளிலும் பஜனைக் கூடங்களிலும் பாடும்போது தம்பூர் சுருதி வைத்துக் கொள்வதே பொருந்தும். ஹார்மோனியம் பேரிரைச்சல் போடுவதிலே பாட்டின் சத்தம் கணீரென்று கேட்பதில்லை. பாட்டுக் கீழாகவும் சுருதி மேலாகவும் நிற்கிறது. அஸாதாரணமான உச்ச சாரீரமுடைய சிலர் மாத்திரமே ஹார்மோனியத்தின் சுருதிக்குமேலே பாடக் கூடும்; பொதுப்படையாக சாத்தியமில்லை. பாட்டுக்கு உதவியாக சுருதி ஒலிக்கவேண்டும். பாட்டை விழுங்கும் சுருதி பிரயோசனமில்லை. அது வெறும் மடமை.

வீணை

வாத்தியம் படிக்க விரும்பும் ஸ்திரீகள் வீணை பழகவேண்டும். வீணை ஆரம்பத்திலே கொஞ்சம் சிரமம். போகப்போக ஸுலபமாய் விடும். இந்தக்கருவியிலே தேர்ச்சியேற்பட்டால் அது தான் வாஸ்தவமான சங்கீதத் தேர்ச்சி யாகும். பெண்கள் வீணை வாசிப்பதினால், நாட்டிலே ரஸப்பயிற்சியும் வாழ்க்கைநயமும் உண்டாகும். மைசூரிலும் மலையாளத்திலும் பழகியவர்களுக்கு, 'பெண்கள் வீணை கற்றுக் கொள்ளுதல் சிரமமில்லை'என்பது தெரியும். வீணை பழகினால் அதிலேயே நல்ல தாளஞானம் உண்டாய்விடும். வீணை மனிதர் குரல் போலவே பேசும். இன்பச் சுருள்களுக்கும் பின்னல்களுக்கும் வீணை மிகவும் பொருத்தமானது. அதன் ஒலி சாந்திமயமானது. ஸரஸ்வதி தனது கையில் வீணையை தரித்துக்கொண்டிருக்கிறாள். காளிதாஸ கவி பராசக்தியைப் பாடும்போது "மாணிக்ய வீணாம் உபலாலயந்தீம்" என்று தொடங்குகிறார்.

பொய்த் தொண்டை

ஆணாயினும் பெண்ணாயினும் கள்ளத் தொண்டை வைத்துக்கொண்டு பாடலாகாது. தொண்டையைத் திறந்து பாடினால்தான் சுகமுண்டாகும். இயற்கையிலே ஆணுக்குக் கனமாக குரலும் பெண்ணுக்கு ஸன்னமான குரலும் ஏற்பட்டிருக்கின்றன. பெண்களிலே சிலர் இயற்கை ஸன்னத்தை அதிக ஸன்னப்படுத்த வேண்டுமென்று கருதிக் கள்ளத் தொண்டையிற் பாடுகிறார்கள். வேறு சிலர் லஜ்ஜையினாலே கள்ளத் தொண்டைக்கு வந்து சேருகிறார்கள். இதுவும் தவறேயாம். தொண்டையைத் திறந்து தெளிவாகப் பாடுவதிலே லஜ்ஜைப்பட யாதொரு நியாயமுமில்லை.

Thursday, November 8, 2012

கவி

ஸ்ரீ விநயகுமார ஸர்க்கார் என்ற சரித்திராசிரியர் சொல்லுகிறார்:-

"கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலே ஹிந்து ஜாதியில் மகத்தான ஞானக்கிளர்ச்சி யொன்று தோன்றிற்று. அது தொடங்கிய சில வருஷங்களில் சீன தேசத்திலே பெரிய ராஜ்யங்களும் பெரிய சாஸ்திரப் பயிற்சிகளும் விளங்கி நின்றன. அக்காலத்தில் சீனத்திலே பரவிய அக்கிளர்ச்சியே அடுத்த நூற்றாண்டில் ஜப்பான், அரேபியா, துருக்கிஸ்தானம் என்ற நாடுகளில் பெருகிச் சென்றது. ஜப்பானில் ஒளி மிகுந்த "நரா"வின் காலம் (கி.பி. 710-94); அதுவே பாக்டாட் பட்டணத்தில் ஹருள் அல்ரஷீது ராஜ்யம் நடத்தியதும். அந்த கிளர்ச்சிக் காலத்திலே தான் பாரத தேசத்திலே காளிதாஸன் பிறந்தான். ஆசியா கண்டத்திலே புதிய ஒளி பிறந்தது."

உண்மையான கவிதை, அருமையான திரவியம். அதனால் உலகம் க்ஷேமத்தை அடைகிறது. எந்த நாட்டிலே புதிய மஹாகவி தோன்றுகிறானோ, அந்த நாடு மஹாபாக்யமுடையது. தமிழ் நாட்டிலே கவிதையின் புகழ் ஏறுக.

Wednesday, November 7, 2012

நம்பூரிகளும் தீயரும்

"நம்பூதிரிகள் மிகவும் வைதீகமாயிற்றே? அவர்களிடத்தில் தற்காலத்துப் புதிய தீயர் எவ்விதமான எண்ணம் வைத்து நடக்கிறார்கள்?" என்று கேட்டேன்.

"பகை" என்று ராகவசாஸ்திரி சொன்னார். 

"காரணமென்ன?" என்றேன்.

"புதிய தீயர் இப்போது நம்பூரிகளைப் பகைப்பது மாத்திரமே யல்லாது, எப்போதுமே நம்பூரிகளைத் தீயர் பகைத்து வந்ததாகச் சொல்லி வருகிறார்கள். ஆலுவாயில் ஸ்ரீ நாராயணஸ்வாமி ஒரு ஸமஸ்கிருத பள்ளிக்கூடம் ஏற்படுத்தியிருக்கிறார். பெரிய கட்டிடம் கட்டியிருக்கிறார். நிறையப் பணம் சேர்ந்திருக்கிறது. அந்தப் பள்ளிக்கூடத்தில் எல்லா ஜாதிப் பிள்ளைகளுக்கும் ஸமஸ்கிருதம் கற்பிக்கப் படுகிறது. ஒரு மகம்மதியப் பிள்ளைகூட அந்தப்பள்ளிக் கூடத்தில் சேர்ந்து வாசித்து வருகிறான். இங்ஙனம் பல வகைகளிலே தீயர் மேன்மை பெற முயல்வதில் நம்பூரிகளுக்குச் சம்மதமில்லை. அதனால் நம்பூரிகளிடம் தீயருக்குப் பகை உண்டாகிறது. இயற்கை தானே? செய்வாருக்குச் செய்வார் செத்துக் கிடப்பாரா?

"பிராமணராக நம்பூரிகள் பரசுராமனால் செய்யப்பட்டனர் என்றும், அதற்கு முன்பு மீன் பிடிக்கும் செம்படவராக இருந்தனரென்றும் தீயர்கள் நம்பி வருகிறார்கள். மலையாள பூமி செழித்துப்போய் காடு பட்டுக் கிடந்ததை பரசுராமன் நாடாகத் திருத்திய போது, அங்கு வந்து குடிபோகும்படி கர்நாடகத்திலிருந்தும் சோழ நாட்டிலிருந்தும் பிராமணர் களைக் கூப்பிட்டார். இந்தப் பார்ப்பார் அங்கே போய் குடியேறச் சம்மதப்படவில்லை. எனவே பரசுராமன் கோபம் கொண்டு தென் கன்னடக் கரையிலிருந்த "செம்படவரைப் பிராமணராகச் செய்து குடியேற்றினார். நம்பூரிகள் விவாக சமயங்களில் குளம், நதி, ஏதேனும் நீர் நிலைக்குப் போய் வலை போடுவது போலே அபி நயிக்கும் பொய்ச் சடங்கொன்று நடத்தி வந்தார்கள். இப்போது, நம்பூரிகளும் நாகரீகப்பட்டு வருகிறபடியால் வீட்டிலேயே ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை வைத்து, அதில் வாழை இலையைத் துண்டு துண்டாக மீன் ஸ்தானத்தில் போட்டு வைத்து, அதன் மேலே வலைபோடுவது போல் துணி போட்டு அபிநயித்து வருகிறார்கள். மேற்படி பரசுராமன் கதை பொய்க் கதை என்பதே என்னுடைய அபிப்பிராயம். இக்காலத்து நம்பூரிகள் விவாக சமயங்களில் மீன் பிடிக்கும் சடங்கு நடத்துவதற்கு வேறேதேனும் மூலமிருந்தாலும் இருக்கலாம். ''நான் அக்கதையை ஏன் சொன்னேன்'' என்றால், இக்காலத்துத் தீயர்களுக்கு நம்பூரிகளிடத்தில் எத்தனை பெரும்பகை இருக்கிறதென்பதைக் காட்டும் பொருட்டாகச் சொன்னேனே யொழிய வேறொன்று மில்லை.

"ஆதிமுதல் தீயருக்கும் பிராமணருக்கும் சண்டை உண்டு. தீயர் மற்ற ஹிந்துக்களைப்போலே மக்கள் - தாயத்தை அனுசரிக்கிறார்கள். மருமக்கள் - தாயம் நாயருக்குள்ளே இருப்பதுபோல் தீயருக்குள் இல்லை பிராமணர் நாயர் ஸ்திரீகளுடன் ஸம்பந்தம் செய்வது போலே தீயருடன் செய்து கொள்ள இடமில்லை. தீயர் அதனை விரும்பவில்லை. இதுவே நம்பூரிகளுடன் பகைமைக்கு மூலம்.

"நம்பூரிகளிலே பலர், பரசுராமன் மலையாளத்து பூமியைத் தங்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததாகச் சொல்லுகிறார்கள். அவர்கள் பெரிய ஜமீன்தார்களாகவும் மிராசுதாரர்களாகவும் இருக்கிறார்கள். 'ஜன்மி'கள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளுகிறார்கள். 'ஜன்மி' என்றால் ஜன்மபாத்யதை உடையவர்களென்று அர்த்தம்.

"நம்பூரிகளெல்லாம் நல்ல சிவப்பு நிறம்; மிகவும் அழகாக இருக்கிறார்கள். பொதுவாகவே மலையாளத்தார் தமிழரைக் காட்டிலும், தெலுங்கரைக் காட்டிலும் அதிக சிவப்பு நிறமுடையவர்கள். குஜராத்தியரை மாத்திரமே, நிறவிஷயத்தில், தக்ஷிணத்தில் மலையாளிக்குச் சமமாகச் சொல்லலாம். அதிலும், நம்பூரிகள் நல்ல சிவப்பு. ஆனால் நாகரீக ஜனங்களில்லை. நம்பூரிக்கும் நாகரீகத்துக்கும் வெகுதூரம்.

"நம்பூரிக்குள்ளே ஜாதிப்பிரிவுகள் உண்டு. இந்தியாவில் ஜாதி வித்யாஸத்திலே ஒரு விநோதம் என்ன வென்றால், எந்த மூலையிலே போய் எந்த ஜாதியை எடுத்துப் பார்த்தாலும் அதற்குள் நாலு உட்கிளை யில்லாமல் இருப்பதில்லை. நம்பூரிகளுக்குள்ளே ஸம்ஸ்கிருதப் படிப்பும் வேதபாடமும் இப்போதும் அழிந்து போகவில்லை. திருஷ்டாந்தமாக தாழைக் காட்டுமனை என்ற இல்லத்து நம்பூரிகள் வேதப்படிப்பில் கீர்த்தி பெற்றவர்கள்; அவர்களிடம் பணமும் அதிகம். பிராயச்சித்தம் முதலிய வைதீக கிரியைகளிலே முடிவான தீர்மானங்கள் கேட்கவேண்டுமானால், ஜனங்கள் அந்த இல்லத்தாரிடத்திலே கேட்கிறார்கள்."

இங்ஙனம் மேற்படி ராகவசாஸ்திரி சொல்லி வருகையில், நான் "ஜன்மி"களாகி ஜமீன்தார்களாகவும் வித்வான்களாகவும் ஒரே குடும்பத்தார் இருப்பது விசேஷந்தான்? என்று சொன்னேன்.

அதற்கு ராகவசாஸ்திரி - வேதத்துக்குப் பொருள் தெரிந்து படிக்கும் நம்பூரிகளை நான் பார்த்தது கிடையாது. பிறரை மயக்கும் பொருட்டு ஓர் இரண்டு வேதசாம்ஹிதைகளைப் பாராமல் குருட்டு உருப்போட்டு வைக்கிறர்கள். இதில் அதிக விசேஷமில்லை" என்றார்.

அதற்கு நான்:- "சாஸ்திரியாரே, ஜமீன்தார்களாய் பணச்செருக்கிலே இருப்போர் பிறரை மயக்க விரும்பினால் கல்விக் கஷ்டம் இல்லாமலே மயக்குவதற்கு வேறு நூற்றுத் தொண்ணூறு சுலபமான வழிகள் உண்டு" என்றேன்.

பிறகு சாஸ்திரியார் நம்பூரிகளின் அறிவுக் குறையைக் குறித்துப் பல கதைகள் சொல்லத் தொடங்கினார். அவை மிகவும் பெரிய கதைகள். இந்த வியாஸம் ஏற்கனவே மிகவும் நீண்டுபோய் விட்டது. ஆதலால், அவர் சொல்லியதின் தொடர்ச்சியை மற்றொரு வியாஸத்தில் எழுதுகிறேன். ராகவ சாஸ்திரி நான் மௌன விரதம் பூண்ட நாளில் துஞ்சத்து எழுத்தச்சன் விஷயமாகச் சொல்லிய விஷயத்தைக் குறித்து மறுபடி இன்று காலை சம்பாஷித்தோம். அதையும் பின்புதான் தெரிவிக்கவேண்டும்.