Saturday, April 7, 2012

பிழைத்த தென்னந்தோப்பு

வயலிடை யினிலே செழுநீர் மடுக் கரையினிலே
அய லெவரு மில்லை தனியே ஆறுதல் கொள்ள வந்தேன்.

காற்றடித் ததிலே மரங்கள் கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே சிதறி நாடெங்கும் வீழ்ந்தனவே.

சிறிய திட்டையிலே உளதோர் தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை- அதனை வாயு பொடிக்க வில்லை

வீழ்ந்தன சிலவாம்-மரங்கள், மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே-அதனை, வாயு பொறுத்து விட்டான்

தனிமை கண்டதுண்டு;-அதில்-சாரமிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில், அது தேம்பாகு மதுர மன்றோ?

இரவி நின்றது காண்-விண்ணிலே-இன்ப வொளித் திரளாய்;
பரவி யெங்கணுமே-கதிர்கள்-பாடிக் களித்தனவே.

நின்ற மரத்திடையே-சிறிதோர்-நிழலினில் இருந்தேன்,
என்றும் கவிதையிலே-நிலையாம்-இன்பம் அறிந்து கொண்டேன்.

வாழ்க பராசக்தி!-நினையே-வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பராசக்தி!-இதையென்-வாக்கு மறவாதே!

Friday, April 6, 2012

கிளிப்பாட்டு

திருவப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து,
வருக வருவதென்றே-கிளியே!-மகிழ்வுற் றிருப்போமடி!

வெற்றி செயலுக் குண்டு  விதியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும்-கிளியே!-கவலைப் படலாகுமோ?

துன்ப நினைவுகளும் சோர்வும் பயமு மெல்லாம்,
அன்பில் அழியுமடீ!-கிளியே!-அன்புக் கழிவில்லை காண்.

ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண்டுலகில்-கிளியே!-அழிவின்றி வாழ்வோ மடீ!

தூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால்-கிளியே!-நெருங்கித் துயர் வருமோ?

Thursday, April 5, 2012

காளிக்கு சமர்ப்பணம்

இந்த மெய்யும் கரணமும் பொறியும்
             இருபத் தேழு வருடங்கள் காத்தனன்;
வந்த னம்;அடி பேரருள் அன்னாய்!
             வைர வீ! திறற் சாமுண்டி! காளி!
சிந்த னைதெளிந் தேனினி யுன்றன்
             திரு வருட்கென அர்ப்பணஞ் செய்தேன்;
வந்தி ருந்து பலபய னாகும்
             வகைதெ ரிந்துகொள் வாழி யடி நீ!

Wednesday, April 4, 2012

கண்ண பெருமானே

காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ 
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே?கண்ண பெருமானே -நீ 
நோன்பிலே உயிர்ப்பதென்னே?கண்ண பெருமானே!
காற்றிலே குளிர்ந்த தென்னே? கண்ண பெருமானே -நீ 
கனலிலே சுடுவ தென்னே? கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்ப லென்னே? கண்ண பெருமானே-நீ 
திக்கிலே தெளிந்த தென்னே? கண்ண பெருமானே!

ஏற்றிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே -நீ
எளியர்தம்மைக் காப்ப தென்னே? கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்ப தென்னே? கண்ண பெருமானே!-நீ 
பொய்யர் தம்மை மாயப்ப தென்னே? கண்ண பெருமானே!
போற்றி!போற்றி!போற்றி![போற்றி! கண்ண பெருமானே!-நின்
பொன்னடிகள் போற்றி நின்றேன், கண்ண பெருமானே!

Tuesday, April 3, 2012

சாகா வரம்

பல்லவி

சாகாவர மருள்வாய், ராமா!
சதுர்மறை நாதா!- சரோஜ பாதா!

சரணங்கள்

ஆகாசந் தீகால் நீர்மண்
அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்
ஏகாமிர்த மாகிய நிந்தாள்
இணைசர ணென்றால் இதுமுடி யாதா?

வாகார் தோள் வீரா, தீரா,
மன்மத ரூபா, வானவர் பூபா,
பாகார்மொழி சீதையின் மென்றோள்
பழகிய மார்பா! பதமலர் சார்பா!

நித்யா,நிர்மலா,ராமா
நிஷ்க ளங்கா, சர்வா தாரா,
சத்யா, சநாதநா,ராமா,
சரணம்,சரணம்,சரண முதாரா!

Monday, April 2, 2012

சூரிய தரிசனம்

சுருதி யின்கண் முனிவரும் பின்னே
தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்
பெரிது நின்தன் பெருமையென் றேத்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்;
பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!
பானுவே! பொன்செய் பேரொளித் திரளே!
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாத வார்கட லின்னொலி யோடு
நற்ற மிழ்ச்சொல இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
கடுகி யோடும் கதிரினம் பாடி
ஆதவா! நினை வாழ்த்திட வந்தேன்.
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

Sunday, April 1, 2012

குடிப்பாங்கு


2 பிப்ரவரி 1917                             நள தை 21

இங்கிலாந்தி்லுள்ள “ந்யூ ஸ்டேட்ஸ்மன்” என்ற பத்திரிகையில் ௸ தேசத்துக் குடியுரிமைக் காப்பு மஹாசபையின் கிளையாகச் சேர்ந்த வியாபார ஐக்யப் பகுதிச் சங்கத்தின் கெளரவ காரியதரிசி ஒரு கடிதமெழுதி யிருக்கிறார். அதில் ஒரு பகுதி இங்கு மொழி  பெயர்க்கப்படுகிறது. ௸ மஹாசபையின் நோக்கங்கள் என்னவென்றால்:-

1.   1916-ஆம் வருஷத்து ராணுவச் சேவக வி்திகளை நீக்கிவிடும்படி வேலை செய்வதும், நமது (ஆங்கிலேய) ஜாதி்க்கு ராணுவச் சேவகம் எப்போதும் கட்டாயமாகாதபடி தடுப்பதும்;  

2.   சொல்லுரிமை, குடிவிசாரணை (படை விசாரணை யல்லாதது) முதலிய ப்ரிடிஷ் ஜாதியாரின் மற்ற குடியுரிமைகளையும் காப்பாற்றிக் கொள்ளுதல்;

3.   குடி விடுதலைக்கு இடர் விளைவிக்கக்கூடிய ராணுவச் சேவகச் சட்டம், பூமி ரக்ஷணைச் சட்டம் முதலிய சட்டங்களின் அமுலைக் கவனித்துக் கொண்டு வருதல்;

4.   ௸ சட்டங்களின் குண காரியங்களை வளரவிடாதபடி எதிர்த்தல் என்பன.
உள்நாட்டு மந்திரியாகிய மிஸ்டர் ஸாமுயெல் ௸ சபையின் நோக்கங்களைக் குறிக்குமிடத்தே தாம் விரோதப்படுவதாகவும், ௸ சபையின் காரியம் தேச நன்மைக்குக் கேடு விளைவிக்குமென்றும் சொல்லுகிறார். ஆனால் இந்த சபையின் தலைவரோ  ராபர்ட் ஸ்மில்லி, பண்டித க்ளிபோர்டு, மாஸிங் ஹாம், ப்ரெய்ல்ஸ் போர்டு முதலிய கீர்த்தியுள்ள  பண்டிதர். இவர்களுடைய கார்டிப் நகரத்துக் கூட்டத்திற்குக் கிரயச் சீட்டு வாங்கி வந்த ஜனங்களைத் தவிர்த்து மற்றப் பிரதி்நிதிகளின் விவரம் பின்வருமாறு:-

வியாபார ஐக்கியக் கிளைகள்-220 பிரதிநிதி. வியாபார சபைகளும் ஸ்தலத் தொழிற் சங்கங்களும் அனுப்பிய பிரதிநிதிகள் 37.

ஸமூஹ (ஸோஷலிஸ்ட்) கக்ஷி சபைகளும் ஸமாதான சபைகளும் அனுப்பிய பிரதிநிதிகள் 100. மதாபிமான சங்கத்தார்களின் பிரதிநிதிகள் 13. கூட்டுறவு சபையார்களி்ன் பிரதிநிதிகள் 16. ஸ்திரீ சபையாரின் பிரதிநிதிகள் 29. பகுதிப் படாதோர் 34.

இந்த மஹா சபையுடன் 500 சபைகள் வரை சேர்ந்திருக்கின்றன. 

மேற்படி காரியதரிசி சொல்லியிருப்பதிலி்ருந்து ௸ சபையின் காரியங்கள் உள்நாட்டு மந்திரிக்கு ஸம்மதமில்லை யென்று தெரிகிறது. அப்படியிருந்தும், உள்நாட்டு மந்திரி அவர்களுடைய கூட்டத்தைத் தடுக்காமலிருந்தது அவருடைய பெருந்தன்மையை விளக்குகிறது. ஜனங்களின் உரிமைகளை எதிர்த்தால் பிரமாதமுண்டாகுமென்று தீர்மானத்தினால் உள்நாட்டு மந்திரி மேற்படி கூட்டத்tத் அதிகாரிகள் தடுக்காதபடி நியமி்த்திருக்கலாமென்று மேற்படிகாரியதரிசி தமது  கடிதத்தில் சொல்லுகிறார். அதை நாம் நம்பவில்லை. ப்ரிடிஷ் மந்திரிகள் இயற்கையிலேயே குடியுரிமைகளைத் தடுக்க மனதில்லாதவர்கள். இது நிற்க. “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்று திருவள்ளுவர் சொல்லுகி்றார்.

ஆதலால், ௸ குடியுரிமைக் காப்புச் சபையார் தேசப் பொதுமைக்கு விபத்து நேர்நந்தண்டுப்பதைத்  தடுத்து வெற்றி பெறுவதாகிய ஒரே நோக்கத்துடன் எல்லாக் காரியங்களும் செய்யாதபடி சில்லரைச் சட்டங்களின் மெதுவான ப்ரயோகங்களைக் கண்டனம் பண்ணிக் கொண்டிருப்பது லெளகிகமில்லை யென்றாலும், இந்த விஷயத்தில் அவர்களுடைய செய்கை விபரீதமென்பது மெய்யேயானாலும், அவர்களுடைய வார்த்தையில் எத்தனை குன்றுமணி உண்மை சேர்ந்திருக்கிற தென்பதை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
யுத்தம் நடப்பது காரணமாக ஜனங்களுடைய ஸாதாரண உரிமைகளை அதிகாரிகள் புறக்கணிப்பது சில ஸமயங்களில் அவசியமாக ஏற்பட்ட போதிலும், ஒரேயடியாக ஜன தர்மங்களைப் படுகுழியிலே கொண்டு அமிழ்த்தி விடும்படி ஜனத் தலைவர் பார்த்துக் கொண்டிருக்கலாமா? யுத்த காலத்தில் ஜன  உரிமை எவ்வளவு தூரம் வளைய இடங்கொடுக்கலாம்? அதை எல்லைப் படுத்த வேண்டிய் காரியம் இப்போது ஐரோப்பியப் பண்டிதர்களை வந்து சூழ்ந்திருக்கிறது.