Showing posts with label 1906. Show all posts
Showing posts with label 1906. Show all posts

Wednesday, December 12, 2012

புல்லர் செய்யும் மோசம்

இந்தியா - 04.08.1906

புல்லர் நம்மை யெல்லாம் மோசம் பண்ணிவிட்டார். சென்ற வாரம் அவர் கிளம்பி விடுவாரென்று வெகு ஆனந்தத்துடன் எழுதி யிருந்தோம். அந்தக் குறிப்பு எழுதி முடிந்தவுடனேயே அவர் ராஜினாமா கொடுக்கப் போகிறா ரென்ற வதந்தி தக்க அதிகாரிகளால் மறுக்கப்படுகிற தென்ற தந்தி வந்து விட்டது. இதனையும் அக்குறிப்பின் இறுதியிலே சேர்க்கும்படியாக நேர்ந்துவிட்டது. இது என்ன கஷ்டகாலம்! கெட்ட வதந்திகள் தாம் மெய்யாக முடிகின்றனவே யல்லாமல், நல்ல வதந்திகள் பொய்யாகவே போய்விடுகின்றன. இவ்வளவிற் கப்பாலும் பெங்காளவாசிகள் புல்லர் ராஜினாமாக் கொடுக்கப் போவதாகச் சலிப்பில்லாமல் சொல்லிக் கொண்டேதானிருக்கிறார்கள்.

ஸர் பி.புல்லர் நீங்கிப்போய் விடுவதாகவும், ரெவின்யூ போர்டு ஸீனியர் மெம்பராகிய மிஸ்டர் கே.ஜி. குப்தா டி.சி.எஸ். மேற்படி ஸ்தானத்திலே நியமிக்கப்படப் போவதாகவும் பெங்காளிகள் நம்புகிறார்கள். ஆனால், பெங்காளத்து மீன் வர்த்தகர்களை எவ்வாறு அபிவிருத்தி செய்யலா மென்பதைப் பற்றி ரிப்போர்ட் செய்யும் பொருட்டு ஸ்பெஷல் கடமையில் மிஸ்டர் குப்தா நியமிக்கப்பட்டிருப்பதாகச் சமாசாரம் வந்திருக்கிறது. இதனால், இவர் லெப்டினென்ட் கர்வனர் ஸ்தானம் பெறுவாரென்ற வதந்தி தப்பென்று தெளிவாகிறது. எனவே ஸர் பி.புல்லர் சீக்கிரம் பெயர்வாரென்று கொள்வதற்கிடமில்லாமலிருக்கிறது.

(http://mahakavibharathiyar.info/b_katturaigal/pullar_seiyum.htm)

Tuesday, December 4, 2012

சென்னை ஹைகோர்ட்

11.08.1906

ஹைகோர்ட்டில் காலியான இரண்டு ஸ்தானங்களிலே ஒன்றில் மிஸ்டர் மில்லர் நியமனமாய் விட்டார். மற்றொன்றிலே ஸ்ரீ சங்கரன் நாயர் நியமிக்கப்படுவாரென நாமெல்லாம் எதிர் பார்த்திருந்தோம். இதற்கு முன் மேற்படி ஸ்தானத்தில் இரண்டு தடவை ஆக்டிங் வேலை பார்த்து, மிகுந்த சாமர்த்தியம் காட்டி ஜனங்களின் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் பாத்திரமாகி நிற்கும், மிஸ்டர் நாயரைக் கவர்ன்மெண்டார் இந்தச் சமயத்தில் மறந்து விடுவார்களென்று எவரும் நினைக்கவேயில்லை... இங்ஙனமிருக்க கவர்ன்மெண்டார் இப்போது மேற்படி ஸ்தானத்திலே ஸர்க்கார் வக்கீல் (அட்வகேட் ஜெனரல்) ஆகிய மிஸ்டர் வாலிஸ் என்பவரை நியமிக்க நிச்சயித்திருப்பதாக அறிந்து மிகவும் வருத்தமடைகிறோம். இதற்கு முன் சங்கரன் நாயருக்கு ஆக்டிங் உத்தியோகம் தரும் போதெல்லாம் மேற்படி வாலிஸ் எங்கே போயிருந்தார்? அப்போதே அவருக்கேன் கொடுத்திருககக் கூடாது? அவரைக் காட்டிலும் ஸ்ரீ நாயர் தகுதியுள்ளவரென்ற எண்ணங் கொண்டுதானே கவர்ன்மெண்டார் நாயருக்கு உத்தியோகமளித்தார்கள். இப்போது லார்டு ஆம்ப்டில் கவர்னராயிருப்பாரானால் மிஸ்டர் சங்கரன் நாயருக்கே மேற்படி ஸ்தானம் கொடுக்கவேண்டுமென்று நிச்சயித்திருப்பார். நமது தற்காலக் கவர்னராகிய ஸர்.ஆர்தர் லாலி இதுவரை இருக்குமிடந் தெரியாமல் மறைந்திருந்து விட்டு இப்போது ஆரம்பத்திலே செய்யப்போகும் ஓர் பெரும் காரியத்தைத் தாமாக ஆரம்பிக்கிறாரே என்பது நமக்கு விசனமுண்டாக்குகிறது. சங்கரன் நாயரைப் போன்ற தகுதியுள்ள வக்கீல் ஒருவர் தமக்குக் கடைசியாக ஜட்ஜி ஸ்தானம் ஸ்திரமாகக் கிடைக்குமென்ற நிச்சயமிருந்தாலொழிய இரண்டு மூன்று தடவை டெம்பரரி வேலைக்கு வர ஒப்புக்கொண்டிருப்பாரா?

இந்த விஷயங்களிலே கவர்ன்மெண்டார் ஜாதி பேத ஆலோசனைகளைக் கொணர்ந்திருக்க மாட்டார்களென்று நம்புகிறோம். எப்படியிருந்த போதிலும் ஸ்ரீ சங்கரன் நாயர் நியமனம் பெறாவிட்டால், அதிலிருந்து பொது ஜனங்களுக்கு மிகுந்த மன வருத்தமும், கவர்ன்மெண்டார் செய்கையிலே வெறுப்பும் உண்டாகும் என்பதில் ஆஷேபமில்லை. சென்னைக் கவர்ன்மெண்டாரின் நியமனத்துக்கு இன்னும் இந்தியா மந்திரியின் அனுமதி கிடையாமலிருப்பதால் பொது ஜனங்களின் உணர்ச்சியை இந்தியா மந்திரிக்கே நேரில் அறிவித்துக் கொள்ள வேண்டுமென்று சென்னை மஹாஜன சபையாரும், வக்கீல் சங்கத்தாரும் எண்ணி அங்ஙனமே தந்தியனுப்பியிருக்கிறார்கள். மேற்படி ஸ்தானத்தில் சங்கரன் நாயர் நியமிக்கப் பட்டாலொழிய ஜனங்களுக்கு அதிருப்தி உண்டாகுமென்பதை இவர்கள் மிஸ்டர் மார்லிக்கு அறிவித்திருக்கிறார்கள். மிஸ்டர் மார்லி எவ்விதம் செய்வாரோ அறிகிலோம்.

Wednesday, July 11, 2012

ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும்


டிசம்பர் 8, 1906

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபராகிய மிஸ்டர் ரூஸ்வெல்ட் (தியோடார் ரூஸ்வெல்ட்) இந்த வாரத்தில் முக்கிய மந்திராலோசனை சபைக்கு (காங்கிரஸ்) அனுப்பிய கடிதம் அநேக விஷயங்களில் நன்கு கவனிப்பதற்குரியது. ரூஸ்வெல்ட் அதிபர் மிகுந்த தீரத்தன்மையுடையவர். தேச ஜனங்களின் மனதிற்கு வருத்த முண்டாகுமென்பதற்காக பயந்து உண்மைகளை மறைத்துக் கூறும் வழக்கமுடையவரல்ல. சமீபத்தில் ஸான்பிரான்சிஸ்கோவில் கவர்ன்மெண்ட் பாடசாலைகளிலிருந்து ஜப்பானியர்களை விலக்கிய அநீதிகளைப்பற்றி இவர் மிகுந்த கோபத்துடன் எழுதியிருக்கின்றார். 

ஜப்பானியர்களிடம் அநாவசியமான விரோதம் பாராட்டும் அமைச்சர்களை மூர்க்கர்கள் என்று பேசுகின்றார். ஐக்கிய நாடுகளின் மத்திய கவர்ன்மெண்டார் வெளி தேசத்தாருடன் செய்து கொள்ளும் உடன்படிக்கை நிபந்தனைகள் ஒவ்வொரு தனி மாகாணமும் அனுஷ்டிக்கும் படி செய்ய இப்போது விதியேற் படுத்தப்படாமலிருக்கின்றது. எனவே, ரூஸ்வெல்ட் அதிபர் ஜப்பானியர்களை விலக்காமல் அவர்களுடன் சஹோதர பாவமாக நடந்து கொள்ள வேண்டுமென்று விரும்பிய போதிலும், காலிபோர்னியா என்றும் ஒற்றை மாகாணத்தின் கவர்ன்மெண்டார் அதற்கிணங்க மனமில்லாமல் இருக்கின்றார்கள். இம்மாதிரியேற்படாமலிருக்கும் பொருட்டு அரசு முறைமை மாற்றப்பட வேண்டுமென்று ரூஸ்வெல்ட் அதிபர் அபிப்பிராயப்படுகிறார். இந்த ஜப்பானிய விவகாரத்திலே எந்த மாகாணத்தாரும் யாதொரு அக்கிரமமும் செய்யாமலிருக்கும் பொருட்டாக தனது ‘ஸிவில்’ அதிகாரத்தை மட்டுமேயன்றி ராணுவ பலத்தைக் கொண்டும் வற்புறுத்தத் தயாராகியிருப்பதாக இவர் வெளியிடுகின்றார். ஜப்பானிய விவகாரத்தை மிகவும் நுட்பமாக விவரித்துப் பேசுகின்றார். “எல்லா தேசத்து ஜனங்களையும் சமானமாக நடத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். சரியான ஒழுக்கத்துடன் நடக்கும் அன்னியர்களுக்குள்ளே பக்ஷபாதம் காட்டுதல் மிகுந்த தாழ்ந்த நாகரீகத்தின் அடையாளமாகும். ஜப்பானியரிடம் விரோதங் காட்டுதல் அமெரிக்கர்களுக்குப் பெரிய அவமானமாகும். அதிலிருந்து மிக்க விபத்துக்கள் ஏற்படக் கூடும்” என்று ரூஸ்வெல்ட் எழுதுகின்றார். ஜப்பானியர்களின் தீரத்தன்மையைப்பற்றியும் மிகவும் புகழ்ச்சி செய்து பேசுகின்றார். ஸான்பிரான்ஸிஸ்கோ பூகம்பத்தில் வருந்திய ஜனங்களுக்கு ஜப்பானியர்கள் ஒரு லக்ஷம் டாலர் தரும்படி செய்த நன்றியை நினைப்பூட்டுகின்றார். ஜப்பானியர்களை பள்ளிக்கூடங்களினின்று விலக்குதல் மஹாமூடத்தனம். அமெரிக்காவுக்கும் ஏஷியாவுக்கும் (ஆசியாவுக்கும்) இடையே மிகுந்த வர்த்தக நட்பு ஏற்பட வேண்டும். நாம் மற்றவர்களிடம் என்னவிதமான மரியாதையை எதிர்பார்க்கிறோமோ அதை நாம் அவர்களுக்குச் செய்யத் தயாராக வேண்டும் என்கிறார். 

இனி அமெரிக்காவை மட்டிலும் குறிப்பிட்ட சில சீர் திருத்தங்கள் அந்தக் கூட்டத்திலே காணப்படுகின்றன. வரம்புக்கு மிகுந்த திரவியம் வைத்திருப்போர்களை மிகுந்த தீர்வைகள் சுமத்தி கூடியவரை அமுக்கி வைத்திருக்க வேண்டுமென்ற சீர்திருத்தம் இவர் நெடுங்காலம் விரும்பு விருகின்றார். அதையும் இந்தக் கடிதத்தில் வற்புறுத்துகின்றார். அமெரிக்காவில் செல்வம் வரம்புக்கு மிஞ்சி வைத்துக் கொண்டிருப்பவர்களால் பொதுஜனங்கள் எவ்விதமான பெருந்தீமைகள் விளைவதென்பதை ஆராய்ச்சி புரிவோமானால் இவர் விரும்பும் சீர்திருத்தம் அவசியமென்பது விளங்கும்.

Tuesday, June 26, 2012

திரான்ஸ்வால் இந்தியரின் கஷ்டம்


டிசம்பர் 8, 1906

ஓநாய் ஆட்டுக்குட்டிகளிருக்கும் இடத்திற்கு வந்தால் ஓநாயின் பாடு வெகு உல்லாசம்தான். ஆனால் ஓநாய்கள் இருக்குமிடத்திற்கு ஆட்டுக்குட்டி செல்லுமானால் இதன் பாடு வெகு கஷ்டம். இந்தியர்களுக்கும் வெள்ளை ஜாதியாருக்கும் இப்போதிருக்கும் சம்பந்தம் மேற்கண்ட விதமாகவே இருக்கிறது. இந்தியாவுக்கும் ஒரு ஐரோப்பியன் வந்தால் அவனுக்கு வேட்டகத்திற்கு வந்த மாப்பிள்ளைக்கு நடக்கும் உபசாரங்களெல்லாம் குறைவின்றி நடக்கின்றன. அவன் திரும்பின இடத்திலேயெல்லாம் உத்தியோகம். அவன் கால் வைத்த இடம் எல்லாம் பணம். சென்ற இடமெல்லாம் மதிப்பு. கையிலே அரைக்காசு இல்லாமல் இங்கே வந்து சேர்கிறான். திரும்ப ஊருக்குப் போகும்போது பிரபுவாகப் போகிறான். அவனுடைய தசை அப்படியிருக்கிறது. இது நிற்க. 

ஆங்கிலேய ஆட்சிக்க்குட்பட்ட திரான்ஸ்வால், கேப் காலனி, ஆஸ்டிரேலியா முதலிய தேசங்களில் இவன் (இந்தியன்) கதி மஹா பரிதாபகரமாய் விடுகிறது. இவர் வர்த்தகம் செய்து செழிப்படையவிடுகிறதில்லை. உத்தியோகங்களென்று மூச்சுவிடக்கூடாது. “அங்கே நடக்கக்கூடாது இங்கே வீடு கட்டக்கூடாது, தண்ணீர் சாப்பிடத் தீர்வை கொடுக்க வேண்டும், மூச்சுவிட வரி செலுத்த வேண்டும்” என்பதாக எண்ணிறந்த இடைஞ்சல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நமது “காருண்ய”! கவர்ன்மெண்டாரிடம் முறையிட்டுத் தொண்டை வற்றிப்போய்விட்டதேயொழிய ஒரு காசுக்குப் பயன் கிடையாது. சிறிது காலத்திற்கு முன்பு திரான்ஸ்வாலில் “ஏஷ்யாக்காரர்விதி” (Asiatic Ordinance) என்பதாக ஒரு விதியேற்படுத்தப்பட்டது. இது இந்தியர்களுக்கு வெகு அவமானமான விதி. இதை மாற்றவேண்டுமென்ற திரான்ஸ்வாலின் இந்தியர்கள் பிரதிநிதிக் கூட்டமொன்று இங்கிலாந்துக்குச் சென்று அங்குள்ள மந்திரிகளையும் ராஜதந்திரிகளையும் பிரார்த்தனை புரிந்தது. எத்தனையோ பிராயாசைக்கப்பால் இங்கிலாந்து கவர்ன்மெண்டார் ௸ விதி கொஞ்ச நாளைக்கு நிறுத்திவைக்கப்படுமென்றும், முற்றிலும் மாற்றிவிட வேண்டுமானால் அது மிகவும் யோசனை செய்து முடிவுவேண்டிய காரியமென்றும் சொல்லி இருக்கிறார்கள். இது என்ன அவமானம்! என்ன நிந்தை! ஆரிய புத்திரர்களே! தூங்கிக்கொண்டா இருக்கிறீர்கள்? இந்த மானமற்ற பிழைப்பு இன்னும் எத்தனை காலம் பிழைக்கவேண்டுமென்று உத்தேசித்திருக்கிறீர்கள்!

Saturday, June 2, 2012

நமது மகமதிய சகோதரர்கள்


1906 ஜூன் 23

“ஸத்யமேவ ஜயதே” இந்தியாவின் வருங்காலப் பெருமைக்கும், சிறப்புக்கும், இத்தேச ஜனங்களில் பெரும் பாலார் ஹிந்துக்கள், மகமதியர் என இரண்டு பகுதிப்பட்டு  நிற்பது பெரும் தடையாகவே இருக்கிறதென்பதை ஒளித்து வைத்து பிரயோஜனமில்லை. தென்னிந்திய கிராமாந்திரங்களிலே மகமதியர்களும், ஹிந்துக்களும் தமக்குள்ள வேறுபாட்டை மறந்து மகமதியர்களும் ஹிந்துஜன சமூகத்தில் ஒரு கிளையராகவே கருதப்படுகிறார்கள்  என்பது வாஸ்தவமென்ற போதிலும், பொதுவாக இம்மாகாணத்திலும் கூட வட இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் ஹிந்து, மகமதியர்கள் ஒருவிதமான பரஸ்பர துவேஷம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இதற்குக் காரணம் மகமதிய ஆட்சியில் ஏற்பட்ட துவேஷமே.

இந்த விரோதங்களை நீக்கி இந்த இரண்டு ஜாதியாருக்குள்ளே சிநேக உணர்ச்சியும், சகோதரப் பான்பையும் ஏற்படுத்துவது இத் தேசாபிமானிகளின் முக்கிய கடமையாகும். ஆனால், ஒரு நோயைத் தீர்க்க விரும்புவோன் அந்த  நோயே இல்லையென்று பிரமாணம் செய்துவிடுதல் மிகவும் சிறப்பான உபாயமில்லை. ஹிந்து மகமதியருக்குள்ளே விரோதங்களைத் தீர்க்க விரும்புவோர் மேற்படி விரோதங்களே இல்லையென்று சாதித்து விடுதல் சரியான பாதையாக  மாட்டாது. திருஷ்டாந்தமாக கல்கத்தாவிலே நடந்த சிவாஜி உற்சவத்தை எடுத்துக்கொள்வோம். எவ்விதமான ஆபத்திலும் ஹிந்துக்களை விட்டு நீங்காத மகாதேசாபிமானிகளாகிய வியாகத்ஹுசேன் போன்றவர்கள் கூட அந்த சமயத்திலே சிவாஜி உற்சவத்தினின்றும் விலகி இருந்துவிட்டார்கள். சிவாஜியை தெய்வாம்சமென்றும், மகாத்மாவென்றும் ஹிந்துக்கள் ஸ்தோத்திரம் செய்துகொண்டிருக்கும் போது, அவர் கொலையாளி என்றும், பாதகர் என்றும் அநேக மகமதியர்கள் “இங்கிலீஷ்மான்” பத்திரிகைகளுக்கு எழுதி இருக்கிறார்கள்.

மேற்கண்டவாறு இருக்கும் நிலைமையை உத்தேக்குமிடத்து அநேகர் மனதில் பரதகண்டத்தின் வருங்காலத்தைப்பற்றி பயமேற்படுகின்றது. “கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டும்” நடக்குமானால் எதிரிக்கு எப்போழுதும் சந்தோஷமேயல்லவா? இதற்காக, நம்மவர்கள் பெரும் பாடுபட்டு ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் இடையேயுள்ள பகைமையாகிய கழியை கடக்க முயலவேண்டும். அந்தக் கழியிலே இருக்கும் கற்களும், பாறைகளும் எண்ணிறந்தனவையாகும். இதைக் கடக்கும் போது எத்தனையோ ஆபத்துக்களும் துன்பங்களும் நேரிடக்கூடும். ஆனால், விடாமுயற்சி, பொறுமை, தீரத்துவம், கருணை என்னும் சிறந்த மாலுமிகளைத் துணையாகக்கொண்டு நாம் செல்லவேண்டும். நம்மால் கூடியவரை முயற்சி செய்துவிட்டுப் பலனை தெய்வத்திற்கு விட்டுவிடுதலே பொருந்தும். “பசுவைக் கொல்லுவோர்” “பசுவை வணங்குவோர்”  ஆகிய இந்த இரண்டு வகுப்பினரும் எத்தனைக் கெத்தனை சீக்கிரமாக நெருங்கத் தொடங்குகிறார்களோ, அத்தனைத் கெத்தனை நலமுண்டாகும். மகமதியர்களும் இந்தப் பெரும் முயற்சியிலே தம்மாலியன்ற அளவு ஒத்து முயலவேண்டுமென்று மிகவும் ஆவலுடன் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.

Saturday, May 26, 2012

ஸ்வாமி அபேதாநந்தர்

21, ஜூலை 1906

இந்த வாரத்தில் சென்னையிலே நடந்த சமாசாரங்களுக்குள் வெகு முக்கியமானது ஸ்வாமி அபேதாநந்தரின் வரவே யாகும். பாரத நாட்டு மஹரிஷிகளில் ஒருவரும் ஜகத் பிரசித்தருமாகிய ஸ்வாமி விவேகாநந்தரது ஸகபாடியுமான அபேதாநந்தர் பல வருஷ காலமாக ஐரோப்பா, அமெரிக்கா முதலிய இடங்களில் மண்ணாசையிலும் பொன்னாசையிலும் அமிழ்ந்துகிடக்கும் மனிதர்களிடம் வேதாந்த மார்க்கம் உபதேசித்து அவர்களுடைய இரும்பு நெஞ்சுகூட ஞானத் தீயில் இளகுமாறு செய்வித்து வேதாந்த மார்க்கம் உபதேசித்து அவர்களுடைய இரும்பு நெஞ்சுகூட ஞானத் தீயில் இளகுமாறு  செய்வித்து பெருங்கீர்த்தி பெற்றுவிட்டு,  இப்போது தமது தாய் நாட்டிற்கு மீண்டும் வந்திருக்கிறார்.

இவருக்குச் சென்னையில் நடந்த உபசரணைகளையும் இவர் சென்னையில் செய்த உபந்நியாசக் கருத்துக்களையும் பற்றி மற்றோரிடத்திலே பிரஸ்தாபம் செய்திருக்கிறோம். இவரும் இவருடைய கூட்டாளிகளும் கடல்மீது எத்தனையோ ஆயிரம் காதம் கடந்துபோய் இத்தேசத்தின் பெயர் கேட்டவுடனே அந்நியர்கள் முடி வணங்குமாறு செய்யும் நன்மைக்கு நம்மவர்களால் என்ன கைம்மாறு செய்ய முடியும்? இந்த மஹான்கள்தாம் என்ன கைமாறை எதிர்பார்க்கிறார்கள்? யாதொரு பற்று மில்லாமல், இரந்து உண்பவர்களாய்  உலகத்தாரின் ஞான வழிக்கு ஏற்பட்டிருக்கும் மாயையாகிய குருட்டுத் தன்மையை  நீக்கி, ஒளியளிக்க வேண்டுவதே கடமையாகக் கொண்டு நாள் கழித்துவரும் இப் பெரியார்களுக்கு உலகம் அளக்கத் தகாதவாறு கடமைப் பட்டிருக்கிறது. ஆத்மாவே உண்மை யென்றும், அதனை மறைத்து நிற்கும் மற்றத் தோற்றங்களெல்லாம் மயக்கமே என்றும் போதனை செய்யத் தலைப்பட்டிருக்கும் அபேதாநந்த ஸ்வாமிகள், அந்தப் பாரமார்த்திக நிலைமை அறியாமல் வியாவஹாரிக நிலையிலே உழலும் நம்மவர்களுக்குக்கூட மிகவும் பயன் படத்தக்க சில ஹிதோபதேசங்கல் தந்திருக்கின்றார். ஞாயிற்றுக் கிழமை மாலை டவுன் ஹால் வெளி மைதானத்திலே இவர் உபந்நியாசம் புரிந்த காலத்தில் நம்மவர்களின் பேடித்தன்மையும் பயங்காளித் தன்மையும் பற்றிப் பேசியது கொஞ்சமில்லை. “ஆண்மை இழந்து பள்ளத்தில் விழுந்து கிடக்கிறீர்களே! எழுந்து நின்று உங்களது புருஷத் தன்மையை நிரூபித்துக்கொள்ளுங்கள்” என்று இத் தேசத்தாரை நோக்கிக் கூறுவதில் விவேகாநந்தர் எம்மட்டு ஆத்திரம் கொண்டிருந்தாரோ அம்மட்டு அபேதாநந்தரும் கொண்டிருப்பதைக் காண்கிறோம். தீர புத்திரர்களாகிய ஆரியர்கள் ஏதோ ஒரு விதமான மதி மயக்கத்தால் குழந்தைகLளைப் போலவும் பெண்களைப் போலவும் நடந்துகொள்வதைப் பார்த்தால் அனைத்தையும் துறந்த ஞானிக்குக்கூட ஒருவிதமான பரிதாபம் ஜனிக்குமல்லவா?

அபேதாநந்தருக்கும் அவரைப் போன்ற ஞானிகளுக்கும் நாம் பெரிய உபசரணைகள் நடத்துவதால் மட்டும் அவர்களது பிரீதிக்கு உள்ளாய்விட மாட்டோம். பல்லக்குகள், புஷ்ப ஹாரங்கள், வாத்தியங்கள் என்பவற்றைக் கொண்டு ஒரு ஞானியின் கிருபையை சம்பாத்தியம் செய்துவிடுவதென்றால் அது எளிதான காரியமா? அவர்களது உபதேசத்தின் உண்மையைக் கிரகித்து நம்மால் இயன்றமட்டும் அதன்படி நடக்க முயல்வதே நாம் அவர்களுக்குச் செய்யக்கூடிய கடமையாகும்.

தீரத் தன்மையைப் பற்றி மட்டிலுமல்லாமல் ஐக்கியம் முதலிய மற்ற விஷயங்களைப் பற்றியும் அபேதாநந்தர் பேசியிருக்கிறார். இந்தியாவில் ஒரு கோடி ஜனங்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒருவனுக் கொருவன் சம்பந்தமில்லாமல் ஒவ்வொருவன் ஒவ்வொரு மாதிரி எண்ணங்கொண்டிருக்கிறான். ஆதலால் வெவ்வேறு வகைப் பட்ட ஒரு கோடி  எண்ணங்கள் ஏற்பட்டுப் போய் விடுகின்றன. எனவே ஒரு காரியம் எளிதாகச் சாதிக்க முடியாமல் போய் விடுகிறது. பிரிட்டிஷ் தேசத்தில் 4 கோடி ஜனங்கள் மாத்திரமே இருந்தபோதிலும், அவர்களைனைvரும் ஒரே விதமான எண்ணங் கொண்டிருப்பதால் அவர்கள் காரியங்கள் மிகவும் எளிதாகக் கைகூடிவிடுகின்றன. இதனை விவேகாநந்தர் வெகு தெளிவாக எடுத்துக் கூறி இருக்கிறார்.

அது நிற்க,  அபேதாநந்தர் சென்னை மாகாணத்திலும் நகரத்திலும் பெற்ற உபசரணைகள் அவருக்கு இத்தேசம் முழுதும் நடைபெறும் என்பதில் ஆக்ஷேபமில்லை. ஆனால் அத்துடன் இவர் சென்ற இடமெல்லாம் ஜனங்கள் இவரது போதனைகளைப் பக்தியுடன் கேட்டுப் பயன் பெறுவார்களென்று இத்தனைய மஹான்கள் இந்நாட்டிலே தோன்றி வருவார்களானால் ஆரிய பூமியானது மறுபடியும் புராதன காலத்துப் பெருமையைக் காட்டிலும் மேற்பட்ட பெருமைக்கு வந்துவிடும்.

Wednesday, May 16, 2012

பிரிட்டிஷ் அநீதிகளை ப்ரயன் தகர்த்தெறிதல்


4 ஆகஸ்டு, 1906

அமெரிக்க ஐக்கிய மாகாணக் குடியரசானது இவ்வுலக ராஜாங்கங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் நாகரீகம், செல்வம், வன்மை, பெருமையென்ற அனைத்திலும் சிறப்பு மிகுந்ததாக விளங்குகிறது. இதன் அதிபராக இப்போது மிஸ்டர் ரூஸ்வெல்ட் பரிபாலனmம செய்கிறார். இவருக்கப்பால், இந்தப் பதவிக்கு வரும்படியான நிலைமையிலிருப்பவர் மிஸ்டர் ப்ரயனேயாவார். மிஸ்டர் ப்ரயன் உலகத்து ராஜதந்திரிகளுக்குள்ளே விசேஷமான அறிவு வன்மையிலும், ஒழுக்க மாண்பிலும், நீதிப்பற்றிலும் முதல் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் சொல்லும் வசனங்களை உலகத்து விற்பன்னர்களும் ராஜதந்திரிகளும் மிகுந்த மரியாதையுடனும் சிரத்தையுடனும் கவனிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்த ராஜதந்திரி சிலதினங்கள் முன்பு இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சிபுரியும் மாதிரிகளை நன்றாய்க் கவனித்து தேர்ச்சியடைந்து இருக்கிறார். இதையெல்லாம் பற்றி இவர் தமது தேசத்திலுள்ள “ஸன்” என்னும் பத்திரிகையொன்றுக்கு 4 பத்திகள் வரக்கூடியதாகப் பெரிய கடிதமொன்று அனுப்பியிருக்கிறார். அந்த மஹா அற்புதமான உபந்நியாசத்தை அடுத்த முறை நமது பத்திரிகையிலே மொழி பெயர்த்தெழுத உத்தேசித்திருக்கின்றோம். இவர் பிரிட்டிஷ் ஆட்சியின் அநீதி குரூரமாக இருந்திருக்கிறதென்பதை எத்தனையோ பலமான விவகாரங்களால் சித்தாந்தம் செய்கிறார்.  இந்தியாவின் விவகாரங்களையெல்லாம் அதிநுட்பமாகப் படித்தறிந்து இவர் எழுதியிருக்கும் கடிதத்தை நோக்கும்போது இவருடைய புத்தி பலத்தைப்பற்றி அளவிறந்த ஆச்சரியமுண்டாகிறது. இங்கிலாந்தின் லாபத்தையே மட்டுமின்றி இந்தியாவின் லாபத்தைச் சிறிதேனும் கவனியாமல் ஆளும் அநியாயம்; வாக்குத் தவறுதல்; இந்நாட்டுச் செல்வத்தை கொள்ளையிட்டுப் போதல்; மரண விகிதத்தின் அதிகரிப்பு; தேச வருமானத்தின் பெரும் பங்கு அனாவசியமான சேனைக்காப்பிலே கொண்டு கொட்டுதல்; நீர் பாய்ச்சல், உரம் முதலிய விவசாய நலன்களைக் கவனியாமை; நிலவரியின் கொடுமை; மற்றத் தீர்வைகளின் பாரம்; ஜனங்களுக்குச் சுயாட்சி கொடுக்காமல் இருப்பதற்கு பிரிட்டிஷார் சொல்லும் போலிக் காரணங்களின்  மடமை, ஜனக்கல்வியை ஆதரியாமல் அமுக்கப் பார்க்கும் பாதகச் செய்கை யென்ற எல்லா விஷயங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து மகா சாமர்த்தியத்துடன் விவரிக்கிறார். சுதேசிய முயற்சி இந்நாட்டிலே தோன்றிய ஜனங்களெல்லாம் ஒற்றுமைப்பட்டு  வரும் மங்களக் குறியைச் சுட்டிப் பேசுகிறார். நமது நாட்டுத் தலைவர்களில் நவுரோஜி, கோகலே, முதலிய பெரியோர்களின் திறமையைப் புகழ்ந்து  கூறியிருக்கின்றார். நம்மவர்கள் ௸ விஷயங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம் ராஜாங்கத்தார் கவனியாமல் ஏதோ குழந்தைகள்  பிதற்றுகின்றன என்று சும்மாயிருந்தார்கள். இப்போது ப்ரயன் மோதுகிறாரே! இவருடைய உபந்நியாசம் உலகத்திலுள்ள எல்லா முக்கிய பாஷைகளிலும் மொழிபெயர்க்கப் பெற்று எல்லோரும் படிப்பார்களே, அப்போது பிரிட்டிஷாரைப் பற்றி உலகத்தார் எவ்வளவு இழிவாக நினைப்பார்கள்!


(வில்லியம் ஜென்னிங்ஸ் ப்ரயன் பற்றிய விக்கிப்பீடியா பக்கமும், இந்த கட்டுரையில் பாரதியால் குறிப்பிடப்படும் British rule in India கட்டுரையும். நன்றி @mankuthirai )

Tuesday, May 15, 2012

லார்டு கர்ஸனும் ஹிந்துக்களின் ஒழுக்கமும்


ஜூலை 7, 1906

கல்கத்தா யூனிவர்சிடியில் பட்டம் பெற்ற இளைஞர்களின் முன்பு லார்டு கர்ஸன் செய்த உபந்நியாசத்தில் ஹிந்துக்களைப் பற்றியும், அவர்களது பிரதான கிரந்தங்களைப் பற்றியும் கூறிய பழிச்சொல் நம்மவர்கள் மனதிலிருந்து ஒருபோதும் நீங்க மாட்டாது. இந்தியர்கள் பெரும்பாலும் அசத்தியவாதிகளென்று அந்த மனிதன் வாய் கூசாமல்  பேசினான். கொரியா தேசத்து மந்திரியிடம் தாம் பொய் வார்த்தை சொல்லி ஏமாற்றியதாகத் தமது புஸ்தகத்திலேயே அவர் எழுதி வைத்திருப்பதை உடனே இத்தேசத்துப் பத்திரிகைகள் எடுத்துக் காட்டின. அப்பொழுதே, அவருக்கு நேர்ந்த அவமானத்திற்குக் கணக்கில்லை. இப்போது மறுபடியும், மிஸ்டர் டி.ஸ்மிட்டன் (Donald Smeaton) என்ற ஒரு ஆங்கிலேயர் லார்டு கர்ஸன் யோக்கியத்தைப்பற்றி ஓர் வேடிக்கையான திருஷ்டாந்தம் தெரிவிக்கிறார். இப்போது மிஸடர் ஸ்மிட்டன் (பார்லிமெண்டு) மெம்பராக இருப்பவர். இவர் ஆதியில் பர்மாவிலே உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அபின்  ஏலத்தைக் குறைக்க வேண்டுமென்ற விஷயத்தைப் பற்றி மிஸ்டர் ஸ்மிட்டன் லார்டு கர்ஸனுக்கு எழுதிக் கேட்டுக் கொண்டார். அதற்கு லார்டு கர்ஸன் தமது கையாலேயே எழுதிய மறுமொழியில் பின்வருமாறு கூறினார்:-  “நீர்தாம் ஒழுங்கையும் மனச்சாக்ஷியையும் அதிகமாகக் கவனிக்கின்றீர். ஆகையினால், நீர் ஓர் பிரிட்டிஷ் மாகாணத்தில் உத்தியோகம்  பார்க்க உதவமாட்டீர்” என எழுதியிருந்தார். எனவே தர்ம ஒழுங்குள்ளவனும் மனச்சாக்ஷிப்படி நடப்போனும் பிரிட்டிஷ் ஆட்சியில் உத்தியோகம் பார்க்கத் தகுதியில்லாதவனென்று லார்டு கர்ஸன் எண்ணியிருந்ததாகத் தெளிவுபடுகிறது. வெளிக்கு, பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர் எல்லாம் மகாதர்மப் பிரியர்களென்றும், தேவ  புருஷர்களென்றும் பேசிக் கொண்டிருந்த லார்டு கர்ஸன் தமது அந்தரங்கத்திலே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உத்தியோகம் பார்ப்பவன் சிறிதேனும் தர்ம வெறி அறியாத நீச்சனாயிருக்க வேண்டுமென்ற்  நிச்சயித்துக் கொண்டிருக்கிறார்.  மிஸ்டர் மார்லி இங்கிலாந்திற் கென்று ஓர் மனச்சாக்ஷியும், இந்தியாவைக் கென்று மற்ற மனச்சாக்ஷியும்  வைத்துக் கொண்டிருப்பது போல, லார்டு கர்ஸனும் பிரிட்டிஷ் மாகாணங்களின் அதிகாரங்களைப் பற்றி வெளியில் சொல்வதற்கோர் அபிப்பிராயமும் மனதுக்குள்ளே மற்ற அபிப்பிராயமும் வைத்துக் கொண்டிருக்கிறார். 

இப்படி ராக்ஷசத்தனமான கொள்கை வைத்திருந்த இந்த மனிதன் இஷ்டப்படி  ஆளும்படியாய் முப்பதுகோடி ஜனங்கள் இவருக்குக் கீழே வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை நினைக்கும்போதே மனம் பதறுகிறது. இவருடைய ஆட்சிக் காலத்தில் இவரைப் பற்றி இந்திய ஜனங்களும் ஜனத்தலைவர்களும் கொண்டிருந்த  எண்ணம் பலம் அடைவதற்கு நாள்தோறும் புதிது புதிதாகக் காரணங்களேற்பட்டுக் கொண்டே வருகின்றன.

Tuesday, April 24, 2012

தென்றலுடன் பிறந்த பாஷை


“தமிழ்ப் பாஷையின் இனிமை” என்ற தலைப் பெயருடன் சென்னை, “சுதேசமித்திரன்’ பத்திரிகையிலே இனியதோர் குறிப்பு எழுதப்பட்டிருக்கின்றது. அதனை மற்றோரிடத்திலே எடுத்துப் பிரசுரித்திருக்கிறோம். தென்றலுடன் பிறந்த தமிழ் மொழியின் இளமையைப் பற்றி டாக்டர் ஜி.யு.போப் என்னும் புகழ் பெற்ற விற்பன்னர் கொண்டிருக்கும் மதிப்பை அதில் எடுத்துக் காட்டியிருப்பது தமிழர்கள் அனைவரும் கண்டு மகிழத் தக்கதாக இருக்கின்றது. ஆங்கிலப் பெண்களின் இதழ் நயத்திற்கும், செவி நுடபத்திற்கும், அபிசிருக்கும் தமிழைப் போன்ற பொருத்தமுடையது வேறெந்த பாஷையும் இல்லையென்று போப் கூறுகிறார். தற்காலத்திலே நம் நாட்டவர்கள் நமது அருமைத் திருமொழியின் சுவையை வளர்க்க முயலாமல் அதன் இன்பமெல்லாம் பாழாகவிட்டிருப்பதைப் பற்றி மேற்படி குறிப்பெழுதியவர் மிகுந்த கோபமுணர்த்தி இருக்கின்றார். நாம் அந்த விஷயங்களில் நமக்கேற்பட்டிருக்கும் அன்புகளைப் பல வாரங்களின் முன்பு ஒரு தடவை விஸ்தாரமாக எழுதியிருக்கிறோம்.

பொறுப்பென்பதே அற்ற சில மூட வாலிபர்கள் தாம் அரைகுறையாகக் கற்றிருக்கும் அன்னிய பாஷைத் தருக்கு  மேலிட்டவர்களாகித் தமிழ் மொழியே இறந்து போய்விட வேண்டுமென்று கூறுவதை நன்கு கண்டித்துப் பேசியிருக்கிறோம். இவர்கள் கிடக்க, மற்றப்படிப் பொதுவாக இந்நாட்டில் ஆங்கிலம் கற்றோரெல்லாம் சுபாஷாபிமானம் என்பது மிகவும் குன்றியிருப்பது அன்றி, அதன் நயமறியாது திட்டுவதை நினைக்கும்பொழுது நமக்கு வருத்தமுண்டாகிறது. இதன் சம்பந்தமாகச் சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய மஹாவித்வான் ஸ்வாமிநாதையர் சொல்லிய வார்த்தையொன்று நமது நெஞ்சை விட்டு ஒருபோதும் அகலமாட்டாது. மேற்படி காலேஜ் தமிழ்ச் சங்கத்தில் ஒரு ‘மீட்டிங்’ நடந்தது. தமிழ்ப் பாஷையின் அருமையைப் பற்றி ஏதோ பிரஸ்தாபம் வந்தது. அப்போது ஸ்வாமிநாத ஐயரவர்கள் எழுந்து பின்வருமாறு பேசினார்:- “ஆங்கிலேய பாஷையின் இலக்கிய நூல்களில் எத்தனையோ அருமையான கருத்துக்கள் ததும்பிக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். அந்தப் பாஷை எனக்குத் தெரியாது. அதனால் அவ்விஷயத்தில் ஒரு விதமான அபிப்பிராயமும் என்னால் கொடுக்க முடியாது என்ற போதிலும் மேற்கண்டவாறு சொல்வோர் தமிழ்ப் பாஷையிலே அவ்விதமான அருமையான விஷயங்கள் கிடையாவென்று சொல்லும் பொழுது உடன் எனக்கு வருத்தமுண்டாகிறது. இவ்வகுப்பினர்களுடன் நான் எத்தனை முறையோ சம்பாஷணை செய்திருக்கிறேன். அந்தச் சமயங்களிலே நான் இவர்களது தமிழ் வன்மையைப் பரிசோதனை புரிந்திருக்கிறேன். இவர்கள் அத்தனை சிறந்த பண்டிதர்களென்று எனக்குப் புலப்படவில்லை. பழங்காலத்துத் தமிழ் நூல்களிற் பயிற்சியில்லாத இவர்கள் அவற்றைப் பற்றி இழிவான அபிப்பிராயம் கொடுப்பதுதான் வெறுக்கத் தக்கதாக இருக்கின்றது. ஆனையையே பார்த்திராத குருடனா அதன் நிறம் முதலியவற்றை பற்றி ஒர் அபிப்பிராயம் கொடுக்க வேண்டும்? “போப் முதலான விற்பன்னர்கல் இவர்கள் இருக்கும் திசை நோக்கிக் காறியுமிழும் வண்ணமாக” நம்மவர்களிற் சிலர் நடந்து கொள்கிறார்களென்று மேற்கூறப்பட்ட “மித்திரன்” குறிப்பில் எழுதபட்டிருப்பதை நாம் முற்றும் அங்கீகாரம் செய்கிறோம்.

தமிழ்ப் பாஷையின் இனிமை

[ “மித்திரன்”, 1906 ஸெப்டம்பரில் வெளிவந்த குறிப்பு]

பாற்கடலிலே பிறந்த மீன்கள் பாலைப் பெரிதாகப் பாராட்டுவது வழக்கமே கிடையாதென்பது நெடுங்காலமாக வழங்கி வரும் உண்மையாகும்.  அவ்வசனக் கருத்து முற்றும் மெய்யென்பதற்குச் சிறிது காலத்தின் முன்பு டாக்டர் போப்பையர் லண்டனில் ராயல் ஏஷியாடிக் சபையார் முன்பு செய்த உபந்நியாசத்திலே நல்லதோர் திருஷ்டாந்தம் அகப்பட்டது. திருக்குறள், திருவாசகம் என்னும் தெய்வீக நூல்களை இங்கிலீஷிலே மொழி பெயர்த்தவரும் அநெக இலக்கண நூல்கள் பிரசுரித்திருப்பவரும் ஆகிய டாக்டர் போப்பைத் தமிழ் நாட்டாரில் பெரும்பான்மையோர் நன்கு அறிவார்கள். இவர் சொல்கிறார்:-“அநேகர் (அதாவது அநேக ஆங்கிலேயர்கள்) பிரெஞ்சு, ஜெர்மன், இடாலியன் முதலிய பாஷைகளைப் போய்ப் படித்துக் கொண்டு இடர்படுகிறார்கள். இப்படிச் செலிவடப்படும் காலத்தைத் தமிழ் கற்பதில் செலவிட்டால் எவ்வளவோ விசேஷமாகும். நான் அநேக (ஆங்கில) மாதர்களுக்குத் தமிழ் கற்பித்திருக்கிறேன். அவர்களுடைய இதழ் நயத்திற்கும் செவி நுட்பத்திற்கும் அபிருசிக்கும் அந்தப் பாஷையைப் போல் எந்தப் பாஷையும் ஒத்து வருவதில்லை” என்றார். இவர் தமிழ்ப் பாஷையின் இனிமையையும் பெருமையையும் குறித்து எவ்வளவோ சிலாக்கியமாகப் பேசியிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்த நம்மவர்களோ அந்தப் பாஷையின் இனிமையைப் பாதுகாக்க வேண்டுமென்றேனும் அபிவிருத்தி செய்யவேண்டுமென்றேனும் சிறிதும் முயல்வதில்லை.

தமிழ் மட்டும் தெரிந்த ஜனங்களிற் சிறுபாலார் தமிழ் விஷயத்தில் ஒருவிதமான மூடபக்தியாவது வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலம் கற்றுணர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் தமது கடமையை முற்றும் மறந்துவிடுகிறார்கள். இவர்கள் தமிழ்ப் பாஷை விஷயத்தில் கொண்டிருக்கும் எண்ணத்தையும் இவ்விஷயத்தில் இவர்கள் வகிக்கும் அசிரத்தையையும் டாக்டர் போப்பைப் போன்ற ஆங்கிலேயர்கள் அறியும் பக்ஷத்தில் இவர்கள் இருக்கும் திசையை நோக்கிக் காறியுமிழும் வண்ணமாக நம்மவர்கள் நடந்து கொள்கிறார்கள்.