Showing posts with label வந்தே மாதரம். Show all posts
Showing posts with label வந்தே மாதரம். Show all posts

Monday, November 19, 2012

வந்தேமாதரம்



28 டிசம்பர் 1905                        விசுவாவசு மார்கழி 14

(சக்கரவர்த்தினி மாதாந்திரப் பத்திரிகையில் வெளியானது)

இப்போது பெங்கால மாகாணத்திலிருக்கும் ஒவ்வொரு ஹிந்துவாலும் ஸாம கீதத்தைப்போல அத்தனை பக்தியுடன் பாடப்பட்டு வருகின்ற வந்தேமாதரம் என்ற திவ்ய கீதத்தை நான் மொழி பெயர்க்கக்த் துணிந்தமை, கர்வங்கொண்ட செய்கையென்று பலர் கருதக்கூடும். ௸ கீதமெழுதிய பெங்காலி வித்வானாகிய பங்கிம் சந்திர பாபுவின் தைவிகச் சொற்களைத் தமிழ்ப்படுத்த எனக்குப் போதிய வன்மையில்லாவிடினும் தமிழ்நாட்டாருக்கு அச் செய்யுளின் பொருளுணர்த்த வேண்டுமென்ற ஆசைப் பெருக்காலேயே யான் இதனைத் துணிந்திருக்கிறேன். இவ் வாந்தேமாதரம் என்ற கீதம் பங்கிம் சந்திர சாடர்ஜியின் நூல்களிலே மிகச் சிறப்புக் கொண்டதாகிய ஆனந்த மடம் என்ற நாவல் கதையினிடையே அமைக்கப்பட்டிருக்கின்றது. 

ஆனந்த மடம் என்ற கதையானது உண்மையாகவே நடந்த சரித்திரத்தைத் தழுவியது. வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாயிருந்த காலத்தில் சந்நியாசிகள் சேர்ந்து நடத்திய ஓர் பெருங் கலகத்தைப் பற்றியே ௸ நூல் விரித்துக் கூறுகின்றது. பெங்காலத்தில் 1774-5 வருஷத்தில் பெரும் பஞ்சம் உண்டாயிற்று. அதற்கப்பால் அனேக ஆயிரம் சந்நியாசிகள் ஒன்றாய்க் கூடி அந்நியர்களைத் தமது தாய்ப் பூமியிலிருந்து ஒழித்துவிட வேண்டுமென்னும் ஒரே நோக்கத்துடன் கலகஞ் செய்யத் தொடங்கினார்கள்.

இவர்கள் இரகசியமாகக் சந்திக்கும் பொருட்டு ஆள் நுழையக் கூடாத கருங்காட்டில் ஆனந்த மடம் என்பதோர் இடம் வைத்திருந்தார்கள். இவர்கள் மகமதியப் படைகளைப் பல இடங்களில் தோல்வி செய்ததுமன்றி ஓர் ஆங்கிலேயப் பட்டாளத்தையும் முறியடித்தார்கள். எனினும் பிரிட்டிஷார் விடாமல் தாக்கியதன்பேரில் இந்த வீர சந்நியாசிக் கூட்டத்தார் கடைசியாகப் பிரிந்து போயினர். இந்த வீரத் துறவிகளில் ஒருவராகிய பவாநந்தர் வந்தே மாதரம் என்ற ஆரம்பங்கொண்ட அரிய கீதத்தைப் பாடியாதாக பங்கிம் புலவர் தமது நூலில் அமைத்திருக்கிறார்.

25 வருஷங்களுக்கு முன் இவர் இந்தப் பெருநூலைப் பிரசுரித்தபோது அந்தக் கீதத்தின் கண்ணே பெரும் பகுதி சமஸ்கிருதமாகவே யிருந்தபடியால் அவருடைய நேயர்கள் பலர் அதைக் குறை கூறினார்கள். ஆனால் அம்மகான் அவர்களுடைய அபிப்பிராயத்தைப் பொருட்டாக்கவில்லை. எழுதி 25 வருஷங்களுக்குள்ளாக மேற்படி திவ்ய கீதம் பெங்காலத்து ஜனங்கள் எல்லோருடைய நாவிலுமிருக்குமென்பதை அந்தக் கவியரசர் அறிந்திருந்தார் போலும். அதிலிருக்கும் சம்ஸ்கிருதம் வெகு எளிதாயிருப்பதால் எந்தப் பெங்காளிக்கும் வெகு சுலபமாகப் பொருள் விளங்கிவிடும். அதுவுமின்றி அந்தக் கீதமானது பழமையில் முன்னோர்களால் வழங்கப்பட்டு வந்ததும் ஒப்பற்றதுமான சம்ஸ்கிருத பாஷையோடு தற்காலப் பாஷை கலப்புற்று அமைக்கப் பெற்றிருப்பதால் பூர்வ காலத்துடன் தற்காலத்தை இணைப்பதாக இருக்கின்றது. தாய்த் தேசத்தை அந்தப் பாடலில் தாயென்று வழங்கியிருப்பது மிகவும் பொருத்தமுடையதே.

பலரால் இக்கீதத்திற்கு எழுதப்பட்டிருக்கும் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பானது பெங்காலி கீதத்திலிருந்து சில இடங்களில் மாறுபடுகின்றது. அவ்வாறு மாறுபட்ட இடங்களில் என்னால் கூடிய அளவு பெங்காலிச் சொற்களை அநுசரித்தே தமிழ் மொழி பெயர்ப்பெழுதியிருக்கிறேன். எனது தமிழ் எத்தனை குறைவுபட்டிருந்த போதிலும் தெய்வப் புலவராகிய பங்கிம்பாபுவின் மதிப்பைக் கருதித் தமிழுலகத்தார் இதனை நன்கு ஆதரிப்பார்களென்று நம்புகிறேன்.

வந்தேமாதரம்

Sunday, May 27, 2012

வந்தே மாதரம்

ராகம்-காம்போதி                                                                தாளம்-ஆதி

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
                  இருந்ததும் இந்நாடே-அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
                 முடிந்ததும் இந்நாடே-அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
                 சிறந்ததும் இந்நாடே-இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி, என்
                 வாயுற வாழ்த்தேனோ-இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
                  என்று வணங்கேனோ? 

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
                  ஈந்ததும் இந்நாடே- எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
                 அறிந்ததும் இந்நாடே- அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
                 களித்ததும் இந்நாடே-தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
                 போந்ததும் இந்நாடே-இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
                 என்று வணங்கேனோ? 

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
                 வளர்த்ததும் இந்நாடே-அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
                தழுவிய திந்நாடே-மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
                 சூழ்ந்ததும் இந்நாடே-பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
               ஆர்ந்ததும் இந்நாடே-இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
                என்று வணங்கேனோ?

Sunday, May 20, 2012

வந்தே மாதரம்



ராகம்-நாதநாமக்கிரியை                                                    தாளம்-ஆதி

பல்லவி

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம்.

சரணங்கள்

 ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே

ஈனப் பறையர்க ளேனும்-அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ?-பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?

ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி



Friday, April 13, 2012

ஜய வந்தே மாதரம்

ராகம் - ஹிந்துஸ்தானி பியாக்                                    தாளம் - ஆதி

பல்லவி

வந்தே மாதரம் - ஜய
வந்தே மாதரம்.

சரணங்கள்

ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய

ஆரிய பூமியில் நாரிய ரும் நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம்

நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நந்தே சத்தர்உ வந்தே சொல்வது

ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம்.