Wednesday, August 26, 2009

பாரதியின் பயணங்கள் முடிவதில்லை

சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் 'பாரதியின் பயணங்கள் முடிவதில்லை' என்ற தலைப்பில் வழங்கிய உரை.

http://sivasiva.dk/sotpolivukal/barathi.wma


மேலே உள்ள தொடர்பில் தரவிறக்கம் செய்யவும்.

Sunday, August 23, 2009

மஹாசக்திக்கு விண்ணப்பம்



மோகத்தைக் கொன்றுவிடு என்ற பாடலை மகாரஜபுரம் சந்தானம் கர்நாடக சங்கீதத்தில் பாடியுள்ளார்.

பாடல் வரிகள்:

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு,
தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு,
யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்
ஊனைச் சிதைத்துவிடு,
ஏகத் திருந்துலகம் - இங்குள்ள
யாவையும் செய்பவளே!

பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு,
சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்
செத்த உடலாக்கு,
இந்தப் பதர்களையே - நெல்லா மென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே!

உள்ளம் குளிராதோ? பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ? - அம்மா! பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே - அனைத்திலும்
மேவி யிருப்பவளே!

அறிமுகம்

பாரதியின் பாடல்களை சிறுவகுப்பில் படிக்கும்போது, எதோ ஒரு நெருக்கத்தை உணர முடிந்தது. அணுவில் ஒளிந்திருக்கும் ஆற்றல் போல பாரதியின் சொற்களில் ஒளிந்திருக்கும் ஒரு வேகம் அலாதியானது. எங்கும் காணமுடியாத எழுத்து நடை அவருடையது.

பள்ளியில் அவ்வப்போது படித்ததோடு சரி. பிறகு இப்பொது மீண்டும் பாரதியின் மீது ஒரு ஈர்ப்பு உருவாகியுள்ளது. எங்கள் வீட்டில், எங்கள் அம்மா பரிசு வாங்கிய ஒரு பாரதியார் கவிதை புத்தகம் உண்டு. அதை பலர் குறிப்பெடுக்க வாங்கிச் செல்வதுண்டு. 1968 - 1969இல் அம்மா பத்தாம் வகுப்பில் முதல் மாணவியாக வந்ததற்காக கிடைத்த பரிசு அது. தற்போது அதனுடைய நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. அதனால், ஒரு புதிய பாரதியார் கவிதைகள் புத்தகம் வாங்கினேன்.

பிறகு வலையில் தேடிய போது, பாரதியைப் பற்றி பல செய்திகளும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் படிக்கக் கிடைத்தன. பலர் பாரதியின் மீது கொண்ட ஈடுபாட்டினால், அவரது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துள்ளனர். எண்ணற்ற திரை இசைப் பாடல்கள் அவரது கவிதைகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளன. எண்ணற்ற புத்தகங்கள், கட்டுரைகள் அவரின் கவிதை வரிகளைத் தலைப்பாகக் கொண்டு வெளிவந்துள்ளன.

ஒரு படைப்பாளின் வாழ்க்கை, அவரின் படைப்புகள் வழியே நாள்தோறும் நீண்டு கொண்டே இருக்கிறது.

இந்த வலைப்பூவை தொடங்குவதன் நோக்கம், வலையில் கிடைக்கும் பாரதியைப் பற்றிய அனைத்து செய்திகளையும் அவருடைய பாடல்களின் ஒலி ஒளி வடிவங்களையும் சேகரித்துத் தருவதேயாகும்.