Showing posts with label தராசு. Show all posts
Showing posts with label தராசு. Show all posts

Friday, July 6, 2012

தராசு சொல்லும் அரிய உண்மை

"இந்த உலகத்து மேன்மைகளெல்லாம் அநித்யம். ஆகையால் நமக்கு வேண்டியதில்லை. செல்வத்தையும் நாம் ஆத்மலாபத்தை விரும்பி இவ்வுலகத்தை வெறுத்துத் தள்ளிவிட வேண்டும்த்தியையும் தேடி முயற்சி செய்பவன் அஞ்ஞானத்தில் அழுந்திக் கிடக்கிறான். நாம் ஆத்மலாபத்தை விரும்பி இவ்வுலகத்தை வெறுத்துத் தள்ளிவிட வேண்டும்” என்பது முறை.

மடங்களிலேயும், காலக்ஷேபங்களிலும், பஜனைக் கூடங்களிலும், புராணப் படனங்களிலும், மதப்பிரஸங்கங்களிலும், பிச்சைக்காரர் கூட்டத்திலும், வயது முதிர்ந்தோர் சம்பாஷணைகளிலும், எங்கே திரும்பினாலும், நமது நாட்டில் இந்த “வாய் வேதாந்தம்” மலிந்து கிடக்கிறது.

"உலகம் பொய்; அது மாயை; அது பந்தம்; அது பாபம்; அது விபத்து; அதை விட்டுத் தீர வேண்டும்.” இந்த வார்த்தைதான் எங்கே பார்த்தாலும் அடிபடுகிறது. இத்தேசத்திலே படித்தவர்கள், அறிவுடையோர், சாஸ்திரக்காரர் எல்லோரும் ஒரே மொத்தமாக இப்படிக் கூச்சலிட்டால், அங்கே லெளகிக காரியங்கள் வளர்ந்தேறுமா? மனம் போல வாழக்கையன்றோ?

பூர்வமதாசார்யர் ‘பாரமார்த்திக’மாகச் சொல்லிப்போன வார்த்தைகளை நாம் ஓயாமல் லெளகிகத்திலே சொல்லிக் கொண்டிருப்பது சரியா? வெகுஜன வாக்கு நமது தேசத்தில் பலித்துப்போய் விடாதோ? இகலோகம் துன்பமென்று நம்பினால், அது துன்பமாகத்தான் முடியும். இந்த உலகம் இன்பம். இதிலுள்ள தொழில், வியாபாரம், படிப்பு, கேள்வி, வீடு, மனைவி, மக்கள் எல்லாவற்றிலும் ஈசன் அளவிறந்த இன்பத்தைக் கொட்டி வைத்திருக்கிறான். விதிப்படி நடப்போர் இந்த ஸூகங்களை நன்றாக அனுபவிக்கிறார்கள். ஈசனுடைய விதி தவறும் கூட்டத்தார் துன்பமடைகிறார்கள்.

Thursday, July 5, 2012

தராசும் காந்தியடிகளும்

தராசு சொல்லலாயிற்று:-

“ஸ்ரீமான் காந்தி நல்ல மனுஷர்.

”அவர் சொல்லுகிற ஸ்த்ய விரதம், அஹிம்ஸை, உடமை மறுத்தல், பயமின்மை இந்த நான்கும் உத்தம தர்மங்கள் - இவற்றை எல்லோரும் இயன்றவரை பழக வேண்டும். ஆனால் ஒருவன் என்னை அடிக்கும்போது நான் அவனைத் திருப்பி அடிக்கக் கூடாதென்று சொல்லுதல் பிழை.

"சுதேசியம் ஜாதிஸமத்வம், தேசபாஷைப் பயிற்சி, தெய்வ பக்தி இந்த நான்கையும் இன்றைக்கே பழகி சாதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நமது தேசம் அழிந்துபோய்விடும்.

“நாக்கைக் கட்டுதல், பிரமசரியம் இவையிரண்டையும் செல்வர்கள் இடையிடையே அனுஷ்டித்தால் அவர்களுக்கு நன்மையுண்டாகும். ஏழைகளுக்கு இந்த உபதேசம் அவசியமில்லை. அவர்களுக்கு நாக்கை ஏற்கெனவே கட்டித்தான் வைத்திருக்கிறது. பிரமசரியத்தை ஜாதி முழுமைக்கும் ஸ்ரீகாந்தி தர்மமென்று உபதேசம் செய்யவில்லை. அது வேலை செய்தால் தேசத்தில் சீக்கிரம் மனிதரில்லாமல் போய்விடும்.

“காந்தி பதினோரு விரதம் சொன்னார். நான் பன்னிரெண்டாவது விரதமொன்று சொல்லுகிறேன். அது யாதெனில்:- எப்பாடு பட்டும் பொருள் தேடு; இவ்வுலகத்திலே உயர்ந்த நிலை பெறு; இப்பன்னிரெண்டாவது விரதத்தை தேச முழுதும் அனுஷ்டிக்க வேண்டும்.”