Wednesday, May 1, 2013

ஆசாரத் திருத்த மஹாசபை

இப்போது நடைபெறும் 1920-ம் வருஷம் ஜூன் மாஸம் 22-ம் தேதியன்று தொடங்கி, அன்றைக்கும், அடுத்த இரண்டு மூன்று தினங்களும், திருநெல்வேலியில் “மாகாண ஆசாரத் திருத்த மஹாஸபை” நடைபெறும் என்று தெரிகிறது. 21-ந் தேதியன்று மாகாணத்து ராஜரீக மஹா ஸபை திருநெல்வேலியில் கூடுகிறது. அதை அனுசரித்து, அதே பந்தரில் ஆசார ஸபையும் நடக்கும்.

22-ந் தேதி முதல், இரண்டு மூன்று நாள் கூடி, அங்கு, நம் மாகாணத்து ஆசாரத் திருத்தக்காரர் வழக்கப்படி விவாதங்கள் நடத்தி மாமூலைத் தழுவிச் சில தீர்மானங்கள் செய்து முடித்துப் பின்பு கலைந்து விடுவார்கள்.

எனக்குக் கிடைத்திருக்கும் அழைப்புக் கடிதத்தைப் பார்க்குமிடத்தே இந்த வருஷம் நடப்பது இருப்பத்திரண்டாவது வருஷக் கூட்டமென்று விளங்குகிறது. சென்ற இருபத்திரண்டு வருடங்களாக இம்மாகாணத்திலுள்ள ஆசாரத் திருத்தக் கூட்டத்தார் வெறுமே ஸபைகள் கூடித் தீர்மானங்கள் செய்திருப்பதே யன்றி உறுதியான வேலை என்ன செய்திருக்கிறார்கள் என்பதை அறிய வழியில்லை.

ராஜரீக மஹா ஸபையில் செய்யப்படும் தீர்மானங்கள் கார்யத்துகுக் வராவிட்டால், “அதற்கு நாம் என்ன செய்யலாம்? அதிகாரிகள் பார்த்து வரங்கொடுத்தால் தானே யுண்டு. நாம் கேட்க மாத்திரமே தகுதியுடையோர். நம்முடைய விருப்பங்கள் நிறைவேற வேண்டுமாயின், அதற்கு அதிகாரிகள் தயவு வேண்டும்; அல்லது, இங்கிலீஷ் பார்லிமெண்டின் தயவு வேண்டும். அவை நிறை வேறாமலிருப்பது பற்றி நம்மீது குறை கூறுதல் பொருந்தாது” என்று சாக்குப் போக்குச் சொல்ல இடமிருக்கிறது.

ஆசாரத் திருத்த மஹா சபையின் விஷயமோ அப்படியில்லை. இதில் நம்மவர்கள் செய்யும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியவர்களும் நம்மவரே யன்றி பிறரில்லை. அதிகாரிகளின் தயவு வேண்டியதில்லை. இங்கிலீஷ் பார்லிமெண்டின் கருணையும் அவசியமில்லை. இதில் நாமே வரங்கேட்டு, நாமே வரங் கொடுக்க வேண்டும். இப்படியிருந்தும் இந்த ஆசாரத் திருத்தக் கூட்டத்தாரின் முயற்சிகள் ராஜ்யத் திருத்தக் கூட்டத்தாரின் பிரயத்தனங்களைக் காட்டிலுங்க் கூடக் குறைவான பயன் எய்திருப்பதை நோக்கும்போது மிகவும் வருத்தமுண்டாகிறது.

இந்த தேசத்து ஜனத்தலைவர்கள் மனிதர்களா? அல்லது வெறும் தோல் பொம்மைகள் தானா? இவர்கள் மனித ஹருதயத்தின் ஆவலையும், மனித அறிவின் நிச்சயத்தையும், அவற்றின் பெருமைக்குத் தக்கபடி மதிப்பிடுகிறார்களா? அல்லது வெறும் புகையொத்த பதார்த்தங்களாகக் கணிக்கிறார்களா?

மேற்படி ஆசாரத் திருத்த சபைகளிலே அறிவுடைய மனிதர் பலர், ஜனத்தலைவர்களும், உத்தியோக பதவிகளில் உயர்ந்தோரும், பிரபுக்களும், கீர்த்தி பெற்ற பண்டிதர்களும், சாஸ்திரிகளும், நீதி நிபுணர்களும் கூடி அறிவுடன் வாதங்கள் நடத்தி, அறிவுடன் சில தீர்மானங்கள் செய்து முடிக்கிறார்கள். அப்பால், அத் தீர்மானங்கள் தமது சொந்த ஒழுக்கத்திலும் தேச ஜனங்களின் நடையிலும் செய்கைகளாக மாற்றுவதற்குரிய முயற்சிகள் ஒன்றுமே நடப்பதில்லை. எனவே, மனித அறிவை இவர்கள் களைந்து போடும் குப்பைக்கு நிகராகவே மதிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. மேலும், அந்தத் தீர்மானங்கள் நிறைவேறுவதினின்றும் தேசத்து ஜனங்களுக்கு நன்மை விளையும் என்ற உண்மையான நம்பிக்கையுடனேயே அவை பிரேரேபணை செய்யப்படுகின்றன. இந்த விஷயத்தில் ஏராளமான கால விரயமும் பொருட் செலவும் ஏற்படுகின்றன. இவ்வளவுக்கும் முடிவாக யாதொரு பயனும் விளையக்காணோமென்றால், இந்த ஆசாரத் திருத்தக்காரரின் சக்தியைக் குறித்து நாம் என்ன சொல்லலாம். இவ்வருஷமேனும், இவ்விஷயத்தில் தகுந்த சீர்திருத்தம் ஏற்படுமென்று நம்புகிறேன். முதலாவது விஷயம், ஆசாரத்திருத்த மஹா சபையில் பேசுவோராவது, ‘உண்மையிலேயே தாம் பேசும் கொள்கையின்படி நடப்பவரா’ என்பதை நிச்சயித்து அறிந்துகொள்ள வேண்டும். மஹா சபைக்குப் பிரதிநிதிகளாக வந்திருப்போர் அத்தனைபேரிலும் பெரும் பகுதியார் ‘இப்போது உடனே தத்தம் குடும்ப வாழ்க்கையில் என்னென்ன சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள்’ என்பதைக் கண்டு பிடித்துப் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்.

நமது மாகாண முழுமையிலும் ஆசாரத் திருத்த விஷயத்தில் சிரத்தை யுடையோர் எல்லோரும் இந்த மாதம் திருநெல்வேலிக் கூட்டத்துக்கு அவசியம் வந்து சேர முயற்சி செய்ய வேண்டும். இந்தக் கூட்டத்தை யொட்டி, மாதர்களின் சபையொன்று நடக்கப்போகிற தாகையால், கல்வி கற்ற மாதர்களெல்லோரும் அவசியம் வந்திருந்து, தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களை உறுதிப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ‘தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.’ அவரவருக்கு வேண்டிய விஷயங்களைக் குறித்து அவரவர் பாடு பட்டாலொழியக் காரியம் நடக்காது. மேலும், நம் நாட்டு ஆண்மக்கள் தமது நிலைமையை உயர்த்திக் கொள்ளக்கூடிய சுலபமான உபாயங்களைக் கூடக் கையாளத் திறமை யற்றோராகக் காணப்படுகிறார்களாதலால், நம்முடைய ஸ்த்ரீகளை மேன்மைப் படுத்துவதற்குரிய காரியங்களை முற்றிலும் இந்த ஆண்மக்கள் வசத்திலே விட்டுவிடாமல், மாதர்கள் தாமே முற்பட்டுத் தமக்கு வேண்டிய சீர்த்திருத்தங்களைத் தேடிக் கொள்வதே நன்றாகும். அன்னிய தேசங்களில் விடுதலைக்காக உழைக்கும் ஸ்திரீகள் பெரும்பாலும் ஆண்மக்களின் உதவியை அதிகமாக நாடாமல் தமது மேம்பாட்டுக்குரிய வேலைகளைத் தாங்களே செய்து வருவதை நம் தேசத்து ஸ்திரீகள் நன்கு கவனிக்க வேண்டும்.

தமிழ் நாட்டு மக்களே! ஆரம்ப முதல் சமீப காலம் ஆசாரத் திருத்தத் தலைவர்கள் பெரும்பாலும் தேசாபிமானம், ஸ்வபாஷாபிமானம், ஆர்ய நாகரீகத்தில் அனுதாபம், இம்மூன்றும் இல்லாதவர்களாக இருந்து வந்தபடியால், பொதுஜனங்கள் இவர்களுடைய வார்த்ஹ்தையைக் கவனிக்க இடமில்லாமல் போய்விட்டது. எனினும், அவர்களுடைய கொள்ளைகளிற் பல மிகவும் உத்தமமான கொள்கைகள் என்பதில் ஐயமில்லை.
“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.”
தேசாபிமானம் முதலிய உத்தம குணங்கள் இல்லாவிடினும், இந்த முயற்சி தொடங்கியவர்கள் உலகப்பொது நீதிகளை நன்குணர்ந்தோர். யாவராலே தொடங்கப்பட்டதாயினும், இப்போது இம்முயற்சி தேச ஜனங்களின் பொதுக் கார்யமாக பரிணமித்து விட்டது. எனவே, இவ்வருஷத்து மஹா ஸபையில் தமிழ் மக்கள் பெருந்திரளாக எய்தி நின்று, ஸபையின் விவகாரங்கள் பெரும்பாலும் தமிழிலேயே நடக்கும்படியாகவும், தீர்மானங்கள் பின்பு தேச ஒழுக்கத்தில் காரியப்படும் வண்ணமாகவும் வேண்டிய ஏற்பாடுகள் செய்யக்கடவர். எதற்கும் பிரதிநிதிகள் நல்ல பெருங்கூட்டமாக வந்தால் தான் நல்ல பயன் ஏற்படும். ஜெர்மன் பாஷையில் “கூட்டம்” என்பதற்கும் “உத்ஸாஹம்” என்பதற்கும் ஒரே பதம் வழங்கப்படுகிறது. பெருங்கூட்டம் சேர்ந்தால் அங்கு உத்ஸாஹம் இயல்பாகவே பெருகும் என்பது குறிப்பு.

பொது ஜன உத்ஸாஹமே ஸகல கார்யங்களுக்கும் உறுதியான பலமாகும். எனவே, நமது தேச முன்னேற்றத்தின் பரம ஸாதனங்களில் ஒன்றாகிய இந்த ஆசாரத் திருத்த மஹா சபையின் விஷயத்தில் நம்மவர், ஆண் பெண் அனைவரும், தம்மால் இயன்ற வகைகளிலெல்லாம் உதவி புரிந்து மிகவும் அதிகமாக உத்ஸாகம் காட்டுவார்கள் என்று நம்புகின்றேன்.

No comments:

Post a Comment