Showing posts with label புதுவை. Show all posts
Showing posts with label புதுவை. Show all posts

Thursday, October 18, 2012

திருவிளக்கு

நிகழும் காளயுக்தி வருஷம் சித்திரை மாதம் 31-ம் தேதி திங்கட்கிழமை யன்று மாலை புதுச்சேரியில் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதி வீட்டில் திருவிளக்கு பூஜை செய்யப்பட்டது. சுமார் ஏழெட்டு ஸ்திரீகள் கூடி விளக்குப் பூஜை முடித்துப் பாட்டுகள் பாடினர். அப்பால் ஸ்ரீ வ.வே. சுப்பிரமணிய அய்யரின் பத்தினியாகிய திருமதி பாக்கியலக்ஷ்மியம்மாள் பின்வரும் உபன்யாஸம் புரிந்தனர்:-

ஊக்கம்

சகோதரிகளே,

பெண் விடுதலை முயற்சிக்கு இந்த ஊர் ஸ்திரீகள் தகுந்த படி உதவி செய்யவில்லையென்று நாம் மனவருத்தப்பட்டு நம்முடைய நோக்கத்தைத் தளரவிடக்கூடாது. நாம் செய்யும் கார்யம் இந்த ஒரூர் ஸ்திரீகளுக்கு மாத்திரமேயன்று; பூமண்டலத்து ஸ்திரீகளுக்காக நாம் பாடுபடுகிறோம்.

உலகமெங்கும் விடுதலை யருவிநீர் காட்டாறு போலே ஓடி அலறிக் கொண்டுவரும் ஸமயத்தில் நீங்கள் நாவு வறண்டு ஏன் தவிக்கிறீர்கள்?

ஸகோதரிகளே, தயங்காதீர்கள், மலைக்காதீர்கள். திரும்பிப் பாராமல் நாம் செய்யவேண்டிய எந்தக் கார்யத்தையும் நிறைவேற்றும் வரை - நம்முடைய லக்ஷ்யத்தை அடையும் வரை - முன் வைத்த காலைப்பின் வைக்காமல் நடந்து செல்லுங்கள். பேடிகளாயிருந்தால் திரும்புங்கள்.

நாம் கொண்ட காரியமோ பெரிது. இதற்குப்பெரிய இடையூறுகள் நிச்சயமாக நேரிடும். ஆனால் நீங்கள் பயப்படக் கூடாது.

'பயமே பாபமாகும்' என்று விவேகாநந்தர் சொல்லியதை மறவாதீர்கள். நந்தனார் விடுதலைக்குப் பட்டசிரமங்களை நினைத்துப் பாருங்கள்.

உங்களில் ஒவ்வொருவருடைய கொள்கைகளை இன்று வாய் விட்டு விஸ்தாரமாகச் சொல்லிவிடுங்கள். மனதிலுள்ள பயம், வெட்கம் என்ற பேய்களை தைர்யவாளால் வெட்டி வீழ்த்திவிட்டு பாரத ஸஹோதரிகள் பாரதமாதாவுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதே என்னுடைய ப்ரார்த்தனை. ஓம் வந்தே மாதரம்.

ஸ்ரீரங்கப் பாப்பா

பிறகு ஸ்ரீமான் மண்டயம் ஸ்ரீநிவாஸாசாரியார் குழந்தை ரங்கா பின் வரும் உபந்யாஸத்தை படித்தது:-

அநாகரீக ஜாதியார்

இந்தியாவில் முன்பு ஆரியர் குடியேறு முன்னே இருந்த பூர்வீக ஜனங்கள் கருநிறமாகவும் சப்பை மூக்காகவும் இருந்தார்கள்; நாகரீகமற்ற பேதை ஜனங்கள். அவர்களுடைய சந்ததியார் இப்போது சில குன்றுகளின் மீதும் சில கனிகளிடையிலும் வஸிக்கின்றனர். இந்த வகுப்பைச் சேர்ந்தஜூலாஸ் குலக் என்ற ஜாதி ஒன்று இப்போது ஒரிஸ்ஸா தேசத்தில் இருக்கிறது. துரைத்தனத்தார் அந்த ஜாதிக்கு இனாமாகத் துணி கொடுத்துக் கட்டிக் கொள்ளும்படி செய்து, துணி கட்டிக் கொள்வோருக்கு வெகுமதி கொடுத்துத் துணிகட்டும் நாகரீகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்திக்கொண்டு வருகிறார்கள். இதுவரை அந்த ஜாதியார் இவைகளை உடைபோல் உடுப்பது வழக்கம். இந்த அநாகரீக ஜாதியிலுள்ள மனுஷ்யர் கூடப் பெண்களை மிருகங்கள் மாதிரியாகவே நடத்துகின்றனர்! ஆதலால், நம்முடைய ஆண் மக்கள் நம்மைக்கீழாக நடத்துவது தங்களுடைய உயர்ந்த அறிவுக்கு லக்ஷணமென்று நினைத்தால் சரியில்லை.  நம்மைக் காட்டிலும் ஆண் மக்கள் சரீர பலத்தில் அதிகம். அதனால் நம்மை இஷ்டப்படி ஸஞ்சரிக்க வொட்டாமலும் பள்ளிக்கூடம் போய்படிக்க வொட்டாமலும் தடுக்க முடிந்தது. இதனால் அவர்கள் நம்மைவிட மேலென்று நினைத்துக்கொள்ளுதல் தவறு.

Monday, August 6, 2012

ரத்னமாலை

(பல நாட்டு அறிஞர்கள் கூறியுள்ள நல்ல கருத்தையெல்லாம் போல் ரிஷார் (Paul Richard) என்ற பிரெஞ்சு அறிஞர் 'ஆர்ய’ பத்திரிகையில் தொகுத்து எழுதியதை பாரதியார் மொழிபெயர்த்தார்.)

தன்னைத்தான் செம்மைப்படுத்திக் கொள்வதில் செலவிடும் முயற்சியின் பயனே மனிதனுக்கு சந்தோஷத்தைத் தரக்கூடியது. ('அந்த் வான்' மருத்துவன்.)

மிகவும் மேல் நிலையிலிருப்போரும் மிகவும் தாழ் நிலையிலிருப்பாரும் எல்லாரும் ஒருங்கே செய்ய வேண்டிய கடமை ஒன்று உண்டு: அதாவது, ஓயாமல் தம்மைத் திருத்திச் செம்மை செய்தல். (கன்பூஷியஸ்.)

தன்னைத் திருத்துவதில் தளர்ச்சியே கூடாது. தான் அறநெறியில் தேர்ந்து விட்டாதாகக் கர்வங்கொள்ளும் போதே, மனிதன் அறத்திலிருந்து நழுவத் தொடங்குகிறான். (சூ-சிங்.)

லாபம் நின்றுபோனால், அப்போது நஷ்டம் ஆரம்பிக்கிறது. வேகத்துடன் ஏறிச் செல்வது பெரிதன்று; எப்போதும் ஏறிச்செல்ல வேண்டும்; அதுவே பெரிது. (ப்ளூதார்க்)

விருப்பமும் நம்பிக்கையும் தூண்டுமிடத்து மனிதன் உயிருக்கு அஞ்சிப் பின்வாங்கலாகாது. பாதையில் ஒரு க்ஷணங்கூடச் சோம்பி யிருக்கலாகாது தாமதம் செய்பவன் பாதையினின்றும் வலிந்து புறத்தே தள்ளப்படுவான். (பரீத்-உத்தீன்-அத்தர்.)

உண்மையை நாடி உழைப்பவன், இடையே சில விசேஷ சித்திகள் பெற்றவுடன் தடைப்பட்டு நில்லாமல், அதற்கு அப்பாலும் முயற்சி செய்தால் கடைசியாக நித்திய ஞானமாகிய செல்வத்தைப் பெறுவான். (ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.)

நான் என்னை உணர்ந்தவனாகக் கருதவில்லை. ஆனால் ஒரு காரியம் செய்கிறேன். கடந்து போனவற்றை யெல்லாம் மறந்து, முன்னே நிற்பவற்றை நாடுகிறேன். பரிசு பெறும் பொருட்டுக் குறியை நோக்கி விரைகின்றேன். (பைபில்:பிலிப்பியர்.)

விடா முயற்சியும் உறுதியும் உடையவருக்கு எதுவும் அரிதில்லை. (லுன்-யூ)

பெறுதற் கரியவற்றைப் பெறவேண்டி அறிஞன் விடாமுயற்சியைக் கைக்கொள்ளுகிறான். (வஒ-த்ஸே).

ஊக்கத்துடன் தேடுகிறவன் காண்பான். (மஹா - உல்லா.)

சிலர் கல்வி பழகமாட்டார். சிலர் பழகியும் தேறமாட்டார். சிலர் கேள்வி கேட்க மாட்டார். சிலர் கேட்டும் விடைப்பொருள் தெரிந்துகொள்ள மாட்டார். இவர்களெல்லாம் மனஞ் சோர்ந்து போக வேண்டாம். சிலர் எதையும் தெளிவுறக்காணமாட்டார். சிலர் தெளிந்தும் கலங்குவார். இவர்கள் மனஞ்சோர வேண்டாம். சிலர் அப்யாஸம் செய்வதில்லை. சிலர் செய்தாலும் உறுதி யடைவதில்லை. இவர்கள் மனஞ் சோர வேண்டாம் விடாமுயற்சி ஒன்றிருந்தாற் போதும்; பிறன் ஓரடியிற் செய்வதை இவர்கள் நூறடியிற் செய்வார்கள். பிறன் பத்தடியிற்செய்வதை இவர்கள் ஆயிரம் அடியிற் செய்துவிடுவார்கள். இந்த விடாமுயற்சி விதிப்படி நடப்பவன் எத்தனை மூடனாயினும் மேதாவியாய் விடுவான்; எத்தனை பலஹீனனாயினும் வலிமை பெற்று விடுவான். (கன்பூஷியஸ்).

காலத்தாலும் பொறுமையாலும் முசுக் கட்டை இலை பட்டாய் விடுகிறது. (பாரசீகப் பழமொழி).

உடம்பைப் போல உணர்வும் தான் ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் வழக்கத்தைப் பழக்கத்தினால் அடைகிறது. (ஸொக்ராதெஸ்).

ஆத்ம சுத்தியாகத் தொழிலைச் செய்யுங்கள். அதில் விழிப்போடிருங்கள். விடாமுயற்சி செய்யுங்கள் சிந்தனை யோடிருங்கள். உங்கள் விடுதலையிலே கருத்தைச் செலுத்துங்கள். (மஹா பரி நிர்வாண ஸூக்தம்.)

கடைசிவரை எவன் பொறுத்திருப்பானோ அவன் காக்கப்படுவான். (பைபில்:மத்தேயு.)

விடா முயற்சியாலே ஆத்ம வுடைமை பெறுவீர். (பைபில்: லூக்).

சிறுக விதைத்தவன் சிறுக அறுப்பான். பெருக விதைத்தவன் பெருக அறுப்பான். (பைபில்: கொரிந்தியார்.)

தேவ யாத்திரை செய்வோன் எப்போதும் அதைரியப் படலாகாது. இஷ்டதேவதையின் அழகை ஒரு லக்ஷ வருஷம் பாடுபட்டுங் காணாவிடின் அப்போதும் அதைரியப்படலாகாது. (பஹா உல்லா.)

எந்த நாளும் அதைரியப்படாமல் இருப்பவனே பெருமை யடைந்து நித்தியானந்தத்தை உண்ணுகிறான். (மஹாபாரதம்.)

நியாயமுள்ள மனிதர் ஏழுதரம் விழுந்தும் மறுபடி எழுகிறான். (பைபில்:பழமொழி.)

நித்யப் பொருளைக் காணும் பொருட்டாக நீ செய்யும் முதன் முயற்சி பயன்படாவிட்டால், அதனால் தைரியத்தை இழந்து விடாதே. விடாமுயற்சி செய்ய தெய்வத்தின் அருள் பெறுவாய். (ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.)

சீன தேசத்து ஞானி 'யாகத ஸ்உங் - த்ஸே' என்பவர் சொல்லுகிறார்:- "மண்ணுலகத்தையும், வானுலகத்தையும் சேர்த்ததோர் விம்பம்; அதன் பெயர்உடம்பு. அதனைத் தெய்வம் " உன் வசம் கொடுத்திருக்கிறது. உன் காவலிலே யகப்பட்டிருக்கும் மண்ணை விண்ணுடன் இசைத்து (ஸம்மேளப்படுத்தி) நடத்துவதேஉயிர் வாழ்க்கையென்று சொல்லப்படும்."

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்லுகிறார்:- "உயிரும், உடம்பும்; உள்ளே குணம், வெளியே குறி."

'எபிக்தெதுஸ்' என்ற கிரேக்க ஞானி சொல்லுகிறார்:- "ஆத்ம சக்தியால் ஆத்மாவுக்கு விளையும் பயன் சரீர சக்தியால் உடலுக்கு உண்டாகும்."

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:- தர்மிஷ்டர் உடம்பைப் போற்ற வேண்டும். அது ஆத்மாவின் கோயில். நித்யப் பொருள் அதனுள்ளே விளங்குகிறது."

ஸ்வாமி விவேகானந்தர்:- "வலிமையுற, நோயின்றி உடம்பைக் காத்தல் அவசியம்.உடம்பு மிகச் சிறந்த கருவி. அதனினும் சிறந்த கருவி உன்னிடமில்லை. ஆதலால், அதை வலிதாக, நோயற்றதாக வைத்துக்கொள். உனது உடம்பு எஃகைப் போல் வலியதென்று பாவனை செய்துகொள். மெலிந்தோருக்கு விடுதலை யில்லை, மெலிவை யெல்லாம் துரத்திவிடு. உடம்பு வலிதென்று அதனிடம் சொல்லு. உன்னிடத்திலே நீ எல்லையற்ற திடமும் நம்பிக்கையும் கொண்டிரு."

"மஹாலக்கம்" என்ற பௌத்த நூல் சொல்லுகிறது:- "உடன் பிறந்தோரே! இரண்டுவித மிகையுமில்லாதிருப்போனே விடுதலை பெறுவான். எப்போதும் காமாதி இன்பங்களைநாடுதல் ஒரு மிகை; இஃதிழிந்தது, சிறுமை, மிருகத்தன்மை, ஆபத்து - இந்த வழியிலே பாமரர் செல்லுகிறார்கள். மற்றொரு மிகையாவது உடம்பை மித மிஞ்சிய விரத முதலியவற்றால் வருந்தச் செய்தல். இது துன்பம்; இது வீண். புத்த பகவான் கூறியது, மேற்கூறிய சந்துகளிரண்டினும் வேறான வழி; அது அறிவைத் திறப்பது; தெளிவு தருவது; விடுதலைக்கும், ஞானத்துக்கும்,நிறைவுக்கும் வழி காட்டுவது."

யோக ஸூத்ரங்களின் ஆசிரியராகிய பதஞ்ஜலி முனிவர் சொல்லுகிறார்:- "வலிமைகளிலே மதியை நிறுத்தி ஸம்யமம் (ஆழ்ந்த தியானம்) செய்தால் யானையின் பலம் முதலியன கை கூடும்."

தமிழ்ப் பழமொழி:- "சுவரிருந்தாலன்றோ சித்திரமெழுதலாம்?" [கருத்து: வெயர்வை சிந்தும்படி நாள் தோறும் உடலை உழைக்கவேண்டும். நன்றாகப் பசித்த பிறகு போஜனம் செய்யவேண்டும். மனதிலே சந்தோஷம் வேண்டும். இவற்றாலே ஒருவன் உடம்பைக் காத்தால் ஒழிய, தர்மம் நடக்காது.]

"விரைந்து கேட்க; மெல்லச் செல்லுக." (பைபில்.)

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்: "பிறர் குணதோஷங்களைப் பற்றித் தர்க்கிப்பதிலே பொழுது செலவிடுவோன், பொழுதை வீணே கழிக்கிறான். தன்னைப் பற்றிச் சிந்தனை செய்தாற் பயனுண்டு. ஈசனைப் பற்றிச் சிந்தனை செய்தாற் பயனுண்டு. பிறரைப்பற்றி யோசித்தல் வீண்."

'ஹெர்மஸ்' என்ற புராதன மிசிர (எகிப்து) தேசத்து ஞானி:- "மகனே, விவாதத்திலே நேரங்கழித்தல் நிழலுடனே போராடுவதற்கு நிகராகும்."

'ஸொக்ராதெஸ்' என்ற கிரேக்க ஞானி:- "அறியாதார் பேச்சை நிறுத்தினாற் கலக மில்லை."

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:- "வாதாடுவதனால் பிறன் தனது பிழைகளை அறிந்துகொள்ளும்படி செய்ய முடியாது. தெய்வத்தின் திருவருள் ஏற்படும்போது, அவனவன் பிழைகளை அவனவன்தெரிந்துகொள்ளுவான்."

திருவள்ளுவர்:-

"யாகாவா ராயினும் நாகாக்க"
"சொல்லிற் பயனுடைய சொல்லுக"

Tuesday, June 19, 2012

புதுச்சேரியில் புயற் காற்று


27 நவம்பர் 1916                                            நள கார்த்திகை 13

இரவு

நள வருஷம் கார்த்திகை மாதம் 8ம் தேதி புதன்கிழமை இரவு புதுச்சேரியில் யுகப் பிரளயத்தைப் போலே யிருந்தது.

நெடும் பொழுதாக – புதன்கிழமை மாலை தொடங்கியே – மழையும் காற்றும் கடுமையாகத் தான் இருந்தன. இடைவிடாத மழை. இடைவிடாத காற்று.

இரவு பதினொரு மணிக்குமேல் பெரிதாக வளர்ந்துவிட்டது. ஊழிக் காற்று; படீல், படீல், படீல்.
வீடுகள் இடிந்து விழுகின்றன; மரங்கள் சாய்கின்றன; காந்த விளக்குக் கம்பி அறுந்து போகிறது. நான்கு சுவர்களும் மேலே விழுந்துவிடும் போலிருந்தன; நல்ல கோட்டை போன்ற வீட்டிலே இருந்தேன். இருந்தாலும் சத்தம் பொறுக்க முடியவில்லை ஊழிக்காற்று. மருத்துக்களின் களியாட்டம். 

வெளியே என்ன நடக்கிறதென்று சாளரத்தைத் திறந்தால் மழை நீர் சரேலென்று வெள்ளமாக உள்ளே பாய்கிறது. ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஒரே பேரிருள். திறந்த சாளரத்தை மூடுவது பிரமப் பிரயத்தனம்.

காலைப் பொழுது

கார்த்திகை மாதம் 9ம் தேதி வியாழக்கிழமை நல்ல பொழுது விடிந்தது. புயற்காற்று நின்றது.
ஊர்க்காரர் வெளியேறி வீதிக்கு வந்தார்கள். புதுச்சேரிப் பட்டணத்தை நேற்றுப் பார்த்த கண்ணுக்கு இன்று அடையாளம் தெரிய இடம் இல்லை; தெருவெல்லாம் ஒடிந்த மரங்கள். தென்னையும் பூவரசும் வீதிகளில் அதிகம். நூற்றில் எண்பது முறிந்து கிடந்தன. ஓடுகளும், மாடங்களும், கூரைகளும் சேதப்படாத வீடு நான் ஒன்றுகூடப் பார்க்கவில்லை. சில கூரைகள் நெடுந்தூரம் தள்ளி விழுந்து கிடந்தன. காலையில் தபால் வரவில்லை. தந்திக் கம்பிகளும் காந்த விளக்குத் தொழிற்சாலையின் தலை விழுந்துவிட்டது. சுற்று வீதியில் ஏழைக் குடிசைகள் அழிந்து போய்விட்டன. உயிர்ச் சேதமும் நிகழ்ந்திருக்கிறது. தொகை தெரியவில்லை…

இதுவரை கிடைத்த தகவல்:-

முத்தியால் பேட்டையில் 6000 வீடு நெசவு காரருண்டு. அனேகமாக அத்தனை வீட்டிலும் தறி, சாமான் எல்லாம் சேதம். பெரும்பாலும் வீடுகளே சேதம். மொத்த நஷ்டம் கணக்கிட முடியவில்லை. ஜனச் சேதம் அதிகமில்லை.

பாக்கமுடையான் பேச்சையில் கிராமத்தில் பெரும்பகுதி அழிந்து போய்விட்டது. ஜனச் சேதம் அதிகம்.

அரியாங்குப்பம், குறிச்சிக்குப்பம் முதலிய பாக்கத்துக் கிராமங்களிலெல்லாம் ஜனச் சேதமும் வீடு நஷ்டமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

பல வாலிபர்கள் ஜனக் கஷ்டத்தை இயன்ற வரை நீக்கும் பொருட்டாக அன்னதானம் செய்து வருகிறார்கள். இன்று கூட ஊதலடிக்கிறது.

புயற்காற்றுத் தேவரை வணங்குகிறோம் அவர்கள் உலகத்தில் சாந்தி யேற்படுத்துக.

(வெள்ளி நவம்பர் 24, புதுச்சேரி)

புதன்கிழமை ராத்திரி அடித்தது புயற்காற்றில்லை. அது மருத்து தேவர்களின் களியாட்டம். தெருவெல்லாம் ஒடிந்த மரம். காடு தோட்டமெல்லாம் அழிந்த வனம். பயிரெல்லாம் வெள்ளம் போன தரை. 

வீடெல்லாம் இடி சுவர்; பல கிராமங்களிலே கூடை வீடுகள் அநேகமாக ஒன்றுமில்லை யென்று சொல்லுகிறார்கள். கடற்பாலத்திலே போட்டிருந்த ஆஸனப் பலகைகளைக் காற்றுக் கொண்டு போய்விட்டது. கலவை காலேஜில் பெரிய மகிழ மரம் ஒடிந்து விழுந்துவிட்டது. ஜன்னல்கள் சேதம். இன்று வெள்ளிக்கிழமையான போதிலும் காற்றுக்காக ரஜா. பெரிய காலேஜிலும் ரஜா.

அனேகமாக எல்லாக் கச்சேரிகளிலும் ரஜாவாகவே நடந்து வருகிறது. காந்த விளக்குக் கம்பிகளை இப்போதுதான் ஒரு ஓரத்தில் ஓட்டத் தொடங்கியிருக்கிறார்கள். தெருவில் வெட்டுண்டு கிடக்கும் மரங்களை இன்னும் எல்லா இடங்களிலும் எடுக்கத் தொடங்கவில்லை. பல இடங்களில் காக்கைகள் விழுந்து செத்துக் கிடக்கின்றன. இந்த மாதிரி உற்பாதம் எந்தக் காலத்திலும் பார்த்தது கிடையாது என்று பெரிய கிழவர்களெல்லாம் சொல்லுகிறார்கள்.

ராஜாத் தோட்டம்

இந்த ஊரில் ராஜாத் தோட்டம் ஒன்றிருந்தது. ஆஹா! என்ன நேர்த்தியான உபவனம். வாயு அந்தத் தோட்ட முழுவதையும் அழித்துவிட்டான். மரங்களெல்லாம் கையாலே ஒடிக்கப்பட்ட கரும்பைப் போலே ஓடியுண்டிருக்கின்றன. ஊரைச் சுற்றிலும் நாலு குக்கிராமங்கள் ஜலத்துக்குக் கீழே. இங்கே பஞ்சம். வாழைத் தோட்டங்களை இழந்தார் பலர். வெற்றிலைத் தோட்டமிழந்தவர் பலர். நேற்றுப் பகலில் சலவைப் பங்களாவுக்கு எதிரே வயல் நடுவிலுள்ள ஒரு திட்ட மேலே ஏழெட்டுப் பேர் நின்று கொண்டிருந்தார்கள். சுற்றிலும் தண்ணீர். ராத்திரி மழைக்கெல்லாம் அந்தத் திட்டை வெளியிலே நின்று விறைத்தார்கள். பகலிலே ஆட்கள் போய் நீரிலே நீந்தி இழுத்துக்கொண்டு வந்தார்கள். தண்ணீரில் எத்தனை ஜனங்கள், எத்தனை ஆடுமாடுகள் மிதந்து போயிருக்கக் கூடுமோ? கணக்குத் தெரிய இடமில்லை. விறகு வெட்டிகளுக்கு நல்ல லாபம். தென்னை மரத்தை வெட்டித் தள்ளினால் இரண்டு ரூபாய் கூலி. வீடு காப்புக்காக அபாயமாகத் தோன்றும் தென்னை மரங்களையெல்லாம் வெட்டுகிறார்கள்…

அன்னதானம்

அன்னதானம் பல இடங்களில் நடக்கிறது. கஞ்சி விடுகிறார்கள். கஷ்ட நிவர்த்தி போதாது. ஏழை ஜனங்களின் கஷ்டங்கள் பொறுக்கக்கூடிய நிலைமையிலேயில்லை. தெய்வந்தான் ரக்ஷிக்க வேண்டும்.

குறிப்பு:- இந்தக் கடுமையான புயற்காற்றைப் பற்றி கவிச் சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம் என்னும் நூலில் திரு.ஆக்கூர் அனந்தாச்சாரி அவர்கள் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்:-
‘ஓர் நாளிரவு முழுதும் பாண்டியில் கடும் புயலும் மழையும் மாறி மாறி அடித்தன. வெள்ளைக்காரத் தெருவில் பாபு அரவிந்த கோஷும், ஈசுவரன் தர்ம ராஜா கோவில் தெருவிலுள்ள வீடொன்றில் ஸ்ரீமான் பாரதியாரும், மற்றொன்றில் வ.வெ.சு. அய்யரும் குடியிருந்தனர். ஏறக்குறைய எல்லா வீடுகளும் புயலுக்கும் மழைக்கும் சரணாகதி யடைந்து தரையோடு தரையாய்ப் போயின. ஜனங்கள் மழை குளிர் இவற்றால் நடு நடுங்கிப் போயினர். வ.வெ.சு. அய்யர் வீட்டில் முழங்கால் வரை ஜலம். தமது குழந்தைகளைத் தோளின்மேல் சுமந்து நின்றவண்ணமாக இரவெல்லாம் இருந்தார். பாரதியார் அதற்கு முந்தின நாள் குடியிருந்த வீடு திடீரென்று விழுந்தது. ஆனால் அன்று புதிதாய்க் குடி புகுந்த வீடோ அப்பெரும் புயல் மழை இவற்றை லக்ஷியம் செய்யாமல் ஒருவாறு தாங்கியது. ஆனால் நெற்குவியல் மாத்திரம் நனைந்துவிட்டது. பாரதியார் வீட்டுக் கண்ணாடி ஜன்னல்களைச் சுவரில் ஓயாமல் மோத  வைப்பதே காற்றின் வேலையாயிருந்தது. கண்ணாடி உடைந்து தூள் படுத்திருக்கும் அவரது குழந்தைகள் மீது விழுந்தது. அப்போது அவைகளுக்கு எவ்வித ஆபத்தும் வரக் கூடாதெனப் பராசக்தியைப் பிரார்த்தித்தார். இச் சம்பவத்தால், 

‘காற்றடிக்குது கடல் குமுறுது’ முதல்
‘தீனக் குழந்தைகள் துன்பப்படா திங்கு
தேவியருள் செய்ய வேண்டுகின்றோம்.’

வரை உள்ளதோர் ஸ்வாரஸ்யமான கீதம் பிறந்தது.

Wednesday, February 8, 2012

பெண் விடுதலைக்குத் தமிழ்ப்பெண்கள் செய்யத்தக்கது யாது?


[ புதுச்சேரியில் ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியின் குமாரி ஸ்ரீ தங்கம்மாவால் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப் பெற்றது.]

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டுமன்று பெண்ணுக்கு மப்படியே.

ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழ விரும்புதல் மனுஷ்ய ஜீவனுடைய கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம் விடுதலை. அடிமைகளுக்கு இன்பம் கிடையாது. தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்தார்படுங் கஷ்டங்களைக் குறித்து, 1896ம் வருஷத்தில் கல்கத்தாவில் கூடிய பன்னிரண்டாயிரம் ஜனசபைக் (காங்கிரஸ்) கூட்டத்தில் செய்யப்பட்ட தீர்மானமொன்றை ஆதரித்துப் பேசுகையில் வித்வான் ஸ்ரீ.ஜி.பரமேச்வரன் பிள்ளை பின் வருமாறு கூறினார்:-

“மிகவும் உழைப்பாளிகளாகிய ஹிந்து தேசத்தார் அந்த நாட்டில் பரம்பரை முறியடிமைகளாக வாழும்படி நேர்ந்திருக்கிறது. அங்கு நம்மவர் உத்திரவுச் சீட்டில்லாமல் யாத்திரை செய்யக்கூடாது. இரவு வேளையில் வெளியே சஞ்சரிக்கக்கூடாது. நகரங்களுக்கு நடுவே குடியிருக்கக்கூடாது. ஒதுக்கமாக நமக்கென்று கட்டப்பட்டிருக்கும் சேரிகளில் வசிக்க வேண்டும். ரயில் வண்டியில் மூன்றாவது வகுப்பிலே தான் ஏறலாம். முதலிரண்டு வகுப்புகளில் ஏறக்கூடாது. நம்மை ட்ராம் வண்டியிலிருந்து துரத்துகிறார்கள். ஒற்றையடிப் பாதைகளினின்றும் கீழே தள்ளுகிறார்கள். ஹோட்டல்களில் நுழையக் கூடாதென்கிறார்கள். பொது ரஸ்தாக்களில் நடக்கக் கூடாதென்று தடுக்கிறார்கள். நம்மைக் கண்டால் காறி உமிழ்கிறார்கள். “ஹுஸ்” என்று சீத்காரம் பண்ணுகிறார்கள். நம்மை வைகிறார்கள். சபிக்கிறார்கள். மனுஷ்ய ஜந்துக்களினால் சகிக்கக்கூடாத இன்னும் எத்தனையோ அவமானங்களுக்கு நம்மை உட்படுத்துகிறார்கள். ஆகையால் நம்மவர் இந்த நாட்டிலேயே இருந்து பஞ்சத்திலும் கொள்ளை நோயிலும் அழுந்திட்டாலும் பெரிதில்லை. நமது ஸ்வந்திரங்களை வெளிநாடுகளில் அன்னியர் காலின்கீழே போட்டு மிதிக்காதபடி ராஜாங்கத்தாரால் நம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் நம்மவர் வேற்று நாடுகளுக்கு குடியேறிப் போகாமல் இங்கிருந்து மடிதலே நன்று” என்றார். என்ன கொடுமையான நிலை பார்த்தீர்களா?

ஆனால், சகோதரிகளே, தென் ஆப்பிரிக்காவில் மாத்திரமே இவ்விதமான கொடுமைகள் நடக்கின்றன என்று நினைத்து விடாதீர்கள்!

சகோதரிகளே! ஒளவையார் பிறந்தது தமிழ்நாட்டில். மதுரை மீனாக்ஷியும், அல்லி அரசாணியும், நேற்று மங்கம்மாளும் அரசுபுரிந்த தமிழ் நாட்டிலே நம்முடைய நிலைமை தென்னாப்பிரிக்காவில் ஹிந்து தேசக் கூலிகளுடைய நிலையைக் காட்டிலும் கேடு கெட்டிருக்கிறதா? இல்லையா? உங்களுடைய அனுபவத்திலிருந்து நீங்களே யோசனை பண்ணிச் சொல்லுங்கள்.

நாமும் ஸ்வேச்சைப்படி வெளியே சஞ்சரிக்கக் கூடாது. நம்மைச் சேரிகளில் அடைக்காமல் சிறைகளில் அடைத்து வைக்க முயற்சி செய்கிறார்கள். ரயில் வண்டிகளில் நமக்கென்று தனிப்பகுதி ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். நம்மைக் கண்டாலும் ஆண்மக்கள் நிஷ்காரணமாய் சீறி விழுகிறார்கள்; காறி உமிழ்கிறார்கள்; வைகிறார்கள்; அடிக்கிறார்கள். நாம் நமதிஷ்டப்படி பிறருடன் பேசக் கூடாதென்று தடை செய்கிறார்கள். மிருகங்களை விற்பது போல், நம்மை விலைக்கு விற்கிறார்கள். தம்முடைய நூல்களிலும் ஸம்பாஷணைகளிலும் ஓயாமல் நம்மைத் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கத்தால் நாம் இத்தனை பாடுக்கும் ஒருவாறு ஜீவன் மிஞ்சியிருக்கிறோமெனினும், இந்த நிலை மிக இழிவானதென்பதிலும், கூடிய சீக்கிரத்தில் மாற்றித் தீரவேண்டிய தென்பதிலும் சந்தேகமில்லை. இதற்கு மருந்தென்ன?

தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்துக் கூலியாட்களுக்கு ஸ்ரீமான் மோஹனதாஸ் கரம்சந்த் காந்தி எந்த வழி காட்டினாரோ, அதுவே நமக்கும் வழி. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையரை ஹிந்துக்கள் ஆயுதபலத்தால் எதிர்க்கவில்லை. கைத்துப்பாக்கி வெடிகுண்டு முதலியவற்றை உபயோகிக்க விரும்பின சில இளைஞரைக்கூட அது செய்யலாகாதென்று மஹாத்மா காந்தி தடுத்துவிட்டார். “அநியாயத்தை அநியாயத்தால் எதிர்த்தலென்பது அவசியமில்லை. அதர்மத்தை அதர்மத்தால்தான் கொல்ல வேண்டுமென்பது அவசியமன்று. நாம் அநியாயத்தை நியாயத்தால் எதிர்ப்போம்; அதர்மத்தை தர்மத்தால் ஒழிப்போம்” என்று காந்தி சொன்னார்.

சகோதரிகளே, நாம் விடுதலை பெறுவதற்கும் இதுவே உபாயம். நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத்தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனாராகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களே நமக்குப் பகைவராகவும் மூண்டிருக்கையிலே, இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது, என்னுடைய மனம், குருக்ஷேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ஜுனனுடைய மனது திகைத்தது போலே திகைக்கிறது. ஆண் மக்களை ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத்தகாத காரியம். அது பற்றியே, ‘சாத்விக எதிர்ப்பினால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று’ நான் சொல்லுகிறேன்.

‘அடிமைப்பட்டு வாழமாட்டோம்; ஸமத்வமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம்’ என்று அவர்களிடம் வெளிப்படையாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டு, அதனின்றும் அவர்கள் கோபத்தால் நமக்கு விதிக்கக்கூடிய தண்டனைகளயெல்லாம் தெய்வத்தை நம்பிப் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுப்பதே உபாயம். இந்த சாத்வீக எதிர்ப்பு முறையை நாம் அனுசரிக்கத் தொடங்க வேண்டுமாயின், அதற்கு இந்தக் காலமே சரியான காலம். அந்த வருஷமே சரியான வருஷம். இந்த மாஸமே நல்ல மாஸம். இன்றே நல்ல நாள். இந்த முகூர்த்தமே தகுந்த முகூர்த்தம்.

சகோதரிகளே! இப்போது பூமண்டலமெங்கும் விடுதலைப் பெருங்காற்று வீசுகிறது. கொடுங்கோலரசர்களுக்குள்ளே கொடியவனாய் ஹிரண்யனைப்போல் ஐரோப்பாவின் கிழக்கே பெரும் பகுதியையும் ஆசியாவின் வடக்கே பெரும் பகுதியையும் ஆண்ட ஸார் சக்ரவர்த்தி, இப்போது ஸைபீரியாவில் சிறைபட்டுக் கிடக்கிறான். “பாரத நாட்டைக் காப்பதிலே எனக்குத் துணைபுரிய வாருங்கள்” என்று ஆங்கிலேயன் ஹிந்துக்களைக் கூப்பிடுகிறான். விடுதலைக்காற்று, ‘வீர், வீர்’ என்று வேகமாக வீசுகீறது.

ஒரு ஸ்திரீயானவள் இந்த ஸாத்விக எதிர்ப்பு முறையை அனுசரிக்க விரும்பினால், தனது கணவனிடம் சொல்லத்தக்கது யாதெனில்:-

“நான் எல்லா வகைகளிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால், இன்று இராத்திரி சமையல் செய்யமாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதைவிட்டு வெளியேறவும் மாட்டேன்” என்று கண்டிப்பாகச் சொல்லிவிடவும் வேண்டும். இங்ஙனம் கூறும் தீர்மான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை, துணி முதலிய வீண் டம்பங்களை இச்சித்தேனும், நிலையற்ற உயிர் வாழ்வைப் பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக்கூடாது. ‘சிறிது சிறிதாக, படிப்படியாக ஞாயத்தை ஏற்படுத்திக் கொள்வோம்’ என்னும் கோழை நிதானக் கட்சியாரின் மூடத்தனத்தை நாம் கைக்கொள்ளக்கூடாது. நமக்கு ஞாயம் வேண்டும். அதுவும் இந்த க்ஷணத்தில் வேண்டும்.

இங்ஙனம், ‘பரிபூர்ண ஸமத்வமில்லாத இடத்தில் ஆண் மக்களுடன் நாம் வாழமாட்டோம்’ என்று சொல்வதனால், நமக்கு நம்முடைய புருஷர்களாலும் புருஷ சமூகத்தாராலும் ஏற்படக்கூடிய கொடுமைகள் எத்தனையோயாயினும், எத்தன்மை யுடையனவாயினும், அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும், நாம் அஞ்சக் கூடாது. ஸஹோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிறார்கள்; ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலால், ஸஹோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த க்ஷணத்திலேயே தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம். நமக்கு மஹாசக்தி துணை செய்வாள். வந்தே மாதரம்.